2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தேசியம், ஐக்கியம், தமிழர் பலம்

Editorial   / 2020 ஜனவரி 23 , மு.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இலட்சுமணன்

தேர்தல் எனும் வசந்த காலம், அரசியல் வானில் உதயமாகத் தொடங்கியதன் வெளிப்பாடுகளாகத் தமிழ் அரசியல்வாதிகளின் கருத்துகள், விவாதங்கள், அறிக்கைகள் மெல்லமெல்ல மேலௌத் தொடங்கியுள்ளன. 

‘வேதாளம், மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது போல்’ தமிழர்களின்  உரிமை, தமிழர்களுக்கு இடையேயான ஐக்கியம், தமிழர் பலம் எனப் பல்வேறு கோசங்கள், அரசியல்வாதிகளால்  வெளிப்படுத்தப்படுகின்றன.

 அரிதாரம் பூசிய அரசியல் நடிகர்களின் கூத்துகளையும் பம்மாத்துகளையும்  வரலாற்றுச் சாதனைகளாகவும் தமிழ் மக்களின் வரலாறாகவும் பார்க்கும் காலமாகவே தற்போதைய நிலைமைகள் அமைந்துள்ளன.

 சுதந்திரத்துக்குப் பின்னர் இருந்த அரசியல் வீச்சும், போராட்ட குணமும் தமிழ் அரசியல் தலைமைகளிடம் இல்லை. அப்போதைய தலைமைகளுக்கு இருந்த மதிப்பும் மரியாதையும் இன்று தரம் கெட்டுப் போய்விட்டன. 

ஆயுத மௌனிப்பின் பின்னர், எழுந்துள்ள தமிழர் அரசியல் சூழ்நிலையானது, போர்க் குணம் கொண்டதாகவோ, தமிழரின் அரசியல் அபிலாசைகளை பெற்றுக் கொடுப்பதாகவோ அமையவில்லை. 

மாறாக, தமிழரின் அரசியல் செல்நெறியானது, சுயலாப நோக்கம் நிறைந்ததாகவும் ஒவ்வோர் அரசியல்வாதியும்  தனது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளும் வர்த்தக அரசியலாகவே, தமிழ் மக்களால் பார்க்கப்படுகிறது.

தமிழரது அரசியல் விடுதலைக்காக, ஜனநாயக ரீதியில் போராடுவதற்கு, வாக்கு என்ற ஆயுதத்தின் மூலம், தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகள், மக்களின் தேவைகள், அபிலாசைகள் தொடர்பில், இதுவரை காலமும் எடுத்த நடவடிக்கைகளைப் பட்டியல்படுத்திக் கூறமுடியுமா?

தொழில்வாய்ப்பு ரீதியாக, அபிவிருத்தி ரீதியாக, சமூகப் பிரச்சினைகள் ரீதியாக, பொருளாதார வளர்ச்சி தொடர்பாக, அரசியல் உரிமைகள் தொடர்பாக, அரசியல் கைதிகள் தொடர்பாக, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக, இதுவரை முன்னெடுத்த நடவடிக்கைகளை தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்றப் பிரதிநிதிகளால் பட்டியல்படுத்த முடியுமா? என்பது தமிழ் மக்களின் உள்ளத்தில் இருந்து எழும் எழும்வினா.

தமிழரின் தேசிய அரசியலுக்குள் சிக்குப்பட்டுப் போயுள்ள இந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் வாக்குறுதி அளிக்கும் அரசியல்வாதிகள், தேர்தல் முடிந்த பின் காணாமல் போய்விடுகின்றனர். 

தமிழர் உரிமை கிடைத்தால்தான், மற்றையவை கிடைக்கும் எனச் சுருக்கமாகத் தமது கடமையை முடித்து விடுகின்றனர். சிலர், தமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள, மக்களால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளில் கலந்துகொண்டு, தமது முகத்தைக் காட்டி, உசுப்பேற்றும் கருத்துகளைத் தெரிவித்துவிட்டு, வேறெதையும்  அறியாதவர்கள் போல், நழுவி விடுவர். 

 ஆயினும், இத்தகைய அரசியல்வாதிகள் தமது அரசியல் உரிமைகளுக்கு அப்பால்,  அந்த அரசியலால் வரும் சலுகைகளை, நூறு சதவீதம் அனுபவித்துக் கொள்கின்றனர். இந்த அனுபவிப்புகளின் ‘ருசி’ தொடர்ந்தும் தமது பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ‘பசி’யை ஏற்படுத்துகின்றது. 

இந்தப் பின்புலத்திலேயே, தமிழர்களது அரசியல் பயணம் நகர்ந்துகொண்டிருக்கிறது. தமிழரின் ஐக்கியம் தொடர்பாக, உரத்துக் கத்துபவர்களே, தமிழரின் ஐக்கியத்தைச்  சிதைப்பவர்களாக இருப்பதை நாம் எல்லோரும் காண்கின்றோம்.

 தேசியம், ஐக்கியம் பற்றி உரக்கக் குரல் கொடுப்பவர்கள், தமிழரின்  ஐக்கியத்தை உண்மையில் வலியுறுத்துபவர்கள், தமிழர் அபிலாசைகள் நிச்சயம் வெற்றி கொள்ளப்பட வேண்டும் என்று சிந்திப்பவர்கள், அனைவரது பாதுகாப்பையும் இருப்பையும் தொடர்ந்து பேணவேண்டும் எனச் சிந்திப்பவர்கள், தம்மால் மற்றவர்கள் வெளியேற்றப்படவில்லை என்றும் தாமாகவே வெளியேறிச் சென்றனர் எனக் கருத்துத் தெரிவிப்பவர்கள், கடந்த காலங்களை மறந்து, பிரச்சினைகளைப் பேசித் தீர்க்கலாம் எனக் கருதுபவர்கள், தற்போது தமிழ்க் கூட்டமைப்பில் பிரச்சினை இல்லை எனச் சொல்பவர்கள், மாற்றுத் தலைமை என்பது தமிழ்த் தலைமையைச் சிதைப்பதற்கான சதி எனப்  பரப்புரை செய்பவர்கள், ஏன் ஒன்றை மட்டும் இதுவரை கூறவில்லை; சிந்திக்கவில்லை; முன்வைக்கவில்லை. 

சிலவேளை, இந்தக் கேள்விகளும் கூட, தமிழர் அரசியல்வாதிகளின் செவிக்கு எட்டாத செய்தியாக அல்லது எட்டியும் எட்டாத செய்தியாகத் தமிழ்த் தலைமைகளுக்குச் சென்றுவிடலாம் எனத் தமிழ் மக்கள் கருதுகின்றனர்.

உண்மையில், தமிழரது அபிலாசைகள், உரிமைகள், தேவைப்பாடுகள் தொடர்பான அக்கறையும் கவனமும் தார்மிகப் பொறுப்பும் தம்மிடம் இருப்பதாக இருந்தால், தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைக்கட்சி என்ற வகையில், அனைவரையும் அரவணைத்து கொள்ள வேண்டும். இதற்காக எடுக்கும் முயற்சி, தேர்தல் காலத்தில் வாக்கு சேகரிக்கும் போட்டியாக இல்லாமல் இருக்க வேண்டும். 

தமிழர் பிரதிநித்துவத்தின் உண்மையான தத்துவார்த்தங்களைப் பாதுகாப்பதற்கு, உண்மையிலேயே இதயசுத்தியுடன் இருந்தால், தமிழர் அபிலாசைகள் நிறைவேறும். இதற்கு இன்னும் காலம் கடந்து விடவில்லை. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்காலத்தில், குறிப்பாக, தேர்தல் முடிந்த காலாண்டில், தனிக்கட்சியாக, தனிச் சின்னத்தில், புதிய பதிவுடன் செயற்படுவதுடன், அதற்கான யாப்புத் தயாரிக்கப்படும் என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் வெளிப்படையாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட வேண்டும். 

மேலும், உட்கட்சி ஜனநாயகத்துக்கு மதிப்பளிப்பதுடன், தமிழரசுக் கட்சியின் சர்வாதிகாரப் போக்கிலிருந்து விலகி,  ஜனநாயக மயப்படுத்தப்பட வேண்டும். இதுவே, கூட்டமைப்பிலிருந்து கட்சிகள் வெளியேறுவதற்கு அடிப்படைக் காரணமாகவும் மீண்டும் இணைவதற்கு தடையாகவும் இருக்கின்ற காரணங்களாகும். 

எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில், ஐக்கியம் பற்றி உரக்கக் குரல்கொடுப்பவர்களும் “மாற்று அணி வேண்டாம்; அது தமிழ்த் தேசியத்தைப் பலமிழக்கச் செய்யும் சதி” எனக் கருத்துரைப்பவர்களும் தமிழ் மக்களின் இந்த அபிலாசைகளைப் பகிரங்கமாக அறிவித்து, வெளியேறியவர்களை வழிப்படுத்த, தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்த செயலில் இறங்குவார்களா?  

அல்லது, தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் கூட்டமைப்பு, பழைய பல்லவி போல், இழுத்தடிப்பு வேலைகளில் இறங்கிவிடுமா? என்ற அச்ச உணர்வு இயல்பாகவே தமிழ் மக்களுக்கும் வெளியேறிச் சென்ற கட்சிகளுக்கும் உண்டு. 

தமிழர் அரசியல் கட்சிகளின் ஐக்கியத்தை வலியுறுத்தும் வகையில் குரல் தரவல்ல, அதிகாரம் அளிக்கப்பட்டவர், பகிரங்கமாக இதற்கான முன்னெடுப்புகளை முன்னெடுத்துச் செல்வார்களா? 
உண்மையில், தமிழரின் ஐக்கியம் பற்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிந்தித்தால், மனதார நினைத்தால் இதைச் செய்தேயாக வேண்டும். இதைத் தமிழ் மக்கள் இதயபூர்வமாக வரவேற்கிறார்கள். 

இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே, எதிரிகள் எங்கோ ஓடி மறைவர் எனத் தமது அரசியல் பலத்தை, மக்கள் உறுதிப்படுத்துவார்கள். எனவே, தமிழ் மக்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் பொறுப்பு,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்க உரியதாகும்.  

இது இவ்வாறு இருக்க, மாற்றுத் தலைமைகள் தொடர்பான சிந்தனைகள், முடிவுறுத்தப்பட்டு ஒரு கட்சி ஜனநாயகத்துக்குள், தமிழர் அனைவரும் ஒன்றிணைய அறைகூவல் விடுக்கப்பட்டிருக்கிறது. 

இதற்கு மாற்றுத் தலைமை, கூட்டமைப்பின் தலைமையை மாற்றினால் தாம் இணைவதாகக் குறிப்பிட்டுள்ளமை, மாற்றுத் தலைமையின் அரசியல் சாணக்கியம் இன்மையையும் கொள்கைத் தெளிவின்மையையும் வெளிக்காட்டுகிறது. 

நாம் எதைச் செய்கிறோம்; என்ன செய்கிறோம்; எப்படிச் செய்கிறோம்; அதன் பின்விளைவுகள் என்ன என்பது பற்றிச் சிந்திக்காத, சிறுபிள்ளைத்தனமான செயற்பாடாகவே  இதைப் பார்க்கவேண்டி உள்ளது. 

மாற்றுத் தலைமை தமிழர் அரசியலில் எடுக்கும் நடவடிக்கைகள் முன்னுக்குப்பின் முரணாகவும் ஸ்திரமற்ற நிலைப்பாடு உடையதாகவும் உள்ளது. தமிழரது அரசியல் இது தொடர்பாக இந்திய விஜயத்தின் பயனற்ற தன்மை அவரது தமிழ் திரையுலக நடிகர் ரஜினி சந்திப்பின் ஊடாக வெளிப்பட்டிருக்கிறது. இது, மாற்றுத் தலைமையின் தலைமை, அரசியல் முதிர்ச்சி உடையவரா என்ற ஐயப்பாட்டை மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது. 

பொங்கலின் பின்னர், ஓரிரு நாள்களில் தங்கள் கட்சிப் பதிவு தொடர்பாகவும் கூட்டணி தொடர்பாகவும் கருத்துத் தெரிவித்தவர்கள், தங்களுக்குள் புடுங்குப்பட்டு பொங்காமல் போய்விட்டனர். 

தமிழரது தீர்வுத்திட்டம், அடுத்த பொங்கலுக்கு, அடுத்த தீபாவளிக்கு என்று விமர்சிப்பவர்களின் மாற்றுத் தலைமைக் கனவும்  கூட்டும் அக்கட்சிப் பதிவும் பொங்காமல் உடைந்த பானையாகப் போய்விட்டது என்ற கருத்துகளும் மக்களிடம் முளைவிடத் தொடங்கிவிட்டன. 

அது எப்படி இருப்பினும், தமிழர் அரசியலில் ஐக்கியம் தொடர்பாக, மாற்றுத் தலைமைக் கட்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஐக்கியம் தொடர்பாகப் பேரம் பேசலாம்; பேசாமலும் விடலாம். 

ஏனெனில், இங்கு எவரும் இனி வரும் காலங்களில், எதையும் செய்யப்போவதில்லை. ஏனெனில், அதைத்தான் கடந்த கால வரலாறுகள், கற்றுத்தந்து கொண்டிருக்கின்றன. 

தேசியம் சய ஐக்கியம் சய தமிழர் பலம் சக  தமிழர் பிரதிநிதிகள் சமன் தமிழ் மக்கள் பாவம்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X