2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி முறையை ஒழித்தல்: நாட்டின் தேவைக்கா, தனி நபர்களின் தேவைக்கா?

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2019 செப்டெம்பர் 25 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தற்போது நடைபெறும் அரசியல், சிலவேளைகளில் சிறு பிள்ளைகளின் சண்டைகளை நினைவூட்டுகிறது.  

 ஒருவர், “நீ தான் அதைச் செய்தாய்” எனக் குற்றம் சாட்டும் போது, மற்றவர், “இல்லை, நானல்ல, நீயே அதைச் செய்தாய்” என்று கூச்சலிடுகிறார்.  

அதைப்போல் தான், தற்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிப்பு தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான வாக்குவாதம் அமைந்துள்ளது.  

அடுத்த ஜனாதிபதித் தேர்தல், நவம்பர் 16ஆம் திகதி நடைபெறும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு, புதன்கிழமை (18) உத்தியோகபூர்வமாக அறிவித்தது. அதையடுத்து, வியாழக்கிழமை (19) விசேட அமைச்சரவைக் கூட்டமொன்றில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை, ஒழிப்பதற்கான திட்டமொன்று ஆராயப்படவிருந்தது. அந்தக் கூட்டம், அதற்காகவே கூட்டப்பட்டது.  

ஆனால், பெரும்பாலான அமைச்சர்கள், அமைச்சரவைக் கூட்டத்துக்கு முன்னர், பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான ‘அலரி மாளிகை’யில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது, அதை எதிர்த்ததன் காரணமாக, அந்த யோசனை கைவிடப்பட்டது. 

பின்னர் கூடிய அமைச்சரவை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிப்பு தொடர்பாக, தற்போதைக்கு ஆராய்வதில்லை எனத் தீர்மானித்தது.   

ஏற்கெனவே, அமைச்சரவை ஆராயாத ஒரு விடயத்தை, ஆராயவெனக் கூடி, அதை ஆராய்வதில்லை என முடிவு செய்து விட்டு, அமைச்சரவை கலைந்து சென்றுள்ளது.   

இப்போது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான, இந்த முயற்சி யாருடையது என்பதைப் பற்றி, ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையே, பலத்த சர்ச்சை உருவாகியுள்ளது. 

பிரதமரின் தேவைக்கே, அந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டது என, ஜனாதிபதி கூறுகிறார். ஜனாதிபதியின் தேவைக்கே, அது கூட்டப்பட்டது எனப் பிரதமர் கூறுகிறார்.  

கடந்த வெள்ளிக்கிழமை (20) இவர்கள் இருவரும், இவ்வாறு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டதன் பின்னர், சனிக்கிழமை (21), ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தளை மாவட்டக் கிளைக் கூட்டத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றும் போது, அந்த அமைச்சரவைக் கூட்டம், எவ்வாறு கூட்டப்பட்டது என்பதை விளக்கினார்.   

“பிரதமர் அமைச்சரவையை அவசரமாகக் கூட்ட வேண்டுமென்கிறார்” என, அமைச்சர் ரவி கருணாநாயக்க, வியாழக்கிழமை (19) காலை, தம்மிடம் தொலைபேசி மூலம் இரண்டுமுறை தெரிவித்ததாகவும் பிரதமரே அதைத் தம்மிடம் கேட்க வேண்டும் எனத் தாம் அமைச்சரிடம் கூறியதாகவும் பின்னர், பிரதமரின் அழைப்பு வராத நிலையில், பிரதமருக்கு தாமே அழைப்பை எடுத்ததாகவும் அப்போதே, பிரதமர் அமைச்சரவைக் கூட்டத்தின் தேவையைத் தம்மிடம் கூறியதாகவும் ஜனாதிபதி தமது உரையில் தெரிவித்திருந்தார்.   

அதற்குப் பதிலளித்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஞாயிற்றுக்கிழமை (22) ஓர் அறிக்கை மூலம், மற்றொரு கதையைக் கூறுகிறார். 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காக, அரசமைப்பில்  20ஆவது திருத்தத்தைக் கொண்டுவர வேண்டும் என ஜனாதிபதி கூறியதாக, 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், தம்மிடம் கூறியதாகவும் அதையடுத்து, வியாழக்கிழமை (19) காலை, தொலைபேசியில் தம்மை அழைத்த ஜனாதிபதி, 20ஆவது அரசமைப்புத் திருத்தத்தைப் பற்றி ஆராய, அமைச்சரவையைக் கூட்டவா எனத் தம்மிடம் கேட்டதாகவும் தாம் அதற்கு இணங்கியதாகவும் பிரதமர் கூறுகிறார்.  

மற்றவரது தேவைக்கே, இந்த அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டது என, இருவரும் கூறிய போதிலும், தற்போதைய நிலையில் இந்த விடயம் ஆராயப்படக் கூடாது என்று, இருவரில் எவரும் மற்றவருக்குக் கூறவில்லை என்பதும், எவரது தேவைக்கு அமைச்சரவைக் கூட்டப்பட்டாலும் மற்றவரும், அந்த விடயத்தை ஆராய இணக்கம் தெரிவித்தார் என்பதும், இருவரது கூற்றுகளின் மூலமும் தெளிவாகிறது.  

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை தொடர்பான, ஜனாதிபதியினதும் பிரதமரினதும் நிலைப்பாடு, புரிந்து கொள்ள முடியாததாகவே இருக்கிறது. அவர்கள், இம்முறையை இரத்துச் செய்வதாகவே, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்குறுதியளித்தனர். 

அதன் பின்னர், அதற்காக சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த வேண்டும் என, உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவே, அம்முறையை இரத்துச் செய்வதற்குப் பதிலாக, ஜனாதிபதியின் அதிகாரங்கள் பலவற்றைக் குறைப்பதற்காக, 19ஆவது அரசமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றிக் கொண்டனர்.   
இன்னமும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதைக் கொள்கையளவில் தாம் ஏற்றுக் கொள்வதாகவே, அவ்விருவரும் கூறிவருகின்றனர். 

ஆனால், அந்த நோக்கத்துக்காகக் கடந்த வருடம் மே மாதம், மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்றத்தில் ‘அரசமைப்பின் 20ஆவது திருத்தம்’ என்ற பெயரில், தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைத்த போது, பிரேரணையை முன்னெடுத்துச் செல்ல, அவ்விருவரும் மக்கள் விடுதலை முன்னணியை ஊக்குவிக்கவில்லை.  

மக்கள் விடுதலை முன்னணியின் பிரேரணையை அமுலாக்கவும் அது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம், மக்களின் அனுமதியையும் பெற வேண்டும் என, உயர நீதிமன்றம் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தீர்ப்பு வழங்கியது. அதுவும் இவ்விருவரும் அறிந்த விடயமே.  

இம்மாத ஆரம்பத்தில், ஜனாதிபதியும் பிரதமரும் சந்தித்து, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை, உடனடியாக இரத்துச் செய்வது தொடர்பானதோர் இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக் கொண்டனர் ஆனால், பின்னர் அம்முயற்சி கைவிடப்பட்டது போல் தெரிந்தது.  

2015ஆம் ஆண்டு, தாம் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற, கடந்த நான்கு ஆண்டுகளாக முயற்சி எடுக்காது, அதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் பிரேரணையையும் முன்னெடுத்துச் செல்லாது, தற்போது ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க, இவ்விருவரும் ஏன் துடிக்கிறார்கள் என்பது, அவ்வளவு பெரிய இரகசியமல்ல.  

ஜனாதிபதியும் பிரதமரும் இம்முறை, ஜனாதிபதித் தேர்தலை எதிர்நோக்குவதில், பெரும் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளனர். 

ஜனாதிபதி ஆரம்பத்தில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராகக் களமிறங்க நினைத்திருந்தார். ஆனால், பொதுஜன பெரமுன, கோட்டாபய ராஜபக்‌ஷவைத் தமது வேட்பாளராக அறிவித்து விட்டது.   

இந்த நிலையில், தாம் தலைமை தாங்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில், போட்டியிடவும் அவர் தயாரில்லை. ஏனெனில், அவ்வாறு போட்டியிட்டால், அக்கட்சி மூன்றாம் இடத்துக்கே வரும். எனவே, ஜனாதிபதித் தேர்தலே நடைபெறாமல் இருந்தால் நல்லது என்று, அவர் சிந்திக்கிறார் போலும்.  

அதேபோல், ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில், தாமே போட்டியிடுவதாக அக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ அறிவித்துள்ளார். கட்சித் தலைவரான ரணில், அதை ஏற்கத் தயாரில்லை. ஆனால், இப்போது சஜித்துக்கு ஐ.தே.க ஆதரவாளர்களின் ஆதரவு பெருகி வருகிறது. இப்போது, சஜித்தைக் கட்சியின் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளாவிட்டால், கட்சி பிளவுபடுமோ என்ற நிலை உருவாகி இருக்கிறது.   

எனவே, ரணிலும் ஜனாதிபதித் தேர்தலே நடைபெறாதிருந்தால் நல்லது என்று சிந்திக்கும் நிலையில் இருக்கிறார் போலும். 

எனவேதான், ஜனாதிபதியும் பிரதமரும் தேர்தலைத் தவிர்க்க, எதை வேண்டுமானாலும் செய்யும் நிலையில் இருக்கிறார்கள். அதன்படியே, இம்மாத ஆரம்பத்திலும் அவர்கள் தம்மிடையே இருக்கும் கடும் பகைமைகளையும் மறந்துவிட்டு, நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்க, உடன்பாடொன்றை ஏற்படுத்திக் கொண்டார்கள்.  

அந்த முயற்சியும் இப்போது அமைச்சரவையைக் கூட்டி, அதற்காக முடிவு எடுக்க மேற்கொண்ட முயற்சியும், நிறைவேற்று ஜனாதிபதி முறையை இதயசுத்தியுடன் இரத்துச் செய்ய எடுத்த முயசிகளல்ல. 

அரசமைப்புத் திருத்தம் போன்ற, நாட்டின் எதிர்காலத்தையே பாதிக்கும் விடயங்கள் தொடர்பாக முடிவுகளை எடுக்கும் போது, தனிநபர்களின் அல்லது அரசியல் கட்சிகளின் சொந்த நலன்களை அடிப்படையாகக் கொண்டு, முடிவுகளை எடுப்பது மிகவும் பாரதூரமானதாகும். அது அரசியல் நாகரிகமும் அல்ல.  

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் த.தே.கூ 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பான, தற்போதைய சர்ச்சையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சம்பந்தப்பட்டுள்ளது. குறிப்பாக, அக்கட்சியின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் இதனோடு சம்பந்தப்பட்டுள்ளார். 

கடந்த வெள்ளிக்கிழமை (20) ‘டெய்லி மிரர்’ பத்திரிகைக்கு, இந்த விடயம் தொடர்பாகத் தமது கருத்தைத் தெரிவித்த அவர், “ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் முன், நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை, இரத்துச் செய்யும் பிரேரணையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார். அதாவது, ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி வெளியிடப்பட்டுள்ள நிலையில், சுமந்திரனும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை, இரத்துச் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் என்பது தெளிவாகிறது. 

நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதில் பல நன்மைகள் இருப்பது உண்மைதான். மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்த ஆட்சிக் காலத்தில், அந்த ஆட்சி முறையின் கொடூரத்தை, மக்கள் நன்கு உணர்ந்தார்கள். ஆனால், ஜனாதிபதித் தேர்தலொன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த ஆட்சி முறையை இரத்துச் செய்ய எடுக்கப்படும் எந்தவொரு முயற்சியும், சந்தேகக்கண் கொண்டே பார்க்கப்படுவது, தவிர்க்க முடியாத நிலைமையாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வளவு அக்கறையுடன் அந்த விடயத்தில் இதற்கு முன்னர் செயற்படவில்லை. இப்போது இந்த அவசரம் எதற்கு?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான நெருங்கிய உறவு, ஒன்றும் இரகசியம் அல்ல. அதேவேளை, இம்முறை ஜனாதிபதித் தேர்தலை எதிர்க் கொள்வதில், பிரதமர் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டு இருக்கிறார். அந்த அடிப்படையிலேயே, தமிழ்க் கூட்டமைப்பின் இந்த அவசரத்தை, விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக, கலந்துரையாடவெனக் கடந்த வாரம் கூட்டப்பட்ட சர்ச்சைக்குரிய அமைச்சரவைக் கூட்டத்தை அடுத்துக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், “நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை, முற்றாக ஒழிப்பதைத் தமது கட்சி விரும்பவில்லை” எனக் கூறியிருந்தார். 

நிறைவேற்று ஜனாதிபதி முறை, சிறுபான்மை மக்களுக்கான பாதுகாப்பு அரணாகவே, ஒரு காலத்தில் பார்க்கப்பட்டது. ஏனெனில், ஜனாதிபதித் தேர்தலின் போது, முழு நாடும் ஒரே தேர்தல் தொகுதியாகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சிறுபான்மையினரின் வாக்குகளே, தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் நிர்ணயகரமான காரணியாகின்றன.  

இந்த நிலைமை மாறும் சந்தர்ப்பங்களையும் நாம் வரலாற்றில் கண்டிருக்கிறோம். புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற நிலையிலேயே, குறித்த காலத்துக்கு ஒரு வருடத்துக்கு முன்னதாக, 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை, மஹிந்த ராஜபக்‌ஷ நடத்தினார். போர் வெற்றியை, அவர் எந்தளவு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார் என்றால், போரின் போது இராணுவத்துக்குத் தலைமை தாங்கிய சரத் பொன்சேகாவையும் அவர் தோற்கடித்தார். அந்தத் தேர்தலின் போதும் அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பொதுத் தேர்தலின் போதும், சிறுபான்மை மக்களின் ஆதரவின்றியே மஹிந்தவின் கட்சி வெற்றி பெற்றது. எனவேதான், சிறுபான்மை மக்களின் வாக்குகள் தேவையில்லை என்ற அகம்பாவத்தில், அவரும் அவரது அமைச்சர்களும் கோட்டா போன்ற அதிகாரிகளும் நடந்து கொண்டனர். அதன்விளைவு, 2015ஆம் ஆண்டு காணப்பட்டது.

மக்கள் ஆதரவு என்ற விடயத்தில், பிரதான இரு கட்சிகளுக்கிடையே பாரிய இடைவெளி நிலவும் போது, சிறுபான்மை மக்களின் வாக்குகளுக்குக் கிராக்கி குறைந்துவிடுகிறது. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது, தென்பகுதியில் சிறுபான்மை மக்களின் ஆதரவை, ஏறத்தாழ மொத்தமாகப் பெற்றும் ஐ.தே.க 36 இலட்சம் வாக்குகளையே பெற்றது. அந்த ஆதரவு இல்லாமலே, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 49 இலட்சம் வாக்குகளைப் பெற்றது. இதனால் ஏற்பட்ட அகம்பாவத்தின் காரணமாகத்தான், உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாத் தாக்குதலை அடுத்து, பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதிகள் முஸ்லிம் விரோத பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தனர். ஆனால், ஜனாதிபதித் தேர்தல் நெருங்கவே, அவர்கள் சற்று வித்தியாசமாகச் சிந்திக்கிறார்கள். எனவே, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வது என்ற விடயத்தில், சிறுபான்மை மக்கள், நிதானமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .