2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

தனியே நிற்கும் விக்னேஸ்வரன்

புருஜோத்தமன் தங்கமயில்   / 2019 ஜனவரி 23 , மு.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர்கள் விவரத்தை கட்சியின் ஸ்தாபகரும், செயலாளர் நாயகமுமான சி.வி. விக்னேஸ்வரன், கடந்த வாரம் வெளியிட்டிருக்கின்றார்.   

ஓய்வுநிலைப் பேராசிரியர், பொறியாளர், முன்னாள் அதிபர் உள்ளிட்ட கல்விச் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களின் பிரதிநிதிகளையும் பெரும்பாலும் உள்ளடக்கியதாக, மத்திய குழு அமைந்திருக்கின்றது.   

மொத்தமுள்ள 22 பதவிகளில் இரண்டு மாத்திரமே பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அதுவும் ‘மகளிர் அணி’ என்கிற விடயத்துக்காகவே அவர்கள் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். 

விக்னேஸ்வரனை முன்னிறுத்தி, புதிய கட்சியொன்றை ஆரம்பிக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டின் போக்கில், தொடர்ச்சியாகச் செயற்பட்டு வந்த தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்களோ, அரசியல் எழுத்தாளர்களோ மத்திய குழுவில் தலைகாட்டுவதிலிருந்து தவிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.   

விக்னேஸ்வரனின் கட்சியில் முக்கிய பதவிகளை வகிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டவர்களில் க. அருந்தவபாலனும் பொ. ஐங்கரநேசனும் குறிப்பிடத்தக்கவர்கள். ஆனால், கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை அருந்தவபாலன் ஏற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில், ஐங்கரநேசனின் பெயரை எங்கும் காணவில்லை. அவரின் விடுபடுதல் எது சார்ந்தது என்கிற கேள்வியையும் எழுப்பியிருக்கின்றது?  

கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணிக்கான தலைமைத்துவத்தை விக்னேஸ்வரன் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை, தமிழரசுக் கட்சியின் அதிருப்திக்குழு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ் மக்கள் பேரவை உள்ளிட்ட பல்வேறு தரப்புகளாலும் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வந்திருக்கின்றது.   

2015 பொதுத் தேர்தல் காலத்தில் கூட்டமைப்புக்கு எதிரான நிலைப்பாட்டை விக்னேஸ்வரன் வெளிப்படையாக எடுத்த காலத்திலிருந்து, அவருக்கான ஆதரவைத் திரட்டுவதிலும், அவரை ஜனவசியமிக்க ஆளுமையாகச் சித்திரிப்பதிலும் ஊடகங்களின் பங்கும், அரசியல் எழுத்தாளர்களின் பங்கும் குறிப்பிட்டளவில் காணப்பட்டன.   

ஆனால், அவரைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்ட பிம்பம் என்பது, ஒரு கட்டத்துக்கு மேல் அதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தி வெடித்துச் சிதறியது. அவரைத் தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்கு தகுதியற்ற நபர் என்கிற விடயங்களை, அவரை முன்னிறுத்திய தரப்புகளைக் கொண்டே காலம் சொல்லவும் வைத்தது.   

குறிப்பாக, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலத்தில் விக்னேஸ்வரன் தன்னை முன்னிறுத்திய தரப்புகளை ஒன்றிணைக்காமல், விலகி நின்றமை அவரை நம்பியவர்களை நம்பிக்கையிழக்கச் செய்தது. அதன் தொடர்ச்சிதான், அவரால் தோற்றுவிக்கப்பட்ட கட்சியில் நேரடியாகப் பங்கெடுப்பதிலிருந்து பல முக்கியஸ்தர்களையும் தவிர்க்க வைத்திருக்கின்றது.  

பொதுத்தேர்தல் காலத்தில், கூட்டமைப்பின் நிலைப்பாடுகளுக்கு எதிராகச் செயற்பட்டார் என்கிற காரணத்தைக் காட்டி, விக்னேஸ்வரனைப் பதவி நீக்க வேண்டும் என்று, எம்.ஏ.சுமந்திரன் தரப்பு அப்போது கொடுத்த அழுத்தத்துக்கு இரா.சம்பந்தன் இணங்கியிருந்தால், விக்னேஸ்வரன் தமிழ்த் தேசிய அரசியல் அரங்கிலிருந்து, அப்போதே ஒதுங்கியிருப்பார்.   

குறிப்பாக, தேர்தல் காலத்தில் அவர் விடுத்த அறைகூவலைப் புறந்தள்ளி, கூட்டமைப்பை, மக்கள் ஏகோபித்த அளவில் வெற்றிபெற வைத்திருந்தார்கள். அந்தத் தருணத்தில் அவர் நம்பிக்கை இழந்திருந்தார். அடுத்த கட்டம் பற்றிச் சிந்திப்பதற்கான வாய்ப்புகளும் உருவாகி இருக்கவில்லை.   

ஆனால், அரசியல் நாகரிகம், தனிப்பட்ட நட்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, விக்னேஸ்வரனுக்கு எதிரான அழுத்தத்தைச் சம்பந்தன் புறந்தள்ளி, அவருக்கு மீண்டும் வாய்ப்பளித்தார். ஆனால், அதன் பின்னரான காலம் ‘சுமந்திரன் எதிர் விக்னேஸ்வரன்’ என்கிற கட்டத்தை வெளிப்படையாக எட்டியது.அதைக் கூட்டமைப்புக்கு எதிரான தரப்புகள் வெற்றிகரமாகக் கையாள நினைத்தன. அதுதான், விக்னேஸ்வரனை முன்னிறுத்திய நம்பிக்கைகளை தோற்றுவிக்கக் காரணமானது.  

அத்தோடு, விக்னேஸ்வரனுக்கு எதிராகத் தமிழரசுக் கட்சியினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பது, மக்களைக் குறிப்பிட்டளவில் கோபத்துக்கு உள்ளாக்கியது. அது, அவருக்காக மக்களை வீதிக்கும் இறக்கியது. அந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொண்ட பேரவைக்காரர்களும், கஜேந்திரகுமாரும், சுரேஷும் விக்னேஸ்வரனைத் தங்களை நோக்கி வளைத்தெடுப்பதில் வெற்றிபெற்றார்கள். அவரிடம் பெரிய நம்பிக்கையையும் விதைத்தார்கள். அவர் குறித்துத் தாங்களும் நம்பிக்கையை பெரியளவில் வளர்த்துக்கொண்டார்கள்.   

அந்தத் தருணத்தில், விக்னேஸ்வரன் புதிய கட்சியொன்றை ஆரம்பித்திருந்தாலோ, கூட்டணியொன்றுக்கு தலைமையேற்றிருந்தாலோ, அது இன்றைக்கு குறிப்பிட்டளவான தாக்கம் செலுத்தும் தரப்பாக யாழ்ப்பாணத்துக்குள் எழுந்திருக்கும். அதன் அதிர்வுகளை வடக்கிலும் பதிவு செய்திருக்க முடியும்.   

குறிப்பாக, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூட்டமைப்பின் அதிருப்தி வாக்குகளை மாத்திரமல்ல, மக்களிடம் நம்பிக்கை வாக்குகளையும் குறிப்பிட்டளவில் பெற்றிருக்க முடியும். 

சம்பந்தனும் சுமந்திரனும், விக்னேஸ்வரன் தலைமையிலான மாற்று அணி தொடர்பில் பெரும் தலையிடியையும் சந்தித்திருப்பார்கள். ஏக பிரதிநிதிகள் என்கிற தோரணையோடு முடிவெடுக்கும் அவர்களை, விக்னேஸ்வரனின் அணி அசைத்துப் பார்த்திருக்கும்.  

ஆனால், முதலமைச்சர் பதவிக் காலத்தை முழுவதுமாக கழித்த பின்னரே, அரசியல் தீர்மானமொன்றுக்கு வருவேன் என்று விக்னேஸ்வரன் எடுத்த முடிவும், அவரை நம்பியவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய அவர் நடக்க முரண்பட்ட புள்ளிகளும் அவரை, குறிப்பிட்டளவில் நீக்கம் செய்திருக்கின்றது.   

விக்னேஸ்வரனின் அரசியல் எழுச்சியைத் தடுத்து நிறுத்தியதில் சம்பந்தனின் சாணக்கியமும் இருக்கின்றது. அதாவது, தனிப்பட்ட நட்பைப் பயன்படுத்தி, விக்னேஸ்வரனை அரசியல் அரங்குக்கு அழைத்து வந்த சம்பந்தன், அந்த நட்பைப் பயன்படுத்தியே விக்னேஸ்வரன் தீர்க்கமான முடிவுகளை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சந்தர்ப்பங்களை ஒத்திப்போடவும் வைத்தார்.

கிடைக்கும் சந்தர்ப்பங்களைத் தவறவிடும் ஒவ்வொரு தருணமும், பெரும் தோல்விகளை அரசியல் பரிசாக அளிக்கும் என்பார்கள். விக்னேஸ்வரன் விடயத்திலும் அதுவே நடந்தது. அத்தோடு, விக்னேஸ்வரன் புதிய கட்சிக்கான அறிவிப்பை வெளியிட்டு இரண்டு நாள்களில், தென் இலங்கையில் அரங்கேறிய ‘ஒக்டோபர் 26’, சதிப்புரட்சி என்பது அரசியல் சூழ்நிலைகளை வடக்கிலும் தெற்கிலும் பாரியளவில் மாற்றிவிட்டது.   

நல்லாட்சி அரசாங்கத்தோடு மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இணக்கமாகச் செயற்பட்ட போதிலும், அரசியல் தீர்வு முயற்சிகளோ, அபிவிருத்தி நடவடிக்கைகளோ அடுத்த கட்டத்தை அடைந்திருக்கவில்லை என்பது சார்ந்து தமிழ் மக்களிடம் கூட்டமைப்பு பெரும் அதிருப்தியைச் சந்தித்திருந்தது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களிலும் இரண்டரை இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை இழக்க அது காரணமானது.   

அப்படியான சூழலில், மாகாண சபைத் தேர்தல்கள், பொதுத் தேர்தலிலும் அது, வாக்களிப்பு வீதத்தைக் குறைத்து, வெற்றி வீதத்தை குறைக்கும் என்று நினைத்தார்கள்.   

ஆனால், சதிப்புரட்சி காலத்தில் கூட்டமைப்பினரின் நடவடிக்கையும் வெளிப்படுத்திய ஆளுமையும் அவர்களை நோக்கிய அதிருப்தியின் அளவைக் குறைத்திருக்கின்றது. அது, மீண்டும் கூட்டமைப்புக்காரர்களிடம் புத்துணர்வை ஏற்படுத்தி இருக்கின்றது.  

விக்னேஸ்வரனின் புதிய கட்சி பற்றிய நம்பிக்கைகளை ஏற்படுத்துவது சார்ந்து பேரவைக்காரர்களும், அரசியல் எழுத்தாளர்களும் தொடர்ச்சியாக ஏற்படுத்தி வந்த அதிர்வுகளை, சதிப்புரட்சி ஒட்டுமொத்தமாக அகற்றம் செய்தது.   

சதிப்புரட்சியின் தோல்விக்குப் பின்னர், மீண்டும் சம்பந்தனும் சுமந்திரனும் அரங்குக்கு வந்தார்கள். அவர்களை மய்யப்படுத்தியே அரசியல் அரங்கு சூழல ஆரம்பித்தது. திட்டுவதற்கும் பாராட்டுவதற்கும் கேள்வி எழுப்புவதற்கும் ஆதரவு தெரிவிப்பதற்குமாக அவர்கள் இருவரும் தமிழ்த் தேசிய அரசியல் அரங்குக்குத் தேவைப்பட்டார்கள்.   

விக்னேஸ்வரனும், பேரவையும் கிட்டத்தட்ட மறக்கப்பட்ட நிலைக்கு உள்ளானார்கள். அரசியல் கட்டுரைகளில் விக்னேஸ்வரனின் அணியைப் பலப்படுத்த வேண்டும் என்கிற சுரம் கீழிறங்க ஆரம்பித்தது. கடந்த இரண்டு வாரங்களாக, அவை கிட்டத்தட்ட காணாமலேயே போயிருந்தன.  

இந்த நிலையில்தான், கட்சியின் மத்திய குழுவை விக்னேஸ்வரன் அறிவித்திருக்கின்றார்; அந்தக் குழுவின் எதிர்பார்க்கப்பட்ட பெயர்களும் விடுபட்டுப் போயிருக்கின்றன. அரசியலில் தனித்தன்மையும் தைரியமும் முக்கியமானது. எடுத்துக் கொண்ட விடயத்துக்காக இறுதிவரை போராட வேண்டும்; சந்தர்ப்பங்களைக் கையாளத் தெரிய வேண்டும்.

குறிப்பாக, விடுதலைக்காகப் போராடும் இனமாக, தோல்வியின் விளிப்பிலிருந்தும் வெற்றிக்காக இயங்க வேண்டும். அந்த மன உறுதி இல்லாத யாராக இருந்தாலும், அரசியலில் நிற்பதற்குத் தகுதியற்றவர்களே.   

விக்னேஸ்வரனை முன்னிறுத்தி அரசியல் செய்ய நினைத்த பலரும் தற்போது ஒதுங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது, பயந்தாங்கொள்ளிகளின் வாய்ஜாலமே நினைவுக்கு வருகின்றது. அவ்வாறானவர்களை நம்பியதும் கூட, விக்னேஸ்வரனைத் தற்போது தனிமையில் நிறுத்தியிருக்கின்றது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X