2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஜி - 20 மாநாட்டில் இந்திய - சீன விவகாரம்

Editorial   / 2018 ஜூன் 18 , மு.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவும் சீனாவும், தமது இருதரப்பு வியாபாரத்தை மேலதிகமாக முன்னெடுக்க அண்மையில் தலைப்பட்ட போதிலும், இந்தோனேஷியாவில் இராணுவத் தளமொன்றை இந்தியா அமைக்க, இந்தோனேஷிய அரசாங்கம் அங்கிகாரம் அளித்தமையைத் தொடந்து இந்திய -  சீனா பூகோளவியல் எல்லைப் பிரச்சினை, மீண்டும் தலைதூக்கியுள்ளது. 2017இல், எல்லை விவகாரம், பிராந்திய போரொன்று ஏற்படுமளவுச் சாத்தியக்கூறுகளைக் கொண்டு போயிருந்த போதிலும், பின்னர் குறித்த விவகாரம், மேலதிக சர்ச்சைகள் இன்றிக் கொதிநிலையில் விடப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, குறித்த இராணுவத் தளம் அமைப்பது தொடர்பான இந்தியாவின் முடிவு, சீனா - இந்தியா எல்லை தொடர்பான பிரச்சினையை மீண்டும் தூண்டிவிட்டுள்ளது எனலாம். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை விவகாரம் தொடர்பான முரண்பாடுகள், இரு நாடுகளுக்கிடையிலும் 1967களின் பின்னராக அரசியல், இராஜதந்திர உறவுகளில் முரண்பாடான நடத்தையைப் பேணுவதற்கு வழிவகுத்துள்ளது. ஆசிய பசுபிக் பிராந்தியத்தில், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்ச்சியான அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக, இவ்விருமுனை மூலோபாயப் போட்டி நிலைமையே, அணுவாயுத வல்லமை பொருந்திய மேற்குறித்த இரு நாடுகளுக்கிடையிலுமான பதற்ற நிலைக்குக் காரணமாகும். இதன் ஒரு பகுதியாகவே, குறித்த எல்லை விவகாரமும் அவற்றுடன் தொடர்பான வெளிவிவகாரக் கொள்கை, இராணுவ, எல்லைப் பாதுகாப்பு, சர்வதேச விவகாரங்களுக்கான அதிகாரக் குவிப்புக்கள் ஆகியன பார்க்கப்பட வேண்டியனவாகும்.

சீனாவைச் சேர்ந்த கட்டுமான வாகனங்கள், சீனாவின் இராணுவத்தினருடன் சேர்ந்து, சர்ச்சைக்குரிய இந்திய - பூட்டான் - சீன எல்லையில், வீதிப் புனரமைப்புக்கான பணியில் கடந்தாண்டு ஈடுபடத் தலைப்பட்டமையை தொடர்ந்து, இந்த எல்லைப் பிரச்சினை வலுப்பெற்றிருந்தது. மூலோபாய நடவடிக்கைக்காகவும் பாதுகாப்புக்காகவும், பூகோளவியல் ரீதியாக அமைந்த அந்நிலப்பகுதி, 1890ஆம் ஆண்டின் பிரித்தானியாவுக்கும் சீனாவுக்கிடையிலான சர்வதேச சமவாயத்தின் அடிப்படையில், சீனா தனது ஆதிக்கத்தின் உள்ளார்ந்த பகுதி என வாதிட்டபோதிலும், இந்தியாவும் பூட்டானும் குறித்த வாதத்தை ஏற்கவில்லை. அதனைத் தொடர்ந்து இந்தியா, குறித்த எல்லையானது இந்திய - பூட்டன் நாடுகளின் ஆதிக்கத்துக்குச் சொந்தமானதை மீள்நிரூபணம் செய்யும் பொருட்டு, இராணுவத்தையும் இராணுவத் தளவாடங்களையும் குறித்த எல்லைக்கு அனுப்பிவைத்ததோடு, அதனைத் தொடர்ந்தும் சீனாவின் அரச ஊடகங்களில் இந்திய இராணுவம் குறித்த எல்லையை விட்டு வெளியேற மறுக்கும் சந்தர்ப்பங்களில், இந்தியாவுக்கெதிராக போர்முனைப்பை சீனா மேற்கொள்ளும் என அறிவித்தமையையும் தொடர்ந்தே, இம்முரண்பாட்டு நிலைமை வலுப்பெற்றிருந்தது.

பிரித்தானியாவின் கொலனித்துவ ஆட்சிக்குப் பின்னரான காலப்பகுதிகளிலிருந்து, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை விவகாரம், தொடர்ச்சியாக இருந்துவருகின்ற போதிலும், அண்மையிலான எல்லை விவகாரம், மேற்கூறிய விவகாரங்களுக்கு மேலதிகமாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரின் சந்திப்பு, அச்சந்திப்பில் இந்து சமுத்திரத்தில் சீனாவின் கடற்படை நடவடிக்கை மற்றும் ரோந்துகளை இணைந்து கண்காணித்தல், இந்தியா - ஐ.அமெரிக்கா இணைந்த பாதுகாப்புத் தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களும் இணங்கிக் கொண்டமையைத் தொடர்ந்தும், சர்ச்சைக்குரிய எல்லையின் ஒருபுறத்தே இருக்கும் பூட்டான், இந்தியாவின் பொருளாதார மற்றும் இராணுவ உதவிகளைத் தொடர்ச்சியாக பெற்றுவருதல் ஆகியவற்றின் அடிப்படையிலிருந்தே, மீண்டும் தோற்றம் பெற்றமையை அவதானிக்க முடிகின்றது.

இந்திய - சீனா எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அரசியல் அளவுருக்கள், 2005இல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்ட போதிலும், சீனா, தொடர்ச்சியாகத் தனது எல்லை மீள்நிர்ணயத்தை இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தை உள்ளடங்கலாக விரிவுபடுத்தியமையைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்திருந்தது.

சீன - இந்திய இணக்கம் மற்றும் உறவை மேம்படுத்துவதற்கான இந்தியத் தலைவராக, இந்தியப் பிரதமர் மோடி, அவரது அரசாங்கத்தின் ஆரம்ப நாட்களில் கருதப்பட்ட போதிலும், மேற்குறிப்பிட்ட இந்திய - ஐ.அமெரிக்க இணைந்த பாதுகாப்புக்கான ஒப்பந்தம், அருணாச்சலப் பிரதேசத்துக்கு தலாய் லாமா விஜயம் செய்தமை தொடர்பான சீனாவின் சீற்றம், அதனைத் தொடர்ந்து சீனாவின் பட்டுப்பாதை நிரலில் இந்தியா இணைவதற்கு மறுத்தமை, அதனடிப்படையில்பாகிஸ்தானுடனும் மத்திய ஆசிய நாடுகளுக்கிடையிலும் தொடர்புகளை சீனா வலுப்பெறச் செய்தலில் இந்தியா எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் சர்வதேச இராஜதந்திர மற்றும் அரசியல் காய் நகர்த்தல்களை மேற்கொண்டமை என்பன, சீனாவின் குறித்த எல்லை மீறல்களுக்கான காரணிகளாக அமையலாம்.

மறுபுறத்தே, இந்தியாவுக்கு எதிராக, பாகிஸ்தானைத் தளமாக கொண்டியங்கும் ஜாஸ்-ஈ-மொஹமட் ஆயுதக் குழுவைத் தகர்த்தலில், சீனாவின் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள், இந்தியாவின் சர்வதேச அணு வழங்கல் குழுவில் அங்கத்துவம் பெறுவதற்கான சமர்ப்பணத்தை சீனா தடுத்தமை, தெற்காசிய பிராந்தியத்தில், பிராந்திய வல்லரசான இந்தியாவின் ஆதிக்கத்தை மீறி இலங்கையுடனும் நேபாளத்துடனும் சீனா கொண்டிருக்கும் இராணுவ மற்றும் பொருளாதார உறவுகளும் முதலீடுகளும், சீனாவுக்கு எதிரான இந்தியாவின் கொள்கைகள் அமையப்பெறுவதற்கு அண்மைக்காலங்களில் காரணமாக அமைந்திருந்தன. 

இவற்றுக்கெல்லாம் மேலாக, பிரதமர் நரேந்திர மோடியின் தேசியவாதத்துக்கான அரசாங்கத்தின் கொள்கைகளோ அல்லது சீனாவின் காலாகாலமாக பின்பற்றப்பட்டுவரும் கொம்யூனிசக் கொள்கைகளும், குறித்த இம்முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு ஒருபோதும் விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்ளப்போவதில்லை என்பதே வெளிப்படை. இந்நிலையிலேயே ஜூலை மாதம் நடைபெற இருக்கும் ஜி -20 உச்சிமாநாட்டில், இந்திய - சீனத் தலைவர்களின் சந்திப்பு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையப்போகின்றமை, அரசியல் அவதானிகளால் சுட்டிக்காட்டப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X