2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜெனீவாவுக்குப் பின்னரான நெருக்கடிகள்

Johnsan Bastiampillai   / 2021 மார்ச் 30 , பி.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹமட் பாதுஷா

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட பிரேரணை, நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது. அரசாங்கம் இதை எதிர்பார்த்திருக்கவில்லை என்றாலும், இம்முறை ஜெனீவா அமர்வில், ‘பிடி’ இறுகப் போகின்றது என்பது பரவலாகவே எதிர்வுகூறப்பட்ட விடயம்தான். 

இப்பிரேரணைக்கு 22 நாடுகள் ஆதரவாகவும் 11 நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளன. 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. 

மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறாமல் செயற்பட்ட இலங்கை அரசாங்கத்துக்கு, இது நல்லதோர் ஆரம்பப் பாடம் என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். அதேநேரம், இலங்கையர் என்ற அடிப்படையில் நோக்கினால், இது நமக்கு மகிழ்ச்சியான செய்தியும் அல்ல என்ற கருத்தும் இருக்கின்றது.  

இந்நிலையில், அரசாங்கம் ஒரு புதுமையான விளக்கத்தை அளித்து வருகின்றது. பிரேரணைக்கு எதிராக வாக்களித்த நாடுகளையும் வாக்களிப்பில் பங்கேற்காத நாடுகளையும் கூட்டிப் பார்த்தால், அது இலங்கைக்கு எதிராக, அதாவது பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளை விட அதிகம் என்று, கணக்குக் காட்டத் தொடங்கி இருக்கின்றது. 

இது சரியான வாதமல்ல! ஏனெனில், வாக்கெடுப்பில் ஒருபோதும் இவ்வாறு கணக்குப் பார்ப்பதில்லை. அப்படியென்றால், கடந்த தேர்தலின் முடிவுகளையும் அவ்விதம் நோக்க வேண்டி வரும் என்ற விடயம், நாடாளுமன்றத்திலும் வாதப் பிரதிவாதங்களுக்கு உட்பட்டிருக்கின்றது.  

மனித உரிமைகள் மீறல்கள் என்று எடுத்துக் கொண்டால், இலங்கையில் அரச தரப்பால் மாத்திரம் அது மேற்கொள்ளப்படவில்லை. ஆயுதம் தரித்த குழுக்கள், இயக்கங்கள் உரிமைகள் மீறல்களை நிகழ்த்தி இருக்கின்றன. 

ஆனால், மக்களால் முறையாகத் தெரிவு செய்யப்பட்ட, பொறுப்புள்ள, அரசாங்கத்துக்குப் பொறுப்புக்கூறலுக்கான கடப்பாடு அதிகமுள்ளது என்பதுதான் விசேட அம்சமாகும். 

அந்தவகையில், கடந்த பல வருடங்களாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான நகர்வுகள் இடம்பெறுகின்றன என்பதை நன்கு தெரிந்திருந்தும் கூட, உள்ளகப் பொறிமுறை ஒன்றின் ஊடாகவோ, வேறு வழிமுறைகளின் ஊடாகவோ, இதைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் வெற்றிகரமாக எடுத்திருக்கலாம். இதனூடாக, இந்த நகர்வின் தீவிரத்தன்மையைத் தணிவடையச் செய்திருக்கலாம். 

ஆனால், ‘சாண் ஏற முழம் சறுக்கும்’ அணுகுமுறையே பின்பற்றப்பட்டது. ஒரு சில நாடுகளைப் போல, இலங்கையும் ஒருவித இறுமாப்புடனேயே செயற்பட்டது என்று, அரசியல் நோக்கர்கள் கூறுவதுண்டு. 

இந்தப் பின்னணியில், ஐ.நா உறுப்பு நாடுகளிடையே இலங்கைக்கு இருந்த ஆதரவு சரிந்தமையால், முன்பிருந்த பொற்காலம் இப்போது இல்லாமல் போயிருக்கின்றது. 
கடந்தவாரம், இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தாலும், உடனடியாகப் பாரதூரமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூற முடியாது. ஐ.நாவின் நடைமுறைகளில் சில படிமுறைகள் உள்ளன. அதன்படியே அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதற்கு நீண்டகாலம் எடுக்கலாம். அதற்குள் சர்வதேசத்தைத் திருப்திப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை இலங்கை மேற்கொள்ளவும் அவகாசம் உள்ளது. 

எவ்வாறிருப்பினும், இலங்கை அரசாங்கத்துக்கு இது நல்ல சகுணம் அல்ல. சர்வதேசத்தின் ஆதரவை இழப்பது, வௌிவிவகார உறவுகள் தொடர்பான இராஜதந்திரத்தின் தோல்வி மட்டுமன்றி, அது உள்நாட்டு அரசியல், பொருளாதார தளங்களிலும் தாக்கம் செலுத்தும் வல்லமையைக் கொண்டது. எனவே, அரசாங்கத்தின் மீதான பிடி இறுகத் தொடங்கியுள்ளமை, எவ்வாறான விளைவுகளைக் கொண்டு வரும் என்று உறுதியாகக் கூற முடியாது. 

ஜெனீவாவில், இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேறியதைக் கணிசமானோர் கொண்டாடுவதை அவதானிக்க முடிகின்றது. இன்னுமொரு தரப்பு, தற்போதைய அரசாங்கத்துடனான தமது உறவைப் பொறுத்தே இவ்விடயத்தை, சாதகமாக அல்லது பாதகமான கண்ணோட்டத்தில் நோக்குகின்றது. 

இது இலங்கை அரசாங்கத்துக்கு மிகவும் சவாலான ஒரு சூழலாகும். பல்வேறு விடயப் பரப்புகளிலும் ஐ.நா தீர்மானத்தின் தாக்கம் இருக்கும். ஏற்கெனவே கொரோனா வைரஸ் தொற்று, பொருளாதார மந்தநிலை, அரசியல் குழப்பங்களுக்குள் சிக்கியுள்ள அரசாங்கத்துக்கு, இத்தீர்மானம் தேர்தலொன்றைத் தவிர, வேறு எந்தக் காரியத்துக்கும் சாதகமானதாக இருக்கப் போவதில்லை.   

எனவே, நிலைமைகளைப் பரிசீலித்துப் பார்த்து, இந்தப் பின்னடைவுக்கான காரணத்தைக் கண்டறிந்து, மனித உரிமைகள் விடயத்தில் ஐ.நாவைத் திருப்திப்படுத்தும் பாங்கில் இலங்கை செயற்பட வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கப்படுகின்றது. 

அவ்வாறு, இலங்கை செயற்படுமாக இருந்தால் பிரச்சினையில்லை. ஆனால், அதன் நடைமுறைச் சாத்தியம் பற்றி அறுதியிட்டுக் கூற முடியாது. அது சாத்திமற்றுப் போனால், பல வேண்டத்தகாத விளைவுகளை ஏற்படுத்தலாம். 

இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், இலங்கைக்கு எதிரானது என்றாலும், பலரும் அதை அரசாங்கத்துக்கு எதிரான ஒன்றாகவே பார்க்கின்றனர். ஆனால். ஐ.நா எதிர்பார்க்கின்ற முன்னேற்றங்கள் வெளிப்படாதவிடத்து, இதன் விளைவுகளை ஒட்டுமொத்த இலங்கை மக்களும் உணர வேண்டிய நிலை ஏற்படலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

அவ்வாறான நிலைமை ஏற்பட்டால், இலங்கை மீது சர்வதேசம் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையும் நகர்வும், நேரடியாகவோ மறைமுகமாகவோ இலங்கையில் வாழ்கின்ற அனைத்து மக்களிலும் தாக்கம் செலுத்த வாய்ப்பிருக்கின்றது. இது பொருளாதார, அரசியல், சமூகக் கட்டமைப்புகளின் ஊடாகப் பல்வேறு நெருக்கடிகளாக மக்களுக்குக் கடத்தப்படக் கூடும். 

ஐ.நா பிரேரணை குறித்து இன்று மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்ற தமிழர்களோ, இரண்டுவித மனநிலைக்கும் ஆளாகியுள்ள ஏனைய சமூகங்களோ இந்த நெருக்கடிளில் இருந்து விடுபட்டு ஓட முடியாது. 

அதேபோன்று, சர்வதேசத்தின் அழுத்தங்கள், நெருக்குதல்களை ஆட்சியாளர்கள் சிறுபான்மைச் சமூகங்களை நோக்கித் திருப்பி விடவும் கூடும் என்றும், யாருடனோ கொண்ட கோபத்தைப் பெருந்தேசிய சக்திகள் முஸ்லிம்கள், தமிழர்கள் மீது வெளிப்படுத்தவும் வாய்ப்பிருக்கின்றது என்ற கருத்தையும் ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர். 

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பித்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழு, உண்மைக் குற்றவாளிகள், சூத்திரதாரிகளைக் கண்டறியவில்லை. இப்பின்னணியில், அதிலுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் என்ற தோரணையில் முஸ்லிம்களை நெருக்கும் பாணியிலான நகர்வுகளை அரசாங்கம் முன்னமே எடுக்கத் தொடங்கிவிட்டது. 

ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நீதியை நிலைநாட்டி, பயங்கரவாதத்தையும் அடிப்படைவாதத்தையும் ஒழிப்பதற்கான நடவடிக்கையை எடுத்ததான தோற்றப்பாட்டை ஏற்படுத்த அரசாங்கம் முனைகின்றது. சமகாலத்தில், சிங்கள இனவாதிகளையும் கடும்போக்கு சக்திகளையும் இதிலிருந்து ‘விதிவிலக்கு’ அளிக்க  முனைவதாகத் தெரிகின்றது.

இலங்கையில் யுத்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள், முஸ்லிம் பெயர்தாங்கி பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள்,  இனவாத சக்திகளால் காலத்துக்குக் காலம் தூண்டிவிடப்படும் இன வன்முறைகள் எவற்றையும் சாதாரண பொதுமக்கள் யாருமே அங்கிகரிப்பதும் இல்லை; அவற்றை நியாயப்படுத்துவதும் இல்லை. 

எந்த மதத்தின், இனத்தின் பெயரால் இனவாதமோ, பயங்கரவாதமோ, அடிப்படைவாதமோ முன்னெடுக்கப்படுமாயின் அது முற்றுமுழுதாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. நியாயமாக எடுக்கப்படும் எந்த நடவடிக்கையையும் சிறுபான்மையினர் எதிர்க்கப் போவதும் இல்லை. 

ஆனால், சர்வதேசம் அரசாங்கத்தின் மீது அழுத்தங்களையும் நெருக்குதல்களையும் கொடுக்கின்ற சமகாலத்தில், மறுபக்கம் சிறுபான்மையினரை நோக்கி நெருக்குவாரங்களைப் பிரயோகிப்பது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் அரசியல் அரங்கில் அவதானிக்கப்பட்டுள்ளது. 

இதில் அதிகமாக முஸ்லிம் சமூகம் இலக்கு வைக்கப்பட்டு இருப்பதான குற்றச்சாட்டுகள் பரவலாக முன்வைக்கப்படுகின்றன. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் ஜனாதிபதி அறிக்கை தொடர்பாக, கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில், முஸ்லிம் அல்லாத எம்.பிக்கள் பலரும் இதைச் சுட்டிக்காட்டி உரையாற்றியமை கவனிப்புக்கு உரியது. 

சாதாரணமாகவே சமூகத்துக்காக வாயைத் திறந்து பேசுவதற்கு தைரியமும் அக்கறையும் அற்ற முஸ்லிம் அரசியல்வாதிகள், இப்போது மேலும் பயங்காட்டப்பட்டு, வாய்ப்பூட்டுப் போடப்பட்டுள்ளது. ‘என்ன நடக்குமோ’ என்ற எச்சரிக்கை உணர்வின் காரணமாக, முஸ்லிம் சிவில், சமூக அமைப்புகளும் அடக்கி வாசிக்கின்றன. இந்தச் சூழலில், புர்கா தடை, மத்ரசாக்களைத் தடை செய்தல், முஸ்லிம் தனியார் சட்டத்தை நீக்குதல் சம்பந்தமாகக் கடுந்தொனியிலான கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இவை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் மனக்கிலேசத்தை தோற்றுவித்துள்ளன. தம்மை நோக்கி நெருக்குதல்கள் வந்து கொண்டிருப்பதான அச்சத்தை இது தோற்றுவித்துள்ளது. 

அதேவேளை, ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டு இருப்பதாலும், அதற்குத் தமிழ் செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் முன்னின்று செயற்பட்டார்கள் என்ற அடிப்படையிலும், தமிழ் சமூகத்தின் மீதும் சூட்சுமமான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம். ஆனால், முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படுவது போன்ற வெளிப்படையான அழுத்தங்களாக அவை இருக்காது என்றே அனுமானிக்க முடிகின்றது. 

இலங்கையில் பயங்கரவாதம் உள்ளடங்கலாக அனைத்து ‘வாதங்களையும்’ கட்டுப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. அரசாங்கம், நாட்டில் வாழும் எல்லா சமூகங்களின் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொண்டே, அதனைச் செய்ய வேண்டுமே தவிர, தம்மைச் சர்வதேசம் நெருக்குகின்றது என்பதற்காக, அதனை நியாயமற்ற விதத்தில் சிறுபான்மைச் சமூகங்களின் மீது வெளிப்படுத்த முனையக் கூடாது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .