2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜே.ஆரின் அச்சம்

என்.கே. அஷோக்பரன்   / 2017 செப்டெம்பர் 11 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 109)

ஆறாம் திருத்தமும் தமிழ்த் தலைமைகளும்

1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசமைப்புக்கான ஆறாவது திருத்தத்தை, ஜே.ஆர் அரசாங்கம் வெற்றிகரமாக நிறைவேற்றியது. இதன்படி, மூன்று மாதங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரப் பதவிகளிலுள்ளவர்கள், இலங்கையின் அரசமைப்புக்கும் ஒற்றையாட்சிக்கும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் விசுவாசமாகவும், பிரிவினைக்கு, ஆதரவாகவோ, துணைபோகவோ மாட்டோம் என்று, சத்தியப்பிரமாணம் எடுக்க வேண்டியதாயிற்று. அவ்வாறு இல்லையெனில், அவர்கள் பதவிகளை இழக்கும் நிலையும், குற்றவாளிகளாகக் காணப்படக்கூடிய நிலையும், ஆறாவது திருத்தத்தின் விளைவாக உருவாகியிருந்தது. 

ஆறாவது திருத்தத்தின் பின்னரான, தமது நிலைப்பாடு பற்றியும், எதிர்கால அரசியல் நகர்வுகள் பற்றியும் கலந்துரையாடித் தீர்மானிப்பதற்காக, ஆறாவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு இரண்டு தினங்களில், அ. அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் 16 பேரைக் கொண்ட நாடாளுமன்றக் குழு, வவுனியாவில் கூடியது. 

தனிநாட்டுக்கான கோரிக்கையைத் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்னிறுத்தி, அதற்கான மக்களாணையைப் பெற்றிருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர், அந்த மக்களாணைக்கு முற்றிலும் முரணாக அமைந்த, ஆறாம் திருத்தத்தின் கீழான சத்தியப்பிரமாணத்தை, நிச்சயம் செய்ய முடியாது. அது, தமிழ் மக்கள் அவர்களுக்கு வழங்கியிருந்த ஆணையை மட்டுமல்லாது, அவர்கள் முன்னிறுத்தியிருந்த அடிப்படைக் கொள்கைக்கே விரோதமாக அமைந்திருக்கும்.

ஆனால், ஆறாம் திருத்தத்தின் கீழ், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூன்று மாதங்களுக்குள் சத்தியப்பிரமாணம் செய்யவில்லையெனில், அவர்களது பதவிகள் பறிபோகும் நிலை இருந்தது. இதனையெல்லாம் அவர்கள் நிச்சயம் அலசி ஆராய்ந்திருக்கக்கூடும். இறுதியாக, அரசமைப்புக்கான ஆறாம் திருத்தத்துக்குக் கீழாக, தாம் சத்தியப்பிரமாணம் செய்யப் போவதில்லை என, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழு தீர்மானித்தது. 

தமிழ்த் தலைமைகளின் நிலைப்பாடு

அடுத்த இரண்டு நாட்களில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவருமான அ. அமிர்தலிங்கம் விடுத்திருந்த அறிக்கையொன்றில், 1983 ‘கறுப்பு ஜூலை’ இனஅழிப்பை, பாரதூரமான அரச பயங்கரவாதம் என வர்ணித்த அவர், இந்தப் பாரதூரமான அரச பயங்கரவாதத்திலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, ஆயுதம் ஏந்தவும் தயார் என்றார். 

மேலும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியானது, அமைதி வழியிலான இலக்குகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்டது என்று குறிப்பிட்ட அமிர்தலிங்கம், ஆனால், தமிழ் மக்கள் மிகவும் அதிர்ந்து போயுள்ளார்கள் என்றும், இனி அவர்களால் சிங்கள மக்களோடு இணைந்து வாழ முடியாது என்றும் குறிப்பிட்டார். அகதிகளைத் தாங்கிய ஒவ்வொரு கப்பலும் யாழ்ப்பாணத்தை வந்தடைகிறபோது, அது நடந்தேறிய கொடூரத்தை மீண்டும் மீண்டும் எதிரொலிக்கிறது என்று மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டதுடன், இந்திய அரசாங்க‍ம், உடனடியாக இதில்த் தலையிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

ஆறாம் திருத்தத்தை எதிர்கொள்வது தொடர்பில் மாற்று வழிகள் பற்றியும் தமிழ்த் தலைமைகள் ஆலோசித்திருக்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது. 1983 ‘கறுப்பு ஜூலை’ பற்றி, ‘இந்தியா டுடே’ பத்திரிகையில் எழுதியிருந்த சல்தன்யா கல்பக், ‘தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியானது, தனது குறிக்கோள்களில் தனிநாடு என்பதைச் சுயநிர்ணயம் என்று மாற்றிக் கொள்ள முடியுமென்றும், ஏனெனில், சுயநிர்ணய உரிமை என்பது பிரிவினைக்கான உரிமையையும், சுதந்திரமான அரசியல் நிலைப்பாட்டை எடுப்பதற்கான உரிமையையும் உள்ளடக்கியது என்றும் அல்லது தாம் ஒரு கட்சியாக மறைந்திருந்து செயற்படலாம்’ என்றும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரொருவர் கூறியதாகப் பதிவு செய்கிறார். மேலும், ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படை, இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என ஐ.நாவுக்கு  வேண்டுகோளையும்  அமிர்தலிங்கம் அனுப்பினார். 

பெரியண்ணனின் தலையீடு பற்றிய அச்சம்

அந்நியத் தலையீடு, அதிலும் குறிப்பாக இந்தியத் தலையீடு பற்றிய அச்சம், ஜனாதிபதி ஜே.ஆருக்கு, கொஞ்சகாலமாகவே அதிகமாக இருந்தமை அவரது அறிக்கைகள், கருத்துகள், நடவடிக்கைகளிலிருந்து தௌிவாகத் தென்படுகிறது. மே மாதம் ஜே.ஆர், இந்தியாவின் ‘த இந்து’ பத்திரிகைக்கு வழங்கியிருந்த செவ்வியொன்றில், “இந்தியா எம்மை ஆக்கிரமிக்குமானால், எம்முடைய கொள்கை கோட்பாடுகளை, இந்தியாவினால் எவ்வகையிலும் சிதைக்க முடியாது. நீங்கள் இலங்கையைக் கைப்பற்றி ஆளுங்கள். 

ஆனால், 15 மில்லியன் மக்கள் உங்களை எதிர்க்கும்போது, உங்களால் ஆட்சி நடத்த முடியாது. நான் உயிரோடிந்தால், அத்தகைய ஆக்கிரமிப்புக்கெதிரான இயக்கத்தை நானே முன்னின்று நடத்துவேன்” என்று கூறியிருந்தார். 

மேலும், ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பைத் தொடர்ந்து, வௌியுறவு அமைச்சர் ஏ.ஸீ.எஸ்.ஹமீட், டெல்லி விரைந்து, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியிடம் “இந்தியா, இலங்கை மீது நேரடி நடவடிக்கை எடுக்குமா” என்ற கேள்வியை முன்வைத்து, “இந்தியா நேரடியாக எந்த நடவடிக்கையையும் உடனடியாக எடுக்காது” என்ற உறுதிமொழியையும் இந்திரா காந்தியிடமிருந்து பெற்றுவந்திருந்தார்.  

இதேவேளை, 1983 ஓகஸ்ட் ஏழாம் திகதி, இங்கிலாந்தின் ‘த சன்’ பத்திரிகைக்கு ஜனாதிபதி ஜே.ஆர் வழங்கிய செவ்வியொன்றில், “இந்தியா எம்மை ஆக்கிரமிக்கத் தீர்மானித்தால், நாங்கள் அதற்கெதிராகப் போராடுவோம். அந்தப் போரில் நாம் நிச்சயமாகத் தோல்வியடைவோம். ஆனால், தன்மானத்தோடு தோற்போம்” என்று குறிப்பிட்டிருந்தார். 

இதைவிடவும், இந்தியத் தலையீடு, இலங்கையில் ஏற்படும் என்ற எச்சரிக்கையை, ஆறாம் திருத்தத்தின் மீதான நாடாளுமன்ற விவாதத்தில் வௌிவிவகார அமைச்சரான ஏ.ஸீ.எஸ்.ஹமீட் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவையெல்லாம், ஜே.ஆர் தலைமையிலான அரசாங்கம், இந்தியத் தலையீடு பற்றிய பெரும் அச்சத்தைக் கொண்டிருந்தமையை எடுத்துக் காட்டுகின்றன. 

இந்தியாவிலும் அழுத்தம்

மறுபுறத்தில் இந்தியாவிலும், இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலித்ததுடன், இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசாங்கத்தின் மேல், அந்த அழுத்தம் கடுமையாக இருந்தது. மேலும் தமிழ்நாடு கொதித்துக் கொண்டிருந்தது. ஆகவே, இந்த விடயத்தை அலட்சியமாக எடுத்துக் கொள்ள முடியாத அரசியல் நிர்ப்பந்தம், இந்திரா காந்திக்கு இருந்தது.

மேலும் இந்தியா, இலங்கை விவகாரத்தில் நேரடியாகத் தலையிடுவதற்கான அருமையானதொரு வாய்ப்பாகவும் இதைப் பொருள்கோடல் செய்யும் அரசியல் ஆய்வாளர்களும் உளர். இதுபோன்ற சந்தர்ப்பங்கள், பிராந்திய பெரியண்ணனாகத் தன்னைக் கருதும் இந்தியாவுக்கு, இலங்கைக்குள் வேரூன்றவும், தமது நிகழ்ச்சிநிரலை முன்னெடுக்கவும் வழிசமைக்கின்றன. 

இந்தப் பின்புலத்தில்தான், 10 நாட்களுக்குள் இரண்டாவது தடவையாக, 1983 ஓகஸ்ட் ஐந்தாம் திகதி, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, இலங்கை ஜனாதிபதி ஜே.ஆருடன் உரையாடியிருந்தார். இந்த உரையாடலில், இலங்கையில், இந்தியா நேரடியாகத் தலையிடாது என்ற உறுதிமொழியை மீண்டும் வழங்கியிருந்த இந்திரா காந்தி, இலங்கை விவகாரம் தொடர்பில் தாம் மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாகவும், ஏனெனில், அது இலங்கையை மட்டுமல்லாது இந்தியாவையும் பாதிக்கிறது என்பதை ஜே.ஆருக்கு எடுத்துரைத்திருந்ததுடன், தமிழ் மக்கள் தொடர்பிலான இனப்பிரச்சினைக்கு, விரைவில் தீர்வொன்றை எட்ட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார். 

இந்த உரையாடல் பற்றி, இந்திய நாடாளுமன்றத்தின் லோக் சபாவில் பேசிய இந்திரா காந்தி, இலங்கையில் நடக்கின்ற விடயங்கள் இந்தியாவையும் பாதிப்பதாகவும், இலங்கையும், இந்தியாவும் இதில் நேரடிக் கரிசனமும் பாதிப்பும் கொண்ட இரண்டு நாடுகள் என்றும், இதற்கு வௌியிலிருந்து அழுத்தங்கள் வந்தால், அது இரண்டு நாடுகளையும் பாதிக்கும் என்றும் பதிவு செய்கிறார். 

தொலைபேசி உரையாடலின்போது, இந்திரா காந்திக்குப் பதிலளித்த ஜே.ஆர், இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் தாம் அக்கறை கொண்டுள்ளதாகவும், அதற்காகத்தான் ஜூலை 27 ஆம் திகதி, சர்வகட்சி மாநாடு ஒன்றை நடத்தத் தீர்மானித்திருந்ததாகவும், ஆனால், கலவரங்கள் வெடித்ததனால் துரதிர்ஷ்டவசமாக அந்த மாநாட்டை நடத்த முடியாது போனதாகவும் தெரிவித்ததுடன், தனது சகோதரரும், இலங்கையின் முன்னணி வழக்குரைஞர்களில் ஒருவருமான எச்.டபிள்யூ.ஜெயவர்தனவை, தனது விசேட பிரதிநிதியாக இந்திரா காந்தியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்திருந்தார். 

ஜே.ஆரும் அதிகாரக் குழுக்களும்

ஜே.ஆர், பலம் வாய்ந்ததொரு தலைவராகவே உருவகப்படுத்தப்பட்டாலும், அந்தப் பலம் வாய்ந்த பிம்பத்துக்குப் பின்னால், நிறைய சிக்கல்கள் தொடர்ந்து இருக்கவே செய்தன. 

ஜே.ஆரின் ஆட்சியில் பங்குபெற்றிருந்தவர்கள், ஆளுங்கட்சியினர், உயரதிகாரிகள் ஆகியோரிடையே, சிறு அதிகாரக் குழுக்கள் உருவாகியிருந்ததாகவும் அவர்களுடைய அதிகாரப் போட்டியின் அழுத்தங்களைச் சமாளிக்க வேண்டிய சிக்கலுக்குள் 76 வயதான ஜே.ஆர் சிக்கியிருந்ததாகவும், சல்தன்யா கல்பக், தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். 

இந்த வெவ்வேறு குழுக்கள் பற்றி, பேராசிரியர் ஸ்ரான்லி ஜெயராஜா தம்பையா, தன்னுடைய இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான நூலொன்றில் இவ்வாறு விவரிக்கிறார்: “முதலாவது குழுவானது, இலங்கையின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருந்ததுடன், ஆயுதப் படைகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தது. இந்தக் குழுவில், அமைச்சரவையின் செயலாளர் ஜீ.வீ.பீ.சமரசிங்ஹ, ஜனாதிபதியின் செயலாளர் டபிள்யூ.எம்.பீ.மனிக்திவெல, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் சேபால ஆட்டிகல, லெப்டினன் ஜெனரல் வீரதுங்க, ஜே.ஆரின் உறவினரும், இராணுவத் தளபதியுமான மேஜர் ஜெனரல் நளின் செனவிரட்ன ஆகியோரைக் கொண்டமைந்தது. இந்தக் குழு, ஜனாதிபதிக்கு மிக அருகில் சூழமைந்து கொண்டதுடன், ஜனாதிபதியை எப்போதும் தொடர்புகொள்ளக் கூடிய நிலையிலிருந்தது. 

அடுத்ததாக, ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சி இயந்திரத்தைக் கட்டுப்படுத்தும் விசுவாசமான குழு ஒன்று இருந்தது. இதன் முக்கிய உறுப்பினர்களாக ஐ.தே.கவின் தவிசாளர் என்.ஜீ.பீ.பண்டிதரட்ன, ஐ.தே.கவின் செயலாளர் ஹர்ஷ அபேவர்த்தன, கைத்தொழில் அமைச்சரும் ஐ.தே.க சார்பான தொழிற்சங்கமான ஜாதிக சேவக சங்கமயவின் தலைவரும் பௌத்த-வாதியுமான சிறில் மத்யூ, இளைஞர் விவகார மற்றும் கல்வி அமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இருந்தனர். இந்தக் கட்சி இயந்திரமே, நாட்டின் முக்கிய சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகளை அச்சிடும், தேசிய மயமாக்கப்பட்டு, அரசால் நிர்வகிக்கப்படும் ‘லேக் ஹவுஸ்’  பத்திரிகைகளாக இருந்த ‘த டெய்லி நியூஸ்’, ‘தினமின’ ஆகியவற்றைக் கட்டுப்படுத்தியது. 

மூன்றாவது குழு, பிரதமரும் வீடமைப்பு அமைச்சருமான, ரணசிங்க பிரேமதாஸவை மையப்படுத்தி, அவரைச் சூழ அமைந்திருந்தது. ஜனாதிபதி ஜே.ஆரின் மேல் எதிர்ப்புக் கொண்ட ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தார்கள்”. மேலும், பிரேமதாஸ தனிமைப்படுத்தப்பட்டமைக்கு, அவரது சாதிய, சமூக அடையாளங்கள் காரணமாகிறது என்பதையும் பேராசிரியர் ஸ்ரான்லி ஜெயராஜா தம்பையா சுட்டிக்காட்டுகிறார். 

இதைவிடவும் கல்தன்யா கல்பக் தன்னுடைய கட்டுரையில், இரண்டு வேறு குழுக்களையும் சுட்டிக்காட்டுகிறார். காமினி திசாநாயக்கவும் அவரது ஆதரவாளர்களும் தனிக்குழுவாகச் செயற்பட்டதாகவும் 1983 பெப்ரவரி 13ஆம் திகதி, இலங்கையின் முன்னணி தொழிலதிபரும், ஜே.ஆரின் எதிர்கால அரசியல்வாரிசு என ஆரூடம் சொல்லப்பட்டவருமான உபாலி விஜேவர்தனவின் விமான விபத்து, மர்ம இறப்புக்குப் பின்பு, ஜே.ஆரின் அடுத்த அரசியல் வாரிசாக காமினி திசாநாயக்க முன்னிறுத்தப்படத் தொடங்கியதையும், கல்பக் குறிப்பிடுகிறார். 

இதைவிடவும், அமைச்சர் ஆனந்ததிஸ்ஸ டி அல்விஸ் தலைமையில் அவருடைய ஆதரவாளர்களும் ஒரு தனிக்குழுவாகச் செயற்பட்டதாக கல்பக் கருத்துரைக்கிறார்.

ஆகவே, கட்சிக்குள் முரண்டுபட்டு நின்ற இந்தக் குழுக்களைச் சமாளிப்பதுடன், நேச சக்திகளையும் ஒன்றிணைத்து, அரவணைத்து ஆட்சியைக் கொண்டு செல்ல வேண்டிய சிக்கலுக்குள்தான், 76 வயதான ஜே.ஆர் சிக்கியிருந்தார். 

இந்தியா விரைந்த எச்.டபிள்யூ

இந்த நிலையில்தான் இந்தியாவின் தலையீட்டுக்கான சாத்தியம், ஜே.ஆருக்குப் பெரும் தலையிடியாக மாறியிருந்தது. அதனால், உடனடியாகவே தனது சகோதரரான எச்.டபிள்யூ.ஜெயவர்தனவை, தனது விசேட பிரதிநிதியாக, இந்திரா காந்தியைச் சந்திக்க அனுப்பி வைத்தார்.

இந்தியா விரைந்த எச்.டபிள்யூ ஜெயவர்தன, 1983 ஓகஸ்ட் 11ஆம் திகதி, இந்திரா காந்தியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதேவேளை, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்களும், இந்தியா செல்லத் தயாராகினர்.

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X