2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ட்ரம்ப்பின் கைகளில் பலஸ்தீன இரத்தம்

Gopikrishna Kanagalingam   / 2018 மே 17 , மு.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலஸ்தீனம், இஸ்‌ரேல் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான பிரச்சினையைப் புரிந்துகொள்வதென்பது, சிறிது சிக்கலானதொன்றாகவே இருக்கிறது. மேலோட்டமாகப் பார்ப்பவர்கள், “இரண்டு தரப்புகளிலும் தவறுகள் இருக்கின்றன தான்” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிடுவார்க்ள்.  

இரு நாடுகளுக்குமிடையிலான பிரச்சினையை எந்தளவுக்குப் புரிந்து கொள்கிறோமோ, இல்லையோ, கடந்த திங்கட்கிழமை, பலஸ்தீனர்கள் மீது இஸ்‌ரேலால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தாக்குதல்களைப் புரிந்துகொள்ளாத அளவுக்கு இருந்துவிடக் கூடாது.  

ஏனென்றால், குறைந்தது 60 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்; 2,700க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர். கொல்லப்பட்டோரில் குறைந்தது 9 பேர், சிறுவர்கள் அல்லது குழந்தைகள். குழந்தைகளுக்கு உயிரிழப்புகளை ஏற்படுத்துமளவுக்கு இஸ்‌ரேல் செயற்பட்டிருக்கிறது என்பது, பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.  

இதற்கு முன்னர், இஸ்‌ரேல் கொன்றதில்லையா என்ற கேள்வி எழுப்பப்படலாம். நியாயமான கேள்வி. கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற உயிரிழப்புகளைத் தவிர்த்துப் பார்த்தாலும், இவ்வாண்டு மார்ச் 30ஆம் திகதியிலிருந்து, 50க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 

இக்காலப்பகுதியில், இஸ்‌ரேலியத் தரப்பில் எவரும் கொல்லப்பட்டிருக்கவில்லை. எனவே, பலஸ்தீனத் தரப்பிலிருந்து கிடைக்கும் வன்முறைகளுக்குப் பதிலடியாகத் தான், பலஸ்தீனர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது என்ற வாதத்தை, இலகுவாக நிராகரிக்க முடிகிறது.  

அதற்கு முன்னைய காலங்களிலும், பொதுமக்களுக்கான உயிரிழப்புகள் இடம்பெறும் வகையிலான தாக்குதல்களை, இஸ்‌ரேல் மேற்கொண்டிருந்தது. ஆனால், இப்போது இடம்பெற்றிருப்பது, இன்னமும் உச்சநிலையிலான நீதியின்மையாகப் பார்க்கப்பட வேண்டியிருக்கிறது. 

ஏனென்றால், உயிரிழப்புகள் ஒருபக்கமாக இருக்க (60 பேர் உயிரிழந்ததை எப்படி ஒருபக்கமாக ஒதுக்குவது என்பது நியாயமான கேள்வி தான். இருந்தாலும்...), இந்த உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான போராட்டத்தை நசுக்குவதென்பது, நியாயமற்ற ஒன்றாகும். 

ஏனென்றால், தமது நாட்டின் பகுதியை ஆக்கிரமித்து வைத்திருக்கும் ஒரு நாட்டுக்கு, அந்த ஆக்கிரமிப்புக்கான சர்வதேச அங்கிகாரம் கிடைப்பதை எதிர்த்துப் போராட வேண்டிய உரிமையும் கடமையும், பலஸ்தீன மக்களுக்கு இருக்க வேண்டும்.   

ஜெருசலேத்தின் கிழக்குப் பகுதியை, 1967ஆம் ஆண்டு இடம்பெற்ற போரின் போது இஸ்‌ரேல் கைப்பற்றியிருந்தது. அதற்கு முன்னரும், பலஸ்தீனர்களால் உரிமை கோரப்படும் பகுதிகள், இஸ்‌ரேலால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தன. 

ஆனால், கிழக்கு ஜெருசலேம் என்பது, பலஸ்தீனர்களுக்கு முக்கியமான பகுதியாக இருக்கிறது. இஸ்‌ரேலின் இக்கைப்பற்றல், இவ்வாக்கிரமிப்பு, சர்வதேச ரீதியாக இன்னமும் அங்கிகரிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், ஜெருசலேத்தை, இஸ்‌ரேலின் தலைநகராக அங்கிகரித்து, இஸ்‌ரேலுக்கான தமது நாட்டுத் தூதரகத்தை அங்கு இடமாற்றும் முடிவை, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்தமை தான், பிரச்சினையாக மாறிப் போனது.  

ஜனாதிபதி ட்ரம்ப்புக்கெதிரான பல விமர்சனங்கள் காணப்படுகின்றன. அவரை, இனவாதி எனச் சிலர் அழைக்கின்றனர். இன்னும் சிலர், அவருக்கு அரசியல் அறிவு போதாது என்கின்றனர். வேறு சிலரோ, அடிப்படையான புரிதலற்றவர் என, அவரை விமர்சிக்கின்றனர். இவ்விமர்சனங்களின் நியாயத்தன்மை குறித்தெல்லாம் ஆராய்வது கடினமானது. 

ஆனால், இஸ்‌ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அங்கிகரிப்பது என்ற விடயத்தில் அவர் கொண்டிருக்கும் நிலைப்பாடு, ஐ.அமெரிக்காவில் சர்ச்சைக்குரிய ஒரு முடிவு கிடையாது. 
முன்னைய ஜனாதிபதிகளான பராக் ஒபாமா, ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் ஆகியோர், இஸ்‌ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அங்கிகரிக்கப் போவதாக, தமது பிரசாரங்களில் கூறி, ஜனாதிபதியாகப் பதவியேற்றவர்கள் தான்.  

ஆனால், புஷ்ஷுக்கும் ஒபாமாவுக்கும் ட்ரம்ப்புக்கும் இடையிலான வித்தியாசமென்பது, ஜனாதிபதியாக ஆகிய பின்னர், புஷ்ஷும் ஒபாமாவும், ஜெருசலேம் விடயத்தில் அமைதி காத்திருந்தனர். 
வேட்பாளர்களாக இருக்கும் போது அறிந்திராத விடயங்கள், ஐ.அமெரிக்காவின் உச்சக்கட்ட புலனாய்வுத் தகவல்களைப் பெற்ற பின்னர், அவ்வாறான முடிவை அறிவிப்பது, உலக அமைதிக்குப் பெருமளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமென்பதை, அவர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள். அதனாலேயே, அம்முடிவை எடுப்பதில் அவர்கள் பின்வாங்கியிருந்தார்கள். 

இரண்டு ஜனாதிபதிகளும், தலா எட்டு ஆண்டுகள் பதவி வகித்திருந்த நிலையில், அவர்களாக விரும்பியிருந்தால், ஜெருசலேத்தை அங்கிகரித்திருக்க முடியும். ஆனால், அவர்கள் அதைச் செய்திருக்கவில்லை.  

மாறாக, ஜனாதிபதியாகப் பதவி வகித்து ஓராண்டுக்குப் பின்னரேயே, ஜெருசலேம் தொடர்பான முடிவை, ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்திருந்தார். அதன் விளைவுகளைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 
ஏனைய ஜனாதிபதிகளுக்கும் ஜனாதிபதி ட்ரம்ப்புக்கும் இடையிலான வித்தியாசமாக, புலனாய்வுத் தகவல்களை நம்பிச் செயற்படும் விடயம் காணப்படுகிறது. புலனாய்வுத் தகவல்களை, ஜனாதிபதி ட்ரம்ப் ஏற்பதில்லை அல்லது அதன்படி செயற்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு, தொடர்ச்சியாகக் காணப்படுகிறது. இங்கு தான், இவ்விடயத்தில் பிரச்சினை ஏற்பட்டிருக்கக்கூடும்.  

ஜனாதிபதி ட்ரம்ப் மீதான விமர்சனங்கள், இஸ்‌ரேல் மீதான, குறிப்பாக, பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அந்நாட்டு அரசாங்கம் மீதான விமர்சனங்களை இல்லாது செய்துவிடுவதில்லை. ஆனால், பிரச்சினைக்குரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் என்ற அடிப்படையில், ஜனாதிபதி ட்ரம்ப் மீது அதிகபட்ச விமர்சனத்தை முன்வைக்க வேண்டியிருக்கிறது.   

ஏனென்றால், கிழக்கு ஜெருசலேத்தின் உரிமையென்பது, இஸ்‌ரேலுக்கும் பலஸ்தீனத்துக்குமான முக்கியமான முரண்பாடாக இருக்கும் போது, அந்நகரம் இஸ்‌ரேலுக்குரியது என அறிவித்துவிட்டு, “இரு நாடுகளுக்குமிடையிலான பிரச்சினையில், முக்கியமான முரண்பாட்டை, பேச்சுவார்த்தை மேசையிலிருந்து அகற்றிவிட்டோம். இனி, தீர்வு காண்பது இலகு” என்று கூறக்கூடிய, அதிகாரத் திமிரை, ஐ.அமெரிக்காவிடமிருந்தும் அதன் ஜனாதிபதியிடமிருந்தும் காணக்கூடியதாக இருந்தது. 

ஒரு துண்டு ரொட்டிக்காக இருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது, அதை ஒருவருக்குப் பறித்துக் கொடுத்துவிட்டு, “இனிமேல் உங்களுக்கிடையில் பிரச்சினை இல்லை” என்று சொல்வது எவ்வளவுக்கு நியாயமற்றதோ, எவ்வளவுக்கு மோசமானதோ, அதைவிடப் பலமடங்கு மோசமான நடத்தையையே, ஐ.அமெரிக்கா வெளிப்படுத்தியிருந்தது.  

ஐ.அமெரிக்காவுக்கும் இஸ்‌ரேலுக்குமான உறவு, எப்போதுமே இறுக்கமானதாகவும் நெருக்கமானதாகவுமே காணப்பட்டு வந்திருக்கிறது. அதில் சந்தேகமில்லை. 

ஆனால், ஐ.அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையில், அண்மைக்காலத்தில் சிறிய மாற்றம் ஏற்பட்டிருந்தது. குறிப்பாக, பராக் ஒபாமாவின் ஜனாதிபதிப் பதவியின் இறுதிக் காலத்தில், இஸ்‌ரேலிடமிருந்து, குறிப்பாக இஸ்‌ரேலின் மோசமான நடத்தைகளிலிருந்து விலகியிருப்பதற்கு, ஐ.அமெரிக்கா தீர்மானித்திருந்தது.

அதன் ஒரு கட்டமாகத் தான், இஸ்‌ரேலியக் குடியிருப்புகளுக்கெதிரான ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானத்தில் வாக்களிப்பதிலிருந்து விலகி, அத்தீர்மானம் நிறைவேறுவதற்கு, ஒபாமாவின் நிர்வாகம் வழியேற்படுத்தியிருந்தது. இது, ஐ.அமெரிக்காவின் வலதுசாரிகளையும் யூதர்களில் ஒரு பகுதியினரையும் கோபப்படுத்தியிருந்தாலும், சர்வதேச அரசியலுக்கு மிக முக்கியமான மாற்றமாகக் கருதப்பட்டிருந்தது.  

அந்த மாற்றங்களெல்லாம் தான், இப்போது இல்லாமல் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த நிர்வாகத்தின் முடிவின் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டமை ஒருபக்கமாக இருக்க, இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட்ட பின்னரும் கூட, வெள்ளை மாளிகையின் பேச்சாளரால், “ஹமாஸ் மீது தான் முழுத் தவறும்” என்று சொல்ல முடிகிறது; தூதரகத் திறப்பு விழாவில், ஜனாதிபதியின் மருகமனும் வெள்ளை மாளிகையின் ஆலோசகருமான ஜரெட் குஷ்னரால், “போராட்டத்தில் ஈடுபடுபவர்களும் பிரச்சினையின் ஓர் அங்கம்” என்று சொல்ல முடிகிறது; ஐ.நா பாதுகாப்புச் சபையில் வைத்து, அச்சபைக்கான ஐ.அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹேலியால், “ஏனைய நாடுகள் எவையும், இஸ்‌ரேல் அளவுக்குப் பொறுமையாக இருந்திருக்க முடியாது” என்று சொல்ல முடிகிறது.  

பிரச்சினையை ஏற்படுத்தி, மக்களின் உயிரிழப்புகளை ஏற்படுத்திய பின்னர், அத்தவறுகளை, இன்னொரு தரப்பின் மீது சுமத்த முடிகின்ற அம்மனநிலை, பலஸ்தீனத்துக்கு மாத்திரமன்றி, உலகம் முழுவதிலும் இருக்கின்ற ஏனைய நாடுகளுக்கும் வழங்கப்பட்டிருக்கின்ற ஒரு படிப்பினையாகும். 

ஆனால், இப்படிப்பினையைப் பெற்றுக் கொள்ள, ஏராளமான உயிர்களை இழக்க வேண்டியேற்பட்டிருக்கிறது என்பது தான், கவலைக்குரிய விடயமாகிப் போயிருக்கிறது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .