2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தமிழர் மத்தியில் உணரப்பட்டுவரும் பலமான சிவில் அமைப்பின் தேவை

Editorial   / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்  

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைப்பாடுகளை நாடி பிடித்து உணர முடியாத வகையில் இருப்பதான தோற்றப்பாட்டில், பல தமிழ் அரசியல் தலைமைகள் இருப்பதை உணர முடிகின்றது.

தாம் எதிர்பார்த்த அரசியல் தலைமைத்துவத்தின் தோல்வி, அடுத்து வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி அமைக்கப்போகும் கட்சி என்பவற்றை ஆராய்கின்ற மன நிலையையும் கடந்து, தமது இருப்பு தொடர்பான தேடலுக்கே, தமிழ் அரசியல் தலைமைகள் தற்போது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.

எப்போதுமில்லாத அளவுக்கான மாறுபட்ட அரசியல் சூழல் ஏற்பட்டுள்ளதாக உணரத் தொடங்கியுள்ள தமிழ் அரசியல் தலைமைகள், புதிய கூட்டுகளை உருவாக்கவும் அவற்றினூடாக வரப்போகும் தேர்தல்களைச் சந்திக்கவும் விரும்புகின்றன.

எனினும், மற்றொரு சிறுபான்மைத் தேசிய இனமான முஸ்லிம்கள், அடுத்து வரப்போகும் தேர்தல்களில், தமது இருப்பு, ஆசனங்கள் தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில், இந்த அரசாங்கம், தமக்கு விரோதமான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் தாம் ஓரங்கட்டப்படுவதாகவும் அவர்கள் உணர்ந்துவரும் நிலையில், அடுத்தத் தேர்தல்களில் தமது சமூகம் ஓரணியில் திரளும் அல்லது தமது சமூகம் சார்ந்தவர்களுக்கு மாற்றமின்றி வாக்களித்து, அதிகளவான ஆசனங்களைப் பெற வழிசமைக்கும் என்ற எண்ணப்பாடு அவர்களிடம் உண்டு.

இவ்வாறான நிலைப்பாடு, தமிழ் அரசியல் தலைமைகளிடம் இல்லை. அதற்குப் பல காரணங்கள் இருப்பதை, அவர்களே உணர்ந்திருப்பர். கடந்த ஆட்சிக் காலத்தில், தமிழர் தரப்பில் பிரதான கட்சியாகக் காணப்படுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடந்துகொண்ட விதம், தமது மக்கள் மீது அவர்கள் எடுத்துக்கொண்ட அக்கறையும் ஐக்கிய தேசியக் கட்சியை அரியாசனத்தில் அமர்த்திப் பார்க்க விரும்பியதன் வெளிப்பாடுகளும், தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வெறுப்புணர்வையும் அரசியல்வாதிகள் மீதான கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வடக்கைப் பொறுத்தவரையில், டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட அமைச்சுப் பதவி, சிறு சலசலப்பை ஏற்படுத்தியிருந்தாலும் கூட, தேசியக் கட்சிகள் மீதான தமிழ் மக்களின் ஆதரவுத்தளம் அதிகரிப்பதானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தேசியத்தின்பால் செயற்படுவதாகத் தம்மை அறிமுகப்படுத்தும் ஏனைய கட்சிகளுக்கும், பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

கம்பெரலிய திட்டத்தைத் தவிர்ந்த எந்தவோர் அபிவிருத்தியையும் செய்யாத சுட்டமைப்பின் செயற்பாடுகளால், அக்கட்சியோடு இணைந்து பயணிப்பதற்கு, ஏனைய கட்சிகள் அச்சம் கொண்டுள்ளன. இதன் வெளிப்பாடாகவே, புதிய கூட்டு என்ற தளத்தை நோக்கிப் பயணித்த போதிலும், அவையும் ஒன்றுபட்டுச் செல்வதற்கான களம் ஏற்படுமா என்பது சந்தேகமே.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் ஒற்றுமைக்கான அறைகூவலானது, இதுவரை காலமும் அற்றுப் போயிருந்ததற்கு காரணம் என்ன? இறுமாப்போடும் வரட்டுக் கௌரவத்தோடும், கூட்டமைப்பை வழிநடத்தியதாலேயே, அதனுள் இருந்த கட்சிகள் வெளியேறியதான கருத்துகள் உள்ள நிலையில், சுமந்திரனின் தோல்விப் பயத்தால் வரும் ஒற்றுமைக் கோசத்தை நம்பி, ஏனைய கட்சிகள் ஒன்றுதிரள வாய்ப்பில்லை.

குறிப்பாக, கூட்டமைப்பினுள் இருந்த டெலோவும், இன்று இரு வேறு பிரிவுகளாக, சிறிகாந்தா தலைமையில் பிளவைக் கண்டுள்ள நிலையில், கூட்டமைப்பின் பலம் மேலும் வலுவிழந்து செல்கின்றது. இந்நிலையில், நாடாளுமன்றத்துக்குள் கூட்டமைப்புத் தமது ஆசனத்தின் பெருக்கத்தை எவ்வாறு ஏற்படுத்தலாம் என்ற  நிலைப்பாட்டையே முன்நகர்த்திச் செல்கின்றது.

இந்நிலையில், ஏனைய தமிழ்க் கட்சிகளின் கூட்டு என்பது, விக்னேஸ்வரன் தலைமையில் உருவாகும் பட்சத்தில், அதன் சாத்தியத்தன்மைகள் தொடர்பில் ஆராயத் தலைப்பட வேண்டும். செயற்பாட்டு அரசியலில், விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி இல்லை. அவர்கள், மக்களைத் தேடிச்செல்லும் அல்லது கீழ்மட்ட மக்களின் நிலையறிந்து செயற்படும் தன்மையில் இருந்து ஒதுங்கியிருக்கின்றனர். முன்னாள் முதலமைச்சர் என்ற அடையாளத்தை மட்டும் வைத்து, மேட்டுக்குடி அரசியல் செய்ய முற்படும் களத்தில், ஏனைய கட்சிகளின் கூட்டு சாத்தியமானதா என்ற கேள்வி நியாயமானதே?

வடக்கு மாகாண சபையில் இடம்பெற்றதான முறைக்கேடுகள், அவற்றோடு இணைந்த பல செயற்பாடுகள், விக்னேஸ்வரனின் ஆளுமைத் திறனைச் சந்தேகிக்க வைக்கின்றன. அதற்கு உதாரணமாக, வடமாகாண முன்னாள் அமைச்சராக இருந்த டெனிஸ்வரனின் வழக்கும் அதன் தீர்ப்பும், ஒரு சான்றாகியுள்ள நிலையில், தனிப்பட்ட தேவைக்காகவும் மற்றவர் கதை கேட்கும் நிலைப்பாடுடைய தலைவரின் கீழ் இயங்குவதானது, சாத்தியமற்ற விடயமாகியுள்ளது.

அதற்குமப்பால், இந்தத் தலைமையானது, வடக்கை  மாத்திரம் மய்யப்படுத்தியது என்பதையும் விட, யாழ்ப்பாணத்தை மாத்திரம் மய்யப்படுத்தியது என்பதே உண்மை. எனவே, யாழ்ப்பாணத்தை மய்யப்படுத்தி மாத்திரம் செயற்படும் அமைப்பை, வடக்கில் உள்ள ஏனைய மாவட்டங்களும் கிழக்கு மாகாணமும், எவ்வாறு ஏற்றுக்கொள்ளும் என்ற கேள்வியும் எழச்செய்கின்றது.

இவ்வாறான நிலையிலேயே, புதிய கூட்டுக்கு அத்திபாரமிடும் சுரேஷ் பிரேமச்சந்திரன், கிழக்கு மாகாண சபையில், தமிழ்த் தலைமைத்துவம் தேவை என்பதிலும் அது தொடர்பில், கட்சி மிக உறுதியாக உள்ளது எனவும்  தெரிவித்துள்ள நிலையில், தேர்தல் வருகின்றபோது, அதற்கேற்றவகையில் எமது வியூகங்கள் அமையும் என்றும், தமிழர்களது நலன்கள் பாதிக்கப்படக் கூடாது; தமிழர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில் இருந்து எமது முடிவுகள் எட்டப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறெனில், புதிய கூட்டானது, வட பகுதிக்கு மாத்திரமாகவும் கிழக்கு மாகாணத்தில் மாற்று வியூகத்தை அமைத்து, வேறு அணியாகத் தேர்தலில் போட்டியிடப் போகின்றனரா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. இதற்குமப்பால், சில வருடங்களுக்கு முன்பிலிருந்தே இடம்பெற்று வரும் இவ்வாறான புதிய கூட்டுக்கான  முயற்சிகளில் இருந்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நழுவிச்சென்றுள்ளது. இதன் உச்சக்கட்டமாக, விக்னேஸ்வரனுடன் தாம் சேரவேண்டுமானால், ஈ.பி.ஆர்.எல்.எப் இருக்கக் கூடாது என்ற கோரிக்கையையும் முன்வைத்து வெளியேறியிருந்தது. 

இச்சூழலில், தற்போது அமையப்போகும் புதிய கூட்டணிக்குள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நுழைவதற்கான வாப்புகள் இல்லாது போனால், அவர்கள் தனி வழியையே பின்பற்றப் போகிறார்கள். இது, தவிர்க்க முடியாத விடயமாக மாறிவிடும். 

விக்னேஸ்வரனைப் பொறுத்தவரையில், வன்னியை அடிப்படையாகக் கொண்டு, தனது செயற்பாட்டை முழுமையாகவே முன்னெடுக்காத நிலை உள்ளது. வவுனியாவில் அவர் தொடர்பான எதிர்மறையான கருத்துகள் பலமாகவுள்ளன. அதற்கு, பொருளாதார மத்திய நிலைய அமைவிடம் தொடர்பான இழுபறியும் அதற்கு முதலமைச்சராக விக்னேஸ்வரன் எடுத்த முடிவும், இன்றுவரை வவுனியாவுக்கு பெரும் பாதிப்பாகவே இருந்து வருகின்றது.

இந்நிலையில், செல்வாக்கு அரசியல் என்பது, சரிவை நோக்கியிருக்கும் நிலையில், மதவாத அரசியல் வெற்றியளிக்குமா என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது.

வன்னி தேர்தல் தொகுதியானது, ஏனைய மாவட்டங்களை விட மத மேலாதிக்கப் பொறிக்குள் சிக்குண்டுள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக, மன்னார் போன்ற பிரதேசங்கள் மிகவும் இறுக்கமாகவே கட்டுண்டுள்ளன. இதனூடாக, வன்னித் தேர்தல் தொகுதியில், பிரபலமான கிறிஸ்தவரொருவரை நிறுத்தி வெற்றிபெற வைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இம்முயற்சி, முதலில் விக்னேஸ்வரன் தலைமையிலான அணிக்கூடாட இடம்பெறவிருந்த போதிலும், தற்போது செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான டெலோ ஊடாக கூட்டமைப்புக்குள் களமிறக்கும் முயற்சியும் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, மத ரீதியான ஆளுகை என்பது, வன்னித் தேர்தல் தொகுதியில் பலமடைந்துள்ள நிலையில், புதிய கூட்டுகள் அதனூடாகத் தங்களது நகர்வுகளை முன்னகர்த்தலாம். எனினும், அது இந்துத்துவத்துடன் நெருங்கிய தொடர்புடைய விக்னேஸ்வரன் போன்றோரின் தலைமையில் சாத்தியமானதா என்ற விடயத்தையும் ஆராய வேண்டும்.

இச்சூழலில், தமிழ் மக்களின் மாற்றுத் தலைமை அல்லது புதிய கூட்டு என்பது, தமிழர்களுக்காக எதனைச் சாதித்து விடப்போகின்றது என்பதான கேள்விகள் நிறைந்துள்ள நிலையில், ஒன்றுபட்ட அணியாகத் தேர்தல் களத்தில் முகம்கொடுப்பதற்கான முயற்சியே காலத்தின் தேவையாகும். 

அவ்வாறான ஓரணி என்ற இணக்கப்பாட்டுக்குள் வரமுடியாத கட்சிகளைத் தவிர்த்து, தமிழ்த் தேசியத்தின்பால் செயற்பட்டு வரும் ஏனைய கட்சிகளின் இணைவாக, அது இருக்க வேண்டும். இவ்விணைவுக்குச் சாத்தியமான தலைமைத்துவம், மக்கள் நிலையறிந்து செயற்படும் ஆளுமையின் தேவையாக இருத்தல் அவசியம். இவ்வாறான ஒரு தேடல், தமிழ் அரசியல் தலைமைகளுக்கு மட்டுமன்றி தமிழ்ச் சிவில் அமைப்புகள் மத்தியிலும் இருத்தல் வேண்டும்.

எனினும், தமிழ் மக்கள் மத்தியில் பலமான சிவில் அமைப்புகள் இன்மையானது, அவர்களது அரசியல் பொருளாதார விடயங்களில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தி வரும் நிலையில், சிறந்த கட்டமைப்புடனான சிவில் அமைப்பின் தேவை தற்போது உணரப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் உருவாகிய தமிழ் மக்கள் பேரவையானது, தம்மைச் சிவில் சமூக அமைப்பாக அறிமுகப்படுத்திய போதிலும், பின்னரான காலத்தில் அரசியல் செயற்பாட்டாளர்களைத் தம்வசப்படுத்தி, அதனை நாசம் செய்திருந்தது.

எனவே, பிழையான முன்னுதாரணங்களில் இருந்து பெற்ற படிப்பினைகளைக் கொண்டு, ஆளுமையுள்ளதாகவும் வடக்கு, கிழக்கை உள்ளடக்கியதுமான பலமான தமிழ் சிவில் சமூக அமைப்பு உருவாக்கப்படவேண்டும் என்பதே, தற்போதைய தேவையாகவுள்ளது.

அந்த அமைப்பு, அரசியல் பேதங்களுக்கு அப்பாற்பட்டு, துளியளவேனும் அரசியல் சாயமின்றிச் செயற்படுமாக இருந்தால், தமிழர்களின் அரசியல் பொருளாதார இருப்பைப் பலப்படுத்திக்கொள்ள முடியும் என்பதே உண்மை.

இவ்வாறான சிவில் அமைப்பினூடாகப் பலமடையும் அரசியல் கட்டமைப்பே, எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம், ஆற்றலுள்ளவர்களால் நிரப்பப்படும் என்பதுடன், மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் தன்மை கொண்டதாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

தமிழ் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டால்

 ‘கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது’

வவுனியாவில் அண்மையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது, கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்களின் பிரச்சினைகள் சார்ந்த சில விடயங்களைக் கூறியிருந்தார். இதன்போது அவர் கூறியதாவது, 
“நான், சமுத்திரத்தில் தள்ளி விடப்பட்டுள்ளேன். எனினும், சமுத்திரத்தில் நான் நீந்துவதென்று முடிவெடுத்து இருந்தாலும், இரு பக்கமும் இரு கருங்கற்கள் கட்டப்பட்டுள்ளன.   

“அவற்றில் ஒன்று, தேசிய அமைச்சு என்ற கருங்கல்லாகும். மறுபக்கம், தமிழர்களின் பிரச்சினைகள் என்ற கருங்கல் காணப்படுகின்றது. ஆகவே, இந்த கருங்கற்களைக் கட்டிக்கொண்டே, நான் இந்தச் சமுத்திரத்தில் நீந்த முடிவெடுத்துள்ளேன். எனக்கு, கடந்த காலத்தில் சமுத்திரத்தில் நீந்திய அனுபவங்கள் நிறையவே இருக்கின்றன. மக்கள் நலனை முன்னிறுத்துவதால், என்னால் நீந்த முடியும் என நம்புகின்றேன். எனினும், மக்களுடைய பக்கபலம் அவசியமானது.   

“ஆட்சியாளர்களுடன் கதைப்பதில், எனக்குச் சில சங்கடங்கள் உள்ளன. ஏனென்றால், நான் வெல்லவில்லை. நான் எதிர்பார்த்தது போல், தமிழ் மக்களிடம் இருந்து ஜனாதிபதித் தேர்தலுக்குப் போதிய வாக்குகள் கிடைக்கவில்லை. இதைச் சொல்வதற்கு நான் தயங்கவில்லை. எனவே, வரவிருக்கும் சந்தர்ப்பங்களை, நீங்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.   

“ஜனாதிபதித் தேர்தலில், எமக்குக் கிடைத்த வாக்குகளைவிட, எனக்குக் கிடைத்த வாழ்த்துகள் பல மடங்கு அதிகமாகவுள்ளன. குறைந்தது, அடுத்த 5 வருடங்களாவது, இதே அரசாங்கம்தான் ஆட்சியில் இருக்கும். ஜே.ஆர்.ஜயவர்த்தன, யுத்த காலத்தில் அந்தப் பிரச்சினைகளில் ஈடுபடவில்லையா, பிரேமதாஸ யுத்தம் நடத்தும் போது, அவர் ஈடுபடவில்லையா, சந்திரிகா, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஈடுபடவில்லையா? யுத்தம் வந்தால், அது எங்கள் மீது திணிக்கப்பட்ட நிர்ப்பந்தம்.   

“71ஆம் ஆண்டிலும் 89ஆம் ஆண்டிலும், சிங்கள இளைஞர்கள் அரசாங்கத்துக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபடும்போது, அப்பாவிச் சிங்கள மக்களே பாதிக்கப்பட்டனர். இந்திய - இலங்கை ஒப்பந்தத்துக்குப் பின்னர், தமிழீழ விடுதலைப்புலித் தலைமைகள் வன்முறையைத் தொடர்ந்தமையால், அப்பாவித் தமிழ் மக்களே பாதிக்கப்பட்டனர்.   

“சமீபத்தில், முஸ்லிம் மக்களின் பெயரால் குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டபோது, அப்பாவி முஸ்லிம் மக்களே பாதிக்கப்பட்டனர். ஆகவே, அரசாங்கத்துக்கு எதிரான வன்முறை தலைதூக்கும் போது, இது நடப்பது தவிர்க்க முடியாதது. இது, உலக வரலாறு. இதற்கு, உலகில் எந்த நாடும் விதிவிலக்காக இருந்ததில்லை.   

“ஆகவே, நாங்கள் எங்களில் தவறுகளையும் குறைபாடுகளையும் வைத்துக்கொண்டு, எங்கள் சுயலாப அரசியலுக்காக நாங்கள் எங்கள் மக்களைப் பலிகொடுத்துள்ளோம்.   

“இதே போக்கில் தமிழ் மக்கள் தவறாக வழிநடத்தப்படுவார்களாக இருந்தால், கடவுள் வந்தாலும் அவர்களைக் காப்பாற்ற முடியாத நிலைமையே ஏற்படும் என்று, நானும் எனது இறுதிக் காலட்டத்தில் இதையே கூறவிரும்புகிறேன்”  என்று, அமைச்சர் மேலும் கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .