2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஜனாதிபதி, இரண்டு வருடங்களில் திருடர்களை ‘நரகத்துக்கு’ அனுப்புவாரா?

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2018 ஜனவரி 31 , மு.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அண்மைக் காலமாக அடிக்கடி மிகவும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.  

 அக்கருத்துகளில் சில, தேசிய அரசாங்கம் என்றும் நல்லாட்சி அரசாங்கம் என்றும் பலரால், பல்வேறு நோக்கங்களுடன் அழைக்கப்பட்டு வரும், தற்போதைய அரசாங்கத்தின் இருப்பையும் ஆபத்துக்கு உள்ளாக்கிவிடுமோ என்று நினைக்கும் அளவுக்கு, பாரதூரமானவையாக இருக்கின்றன.   

ஏனெனில், அரசாங்கத்தில் ஜனாதிபதியின் கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தேசிய அரசாங்கத்தில் அல்லது நல்லாட்சி அரசாங்கத்தில் பங்காளியாகச் செயற்படும் ஐக்கிய தேசியக் கட்சியை விமர்சிப்பதாகவும் அதற்குச் சவால் விடுப்பதாகவும் அக்கருத்துகளில் பல அமைந்திருக்கின்றன.  

ஜனாதிபதி சில சந்தர்ப்பங்களில், ஐ.தே.கவின் சில முக்கிய உறுப்பினர்களை, மிகக் கடுமையாக எச்சரித்தும் இருக்கிறார். கடந்த நவம்பர் மாதம், இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவுக்கு அவர் விடுத்த எச்சரிக்கையும் அண்மையில், பொதுவாக அமைச்சரவைக்கு அவர் விடுத்த எச்சரிக்கையும் அதற்கு உதாரணங்களாகும்.   

மத்திய வங்கி பிணைமுறி வழங்கல் தொடர்பாக, விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால, ஆணைக்குழுவொன்றை நியமித்ததை எதிர்த்து, ஊடகவியலாளர் மாநாடொன்றின் போது, கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சேனசிங்க, “ஜனாதிபதி ஏன், முன்னைய அரசாங்கத்தின் ஊழல்களை விசாரணை செய்ய ஆணைக்குழுக்களை நியமிக்கவில்லை” எனக் கேள்வி எழுப்பினார். அத்தோடு, பிணைமுறி விவகாரம் தொடர்பாக, ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்தமை ஐ.தே.கவுக்கு எதிரான சதி” எனவும் அவர் கூறியிருந்தார்.   

அதற்குச் சில தினங்களுக்குப் பின்னர், வாரியபொலவில் இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி பெயர் குறிப்பிடாது, “பிணைமுறி ஆணைக்குழுவைப் பற்றிச் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். பின்னர் அவர்கள் கதறி அழ வேண்டியிருக்கும்” எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.   

ஜனாதிபதி, இதற்கு முன்னர் ஐ.தே.கவை விமர்சித்து இருந்த போதிலும், ஜனாதிபதியாகப் பதவிக்கு வந்தது முதல், அவர் பகிரங்கமாக ஐ.தே.கவைச் சாடிய முதலாவது முறை இதுவாகும். 

அத்தோடு, கடந்த டிசெம்பர் மாதம் 30 ஆம் திகதி, பிணைமுறி ஆணைக்குழுவின் அறிக்கை, ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. ஜனவரி மூன்றாம் திகதி, அது தொடர்பாக விசேட உரையொன்றை ஆற்றிய ஜனாதிபதி, அதன் பரிந்துரைகளில் சிலவற்றையும் வெளியிட்டார்.   

ஐ.தே.கவின் பிரதித் தலைவர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக, ஆணைக்குழு முன் பொய்ச் சாட்சியம் அளித்தமைக்காகவும் இந்த விவகாரத்தில் குற்றவாளிகளாகக் கருதப்படும் ஒருவரிடம் நிதி உதவி பெற்றமை தொடர்பாகவும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளதெனவும் அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.  

தம்மிடம் கையளிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையை, நாடாளுமன்றத்திடமும் சட்டமா அதிபரிடமும் கையளிப்பது தான் அவரது கடமையாகும். அவர், அது தொடர்பாக உரை நிகழ்த்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.   

அத்தோடு, அந்தப் பரிந்துரைகளில், தமது அரசாங்கத்தின், பங்காளிக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர் அதை எடுத்துரைத்தமை தொடர்பாக, ஐ.தே.க திருப்தியடைந்திருக்காது.  

இந்த உரையை அடுத்து, ஐ.தே.க அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியைப் பகிரங்கமாக விமர்சித்து இருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், ஜனாதிபதியை “நன்றிகெட்டவர்” என்றும் கூறியிருந்தார். இவற்றைப் பற்றி, கடந்த 16 ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டத்தில் குறிப்பிட்ட ஜனாதிபதி, “தொடர்ந்து கூட்டரசாங்கத்தை நடத்த வேண்டுமா, இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்” என்று கூறிவிட்டு, அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்திருந்தார்.  

இரண்டு நாட்களுக்குப் பின்னர், கொஸ்கமவில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “நான் எப்போது பதவியிலிருந்து விலகுவேன் என்று பலர் கேட்கிறார்கள். நாட்டு மக்களின் சொத்தைத் திருடிய திருடர்களை, நரகத்துக்கு அனுப்பிவிட்டே, பதவியிலிருந்து இறங்கிச் செல்வேன்” எனக் கூறியிருந்தார்.   

தமது பதவிக்காலம், ஐந்து வருடங்களா அல்லது ஆறு வருடங்களா என்று அவர் அண்மையில் உயர் நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை ஜனாதிபதி வினவியிருந்தார். அந்த நிலையிலேயே அவர், “திருடர்களை நரகத்துக்கு அனுப்பிவிட்டே பதவி துறப்பேன்” என்கிறார்.  

 இதன்காரணமாக, அவர் இன்னொரு முறையும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போகிறார் என்று பலரும் கூறலாயினர். அது எதுவானாலும், இக்கூற்றுப் பிணைமுறி விவகாரம் காரணமாகத் தம்மை இலக்கு வைத்துத் தெரிவிக்கப்பட்டது எனச் சில ஐ.தே.கவினர் நினைத்தனர்.  

ஜனவரி மாதம் 20 ஆம் திகதி, அவர் மற்றோர் உரையின் மூலம், ஐ.தே.கவை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அன்று, கேகாலையில் நடைபெற்ற பிரசாரக் கூட்மொன்றில் உரையாற்றிய மைத்திரிபால, கடந்த மூன்றாண்டுகளாக ஐ.தே.கவே நாட்டின் பொருளாதாரத்தை வழிநடத்தியதாகவும் இந்த வருடம் முதல், அந்தப் பொறுப்பைத் தாம் ஏற்றுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.  

இவ்வாறு தொடர்ந்து, தமது ஆட்சிச் சகாவான ஐ.தே.கவை நேராகவும் மறைமுகமாகவும் தாக்கியும் மிரட்டியும் வந்த ஜனாதிபதி, 22 ஆம் திகதி கண்டியில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கூட்டமொன்றில் உரையாற்றினார்.   

நாட்டிலிருந்து ஊழலைத் துடைத்தெறிவதற்காகத் தமக்கு உதவுமாறும், அந்த விடயத்தில் தமக்கு இடையூறு செய்யாதிருக்குமாறும் அவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அப்போது கேட்டுக் கொண்டார்.   
அவர், பிரதமரிடம் இவ்வாறானதொரு கோரிக்கையை ஏன் விடுக்க வேண்டும், பிரதமர், கடந்த மூன்று ஆண்டுகளில் ஊழல் ஒழிப்புக்காக, ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லையா என்ற கேள்விகள், ஜனாதிபதியின் உரையால் இயற்கையாகவே எழுகின்றன.   

அதேபோல், “இடையூறு செய்யாதிருங்கள்” என்ற கூற்றில், ‘பிரதமர் இதற்கு முன்னர், இடையூறு செய்திருக்கிறாரா’ என்ற கேள்வியும் எழுகிறது. 

இது, அரசாங்கத்திலுள்ள இரண்டு பிரதான கட்சிகளுக்கிடையிலான விரிசலின் அளவைக் காட்டுவதோடு, ஊழல் ஒழிப்பு விடயத்தில், நாட்டில் என்ன நடக்கிறது என்ற கேள்வியையும் மக்கள் மனதில் உருவாக்குகிறது.  

நாட்டில் ஊழலை ஒழிப்பது என்ற உயரிய நோக்கத்துக்காகவென, மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கத்தைப் பதவியிலிருந்து வெளியேற்றுவதற்காக, ஒன்று சேர்ந்த இரு பிரதான கட்சிகள் மத்தியில், அதேவிடயத்தின் காரணமாக, இன்று விரிசல் ஏற்பட்டு இருப்பது விந்தையான விடயமே.  

ஜனாதிபதி இன்று, தமது ஆட்சிச் சகாவைப் பார்த்து, “வரலாற்றில் மிகப் பெரும் கொள்ளையைச் செய்தீர்களே” என்று கூறுகிறார். 

அதேவேளை, “முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற பாரிய அளவிலான ஊழல்களை விசாரித்து, குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதற்கு எனக்கு உதவுங்கள்; அதற்கு இடையூறு விளைவிக்காதீர்கள்” என்று கேட்கிறார்.  

கடந்த நவம்பர் மாதம், ஐ.தே.க அமைச்சர் ஒருவரைக் குறிப்பிட்டு, “இவர் முன்னைய அரசாங்கத்தின் ஊழல் பேர்வழிகளைப் பாதுகாக்கிறார். அவர்களுக்கு எதிரான வழக்குகளைத் தாமதப்படுத்தவும் தடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்” என ஜனாதிபதி குற்றஞ்சாட்டியிருந்தார்.  

மற்றொரு விந்தையான நிலைமை என்வென்றால், அன்று பல ஆயிரம் மில்லியன் ரூபாய் பணத்தைத் திருடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, அதன் காரணமாக மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டு, பதவி துறக்க நேர்ந்த முன்னைய அரசாங்கத்தின் ஆட்சியாளர்கள், இன்று இந்த அரசாங்கத்தைப் பார்த்து, வங்கிக் கொள்ளையர்கள் என்று கூறுகின்றனர். அன்று அவர்களைப் பார்த்துத் திருடர்கள் என்று கூறியவர்கள் இன்று வாய் மூடித் திகைத்துப் போயிருக்கிறார்கள்.  

இது ஒரு திருடன், மற்றொரு திருடனைப் பார்த்து, “திருடன் திருடன்” என்று கூச்சலிடுவதைப் போல் இருந்த போதிலும், மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பகிரங்க விசாரணைகளை அடுத்து, முன்னைய அரசாங்கத்தின் தலைவர்கள் பலமான நிலையில் இருக்கிறார்கள். ஏனெனில், நாட்டு மக்களின் பணத்தில் சுமார் எட்டு மில்லியன் ரூபாய்க்கு மேல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பது உண்மையே.  

முன்னை நாள் ‘திருடர்கள்’ பலம் பெறுவதற்கு ஐ.தே.கவின் நடத்தையும் காரணமாகியுள்ளது. பிணைமுறி ஆணைக்குழு எந்தவோர் அரசியல் கட்சியையும் குற்றஞ்சாட்டவில்லை. ஆனால், பிணைமுறி ஊழலை முதலில் மறுத்தும், பின்னர் மூடி மறைக்க முற்பட்டும், ஐ.தே.க தமது பெயருக்கு இழுக்கை வரவழைத்துக் கொண்டது.   

இன்றும் கூட அக்கட்சியினர், பிணைமுறி விவகாரத்தைத் தமது கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கட்சியின் ஆதரவாளர்கள் சிலருக்கும் எதிரான குற்றச்சாட்டாகவன்றி, முழுக் கட்சிக்குமான குற்றச்சாட்டாக ஏற்று, செய்வதறியாது தவிக்கிறது.   

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மட்டும், தற்போது அந்த நிலைமையை மாற்றி அமைக்க முயல்கின்றனரெனத் தெரிகிறது. இம்மாதம் எட்டாம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், பிணைமுறி ஆணைக்குழுவைத் தம்முடன் கலந்தாலோசித்தே நியமித்தார் என்றும், அவ்வாணைக்குழுவின் அறிக்கை கிடப்பில் போடப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார்.  

பிரதமருடன் கலந்தாலோசித்துத்தான் ஜனாதிபதி மைத்திரிபால, பிணைமுறி ஆணைக்குழுவை நியமித்தார் என்றால், இராஜாங்க அமைச்சர் சேனசிங்க, அதனை அறிந்திருக்கவில்லை போலும். ஏனெனில், இக்குழுவை நியமித்தமையானது, ஐ.தே.கவுக்கு எதிரான சதியாகும் என, அவர் கடந்த நவம்பர் மாதம் கூறியிருந்தார்.  

மற்றுமொரு முக்கிய விடயம் என்னவென்றால், தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்காக ஐ.தே.கவும் ஸ்ரீ ல.சு.கவும் 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் செய்து கொண்ட ஒப்பந்தம் காலாவதியாகி உள்ளதால், தற்போதைய அமைச்சரவை சட்டவிரோதமானது என, எதிர்க்கட்சிகள் விவாதித்து வரும் நிலையிலேயே, அவ்விரு கட்சிகளுக்கிடையே முறுகல் நிலை வலுப்பெற்று வருகிறது.  

அவ்விரு கட்சிகளும் இணைந்து, அரசாங்கத்தை நடத்துவதன்றி, வேறு வழியில்லை என்ற போதிலும், இந்தநிலைமை அரசாங்கம் எந்தளவு நிலையற்றதாகிவிட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.   

“ஊழல் பேர்வழிகளை நரகத்துக்கு அனுப்பிவிட்டுத்தான் மறுகை பார்ப்பேன்” என்ற ஜனாதிபதியின் எச்சரிக்கை, இரண்டு கேள்விகளை எழுப்புகிறது. கடந்த மூன்றாண்டுகளில் அதைச் செய்ய முடியாமல் போனமை ஏன் என்பது முதலாவது கேள்வியாகும். 

தமது பதவிக்காலத்தில், மிகுதி இரண்டு வருடங்கள் எவ்வாறு அவர் திருடர்களை நரகத்துக்கு அனுப்பப் போகிறார் என்பது மற்றைய கேள்வியாகும்.  

2015ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலில் தாம் வெற்றி பெற்று, மறு நாள் அதாவது ஜனவரி 9ஆம் திகதி, “திருடர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதைத் தடுக்க, கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படும்” என மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் கூறியிருந்தார். 

ஆனால், தேர்தலை அடுத்து, ஊழலுக்குப் பெயர்பெற்ற சிலர், கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாகவே தப்பிச் சென்றது மட்டுமல்லாது, ஊழல்கள் தொடர்பாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் விசாரிக்கப்பட்ட சிலருக்கு, அவரது அமைச்சரவையில் பதவியும் வழங்கப்பட்டது.   

அதன்பின்னர், “ஊழல் பேர்வழிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை” என அவர், தமது அரசாங்கத்தின் பங்காளியான ஐ.தே.கவை தொடர்ந்து மறைமுகமாகவும் நேரடியாகவும் குறைகூறி வந்துள்ளார்.   

சட்டமா அதிபர் திணைக்களத்தையும் பொலிஸ் திணைக்களத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் இருந்தால், மூன்று மாதங்களில் தாம், திருடர்களைக் கைதுசெய்து காட்டுவதாக அவர், கடந்த வருடம் ஜூலை மாதம் அமைச்சரவைக் கூட்டத்தில் கூறினாரெனச் செய்திகள் வெளியாகியிருந்தன.  

ராஜபக்ஷ குடும்பத்தினரை ஐ.தே.கவே பாதுகாப்பதாக அந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது, அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். மூன்றாண்டுகளாகியும் பிணைமுறி விவகாரம், அவன்ட் கார்ட் விவகாரம், ஹெஜிங் விவகாரம் போன்ற முன்னைய அரசாங்கத்தின் தலைவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் விடயத்தில் போதிய நடவடிக்கை எடுக்கப்படாததால், அவர் கூறுவதில் உண்மை இருக்கலாம். ஆனால், அவர் அதைக் கூறிக் கொண்டு இருப்பதால் எதுவும் நடைபெறப் போவதில்லை.  

நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதாக, மைத்திரிபால சிறிசேன கூறி வந்த போதிலும், அவர்தான் இன்னமும் நிறைவேற்று ஜனாதிபதியாக இருக்கிறார். 

எனவே, ஐ.தே.க அவ்வாறு திருடர்களைப் பாதுகாப்பதாக இருந்தால், அவர் அதைக் கூறிக்கொண்டு இருக்காமல், தமது அதிகாரத்தைப் பாவித்து, ஊழல் பேர்வழிகளுக்கு எதிராக, நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.   

அவர் இந்த, ஐ.தே.கவுடனேயே, அடுத்த இரண்டு ஆண்டுகளும் நாட்டை ஆள வேண்டும். எனவே, இந்த இரண்டு ஆண்டுகளிலும், ஊழல் தடுப்பு விடயத்தில் உருப்படியான எதுவும் நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.   

“திருடர்களை நரகத்துக்கு அனுப்பிவிட்டுத்தான் பதவி துறப்பேன்” என்ற ஜனாதிபதியின் எச்சரிக்கை, உண்மையானது என்றால், அவர் மற்றொரு முறையும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட வேண்டியிருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது.   

ஒருமுறைதான் ஜனாதிபதியாவேன் என்று பதவிக்கு வந்த மைத்திரிபால சிறிசேன, அடுத்தமுறை போட்டியிடுவதா, இல்லையா என்பதை இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று அண்மையில் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின் போதும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X