2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

தடுமாறும் ராகுல் காந்தி தலைமை

எம். காசிநாதன்   / 2018 ஜூன் 11 , மு.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடியரசுத் தலைவராக இருந்த காங்கிரஸின் பழம்பெரும் தலைவர்களில் ஒருவரான பிரனாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ் விழாவில் பங்கேற்றது, காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 மதசார்பற்ற கொள்கையை நெஞ்சில் சுமந்து, தேசிய அரசியலில் முன்னேறி, நாட்டின் குடியரசுத் தலைவராகவே இருந்தவர், எப்படி ஆர்.எஸ்.எஸ் விழாவில் பங்கேற்கிறார் என்ற கேள்விகள் நாடு முழுவதும் உள்ள, மதச் சார்பற்ற கட்சிகள் மத்தியில் எழுந்தாலும், அந்த நிகழ்வை அதிகபட்சமாக அரசியல் செய்வதற்கு வித்திட்டது காங்கிரஸ் கட்சி. 

பிரணாப் முகர்ஜி பழுத்த காங்கிரஸ் காரர் மட்டுமல்ல, மிகச்சிறந்த தேசிய வாதி. அவர் ஆர்.எஸ்.எஸ் விழாவில் பங்கெடுத்தால் அங்குள்ளவர்களுக்குத்தான் பாடமெடுப்பார் என்பதைக் கூட காங்கிரஸ் கட்சி உணரவில்லை. 

ஆனால், அவ்விழாவில் கலந்து கொண்ட பிரணாப் முகர்ஜி, நாட்டின் ஒற்றுமை, சகிப்புத்தன்மை, பல மதத்தினரும் ஒரே அரசியல் சட்டத்தின் கீழ் வாழ்வது, வேற்றுமையில் ஒற்றுமை, மதச்சார்பற்ற தன்மை போன்ற அத்தனை விஷயத்தையும் ஆர்.எஸ்.எஸ் விழாவில் பேசி, நாட்டு மக்களிடையே கைதட்டு வாங்கினார். 

ஆனால், தங்களின் ராஜகுருவின் அரசியல் தந்திரம் கூடத் தெரியாமல், காங்கிரஸ் கட்சி, பிரணாப் முகர்ஜியையே நிகழ்ச்சிக்கு முன்பே விமர்சித்தது பலரையும் வியக்க வைத்தது. இப்படியொரு குழப்பத்துக்குக் காரணம், அக்கட்சியின் தற்போதைய   தலைமை ராகுல் என்பதுதான் நிஜம்.  

இந்தச் சோதனை மட்டுமல்ல, ‘ராகுல் வெளிநாட்டு பயணம்’, ‘மூத்த அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு சி.பி.ஐ கொடுக்கும் நெருக்கடி’, ‘கூட்டணி சேர்ந்து கர்நாடகாவில் ஆட்சி அமைத்து விட்டு, முழு அமைச்சரவை அமைக்க முடியாமல் திணறல்’, ‘எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்க, மாநிலக் கட்சிகளின் நம்பிக்கையைப் பெற முடியாமல் தவிப்பு’ உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் மட்டுமல்ல, கரடு முரடான பாதையில் தற்போது, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பயணித்துக் கொண்டிருக்கிறது. 

தேசிய அரசியலில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, 1998இல் இப்படியொரு சோதனையைச் சந்தித்து. நரசிம்மராவ் பிரதமராக இருந்த 1996 தேர்தலில் ஆட்சியை இழந்து, 1998இல் சீத்தாராம் கேசரி தலைமையில் காங்கிரஸ் கட்சி தேர்தலைச் சந்தித்து படுதோல்விடைந்த நேரம். அப்போது, காங்கிரஸ் கட்சிக்கு உயிரூட்ட சோனியா காந்தி கிடைத்தார். 

சோனியா காந்தி, தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட போது, கூட்டணி வியூகத்திலும் சிறுபான்மை மக்கள் மனதிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி, காங்கிரஸின் பாரம்பரிய வாக்குகளைத் தக்க வைத்துக் கொண்டார். 

 “சோனியா வெளிநாட்டவர்” என்று பா.ஜ.க, அவசரப்பட்டுச் செய்த பிரசாரம் அவருக்கு மக்கள் மத்தியில் அனுதாபத்தைப் பெற்றுக் கொடுத்தது. தலைமைப் பொறுப்பை ஏற்ற சோனியா காந்தி, 2004இல் அமோக வெற்றி பெற்று, காங்கிரஸை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினார். டொக்டர் மன்மோகன்சிங் பிரதமரானார். பத்து வருடங்களாகக் கூட்டணிக் கட்சிகளைத் தக்க வைத்துக் கொண்டு, காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை கொடுத்தார்.  

இதை விட மோசமான சோதனையை, 2018 காங்கிரஸ் கட்சிக்கு அளித்திருக்கிறது. தேசிய அளவில், பாரதீய ஜனதாக் கட்சிக்கு எப்படி மாற்றுக் கூட்டணியை உருவாக்குவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறது.

தீவிர அரசியலுக்கு, சோனியாவின் உடல் நிலை இடம் கொடுக்கவில்லை. அதனால் அக்கட்சியின் தலைமைப் பொறுப்பை, கட்சியின் வெற்றி வியூகங்களைத் தீட்டும் பொறுப்பை ராகுல் காந்தியிடம் கையளித்திருந்தார். 

ஆனால், ராகுல் காந்திக்கு இருக்கும் மிகப் பெரிய சிக்கல், அவரை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியோ, மஹாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் சரத் பவாரோ ஏற்றுக் கொள்ள தயங்குகிறார்கள். மாயாவதி, அகிலேஷ் குமார் யாதவ் எல்லாம் கூட அவரைக் குறையாகவே ஏற்கிறார்கள்.

ஏன் தி.மு.க கூட, தமிழகத்தில் இன்னும் முழுமையாக ராகுல் காந்தியை ஏற்கவில்லை. இன்றைக்கு மனதார ராகுல் காந்தியை ஏற்றுக் கொள்ளும் ஒரே தலைவர், பீஹார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மட்டுமே.

வட மாநிலங்களில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களும் தென் மாநிலங்களில் உள்ள அரசியல் தலைவர்களும் இன்னும் ராகுல் காந்தியை ஒரு ‘சீரியஸ் லீடராக’க் கருதவில்லை. இது காங்கிரஸுக்கு பேராபத்து.   

பாரதீய ஜனதாக் கட்சியின் அரசியல் யுக்திகளை, ராகுல் முழுமையாகப் புரிந்து கொண்டது மாதிரித் தெரியவில்லை. ஆர்.எஸ்.எஸ் மீது குற்றம் சாட்டுவது மட்டுமே, காங்கிரஸ் அரசியல் என்று ராகுல் செயல்படுகிறார். அது பலன்தராது. 

ஏனென்றால், காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, அனைத்துத் தரப்பினருமே வாக்களித்து வந்திருக்கிறார்கள். அதில் இந்து வாக்காளர்கள் அதிகம் என்பதுதான் கடந்த கால வரலாறு. 
அதனால் இந்து வாக்காளர்கள் மத்தியில் நேரு, இந்திரா, ராஜீவ், நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகிய அனைத்துப் பிரதமர்களும் கத்தி மேல் நடப்பது போல் நடந்தார்கள். ஆனால், ராகுல் அந்தப் பாதையிலிருந்து விலகுகிறார். 

பா.ஜ.க ஆட்சியின் செயற்பாடுகளை முன்வைத்து ஆதரவு திரட்டுவதே, காங்கிரஸுக்குப் பலம் தரும் என்பதை மறந்து, முழுக்க முழுக்க மத அரசியலை எதிர்த்து, காங்கிரஸ் கட்சி பிரசாரத்தைப் பட்டை தீட்டுகிறார் ராகுல்.

அது, பா.ஜ.கவுக்குத்தான் பலத்தைக் கொடுக்கும். இப்போது பா.ஜ.க ஆட்சியின் செயல்பாடுகளில் மக்கள் வெறுப்படைந்திருக்கிறார்கள். அந்த வெறுப்பை மூலதனம் ஆக்காமல், மத அரசியலை முன்வைத்து, காங்கிரஸ் தன் வியூகத்தைத் திசை திருப்பினால், அக்கட்சிக்கு கூட்டணிக் கட்சிகள் வேண்டுமென்றால் கிடைக்கலாம்; ஆனால், காங்கிரஸுக்கு அனைத்துத் தரப்புகளின் வாக்குகளும் கிடைக்காது. 

ஆட்சிக்கு எதிரான வாக்குகள் திரளுவதற்கு பதில், மத அரசியலை முன்வைத்து வாக்குகளைத் திரட்டுவது, காங்கிரஸுக்கோ அதன் கூட்டணிக் கட்சிகளுக்கோ நல்லதல்ல. இந்நிலையில் தற்போது, கூட்டணி சேர விரும்பும் கட்சிகளுக்கும் காங்கிரஸில் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கும் ராகுல் தலைமையால், பிரதமர் மோடியைத் தோற்கடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்திருப்பதில் நியாயம் இருக்கிறது.மக்களுக்கே இன்னும் அந்த நம்பிக்கை பிறக்காமல் இருப்பதும் புரிந்து கொள்ள முடிகிறது. 

ஆகவே, மத அரசியல் பிரசாரத்தைக் கைவிட்டு, பாரதீய ஜனதா கட்சியின் நான்காண்டு கால வேதனைகளை முன் வைத்து, மக்களிடம் செல்வதுதான் புத்திசாலித்தனமான வியூகமாக இருக்க முடியும்.  

நரேந்திர மோடி பிரதமராக ஆட்சிப் பொறுப்பேற்று, நான்கு வருடங்கள் உருண்டோடி விட்டன. எந்த மத்திய அமைச்சர் மீதும், பா.ஜ.க அரசாங்கம் மீதும், ஆணித்தரமான ஊழல்ப் புகாரை முன்வைத்து, காங்கிரஸ் கட்சி இதுவரை பிரசாரம் செய்ய முடியவில்லை. 

ஊழல் புகார் எதுவும் கிடைக்கவில்லையா அல்லது பல்வேறு ஊழல் புகாரில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்கள் சிக்கியிருப்பதால் பா.ஜ.க மீது அப்படியொரு குற்றச்சாட்டை முன் வைத்து, நாடு தழுவிய பிரசாரத்தை மேற் கொள்ளவில்லையா என்பது புரியவில்லை. 

இன்றைக்கு, ஊழல் புகார்களை தேடிக் கண்டிபிடிக்க முடியாமல் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால்தான், கர்நாடகாவில் கிடைத்த ஓரளவு வெற்றியோ, சமீபத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் கிடைத்த வெற்றியோ ராகுல் தலைமைக்கு எவ்வித வலுவையும் கொடுக்கவில்லை.அதற்குப் பதிலாகக் காங்கிரஸின் பாரம்பரிய வாக்குகளுக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது.  ராகுல் தலைமையின் கீழ், காங்கிரஸ் கட்சி ஒரு தீர்க்கமான முடிவை உரிய காலத்தில் எடுக்க முடியாமல் துவண்டு கிடக்கிறது. 

மேகாலாயா தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன், ஆட்சி அமைக்க உரிமை கோருவதில் முடிவு எடுக்க ஏற்பட்ட தாமதம், அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமையாமல் போனது. 

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் ஆட்சியை அமைத்து விட்டு, அந்த ஆட்சியின் முழு அமைச்சரவையை முடிவு செய்ய முடியாமல் பதினைந்து நாட்களுக்கும் மேல் தவிப்பது, காங்கிரஸ் கட்சி கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்க வேண்டிய, நம்பகத்தன்மையை சேதாரப்படுத்தியிருக்கிறது. 

காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்தால், இப்படித்தான் ‘பெரிய அண்ணன்’ போக்கில் நடந்து கொள்ளும் என்பதையே இப்போது ராகுலின் தலைமை கர்நாடகாவில் வெளிப்படுத்தியிருக்கிறது. 

இவையெல்லாம், 2019 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி அமைவதற்குத் தடையாக இருக்க வாய்ப்புண்டு. மாநிலக் கட்சிகள் காங்கிரஸின் மீதுள்ள விருப்பத்தின் அடிப்படையில், கூட்டணிக்குத் தயாராகவில்லை. 
பா.ஜ.கவின் மீதுள்ள கோபத்தில், கூட்டணி சேர முன் வருகின்றன. ஆனால், கர்நாடகா குழப்பம் போல், காங்கிரஸ் செய்து கொண்டிருந்தால், மாநிலக் கட்சிகள் காங்கிரஸை நம்புவதற்கு, ஒரு முறைக்குக்கு இருமுறை யோசிக்கலாம். 

அது, ராகுல் வழி நடத்தும் காங்கிரஸின் எதிர்கால வெற்றிக்குக் கை கொடுக்காது என்பதை ஏனோ ராகுலும் உணரவில்லை. ராகுல் பக்கம் உள்ள காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களும் உணர்த்தவில்லை. ஆகவே, காங்கிரஸ் என்ற தத்தளிக்கும் கப்பல்க் கரை சேர்க்க, மாலுமியின் அணுகுமுறையில் மட்டுமல்ல, வியூகத்திலும் மாற்ற வேண்டும்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X