2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஜனாதிபதித் தேர்தல்: பேரம் பேசும் சக்தியை இழந்த சிறுபான்மையினர்

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2019 ஜனவரி 23 , மு.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வருடம் ஆரம்பத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு வகையில் அரசியல் அநாதையாகி இருந்தார். அவரது எதிர்காலமே, பயங்கரமானதாகத் தென்பட்டது.   

கடந்த பெப்ரவரி மாதம், நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள் மூலம், இது தெளிவாகத் தெரிந்திருந்தது. ஆனால், இன்று அவர், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட, அதுவும் மஹிந்த அணியின் ஆதரவுடன் போட்டியிடத் தயாராகும் நிலைக்குத் தமது நிலையைப் பலப்படுத்திக் கொண்டுள்ளார்.  

கடந்த வருடம் ஆரம்பத்தில், அவர் தம்மைப் பதவிக்குக் கொண்டு வந்த ஐக்கிய தேசிய கட்சியிடமிருந்து முற்றாக அந்நியப்படுத்தப்பட்டு இருந்தார். அதேவேளை, தம்மை ஆறடி நிலத்தடிக்கு அனுப்ப முயற்சித்ததாக, அவரே குற்றஞ்சாட்டிய மஹிந்த அணியும் அவரைப் புறக்கணித்து இருந்தது.   

அதேவேளை, மஹிந்த அணி, மீண்டும் பதவிக்கு வரும் நிலையும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் மூலம் தெரிய வந்தது. எனவே தான் அவர், கடந்த வருடம் அரசியல் அநாதையாகி இருந்தார் என்றோம்.   

ஆனால், திடீரென மஹிந்தவைப் பிரதமராக நியமித்தும், சட்ட விரோதமான முறையில் நாடாளுமன்றத்தைக் கலைத்தும், மஹிந்த அணியின் மத்தியில் வீரனாகி, இன்று அவர், அதே அணியின் உதவியுடன் ஜனாதிபதித் தேர்தலில், மீண்டும் போட்டியிடலாமோ என்று சிந்திக்கும் நிலைக்கு வந்துவிட்டார்.  

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு, இன்னும் சுமார் பத்து மாதங்கள் இருக்கின்றன. ‘பதவியில் இருக்கும் ஜனாதிபதியின் பதவிக் காலமான ஐந்து வருடங்கள், பூர்த்தியடைவதற்கு ஒரு மாதத்துக்கும், இரண்டு மாதங்களுக்கும் இடைப்பட்ட காலத்தில், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும்’ என அரசமைப்புக் கூறுகிறது.   

அதாவது, எதிர்வரும் நவம்பர் ஒன்பதாம் திகதிக்கும் டிசெம்பர் ஒன்பதாம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில், அத் தேர்தல் நடைபெற வேண்டும்.  

ஆயினும், இப்போதே ஜனாதிபதித் தேர்தல் மக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி தவிர்ந்த, ஏனைய பிரதான அரசியல் கட்சிகளுக்கு, ஜனாதிபதித் தேர்தலுக்கான தமது வேட்பாளர் யார் என முடிவு செய்து கொள்ள முடியாமையே இந்த அசாதாரண ஆரவாரத்தைத் தூண்டியுள்ளது.   

மக்கள் விடுதலை முன்னணிக்குள் தனி நபர்களின் சொந்த நலன்களுக்கு இடமில்லை. அதேவேளை, வெற்றி பெறும் நோக்கத்தில் அக்கட்சி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில்லை. தமது கட்சிக் கொள்கைகளை மக்களுக்கு எடுத்துக் கூறுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக, குறிப்பிட்ட ஓர் அரசியல் போக்கை நிறுத்துவதற்காகவே, ஜனாதிபதித் தேர்தல்களை அக்கட்சி பாவித்து வந்துள்ளது.  

ஆனால், ஏனைய கட்சிகளைப் பொறுத்தவரை ஜனாதிபதித் தேர்தலானது தனி நபர்களின் நலன்களுக்காகக் கட்சியைப் பாவிக்கும் ஒரு சந்தர்ப்பமாகும். குறிப்பிட்ட ஒருவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்து, அவர் மூலம் கட்சியிலுள்ள ஒரு சிலர் பொருளாதார ரீதியில் பலம் பெறுவதே அக்கட்சிகளில் இடம்பெறுகிறது.   

இதை விளங்கிக் கொள்ளாத சாதாரண மக்கள், வெற்றி பெறும் அணியில் தாமும் இருக்க வேண்டும் என்ற ஆசையில் அல்லது சில வேட்பாளர்களின் வாக்குறுதிகளை நம்பியும் ஏதோ ஒரு கட்சியின் வேட்பாளரை ஆதரிக்கிறார்கள். பின்னர் ஏமாந்து விடுகிறார்கள்.  

மூன்று கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதே இந்நாள்களில் பேசுபொருளாகியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உத்தியோகப்பற்றற்ற முறையில் தலைமை தாங்கும் தாமரை மொட்டுக்கட்சி எனப் பொதுவாக அழைக்கப்படும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அந்த மூன்று கட்சிகளாகும்.   

நாம், ஏற்கெனவே கூறியதைக் போல், அவற்றின் ஜனாதிபதி வேட்பாளர்கள் இன்னமும் நிர்ணயிக்கப்படாத காரணத்தாலேயே இந்த விடயத்தில் இந்த அசாதாரண ஆர்வம் காணப்படுகிறது.   
ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் பல தலைவர்கள், தமது ஜனாதிபதி வேட்பாளர், கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே எனக் கூறுகிறார்கள். ஆனால், கட்சியின் வேறு சிலர், அவருக்கு எதிராகப் பகிரங்கமாகவே பேசத் தொடங்கியுள்ளனர்.   

கடந்த ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கி, மஹிந்த ராஜபக்‌ஷவை அப் பதவிக்கு நியமித்த போது, அந்த நிலைமையை உருவாக்கியவர் ரணிலே என்ற​தொரு கருத்து ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பரவியது.   

அத்தோடு,முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் மகன் சஜித் பிரேமதாஸவே, கட்சித் தலைமையை ஏற்க வேண்டும் என்றும் பலர் பகிரங்கமாகவே கூறத் தொடங்கினர். கடந்த வருடம் நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தோல்விக்கு காரணமும் ரணிலே எனப் பலரும் கூறினர்.  இந்த நிலையில், ரணிலுக்குக் கூடுதலான வாய்ப்புகள் இருந்த போதிலும், ஐ.தே.கவின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தொடர்பான விடயம், சற்று சிக்கலான விடயமாக இருக்கிறது.   

ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருக்கும் பலம், சிறுபான்மை மக்களின் வாக்குகளாகும். குறிப்பாக, தமிழ், முஸ்லிம் மக்கள், கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இருந்த நிலையிலிருந்து, அவ்வளவாக மாறியதாகத் தெரியவில்லை. ஆனால், ரணில், சிறுபான்மை மக்களை வென்றதைப் போல், சஜித் வென்றெடுப்பாரா என்பதும் அக்கட்சி முன்னுள்ள ஒரு சவாலாகும்.  

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, சிறுபான்மை மக்கள் ஓரணியாக நின்று ஐ.தே.கவை ஆதரித்தாலும் அதன் பயனை அடைய, ஐ.தே.கவால் முடியாது. ஏனெனில் இப்போது ஐ.தே.கவுக்கும் மஹிந்த அணியினருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசத்தை நிறப்ப, சிறுபான்மை வாக்காளர்களால் முடியாது. அதாவது 2010 ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலில் போல் சிறுபான்மை மக்கள் தமது பேரம் பேசும் சக்தியை இழந்துள்ளனர்.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, இப்போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் மிக நெருக்கமாக இருக்கிறது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல்களின் போது, இரு கட்சிகளும் கூட்டாகப் போட்டியிடுவது தொடர்பாகவும் அபிப்பிராயங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அது தொடர்பாக இரு சாராரும் பேச்சுவார்த்தைகளையும் நடத்தி வருகின்றனர். ஆனால், ஜனாதிபதித் தேர்தல் விடயத்தில் இரு சாராரும் உடன்பட முடியாத நிலையில் இருப்பதாகவே தெரிகிறது.   

தாமே இரு கட்சிகளின் சார்பிலும் ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது நெருங்கிய சகாக்களான மஹிந்த சமரசிங்க போன்றோர் மூலம் பகிரங்க மேடைகளில் கூறச் செய்கிறார்.   

மஹிந்தவுக்குத் தற்போதைய சட்டத்தின் படி, மூன்றாவது முறையாகப் போட்டியிட முடியாது என்பதாலும் அவரது சகோதரர்களான கோட்டாபய, பசில் ஆகியோருக்கும் அவர்களது அமெரிக்க குடியுரிமை காரணமாகப் போட்டியிட முடியாது என்பதாலும், மஹிந்த அணியினர் தம்மை ஆதரிப்பர் என ஜனாதிபதி நினைக்கிறார் போலும்.  

ஆனால், ராஜபக்‌ஷ குடும்பத்தினர் தம்மைப் பதவியிலிருந்து விரட்டிய மைத்திரிக்கு வாய்ப்பளிப்பார்கள் என நம்ப முடியாது. மைத்திரி அன்று செய்ததை அவர்கள் மறக்க மாட்டார்கள்.   
இப்போது மைத்திரியிடம் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரம் இருப்பதால், அதைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்வதற்காக அவர்கள் மைத்திரியோடு நற்புறவு பேணி வந்த போதிலும், கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே மைத்திரியைப் பாதாளத்தில் தள்ளிவிடுவார்கள். அவருக்கு ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தை மஹிந்த அணியினர் ஒருபோதும் வழங்கப்போவதில்லை.  

ஆனால், மைத்திரிக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஓன்றில், அவர், தமது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட வேண்டும். ஆனால், அதன் மூலம் அவர் வெற்றிபெறப் போவதில்லை. கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களின் போது, அவரது தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சின்னத்திலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சின்னத்திலும் போட்டியிட்டவர்கள் மொத்தம் 15 இலட்சம் வாக்குகளையே பெற்றார்கள். மஹிந்தவின் பொதுஜன முன்னணி 47 இலட்சம் வாக்குகளையும் ஐக்கிய தேசியக் கட்சி 36 இலட்சம் வாக்குகளையும் பெற்றன.   

இந்த நிலைமை மாறியிருப்பதாகத் தெரியவில்லை. மாறியிருந்தாலும் ஜனாதிபதித் தேர்தலில், மைத்திரி வெற்றி பெறும் அளவுக்கு மாற்றங்கள் ஏற்படவில்லை. ஜனாதிபதித் தேர்தலில், மைத்திரி போட்டியிடுவதற்கான இரண்டாவது வழி என்னவென்றால், அவர் தமது பதவிக்காலம் முடிவடையுமுன் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும்.  

ஜனாதிபதி ஒருவர் தமது முதலாவது பதவிக் காலத்தின் முதல் நாளிலிருந்து நான்கு ஆண்டுகள் சென்றதன் பின்னர், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மற்றொரு முறை ஜனாதிபதியாவதற்கான தமது விருப்பத்தைத் தெரிவித்து, மக்கள் ஆணையைக் கோர முடியும் என அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.   

அதாவது, இந்த வருடம் ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதிக்குப் பின்னர், தமது பதவிக் காலம் முடிவடையும் முன், அவர் ஜனாதிபதித் தேர்தலொன்றை நடத்தினால் அதில் அவர் கட்டாயம் போட்டியிட வேண்டும்.   

ஆயினும், அப்போதும் மஹிந்த அணியினர் அவருக்கு எதிராக வேட்பாளர் ஒருவரை நிறுத்துவர். எனவே, இனி மைத்திரி ஜனாதிபதியாக வரும் வாய்ப்புகள் தெரிவதற்கில்லை.  

ஜனாதிபதித் தேர்தல் நடந்தால்  மஹிந்த அணிக்கே கூடுதல் வாய்ப்பு

மஹிந்த அணி ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் குழப்பத்தில் இருப்பதாகவே தெரிகிறது. ஒரு புறம் கோட்டாபய ராஜபக்‌ஷ, “நான் போட்டியிடத் தாயார்” என அண்மையில் கூறியிருந்தார். தாம், தமது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டுப் போட்டியிடத் தாயர் என்றே கோட்டா கூறுகிறார்.   

அதேவேளை, ராஜபக்‌ஷ சகோதரர்களில் மூத்தவரான முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷவும் “நானும் தயார் ”எனக் கூறியிருந்தார். மஹிந்த போட்டியிடச் சட்டம் இடம் கொடுக்கவில்லை. பசில் அமெரிக்க குடியுரிமையை கைவிட விருப்பமில்லையோ என்னவோ, அவர் தாம் போட்டியிடுவதாகக் கூறுவதே இல்லை.   

ராஜபக்‌ஷ குடும்பத்தில் எவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டாலும் அவர், அனேகமாகப் பணம் கொடுத்து ஏனைய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்று, இரண்டு முறைக்கு மேல் பதவியில் இருக்க சட்டத்தை மாற்றிக் கொள்ள இடமுண்டு. கோட்டா வந்தாலும் சமல் வந்தாலும் இது நடைபெறலாம்.   

அவ்வாறாயின் தமது மகன் நாமல் ராஜபக்‌ஷவை ஜனாதிபதியாக்க வேண்டும் என்ற மஹிந்தவின் கனவு நனவாகாது போகலாம்.   

இது மஹிந்தவுக்கு இருக்கும் ஒரு கவலை. அதற்காகத் தமது குடும்பத்திலல்லாத தினேஷ் குணவர்தன போன்ற ஒருவரை ஜனாதிபதியாக்கவும் அவர் விரும்புவார் எனக் கூற முடியாது. 

ஏனெனில் எவ்வளவு தான் நம்பிக்கைக்குரியவராக இருந்தாலும், நாட்டின் மிகப் பலம் வாய்ந்த பதவியைக் கைப்பற்றிக் கொண்டதன் பின்னர், எவரும் தொடர்ந்தும் தமக்குக் கட்டுப்பட்டுச் செயற்படுவார் என்பதற்கு, எவ்வித உத்தரவாதமும் இல்லை. அந்த அணியில் எவர் போட்டியிட்டாலும் மஹிந்த இந்தப் பிரச்சினையை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.  

இது போன்ற பிளவுகள் இல்லாமல் மஹிந்த அணியினர் களத்தில் இறங்கினால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர்களுக்கே கூடுதல் வாய்ப்பு இருக்கிறது என தெரிகிறது.   

ஏனெனில், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அவர்கள் சுமார் 47 இலட்சம் வாக்குகளைப் பெறும் போது, ஐ.தே.க 36 இலட்சம் வாக்குகளையே பெற்றது. மைத்திரி அணி 15 இலட்சம் வாக்குகளையே பெற்றது.   

மஹிந்த அணி அப்போதும் 50 சதவீத வாக்குகளைப் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற ஒரு வேட்பாளர், செல்லுபடியான வாக்குகளில் 50 சதவீதத்துக்கும் மேலதிகமாக ஒரு வாக்கையாவது பெற்றிருத்தல் வேண்டும்.   அந்த இலக்கை அடையக் கூடிய ஒரே அணி மஹிந்த அணியே.

சிலவேளை வாக்குகளை எண்ணும் போது, முதலாவது சுற்றில் அவர்கள் இந்த இலக்கை அடையாதிருக்கலாம். ஆனால், இப்போது இருக்கும் நிலையில், ஏனைய வேட்பாளர்களுக்கு எவ்வகையிலும் மஹிந்த அணியின் வேட்பாளரை நெருங்கவே முடியாது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .