2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஜூலைக் கலவரம் தந்த பயன்களும் வீணாகிவிட்டன

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2019 ஜூலை 24 , பி.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் தலைவிதியையே மாற்றி அமைத்த ‘கறுப்பு ஜூலை’ என்று பொதுவாக அழைக்கப்படும், தமிழர்களுக்கு எதிராக 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற கலவரங்கள் ஆரம்பித்து, இன்றோடு 36 வருடங்கள் பூர்த்தியாகின்றன.   

ஆனால், அந்தக் கொடுமைக்கு மூலகாரணமாக அமைந்த இனப் பிரச்சினைக்கு, நிலையான தீர்வொன்று இன்னமும் காணப்படவில்லை.  

கடந்த வாரம், யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அடுத்த இரண்டு வருடங்களில் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் எனக் கூறியிருந்தார்.   

சுன்னாகம், கந்தரோடை ஸ்கந்தவரோதய வித்தியாலயத்தின் 125ஆம் வருடப்பூர்த்தி மற்றும் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, ரணில்  இந்தக் கருத்தைத் தெரிவித்து இருந்தார்.  

ஆயினும், தமிழ்த் தலைவர்கள், அவரது அந்தக் கூற்றை அவ்வளவு நம்பியதாகத் தெரியவில்லை. அதற்குத் தமிழ் ஊடகங்களாவது, அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கவில்லை.   

1983ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் 20ஆம் திகதி முதல், ஊடகங்களில் ஜூலைக் கலவரங்களைப் பற்றிக் கட்டுரைகள் வெளிவருவது வழமையாக இருந்தன. ஆனால், 2009ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு போர் முடிவடைந்ததன் பின்னர், அதற்கு ஊடகங்கள் வழங்கிய முக்கியத்துவமும் படிப்படியாகக் குறைந்து வந்துள்ளது. கடந்த வார சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகளில், இதைப் பற்றி, மிகச் சிறிய குறிப்புகளே காணப்பட்டன.   

தனித் தமிழ் நாட்டுக்கான ஆயுதப் போராட்டம், 1983ஆம் ஆண்டுக்கு நீண்ட காலத்துக்கு முன்னரே ஆரம்பித்துவிட்ட போதிலும், 1983ஆம் ஆண்டில் அப்போராட்டம் ஆரம்பித்ததாகவே பல ஆய்வாளர்கள் கூற விரும்புகின்றனர். அதற்கு முன்னர், தமிழ் ஈழத்துக்காகப் போராடிய குழுக்கள், ஆங்காங்கே பொலிஸ், ஆயுதப் படையினர் ஒருவர் இருவரை அல்லது துரோகிகள் எனத் தாமாகப் பட்டஞ்சூட்டிய சிலரைச் சுட்டுக் கொன்றார்கள். 1982ஆம் ஆண்டில் சாவகச்சேரி போன்ற சில பொலிஸ் நிலையங்கள் தாக்கப்பட்டன. இவை, யுத்தம் என்ற பெயரில் அழைக்கக் கூடியவையாக இருக்கவில்லை.  

ஆனால், 1983ஆம் ஆண்டு, இனக்கலவரத்தை இறுதியாகத் தூண்டிவிட்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் திருநெல்வேலித் தாக்குதலின் போது, 13 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 

வெற்றிகரமாக, முதன்முதலாக கண்ணிவெடிகள் உபயோகிக்கப்பட்ட திருநெல்வேலித் தாக்குதலும் அதனால் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் எண்ணிக்கையும் போரியல் ரீதியில் ஒரு திருப்புமுனையாகியதோடு, அதையடுத்து இடம்பெற்ற நிகழ்வுகள், ஓர் உள்நாட்டுப் போரின் இலட்சணங்களைக் கொண்டு இருந்தன.   

திருநெல்வேலித் தாக்குதலின் வெற்றியால், தமிழ் இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் ஏற்பட்ட தெம்பும் அதையடுத்து இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான கொடூரத் தாக்குதல்களால் ஏற்பட்ட வைராக்கியமும் அவர்களை நூற்றுக் கணக்கில், தமிழ் ஆயுதக் குழுக்களுடன், குறிப்பாகப் புலிகள் அமைப்புடன் இணையச் செய்தன. எனவேதான், 1983ஆம் ஆண்டு திருநெல்வேலித் தாக்குதலும் கறுப்பு ஜூலையும் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகின்றன.  

அதேவேளை, இந்தச் சம்பவங்களே, குறிப்பாக தமிழர்களுக்கு எதிரான நாடளாவிய தாக்குதல்களே, சர்வதேசக் கவனத்தையும் இந்தியத் தலையீட்டையும் இலங்கையின் பக்கம் ஈர்த்தன. அந்த வகையிலும் இந்தச் சம்பவங்கள், வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தன.   

மற்றொரு வகையில், இந்தச் சர்வதேச கவனம் மற்றும் இந்தியத் தலையீடு காரணமாக, இலங்கை அரசாங்கம், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டது. இல்லாவிட்டால், இலங்கையின் எந்தவொரு தலைவரும், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கென, போலி நாடகங்களையாவது அரங்கேற்றி இருக்க மாட்டார்.  அதன் பின்னர், இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் ஆகிய அனைத்தும், 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவங்களின் விளைவே ஆகும். 

1983ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற போரின் போது, நாட்டில் மூன்று இனங்களையும் சேர்ந்த பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக் கணக்கான தமிழர்கள், தனித் தமிழ் நாடு என்ற தீர்வுக்காகத் தாமாகவே விரும்பிப் போராடி, உயிரைத் தியாகம் செய்தனர். மேலும் பல்லாயிரக் கணக்காண பொதுமக்கள், போரில் சிக்கி உயிரிழந்தனர். தென்பகுதியிலும் பலர், புலிகளுக்கு எதிரான போரில் பங்கு கொண்டு, தமது நாட்டுக்காகவென உயிர் துறந்தனர். மேலும் பலர், தொழிலுக்காகப் படைகளில் இணைந்து, உயிர் துறக்க நேரிட்டது.   

போர் நிறைவடைந்து, பத்தாண்டுகள் முடிவடைந்தும் இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை, இன்னமும் சரியாக அறிக்கையிடப்படவில்லை. ஏனெனில், நேரடியான மோதல்களின் போதும் போரின் காரணமாக, ஆனால் மோதல்களின் போதல்லாது இடம்பெற்ற உயிரிழப்புகள் குறித்து, சாதாரண தமிழ் மக்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்ட தமிழர்களும் குறைத்துக் காட்ட அரச மற்றும் சிங்களத் தரப்பினரும் விரும்புகின்றனர்.   

சில தமிழ் அமைப்புகள் அவ்வெண்ணிக்கை 40,000 என்றும் சிலர் 75,000 என்றும் தமிழகத் தலைவர்கள் 500,000 என்றும் கூறி வருகின்றனர். அரசாங்கத் தரப்பினர் அது சுமார் 7,000 என்கின்றனர். 2011ஆம் ஆண்டு குடிசன மதிப்பீடொன்றின் மூலமும் அரசாங்கம் அந்த எண்ணிக்கையையே குறிப்பிட்டு இருந்தது. பொதுவாக உயிரிழப்புகளும் அரசியலாக்கப்பட்டுள்ளது.   

தமிழர்களின் போராட்டம் அல்லது கறுப்பு ஜூலை உருவாக்கிய நிலைமை, முற்றாக வீணாகியதாகக் கூற முடியாது. 1975ஆம் ஆண்டு ஆரம்பித்து 1987ஆம் ஆண்டு வரையிலான தமிழர் போராட்ட இயக்கங்களினது ஆயுதப் போராட்டம், பயனற்றது என்று கூற முடியாது.   

அந்தக் கால போராட்டத்தின் காரணமாகவே, 1987ஆம் ஆண்டு இந்தியத் தலையீட்டிலாவது அதிகாரப் பரவலாக்கல் முறை, இலங்கையில் அறிமுகமாகியது. அதன் கீழ், மாகாணசபை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் 1987ஆம் ஆண்டுக்குப் பின்னரான போராட்டம், வீணாகியது என்றே கூற வேண்டியுள்ளது.  

பதவியில் இருந்த எந்தவோர் அரசாங்கத்துக்கும் தமிழ், முஸ்லிம் மக்கள் கேட்கும் எந்தவொரு தீர்வையும் வழங்கும் தேவை இருக்கவில்லை. இப்போதும் அவர்களுக்கு அவ்வாறானதொரு தேவை இருக்கிறது என்று கூற முடியாது. அதேவேளை, தமிழ்த் தலைவர்களும் கிடைத்ததைப் பாவித்துப் பயன்பெற முயலவில்லை.  

1988ஆம் ஆண்டு வரதராஜப் பெருமாளின் தலைமையில், இந்திய ஆதரவில் தெரிவு செய்யப்பட்ட இணைந்த வடக்குக் கிழக்குக்கான மாகாண சபையை, புலிகள் இயங்கவிடவில்லை. தமிழ்நாட்டுக்கு அருகில், தனித் தமிழ் நாடொன்று உருவாவதற்கு, இந்தியா ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்ற பூகோள அரசியல் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாத புலிகள், அன்று அந்த மாகாண சபையைக் குழப்பிவிட்டு, தமிழ் ஈழத்துக்காகப் போராடினார்கள்.   

இந்திய ஆதரவில், அந்த மாகாண சபை நீடித்து இருந்தால், இந்திய நெருக்குதல் மூலம், தமிழ்த் தலைவர்கள் அதைப் பலப்படுத்திக் கொண்டு இருக்கலாம். வடக்குக் கிழக்கு இணைப்பும் நிரந்தரமாகி இருக்கக்கூடும்.   

அதேபோல், 2013ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட வடமாகாண சபையையும் தமிழ்த் தலைவர்கள் உரிய முறையில் பாவித்தார்களா என்ற சந்தேகம் எழுகிறது. அந்த மாகாண சபையும் அரசியல் விடயங்களுக்காகப் பாவிக்கப்பட்டதேயல்லாது போரால் பாதிக்கப்பட்ட மக்களின் சமூக, பொருளாதார பிரச்சினைகளைத் தீர்க்க உரிய முறையில் பாவிக்கப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது.   

இரண்டு வருடங்களில் தீர்வைத் தருவாரா பிரதமர்?

இனப்பிரச்சினைக்குத் தீர்வு, இரண்டு வருடங்களில் வழங்கப்படும் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வடக்கில் கந்தரோடையில் நடைபெற்ற பாடசாலை வைபவமொன்றின் போது கூறியிருக்கிறார்.  

அரசாங்கம் பதவிக்கு வந்து, நான்காண்டுகளில் வழங்க முடியாதுபோன தீர்வை, அவர் அடுத்த இரண்டு வருடங்களில், எவ்வாறு வழங்கப் போகிறார் என்பது, பெரும் கேள்விக்குறியாகும்.   

தமது அரசாங்கத்துக்கு, நாடாளுமன்றத்தில் போதிய பெரும்பான்மை பலம் இல்லாதிருந்தமையே, கடந்த காலத்தில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்க முடியாமல் போனதற்குக் காரணம் எனவும் பிரதமர் கூறியிருக்கிறார். அது உண்மைதான்! இனப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்குவதாயின், அது அரசமைப்புத் திருத்தமொன்றின் மூலமே சாத்தியமாகும். அதற்கு ஆளும் கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்க வேண்டும்; அல்லது பிரதான எதிர்க்கட்சியின் ஆதரவு அவசியமாகும்.  

அதாவது, தனித்து முடியாவிட்டால் 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிட்டுத் தெரிவாகியவர்களின் ஆதரவும் அவசியமாகும். ஆனால், அவர்களில் மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆதரவாளர்களின் ஆதரவு ஒரு புறமிருக்க, குறைந்தபட்சம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து, ஆட்சி நடத்திய மைத்திரி ஆதரவாளர்களின் ஆதரவேனும் கிடைக்கவில்லை.  

அடுத்த பொதுத் தேர்தலில், அந்தப் பெரும்பான்மை பலம், ஐ.தே.கவுக்குக் கிடைக்கும் எனப் பிரதமர் நினைக்கிறார் போலும். அல்லது அடுத்த பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெறும் என்றும், அதன் பின்னர் எதிர்க் கட்சியின் ஆதரவு, அரசமைப்புத் திருத்தத்துக்கு கிடைக்கும் என்றும் அவர் நினைக்கிறார் போலும். இவை சாத்தியமா?   

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் முடிவுகளின் படி என்றால், இவை சாத்தியமில்லை. ஏனெனில், கடந்த பொதுத் தேர்தலில் 50 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஐ.தே.க உள்ளிட்ட கூட்டணி, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது, வெறும் 36 இலட்சம் வாக்குகளையே பெற்றது.   

அதன் பின்னர், அரசாங்கம் ஆரம்பித்த ‘கம்பெரலிய’ கடன் திட்டத்தால் மக்கள் கவரப்பட்டு இருந்தால், சிலவேளை அடுத்த ஜனாதிபதி, பொதுத் தேர்தல்களின் போது, ஐ.தே.கவின் வாக்கு வங்கி பெருகலாம். ஆனால் அது 50 இலட்சம் வரை அதிகரிக்குமா?   

அப்படியே, ஐ.தே.க அடுத்த ஜனாதிபதி, பொதுத் தேர்தல்களில் வெற்றி பெறும் என்று வைத்துக் கொண்டாலும், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெறும் என்றும் வைத்துக் கொண்டாலும் அந்த அரசாங்கம் என்ன தீர்வை வழங்கும்?   

ஏற்கெனவே 2016ஆம்ஆண்டு, தற்போதைய அரசாங்கத்தின் கீழ், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, அரசமைப்புச் சபையொன்று (Constitutional Assembly) நியமிக்கப்பட்டது. அந்தச் சபையின் கீழ், பிரதமரின் தலைமையில் நியமிக்கப்பட்டு இருந்த வழிநடத்தல் குழு, இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்துக்கான ஆலோசனைகளை நாடாளுமன்றத்தில் முன்வைத்தது. 

உண்மையிலேயே, அதில் மாகாண சபை முறையே முன்வைக்கப்பட்டு இருந்தது. ‘ஒற்றையாட்சி’ என்பதற்குப் பதிலாக, ‘ஒருமித்த நாடு’ என்ற பதத்தைப் பாவிக்க வேண்டும் என ஆலோசனை கூறியது. சிங்கள மொழியில் நாடு, ‘ஏக்கீய ராஜ்ஜிய’ (ஒற்றையாட்சி) என்பதையே தொடர வேண்டும் என்றும் கூறியது.   

இந்தக் குழப்பம் இருந்த போதிலும், தமிழில் ‘ஒருமித்த நாடு’ என்று இலங்கை அழைக்கப்படுமானால் அதுவே பெரும் வெற்றி என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறினர்.   

பேரினவாதிகளும் இந்தப் பெயர் வேறுபாட்டைப் பாவித்து, சிங்கள மக்களைத் தூண்ட முயற்சித்தனர். இரு சாராரிலும் எவரும், வழிநடத்தல் குழுவின் பிரேரணைகளின் மூலம் முன்வைக்கப்பட்ட அதிகாரப் பரவலாக்கல் முறையை எதிர்க்கவில்லை. தற்போதைய மாகாண சபை முறையே, அந்த அதிகாரப் பரவலாக்கல் முறையாக இருந்தது. அதாவது, அடுத்த பொதுத் தேர்தலில் ஐ.தே.க மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் பெற்று பதவிக்கு வந்தாலும், கிடைக்கப் போகும் தீர்வு இது மட்டுமே.   

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இதற்கு அப்பால் போக முடியாது என்று தெரியும். ஆனால், போட்டிக் கட்சிக்காரர்கள், அரசியல் இலாபம் அடையக்கூடும் என்பதால், ‘ஒருமித்த நாடு’ என்ற சொல்லில் தொற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அதற்காக, வடமாகாண சபையால் சட்டப்படி பெறக்கூடிய பயன்களையாவது, அதன் தலைவர்கள் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கவில்லை.   

அரசியல் தீர்வு என்ற பெயரில், குறிப்பிட்ட துல்லியமானதொரு குறிக்கோள் இல்லாத போராட்டமே நடைபெறுகிறது. அதை விடுத்து, மாகாண சபை மூலம் வடக்கில் வீடமைப்பு, தொழில், நீர்ப்பாசன வசதி, கல்வி, விவசாயம் போன்ற துறைகளை அபிவிருத்தி செய்வதற்காக இதேபோல் போராடியிருந்தால், வட மாகாணத்தின் நிலைமையே மாறியிருக்கும்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .