2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ட்ரம்பின் ஆசியப் பயணம்: போருக்கு பிச்சையெடுத்தல்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   / 2017 நவம்பர் 30 , பி.ப. 05:57 - 1     - {{hitsCtrl.values.hits}}

பயணங்கள் பலவிதம்; அரசியல் பயணங்கள் அதில் ஒருவிதம். அரசியல் பயணங்களின் நோக்கங்கள் பலவிதம்; அதில் பிச்சைகேட்கும் பயணங்கள் ஒருவிதம்.   

இராஜதந்திரம், அனைத்துக்கும் அதற்குப் பொருத்தமான, அழகான சொல்லாடல்களைக் கொண்டுள்ளது. பிச்சையெடுத்தலை ‘உறவைப் பலப்படுத்தல்’ என்றும் உதவி கேட்டலை ‘தார்மீக உதவி’ என்றும் கட்டளைக்குப் பணிந்து கூட்டுச்சேருதலை ‘மூலோபாயக் கூட்டணி’ என்றும் இன்னும் பலவாறும் அழைப்பதற்கு இராஜதந்திரச் சொல்லாடல்களும் அயலுறவுக் கொள்கைக் கூற்றுகளும் வழியமைக்கின்றன.   

இருந்தபோதும், நேரடியான மயக்கங்களற்ற மொழியில் இவற்றை விளங்குவது, இச்சொற்களுக்கான உண்மையான பொருளை விளங்க உதவும்.   

அண்மைக்கால நிகழ்வுகள் இரண்டு, பெருத்த கவனம் பெறாமல் கடந்து போயுள்ளன. முதலாவது, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் 12 நாள் ஆசியப் பயணம்.   

இரண்டாவது, சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் 19 ஆவது தேசிய காங்கிரஸில், முன்மொழிந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட சீனாவின் அயலுறவுக் கொள்கை.   

இவை இரண்டும், அடுத்துவரும் சில ஆண்டுகளுக்கு, ஆசியாவின் மீதான அமெரிக்க - சீன அக்கறைகளைத் தீர்மானிக்கும் நிகழ்வுகளாகும்.  

ட்ரம்பின் ஆசியப் பயணம் ஜப்பான், தென்கொரியா, சீனா, வியட்னாம், பிலிப்பைன்ஸ் ஆகிய ஐந்து நாடுகளை உள்ளடக்கியதாக இருந்தது. இப்பயணத்தின் முக்கியத்துவம் யாதெனில், 1992 ஆம் ஆண்டுக்குப் பிறகு, அமெரிக்க ஜனாதிபதியொருவர் மேற்கொண்ட மிக நீண்ட வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.   

இதற்கு, ஆசியாவை ட்ரம்ப் தேர்ந்தெடுத்திருப்பது ஆசியப் பிராந்தியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. இங்கு கவனிக்கப்படவேண்டியது யாதெனில், ஆசியாவின் மீதான அமெரிக்காவின் ஆவல், புதிய கட்டத்தை எட்டியிருக்கிறது.   

ஜனாதிபதியாகிய முதல் ஒன்பது மாதங்களில், ஆசியத் தலைவர்களுடன், ட்ரம்ப் 40 தடவைகள் நேரடியாகத் தொலைபேசியில் உரையாடியுள்ளார். 10 ஆசியத் தலைவர்களை நேரடியாகச் சந்தித்துள்ளார். அமெரிக்கத் துணை ஜனாதிபதி, இராஜாங்கச் செயலாளர், பாதுகாப்புச் செயலாளர், வணிகச் செயலாளர் என அமெரிக்க நிர்வாகத்தின் அனைத்து உயர் பதவியில் உள்ளவர்களும் பலதடவைகள் ஆசியாவுக்கு இவ்வாண்டு விஜயம் செய்துள்ளனர். இது அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தின் கவனம், முன்னெப்போதும் இல்லாதளவுக்கு ஆசியாவை நோக்கித் திரும்பியிருப்பதைக் காட்டுகிறது.  

ட்ரம்ப், தனது பயணத்தின் முக்கிய நோக்காகக் கருதிக் கொண்டது, வடகொரியா மீதான தனது எச்சரிக்கையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதும், அதற்கான கூட்டாளிகளை உறுதிப்படுத்திக் கொள்வதுமாகும்.   

 இதைச் சற்று விரிவாக நோக்கலாம். பயணத்தின் முதற்கட்டமாக, ஜப்பானில், அமெரிக்காவின் ஆயுத மேலாண்மை பற்றி ட்ரம்ப் பேசினார். “இதுவரை இல்லாத வலிமையான, குறிப்பாக, உலகம் கண்டிராத, சிறந்த ஆயுதங்களை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. அதை நட்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதை, உலகின் பாதுகாப்புக்கான கடமையாக நாம் கருதுகிறோம்” என்றார்.   

இதன்மூலம், அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை வாங்குங்கள் என அவர் கட்டளையிட்டார். ட்ரம்ப் பதவியேற்றது முதல், ஆயுதங்கள் விற்பனையை முன்னிலைப்படுத்தி வருகிறார். அவரது, சவூதி அரேபிய விஜயத்தில் அமெரிக்கா 110 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை விற்றமை இங்கு நினைவுகூரத்தக்கது.   

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியின் ஆசிய விஜயம், அமெரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் இடையிலான ஒரு வர்த்தகக் கூட்டை உருவாக்க முயன்றது. அதன் விளைவாக பசுபிக் கடந்த கூட்டிணைவு (Transpacific Partnership - TPP) உருவானது.  

 ட்ரம்ப் ஜனாதிபதியாகிச் செய்த முதற்காரியங்களில் ஒன்று, பசுபிக் கடந்த கூட்டிணைவை இரத்துச் செய்தமையாகும். இவ்வுடன்படிக்கை அமெரிக்க நலன்களுக்குப் பாதகமானது என அவர் வாதிட்டார். இதில் கவனிக்க வேண்டியது யாதெனில், அமெரிக்கா இதுவரை தனக்குப் பாதகமான வர்த்தக உடன்படிக்கையிலோ அல்லது வர்த்தகக் கூட்டிலோ இணைந்ததில்லை. ட்ரம்பின் சிக்கல் யாதெனில், பசுபிக் கடந்த கூட்டிணைவு முழுமையான கட்டுப்பாட்டை அமெரிக்காவுக்கு வழங்கவில்லை என்பதுதான்.   

இன்று அமெரிக்கா எதிர்நோக்கியுள்ள பலமுனை நெருக்கடியானது, அமெரிக்கா உலக நாடுகளுடனான வர்த்தகத்தில், ஒத்துழைப்பில் முழுமையான கட்டுப்பாட்டை வேண்டி நிற்கிறது. நெருக்கடியான காலங்கள், ஏதேச்சாதிகாரமான கொள்கை நிலைப்பாடுகளை எடுக்கத் தூண்டுகின்றன. இவ்விடத்தில் பசுபிக் கடந்த கூட்டிணைவு பற்றிச் சுருக்கமாகப் பார்த்துவிடலாம்.   

பசுபிக் கடந்த கூட்டிணைவானது ஒரு வர்த்தகக் கூட்டு உடன்படிக்கையாகும். இது, 2016 ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் நான்காம் திகதி கைச்சாத்திடப்பட்டது. இவ்வுடன்படிக்கையின் முக்கிய அம்சம் யாதெனில், இதுவரை நடைபெற்று வந்த, வர்த்தக உடன்படிக்கைகளில் இருந்து வேறுபட்டதாக அமைகின்றமையாகும்.   

முதலாளித்துவம் இதுவரை நடைமுறைப்படுத்தி வந்த இருநாடுகள் (Bilateral) மற்றும் பலநாடுகளுக்கு இடையேயான (Multi-lateral) தடையற்ற வாணிப சுதந்திர ஒப்பந்தம் (Free Trade Agreement) எனும் சுரண்டல் முறைக்குப் பதிலாக, அமெரிக்கா நேரடியாக, ஏனைய நாடுகளைச் சுரண்டுவதற்கு இவ்வுடன்படிக்கை வழிவகுக்கிறது. அவ்வகையில், இது உலகைப் புதிய வழிகளில் மறுகொலனி மயமாக்கும் நிகழ்ச்சி நிரலாகும்.  

உலகின் 40 சதவீதமான பொருளாதாரத்தை அமெரிக்கா நிரந்தரமாகச் சுரண்டுவதற்கான திட்டமே ஒபாமாவின் ஆசிய விஜயத்தின் பின் அரங்கேறியது. பசுபிக் கடந்த கூட்டிணைவானது, பதினொரு நாடுகளின் (அவுஸ்திரேலியா, புரூனை, கனடா, சிலி, ஜப்பான், மலேசியா, மெக்சிகோ, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர், வியட்நாம்) பொருளாதாரம் அமெரிக்காவின் கீழ், சுற்றி வளைக்கப்படுவதற்கு வழிவகுத்தது.   

பசுபிக் கடந்த கூட்டிணைவில் பங்கேற்கும் நாடுகள், இந்த ஒப்பந்த நடைமுறைகள் குறித்தோ அல்லது அதன் செயல்வடிவம் குறித்தோ தங்கள் நாட்டு நாடாளுமன்றத்திலோ, பத்திரிக்கைகளிலோ வேறு எங்கும் விவாதிக்கக் கூடாது எனச் சொல்கிறது, இந்த ஒப்பந்தம். கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக, இரகசியமாக அமுலில்இருந்து வந்த, இந்த ஒப்பந்த நடைமுறை குறித்த பேச்சுவார்த்தை, விக்கிலீக்ஸ் மூலமாக 2015 ஆம் ஆண்டு தெரியப்படுத்தப்பட்ட பின்பே, இவ்வாறாதொன்று பற்றிப் பலருக்கும் தெரிந்தது. 

 ஜப்பான் இக்கூட்டிணைவு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு விரும்புகிறது. இதை நடைமுறைப்படுத்துவதால், இதில் உள்ள ஏனைய வளர்முக நாடுகளின் சந்தைகளை இலகுவாகக் கைப்பற்றலாம் என அது கருதுகிறது.  

 எனவே, ட்ரம்பின் ஆசியப் பயணத்தின் முதல் நாட்டிலேயே, அவரது கொள்கைகளுக்கு எதிரான குரல்களை, அவர் கேட்க வேண்டி வந்தது. இருந்தபோதும், அவர் அதைக் கையாள வடகொரியாவின் அச்சுறுத்தலும் ஜப்பானின் பாதுகாப்புக் குறித்தும் பேசினார்.  ஜப்பானை அடுத்து தென்கொரியா சென்ற ட்ரம்ப், அழுத்தம் திருத்தமாக, வட கொரியாவின் மீதான போர்முரசை அறைந்தார். இவ்விடத்தில், வடகொரியா குறித்த சில விடயங்களைச் சொல்ல வேண்டும்.   

வட கொரியா இதுவரை எந்த நாட்டின் மீதும் ஆக்கிரமிப்புப் போரை நடத்தியதில்லை. 1950 ஆம் ஆண்டின் கொரியப் போரும், பலவந்தமாக வட கொரியாவின் மீது திணிக்கப்பட்ட ஒன்றுதான். அன்று கொரியத் தீபகற்பத்துக்குச் சென்ற அமெரிக்கப் படைகள் இன்றுவரை வீடு திரும்பவில்லை.  

உலகுக்கு அச்சுறுத்தல் வட கொரியாவா இல்லை; அமெரிக்காவா என்ற வினா இன்று கேட்கப்பட வேண்டியதாகிறது. இன்று உலகம் முழுவதும், 138 நாடுகளில் கிட்டத்தட்ட 800 இடங்களில் அமெரிக்காவுக்கு இராணுவத் தளங்கள் இருக்கின்றன.   

அதாவது, உலகில் கிட்டத்தட்ட 70 சதவீத நாடுகளில் அமெரிக்காவின் கரங்கள் சூழ்ந்துள்ளன. இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் நேரடியாக இராணுவத்தளம் இல்லையென்றாலும், இராணுவக் கூட்டுப் பயிற்சி மற்றும் பொருளாதாரப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் அந்நாடுகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் அமெரிக்கா வைத்துள்ளது.  

இன்று 80சதவீதமான தென்கொரிய மக்கள், இரு கொரியாக்களுக்கும் இடையிலான இணைப்பை விரும்புகிறார்கள். ஆனால், இது அமெரிக்க விருப்புக்குரியதல்ல. 30,000 அமெரிக்க இராணுவத்தினர், படைத்தளங்கள், ஆயுதங்கள் என அமெரிக்க இராணுவத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாகத் தென்கொரியா உள்ளது.   

எனவே, இரண்டு கொரியாக்களும் இணைவது அமெரிக்காவுக்குப் பாதகமானது. இதனாலேயே தென்கொரியாவுக்கு ட்ரம்ப் பயணம் செய்தார். ஜப்பானிலும் தென்கொரியாவிலும் அதைத் தொடர்ந்து, வியட்னாமிலும் பிலிப்பைன்ஸிலும் இராணுவ வியாபாரத்தின் முக்கியத்துவம் குறித்தும் பயங்கரவாதத்தை எதிர்கொள்ளல் குறித்தும் ட்ரம்ப் பேசினார்.   

ஒருபுறம் அமெரிக்க ஆயுதங்களின் மேன்மை குறித்து பேசுவதனூடு, அவற்றை விற்பனை செய்வதற்கான வழிவகைகளைத் தேடினார். மறுபுறம் வடகொரியா மீதான தாக்குதல் விரைவில் நடைபெறவுள்ளது என்பதனூடு, அதற்கு ஆதரவைத் தேடினார்.   

இதைத்தொடர்ந்த ட்ரம்பின் சீனப் பயணம், மிகவும் வேறுபட்டதாக இருந்தது. ஏனைய நாடுகளில் பேசிய விடயங்களை அவர் சீனாவில் பேசவில்லை. சீனாவில் அவரின் தொனியே வேறுவகையில் இருந்தது.  

 வர்த்தகம் பற்றியும் இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்துவது பற்றியும் ட்ரம்ப் பேசினார். அமெரிக்க நிறுவனங்கள், சீனாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளைச் சீன அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சீனா-அமெரிக்காவுக்கிடையிலான உறவைப் பலப்படுத்த இருதரப்புகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.   

ட்ரம்பின் மாறுபட்ட தொனியும் இன்னொரு வகையில் அடக்கிவாசித்தலும் சீனாவின் அதிகரிக்கும் செல்வாக்கைக் காட்டுகிறது. இதே ட்ரம்ப்தான், 2000ஆம் ஆண்டு வெளிவந்த தனது ‘The America We Deserve’ என்ற புத்தகத்தில், ஆசியாவில் அமெரிக்க ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர சீனா முயற்சிப்பதை அனுமதிக்க முடியாதென்றும் வர்த்தகத்தின் ஊடு, எம்மை எமது நாட்டிலேயே தோற்கடிக்கும் சீன முயற்சிகள் வெற்றியளிக்க அனுமதிக்கப் போவதில்லை என்று எழுதினார்.   

இன்று 17 ஆண்டுகள் கழித்து, அமெரிக்க ஜனாதிபதியாக அவரது சீன விஜயத்தின் போது, சீனாவுக்குச் சங்கடம் தரும் எதையுமே பேசுவதை அவர் தவிர்த்தார்.   

சீனாவின் புதிய அயலுறவுக் கொள்கைகள்

ஜீ ஜின்பிங்கின் தலைமையில் சீனாவின் அயலுறவுக் கொள்கைகள் புதிய கட்டத்தை அடைந்துள்ளன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய காங்கிரஸில், சீனாவின் எதிர்கால அயலுறவுக் கொள்கை தொடர்பில், ஜீ ஜின்பிங் ஒரு தர்க்கரீதியான சித்திரமொன்றை வழங்கினார்.   

“டென்சீயோ பிங்கின் உலக அலுவல்களில், பிரதான இடத்தைப் பெறாமல் இருத்தல் என்ற அயலுறவுக் கொள்கை காலாவதியாகி விட்டது. சீனா தனது நிலையை உலக அளவில் நிலைநிறுத்த வேண்டும். ஆண்டாண்டு காலமாக ஏகாதிபத்தியத்துக்கு அடிபணிந்திருந்த காலம் முடிந்துவிட்டது. எமது பாதுகாப்பை, பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட அயலுறவுக் கொள்கை வகுப்பே அடுத்த ஐந்து ஆண்டுகளில் சீனாவை இன்னும் உயர்வான நிலைக்கு முன்தள்ள அவசியமானது” என்றார்.   

இது ஜீ ஜின்பிங் தனது புதிய சகாப்தத்தை தொடங்கியிருப்பதைக் காட்டுகிறது. அதேவேளை, வடகொரிய நெருக்கடி, தென்சீனக் கடல் மற்றும் கிழக்குசீனக் கடல் சிக்கல்கள் என்பன சீனாவைச் சூழ்ந்துள்ளன. இதன் பின்னணியிலேயே ஜீ ஜின்பிங்கின் எதிர்காலத்துக்கான சீன அயலுறவுக் கொள்கை வகுப்பானது முக்கியம் பெறுகிறது.   

சீனாவுக்கு எதிராக அமெரிக்கா ஏனைய நாடுகளைக் கூட்டுச் சேர்க்கிறது. இதில் குறிப்பாக ஜப்பான், தென்கொரியா, இந்தியா என்பன பிரதானமானவை. இதை நன்கறிந்தே, சீனா தனது உபாயங்களை வகுக்கிறது. வடகொரியாவின் மீதான தாக்குதலை நடாத்துவதற்கான ஆதரவை, ட்ரம்ப் தேடுவதற்கான ஆசியப் பயணம் இன்னொரு வகையில் சீனாவுக்கு எதிரான கூட்டாளிகளை ஒன்றிணைப்பதற்கும் ஆகும்.  

ஆனால், அதே பயணத்தில் அவர் சீனாவுக்கு விஜயம் செய்திருப்பதை முரண்நகை எனலாம் அல்லது யதார்த்த உலக அரசியல் எனலாம். எது எவ்வாறாக இருந்தாலும், இப்போது ஆதிக்கத்துக்கான பிரதான சதுரங்கமாக ஆசியா மாறியிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. 


You May Also Like

  Comments - 1

  • siva Thursday, 30 November 2017 06:53 PM

    please accept china is a next world power.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .