2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஜே.ஆரின் தந்திரம்

என்.கே. அஷோக்பரன்   / 2017 டிசெம்பர் 25 , மு.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 124)

தொண்டமானின் ஊடக சந்திப்பு  

சர்வகட்சி மாநாடொன்றினூடாக, இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றை எட்டுவது தொடர்பில், சர்வகட்சிக் கூட்டத்துக்கான அழைப்பை ஜே.ஆர் விடுத்திருந்த அதேவேளையில், இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பியிருந்த அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமான், இந்தியாவில் நடந்த விடயங்கள், மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடன் ஏற்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கான சூழல் பற்றி விளக்க, ஓர் ஊடக சந்திப்பை ஏற்படுத்தியிருந்தார்.   

அந்த ஊடகச் சந்திப்பில், அரசாங்கத்துக்கும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடுகளுக்கும் இடையிலான இடைவௌியாக வடக்கு, கிழக்கு இணைப்பு என்ற ஒரு விடயமே இருப்பதாகவும் குறிப்பிட்ட தொண்டமான், இந்த ஒரு விடயத்தினால் இணக்கப்பாடு இல்லாது போய்விடக்கூடாது என்று அழுத்திக் கேட்டுக் கொண்டார்.  

 இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வை எட்டுவதற்குக் குறுகிய மனப்பான்மைக்கப்பால் வந்து சிந்திக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், முழுமையான இணக்கப்பாடு உடனடியாக ஏற்படாது போனாலும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியானது பிராந்திய சபைகளைத் தீர்வுக்கான ஒரு முதற்படியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.   

இனப்பிரச்சினைக்கு இது மிகப் பொருத்தமான தீர்வாக இல்லாமல் இருக்கலாம்; அதைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம். ஆனால், ஒரு விடயத்துக்காக  முற்றாக நிராகரித்துவிடக் கூடாது என்பது தொண்டமானின் கருத்தாக இருந்தது.   

இது தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைமைகள் மீது தொண்டான் மிக நீண்டகாலமாகக் கொண்டிருந்த விமர்சனத்தின் தொடர்ச்சிதான். ‘All or none’ (எல்லாம் அல்லது ஒன்றுமில்லை) என்ற அணுகுமுறையில் தொண்டமானுக்கு நம்பிக்கையில்லை. அவர் படிப்படியாக பேச்சுவார்த்தை மூலம் ஒவ்வொன்றாகப் பெற்றுக் கொள்ளுதலில் நம்பிக்கை கொண்டிருந்தார்.   

ஆனால், தமிழ்த் தலைமைகள் ‘All or none’ அணுகுமுறையைக் கையாண்டன என்று மேம்போக்காக சொல்லிவிடவும் முடியாது. தமிழ்த்தலைமைகள் சில அடிப்படைக் கொள்கைகளில் விடாப்பிடியாக நின்றன.   

அதேவேளை, பல விடயங்களை விட்டுக்கொடுக்கவும் எப்போதும் தயாராக இருந்தன. இலங்கைத் தமிழரசுக் கட்சி (அதன் ஆங்கிலப் பெயர் சமஷ்டிக் கட்சி) சமஷ்டியை மையப்படுத்தியே ஆரம்பிக்கப்பட்டது.   

ஆனால், பண்டா-செல்வா ஒப்பந்தமாக இருக்கட்டும், டட்லி-செல்வா ஒப்பந்தமாக இருக்கட்டும், அதன் பின்னர் நடந்த பேச்சுவார்த்தை மற்றும் இணக்க முயற்சிகளாக இருக்கட்டும், அவை ஒருபோதும் சமஷ்டிதான் வேண்டும் என்று விடாப்பிடியாக நின்றதில்லை.   

தமிழ்த் தலைமைகள் யதார்த்தத்தை உணர்ந்தே செயற்பட்டன. 1972இலே ‘வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்’ பின்னர் கூட, 1977இலே, தனிநாட்டுக்கான மக்களாணையைப் பெற்ற பின்னர்கூட, தமிழ்த் தலைமைகள் அதிலிருந்து இறங்கி வந்து, ‘ஒன்றுபட்ட நாட்டுக்குள்ளான’ தீர்வை ஏற்றுக்கொள்ளத் தயாராகவே இருந்தன. ஆனால், சில அடிப்படைக் கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாத நிர்ப்பந்தம் தமிழ்த் தலைமைகளுக்கும் உண்டு.   

ஆகவேதான், அத்தகைய அடிப்படைக் கொள்கைகளில் அவை சமரசம் செய்யத் தயாராக இருக்கவில்லை. வடக்கு-கிழக்கு இணைப்பை, அத்தகைய அடிப்படை முக்கியத்துவம் மிக்கதொரு விடயமாகத் தமிழ்த் தலைமைகள் பார்த்தன.  

வடக்கு-கிழக்கு தமிழ்த் தலைமைகள் மீது, தொண்டமான் வைத்த இன்னொரு விமர்சனம், இங்கே தனித்து முடிவெடுக்கத்தக்க ஒரு பலமான தலைமை இல்லை என்பது. தமிழர் அரசியல் வரலாற்றில் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் பலம் மிக்க தலைவராகவே அடையாளப்படுத்தப்படுகிறார்.   

சில முடிவுகளை அவர் உடனடியாகத் தனித்து எடுக்கமுடியாத சூழல் உருவாகியிருந்ததை நாம் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது. எந்த மக்களிடம் 1977இல் தனிநாட்டுக் கோரிக்கைக்காக மக்களாணை கேட்டாரோ, அதேமக்களிடம் போய், ‘ஒன்றுபட்ட நாட்டுக்குள்’ தீர்வு, வடக்கு-கிழக்கு இணைப்பில்லை என்று சொல்வது அவ்வளவு இலகுவான காரியமல்ல. 

அதுவும், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் தமிழர் அரசியலில் முன்னிலைக்கு வந்திருந்த சூழலில், பல தரப்புகளையும் திருப்திப்படுத்த வேண்டிய தேவை அவருக்கிருக்கிறது.  

சர்வ கட்சி கூட்டம்  

சர்வ கட்சிக் கூட்டத்துக்கு ஜே.ஆர் விடுத்திருந்த அழைப்பின் பேரில், 1983 டிசெம்பர் 21ஆம் திகதி, சர்வகட்சிக் கூட்டம் கூடியது. இதில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, மஹஜன எக்ஸத் பெரமுண, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டிருந்தன.  

 சுமார் ஒன்றரைமணி நேரம் நடந்த இந்தக் கூட்டம், இரண்டு முடிவுகளை எடுப்பதற்காக கூடியது. முதலாவதாக, இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சர்வகட்சி மாநாட்டுக்குத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை அழைப்பது தொடர்பானது. இரண்டாவது, குறித்த சர்வகட்சி மாநாட்டுக்கான திகதி, இடம் மற்றும் நடைமுறைகளைத் தீர்மானிப்பது.  

 தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை அழைப்பது தொடர்பில் அனைத்துக் கட்சிகளும் இணக்கம் தெரிவித்திருந்தன. தமிழர் தேசிய விடுதலைக் கூட்டணி, சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்பது எங்கள் நீண்டகால நிலைப்பாடு என்று சிறிமாவோ பண்டாரநாயக்க தெரிவித்திருந்தார்.   

இதைத் தொடர்ந்து, சர்வகட்சி மாநாட்டை 1984 ஜனவரி 10ஆம் திகதி, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. 

இதன்போது, இந்தியாவுடன் ஏற்பட்ட இணக்கப்பாடு மற்றும் முன்மொழிவுகள் பற்றி சிறிமாவோ பண்டாராநாயக்க, ஜனாதிபதி ஜே.ஆரிடம் வினவியபோது, குறித்த முன்மொழிவுகளை அனைத்துக் கட்சிகளுக்கும் 10 நாட்களுக்குள் சேர்ப்பிப்பதாக உறுதியளித்தார்.   

அத்துடன், டிசெம்பர் 21 சர்வகட்சிக் கூட்டம் முடிவடைந்தது. சர்வகட்சி மாநாட்டின் செயலாளராக, ஓய்வுபெற்ற முன்னாள் தேர்தல் ஆணையாளர் பீலிக்ஸ் டயஸ் அபேசிங்ஹ நியமிக்கப்பட்டார்.  

கூட்டணிக்கான அழைப்பு  

இதைத் தொடர்ந்து, உத்தியோகபூர்வமற்ற முறையில் ஜே.ஆர், நீலன் திருச்செல்வத்தைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, சர்வகட்சி மாநாட்டுக்குத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை அழைப்பதற்கு சகல கட்சிகளும் இணங்கிய செய்தியை அமிர்தலிங்கத்துக்கு அறிவித்தார்.   

இந்தச் செய்தி கிடைக்கப்பெற்ற அமிர்தலிங்கம், இதை வரவேற்று சென்னையில் அறிக்கைவிட்டார். எல்லாம் சுபமாகச் சென்று கொண்டிருப்பது போலவேதான் தோன்றியது. ஆனால், ஜே.ஆரிடம் திட்டம் வேறாக இருந்தது விரைவிலேயே வௌித்தெரிந்தது. ஒருவேளை ஜே.ஆர், இந்தச் சந்தர்ப்பத்தை முழுமையான நல்லெண்ணத்துடன் அணுகியிருந்தால், இலங்கையின் வரலாறு மாற்றியெழுதப்பட்டிருக்க வாய்ப்பிருந்திருக்கும்.   

சர்வகட்சி மாநாட்டுக்கான உத்தியோகபூர்வ அழைப்பைச் சென்னையிலிருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கத்திடம் சேர்ப்பிப்பதில் ஒரு சிக்கல் ஏற்பட்டது.  இதிலென்ன சிக்கல்? தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடன், அவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடும் வரை எந்த நேரடியான பேச்சுவார்த்தையோ, தொடர்பாடலோ இல்லை என்பது ஜே.ஆரின் அமைச்சரவை எடுத்த முடிவு. ஆகவே, அந்த முடிவை, ஜே.ஆர் மீற விரும்பாததால், இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதியை சென்னைக்கு அனுப்பி, அமிர்தலிங்கத்திடம் அழைப்பை கொண்டு சேர்க்க ஜே.ஆர் விரும்பவில்லை.  

 இந்தச் சிக்கல் எழுந்தபோது, இதைத் தீர்க்க இந்தியா முன்வந்தது. இலங்கைக்கான இந்தியத் தூதுவர் குறித்த அழைப்பை இலங்கை அரசாங்கத்திடமிருந்து, சென்னையிலிருந்த அமிர்தலிங்கத்திடம் கொண்டு போய்ச் சேர்க்க முன்வந்தார். அதன்படி, சர்வகட்சி மாநாட்டுக்கான அழைப்பு அமிர்தலிங்கத்திடம் சேர்ப்பிக்கப்பட்டது.   

அழைப்பு தந்த அதிர்ச்சி  

சர்வகட்சி மாநாட்டுக்கான அழைப்பைப் படித்த அமிர்தலிங்கத்துக்குப் பெருஞ்சினம் ஏற்பட்டது. உடனடியாக, கோபால்சாமி பார்த்தசாரதியை தொடர்புகொண்ட அமிர்தலிங்கம், பெருஞ்சினத்துடன் ‘கிழட்டு நரி மீண்டும் தன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டது’ என்றார்.   

சர்வகட்சி மாநாட்டின் அழைப்பு, அமிர்தலிங்கத்துக்குப் பெருஞ்சினத்தை ஏற்படுத்தக் காரணம் என்ன? குறித்த அழைப்போடு ‘அனெக்ஷர் ‘ஏ’’ மற்றும் ‘அனெக்ஷர் ‘பீ’’ என்று இரண்டு தொகுதி பின்னிணைப்புகள் இணைக்கப்பட்டிருந்தன.   

இவை ‘கறுப்பு ஜூலைக்கு’ பின்னதாக இந்தியாவோடும் பார்த்தசாரதியோடும் நடந்த பேச்சுவார்த்தைகள், முன்மொழிவுகள் பற்றிய விடயங்களைக் கொண்டிருந்தன.   

இந்திய வௌிவிவகார அமைச்சர் நரசிம்ஹ ராவின் இலங்கை விஜயம் தொடர்பான 1983 ஜீலை 29 அன்று வௌியிடப்பட்ட ஊடக அறிக்கை, தனது இந்திய விஜயத்தைத் தொடர்ந்து 1983 ஓகஸ்ட் 14 அன்று எச்.டபிள்யு.ஜெயவர்த்தன வழங்கியிருந்த பத்திரிகை செவ்வி, 1983 ஓகஸ்ட் 25 முதல் 29 வரை பார்த்தசாரதியுடனான முதற்சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக ஜனாதிபதி செயலகம் வௌியிட்ட அறிக்கை, நவம்பர் மாதம் பார்த்தசாரதியோடு நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகம் விடுத்திருந்த அறிக்கை மற்றும் தனது இந்திய விஜயத்திலிருந்து திரும்பிய ஜே.ஆர் 1983 டிசெம்பர் முதலாம் திகதி வௌியிட்டிருந்த அறிக்கை ஆகிய ஐந்து ஆவணங்களைக் கொண்டிருந்தது.  

 ‘அனெக்ஷர் ‘பீ’’யானது ‘சர்வகட்சி மாநாட்டின் நிகழ்ச்சிநிரலை வடிவமைப்பதற்கான முன்மொழிவுகள்’ என்று தலைப்பிடப்பட்டு, 14 முன்மொழிவுகளைத் தாங்கி வந்தது. இந்த ‘அனெக்ஷர் ‘பீ’’-தான் அமிர்தலிங்கத்தைச் சினமுறச்செய்தது. ‘அனெக்ஷர் ‘பீ’’ கொண்டிருந்த முன்மொழிவுகளாவன:  

1. தனிநாட்டு எண்ணத்தைக் கைவிடுதல் 

2. குறித்த மாவட்ட அபிவிருத்தி சபை உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்திலும், குறித்த மாவட்டத்தில் சர்வசன ஒப்பங்கோடல் மூலமான ஒப்புதலின் மூலமும், ஒரு மாகாணத்துக்குள்ளான மாவட்ட அபிவிருத்திச் சபைகள் இணைக்கப்படலாம். இந்த முன்மொழிவு முழு நாட்டுக்கும் ஏற்புடையதாக அமையும்.  

3. பிராந்திய சபையைக் கொண்டமையும் ஒவ்வொரு பிராந்தியத்திலும், குறித்த பிராந்திய சபையில் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்ட கட்சியின் தலைவர், அப்பிராந்திய முதலமைச்சராக ஜனாதிபதியினால் நியமிக்கபடுமாறு மரபு உருவாக்கப்படும். அந்த முதலமைச்சர், சபையின் அங்கத்தவர்களைக் கொண்ட குழுக்களை ஸ்தாபித்து அதனோடு இயங்குவார்.  

4. பிராந்தியங்களுக்கென்று பிரித்தொதுக்கப்படாத விடயங்கள் மீது, ஜனாதிபதியும் நாடாளுமன்றமும் தொடர்ந்தும் அதிகாரம் செலுத்தும் அதேவேளையில், ஒட்டுமொத்தக் குடியரசின் இறைமையைப் பாதுகாத்தல், ஒற்றுமை,ஆட்புல ஒருமைப்பாடு, பாதுகாப்பு, முன்னேற்றம் மற்றும் அபிவிருத்தி தொடர்பிலும் ஜனாதிபதியும் நாடாளுமன்றமும் தொடர்ந்து அதிகாரத்தைக் கொண்டிருக்கும்.  

5. பிராந்தியத்துக்கென்று குறித்தொதுக்கப்படும் விடயதானங்கள் விரிவாக எடுத்துரைக்கப்படும். பிராந்தியங்களுக்கென்று குறித்தொதுக்கப்பட்ட விடயதானங்கள் தொடர்பில் சட்டமியற்றும் அதிகாரத்தைப் பிராந்திய சபைகள் கொண்டிருக்கும்.   

6. பிராந்திய சபைகள் வரிகளையும், கட்டணங்களையும் அறவிடும் அதிகாரத்தைக் கொண்டிருப்பதோடு, கடன்பெறும் மற்றும் மத்திய அரசாங்கத்திடமிருந்து ஒதுக்கீடுகள் மற்றும் மானியங்களைப் பெறும் அதிகாரத்தையும் கொண்டிருக்கும்.  

7. திருகோணமலைத் துறைமுக நிர்வாகம் மத்திய அரசாங்கத்தின் செயற்பாடாக அங்கிகரிக்கப்படும்.  

8. ஒவ்வொரு பிராந்தியமும் ஒரு மேல் நீதிமன்றமொன்றைக் கொண்டிருப்பதுடன், இலங்கை உயர் நீதிமன்றமானது மேன்முறையீட்டு மற்றும் அரசமைப்பு தொடர்பிலான சட்ட அதிகாரங்களைக் கொண்டிருக்கும்.  

9. பிராந்தியத்தில் சேவைபுரியும் அரச சேவையாளர்கள் மற்றும் பிராந்தியத்துக்கென நியமிக்கப்பட்ட அரச சேவையாளர்களைக் கொண்ட பிராந்திய அரச சேவை ஸ்தாபிக்கப்படும்.  

10. நியமன மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்காக பிராந்தியப் பொதுச் சேவை ஆணைக்குழு உருவாக்கப்படும்.  

11. இலங்கை பொதுச் சேவை மற்றும் ஆயுதப்படைச் சேவை என்பன இலங்கையின் தேசிய இன விகிதாசாரத்தைப் பிரதிபலிப்பதாக அமையும்.  

12. உள்ளக பாதுகாப்புக்கான பொலிஸ் சேவையானது, பிராந்தியத்தின் இன விகிதாசாரத்தைப் பிரதிபலிப்பதாக அமையும்.  

13. காணித் தீர்வு தொடர்பான தேசியக் கொள்கையொன்று உருவாக்கப்படும்.   

14. உத்தியோகபூர்வ மொழி சிங்களம் மற்றும் தேசிய மொழி தமிழ் தொடர்பிலான அரசமைப்பு ஏற்பாடுகள் மற்றும் ஏனைய சட்ட ஏற்பாடுகள், தேசியக் கொடி, தேசிய கீதம் பற்றிய அரசமைப்பு மற்றும் சட்ட ஏற்பாடுகள் என்பன ஏற்றுக்கொள்ளப்படுவதுடன், நடைமுறைப்படுத்தப்படும்.  

15. அரசியல் குறிக்கோள்களை அடைவதற்காக வன்முறையைப் (பயங்கரவாதத்தை) பயன்படுத்துவதற்கு எதிரான ஒன்றுபட்ட எதிர்ப்பு.  

பார்த்தசாரதியிடம் தொலைபேசியில் பேசிய அமிர்தலிங்கம், நிகழ்ச்சி நிரலில் முதலாவதாகவே தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடுதல் என்பதைக் குறிப்பிட்டதனூடாக ‘எம்மை பெடியங்களுக்கு எதிராக’ திருப்பும் வேலையை ஜே.ஆர் செய்கிறார் என்று குறிப்பிட்டதுடன், “டெல்லியில் இணங்கிய விடயங்களை ஜே.ஆர் அப்படியே இதில் உள்ளடக்கவில்லை; மாறாக, இணங்கிய சிலதைத் திரிபுபடுத்தியும், சிலதை நீர்த்துப் போன வடிவிலும் குறிப்பிட்டுள்ளதுடன், இணங்காத சில விடயங்களையும் சேர்த்துள்ளார்” என்றார் அமிர்தலிங்கம்.   

(அடுத்த திங்கட்கி​ழமை தொடரும்)    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .