2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தத்தளிக்கும் பிள்ளையை தத்தெடுக்க தயாராவோம்

Editorial   / 2017 ஓகஸ்ட் 29 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பா. சிவரஞ்சன்

“பணி செய் அதற்கு பெயர் தவம்.  
தன்னலமற்று மக்களுக்கு உழைக்க வேண்டும்.  
மக்களுக்கு உழைப்பதை தாழ்வாக எண்ண வேண்டாம்.  
அது தெய்வத்துக்குச் செய்யும் தொண்டு போன்றது”  

                                                    - சுவாமி விவேகானந்தர்  

குழந்தைகளை கடவுளின் பிள்ளைகள் என அழைக்கின்றார்கள். குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பார்கள். ஆனால், அப்பேற்பட்ட பல குழந்தைகளும் சிறுவர்களும் தாயகத்தில் தற்போதும் அடுத்த வேளை உணவுக்கே தத்தளிக்கின்றார்கள்.   

நாளாந்த பத்திரிகைச் செய்திகளில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான செய்திகள் இல்லாத நாட்களே இல்லை எனக் கூறலாம். வடக்கு, கிழக்கில் நடைபெற்ற கொடிய போர் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக, கணிசமான சிறுவர்கள் பெற்றோரை இழந்து வாழ்கின்றனர்.   

இவ்வாறாகப் பெற்றோரைப் பிரிந்த அல்லது இழந்த கணிசமான சிறுவர்கள் தெருக்களில் துணையின்றி அலைந்து திரிகிறார்கள்.  இவர்களைச் சிறப்பு தேவை உடையவர்களாக இனம் கண்டு, ஆற்றுப்படுத்த வேண்டும்; தேற்ற வேண்டும். தவறின் எதிர்காலங்களில் மிக மோசமான உளப்பாதிப்புக்கு உள்ளாவர்.  

சில பெற்றோர்கள் மாற்று வலுவுள்ளோர்களாக உள்ளனர். சில பிள்ளைகளது அம்மா போரில் மடிந்து போக, அப்பா வேறு பெண்ணை மறுமணம் புரிந்து விட்டார். இவ்வாறு, பல்வேறு காரணங்களால் சிறுவர்களின் எதிர்காலம் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது.   

கொடிய போரில் அப்பா, அம்மா என இருவரையும் பறிகொடுத்த பல சிறுவர்கள், தாத்தா, பாட்டியின் பாதுகாப்பில் அரவணைப்பில் வாழ வேண்டிய சூழலில் உள்ளனர்.  

 முதியோரான தாத்தாவும் பாட்டியும் தங்கள் பேரப் பிள்ளைகளை வளர்க்க நாளாந்தம் பல சவால்களை எதிர் நோக்குகின்றனர். சீரான கண்காணிப்புக் குறைகின்றது; இதனால் சிறுவர்கள் வாழ்வில் பிழையான பக்கங்களுக்கு செல்கின்றனர். மேலும், பலர் போரால் தங்கள் அவயவங்களை இழந்து அல்லல்படுகின்றனர். தேசத்தில் நடந்த போரால் தேகத்தில் குண்டு சிதறல்களுடன் பெரும் சிலுவை சுமக்கின்றனர்.  

பொதுவாக ஆயுத மோதல் நடவடிக்கைகளின் போது, அனைவரும் பாதிக்கப்படுவார்கள். ஆனாலும், பெரிதும் அதன் வலியை சுமப்பவர்கள் சிறுவர்கள், பெண்கள் மற்றும் முதியோர்கள் எனலாம்.   

உடல் காயங்களும் உளம் சார்ந்த காயங்களும் ஒன்று சேர்ந்து, இவர்களை வாழ்வில் பொய்யான திசைக்கு வழி நடாத்தும்; வாழ்வை இருள் மயமாக்கும்; சூனியமாக்கும்; கேள்விக் குறியாக்கும்.   

ஒவ்வொரு சிறுவனும் தனது அடிப்படைத் தேவைகளைப் பெற, உரிமை உள்ளவன் எனவும் நாம் அவற்றை ஒவ்வொரு பிள்ளைக்கும் வழங்குவதில் முனைப்பாக இருக்க வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் சிறுவர் உரிமைச் சாசனத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.  

ஆனால், இலங்கையின் வடக்கு, கிழக்கில் பல ஆண்டுகளாக நடைபெற்ற ஆயுதப் போராட்டம், இவர்களின் இனிதான வாழ்வைக் கசப்பு ஆக்கியது எனலாம். ஆயுதப் போராட்டம் முடிவுற்று எட்டு வருடமாகியும், இவர்களது வலி சுமந்த வாழ்வு, சீரான வழி இன்றி தொடர்கின்றது.   

போர் ஓய்ந்தாலும் போரின் தாக்கம் இன்னமும் ஓயவில்லை. ஆகவே, இந்நிலையில் பெற்றோர்களும் பிள்ளைகளும் உளநெருக்கீடுகள், மனவடு எனத் தமக்கான நிச்சயமற்ற சூழலை, குழப்பகரமான நிலையில் எதிர்நோக்க வேண்டி உள்ளது.   

உதாரணமாக, கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் மட்டும் தாய், தந்தை எனப் பெற்றோர்கள் இருவரையும் இழந்து 31 சிறுவர்கள் உள்ளனர். அத்துடன், தந்தையை இழந்து 325 சிறுவர்களும் தந்தையை பிரிந்து வாழும் சிறுவர்கள் என 13 சிறுவர்கள் வாழ்கின்றனர். அதாவது 338 சிறுவர்கள் பெண் தலைமைத்துவ குடும்பங்களை சார்ந்தவர்களாக உள்ளனர். அத்துடன் 65 சிறுவர்கள் மாற்றுவலு உள்ளவர்களாகக் காணப்படுகின்றனர்.  

தாயகத்தில் பல பொது அமைப்புகள் சிறுவர்களது வாழ்வை வளப்படுத்தும் மகத்தான பணியை ஆற்றி வருகின்றன. மேலும் சில தனி நபர்கள் கூடத் தங்களது இயலுமைக்கு ஏற்ப பல்வேறு உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். மேலும், சிறுவர்களது கல்வி, போசாக்கு மற்றும் சுகாதாரம், வாழ்வாதாரம் எனப் பல்வேறு கருத்திட்டங்களுக்குமென பெருவாரியான நிதி வருடாந்தம் ஒதுக்கப்படுகின்றது. 

அரசாங்கம் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினர் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், சிறுவர்களது ஒட்டுமொத்த அபிவிருத்தி என்னமோ இன்னமும் கேள்விக் குறியாகவே உள்ளது.   

யுத்தம், குடும்பங்களில் உள்ள பல உழைப்பாளிகளையும் கொய்து விட்டது. குடும்ப தலைவனை இழந்த தலைவி (தாய்) குடும்பத்தை நிர்வகிக்க வேண்டிய நிலைக்குள் தள்ளப்படுகின்றாள். நாளின் பெரும் பகுதியைப் பொருளாதாரம் தேட செலவழிக்கின்றாள். ஆதலால் சேயுடன் ஒரு நாளில் செலவழிக்கும் நேரம் குறைகின்றது.   

மேலும் குடும்பங்களில் அன்றாட தேவையைப் பூர்த்தி செய்ய முடியாதவாறு வறுமை மையம் கொள்ளத் தொடங்குகின்றது. ஆகவே, ஐீவனோபாயத்துக்காகப் பணம் தேவைப்பட, உழைக்க வேண்டிய தேவை சிறார்களுக்கும் எழுகின்றது. ஆதலால், இங்கு கல்வி மற்றும் கற்றல் செயற்பாடுகள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. ஆகவே பாடசாலைக்கு செல்ல வேண்டிய சிறுவனுக்கு தொழில் வாய்ப்புகளைத் தேடிச் செல்ல வேண்டிய அவல நிலை உருவாகின்றது.   

அங்கு சிறுவர்களது உழைப்புகள் முதலாளிகளால் உறிஞ்சப்படுகின்றன. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை. மேலும் பல்வேறு விதமான சட்ட விரோத செயற்பாடுகளுக்கும் சிறுவர்கள் பயன்படுத்தப்படுகின்றார்கள். இவ்வாறாக சூழ்நிலைகளே, பின் நாட்களில் சிறுவர்கள், போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர்களாகவும் வாள் வெட்டுக் ஆசாமிகளாகவும் வர வழி சமைக்கின்றன. அத்துடன் இவ்வாறான வேலைத்தளங்களில், சிறுவர் துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் இம்சைகளுக்ககும் உள்ளாகின்றனர்.   

மேலும், வெளிச்சத்துக்கு வராத பல குற்றச் செயல்கள், சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல், அதிகளவிலான சிறுவர் துஷ்பிரயோகங்கள் தினசரி அரங்கேறி வருகின்றன. ஆகவே, இவ்வாறான குடும்பங்களின் பிரச்சினைகள் ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்தப் பண்பியல் கோலத்தையே ஆட்டம் காண செய்கின்றன.  கலை மற்றும் ஆசாரம் என்பன சேர்ந்தே கலாசாரம் ஆகின்றது. இவ்வாறான பிறழ்வுகள் தமிழர் கலாசாரத்தையே கலங்கடிக்க வழி கோலிவிடுகின்றன.  

இந்நிலையில் சிறுவர்கள் தொடர்பாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுமுடிவுகள் ஊடகங்களில் வெளி வந்துள்ளன. அவை பல அதிர்ச்சி தரும் தகவல்களையே அதிகம் கொண்டுள்ளன. அதாவது, நாட்டில் 51,249 சிறுவர்கள் ஒரு நாளேனும் பாடசாலைக்கு செல்லாத சிறுவர்களாக உள்ளனர். மேலும் பாடசாலைக்கு செல்ல வேண்டிய 5-17 வயதைச் சேர்ந்தவர்களில் 452 ,661 சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சிறுவர்களது பங்களிப்பும் இந்தப்புள்ளி விவர அதிகரிப்புக்குப் பெரும் பங்காற்றி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.   

ஆகவே, ஒருவித நெருக்கடியான சூழலில் வளரும் பிள்ளைகளின் அடிப்படைத் தேவைகள் பூரணபடுத்தப்படாத பட்சத்தில், அது அவர்களின் விருத்தியில் தாமதத்தை அல்லது அசாதாரண நிலையை ஏற்படுத்தலாம்.  

ஆகவே, நம் நாட்டின் வருங்கால சந்ததியான அவர்களைச் சிறப்பான உன்னதமான வழிக்கு நகர்த்த வேண்டிய பெரும் சமூகப் பொறுப்பு தாயகத்தில் வாழ்கின்ற மற்றும் புலம் பெயர்ந்து வாழும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் உண்டு.   

ஆகவே, இதற்கு என்ன பரிகாரம் என யோசிப்பின் தாயகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தாயகத்தில் இவ்வாறாக தத்தளிக்கும் ஒவ்வொரு பிள்ளையை தத்தெடுக்க வேண்டும். பெற்றால் மட்டுமா பிள்ளை? தத்தெடுத்தாலும் பிள்ளை தான். அதற்காக சட்ட ரீதியான தத்தெடுத்தல் அல்ல.  
 
ஆபிரிக்க நாடான நைஐீரியாவை சேர்ந்த கைவிடப்பட்ட குழந்தையை டென்மார்க்கை சேர்ந்த தன்னார்வ தொண்டரான அன்ஐுரிங்கிரென் அம்மையார் எவ்வாறு தத்தெடுத்தாரோ, அதே மாதிரியாக எம் உறவுகள் தத்தெடுக்க வேண்டும். கைவிடப்பட்ட நிலையில் இருந்த அந்த பிள்ளைக்கு பெயரிட்டார். அன்ஐுரிங்கிரென் அவர்களால் சமூக வலைத் தளங்களில் பதிவிடப்பட்ட புகைப்படம் அந்த குழந்தையின் வாழ்வை உச்சிக்கு கொண்டு சென்றது.   

கருக வேண்டிய அவனின் வாழ்வில் புதிய நம்பிக்கையைக் கருக் கொள்ள செய்தது. அக்குழந்தையால், அவ்வாறான நிலையில் உள்ள குழந்தைகளின் வாழ்விலும் புது வெளிச்சம் பிறந்தது. இனத்தாலும் மதத்தாலும் மொழியாலும் தேசத்தாலும் என அனைத்தாலும் வேறுபட்ட இக் குழந்தையை மனிதாபிமானம் மட்டுமே இணைத்து வைத்தது; வளப்படுத்தியது; வாழ்வு கொடுத்தது. 

 அவ்வாறாக வடக்கு,கிழக்கில் நடைபெற்ற கொடும் போரின் வலைக்குள் அகப்பட்டு, திசை மாறி, அவல வாழ்வுக்குள் நம் சிறார்கள் செல்ல, அனுமதிக்கக்கூடாது.   

உதாரணமாக, யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த எம்மவர், போரால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் அனைத்துச் செலவுகளையும் பொறுப்பேற்று நாட்டின் சிறந்த பிரஜை என்றவாறாக உயர்த்த வேண்டும்.

இதன் மூலம் நிர்வாக ரீதியாக வடக்கு, கிழக்கு என பிரித்தாலும் நாம் பாசத்தாலும் நேசத்தாலும் இரண்டறக் கலந்து இருக்கலாம்; உள்ளத்தால் இணைந்து கொள்ளலாம்.   
கரவெட்டியைச் சேர்ந்த அவரின் பிள்ளைகள் களுவாஞ்சிகுடியை சேர்ந்த பிள்ளையுடன் நட்பு பாராட்ட வேண்டும்.   

உங்கள் ஆதரவில் செதுக்கப்படும் பிள்ளை, நாளை பல தடைகளையும் எட்டித் தாண்டும்; முட்டி உடைக்கும்; வெற்றிப் படிகளின் ஊடே சிகரத்தை எட்டும். அந்த வெற்றியின் நடுவே உங்கள் அர்ப்பணிப்பு தெரியும்.   

இவர்களே நாளைய தலைவர்கள். வீழ்ந்து கிடக்கும் நம் தேசத்தை நாளை தூக்கி நிறுத்தப் போகின்றவர்கள். ஆகவே அவர்களை விழ விடக் கூடாது. கரம் கொடுப்போம். காப்பாற்றுவோம்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X