2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தமிழகம் சந்திக்கும் நாங்குநேரி, விக்ரவாண்டி இடைத் தேர்தல்

எம். காசிநாதன்   / 2019 ஒக்டோபர் 07 , பி.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல்கள் அரசியல் கட்சிகளுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நாங்குநேரி, விக்ரவாண்டி ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளின் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, காங்கிரஸ் சார்பில் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற வசந்தகுமார், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததால் ஏற்பட்ட இடைத் தேர்தல். விக்ரவாண்டியில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி மறைவினால் ஏற்பட்ட இடைத்தேர்தல். ஆகவே காங்கிரஸ், தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் ஒரு சட்டமன்ற தொகுதி என்ற அடிப்படையில் போட்டி உருவாகியிருக்கிறது. அ.தி.மு.கவைப் பொறுத்தமட்டில், இரு தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.   

இடைத் தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க ஆட்சிக்கு் தலைவலி கொடுக்கப்போவதில்லை. வெற்றி பெற்றால் கூடுதல் செல்வாக்கு. வெற்றி பெறாவிட்டால் ஆட்சி நீடிக்கும் என்ற நிலையில்தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் தி.மு.கவும் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கப்போவதில்லை. ஆனால் தோற்றால் மட்டுமே பெரிய சிக்கலை அந்தக் கட்சி சந்திக்கும். இதுவரை நடைபெற்ற இடைத் தேர்தல்களில் “அ.தி.மு.க ஆட்சியை வீழ்த்துவோம்” என்ற யுக்தியை தி.மு.வும் அதன் தலைவர் ஸ்டாலினும் கையிலெடுத்தார். ஆனால் இந்த முறை அப்படியொரு யுக்தியைப் பயன்படுத்த முடியாத தர்மசங்கடத்தில் இருக்கிறது தி.மு.க இதனால் தி.மு.கவினரின் “இடைத் தேர்தல் பிரசார” வேகத்துக்கு எதுவும் பாதிப்பு வந்து விடாத அளவுக்கு தி.மு.க தலைமை, வியூகம் வகுத்துச் செயற்படுகிறது.  

 சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் 38 தொகுதிகளில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதவும் “மெகா” வாக்கு வித்தியாசங்களில் அந்த வெற்றி கிடைத்தது. ஆனால் அப்போது நிறுத்தி வைக்கப்பட்டு- பிறகு நடைபெற்ற வேலூர் நாடாளுமன்ற  தேர்தலில், பெரும் வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளரால் வெற்றி பெற இயலவில்லை. குறிப்பாகக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகன், தனது மகன் கதிர் ஆனந்தை நிறுத்தி பொதுத் தேர்தலில் பெற்றுக்கொண்ட  வாக்கு வித்தியாசத்தை, இந்தத் தொகுதியில் இடைத் தேர்தலில் பெற முடியவில்லை. தப்பித்தோம் பிழைத்தோம் என்று தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற்றார். 

அதனால் தி.மு.கவுக்கு இருந்த ஆதரவு சில மாதங்களில் குறைந்திருக்கிறது என்றும், பா.ஜ.க எதிர்ப்பு காணாமல் போய் விட்டது என்றும் கருத்துருவாக்கம் செய்யப்பட்டது. இந்தக் கருத்துருவாக்கம் வாக்கு வித்தியாசத்தில் தி.மு.கவை அ.தி.மு.கவை நெருங்கி விட்டது என்ற தோற்றம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தோற்றத்தை முறியடிக்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் விக்ரவாண்டி தொகுதியிலாவது தி.மு.க இந்த இடைத் தேர்தலில் வெற்றிபெற்றாக வேண்டிய நிர்பந்தம் உருவாகியிருக்கிறது.  

இதை மனதில் வைத்து தி.மு.க தீவிர பிரசாரத்தில் விக்ரவாண்டி தொகுதியில் இறங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இந்தத் தொகுதி, அந்த மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு முதன்மை வாக்கு வங்கியுள்ள தொகுதி.

வன்னியர் சமுதாயத்தினர் அதிகமாக இருக்கும் அத்தொகுதியில் 2016 சட்டமன்றத் தொகுதியில் பா.ம.க வேட்பாளர் தனியாகவே போட்டியிட்டு 41 ஆயிரம் வாக்குகளைப் பெற்றார். இந்த வாக்குகளை 2019இல் நடைபெற்ற விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் தன் கட்சி வேட்பாளருக்கே பா.ம.கவால் டிரான்ஸ்பர் செய்ய இயலவில்லை என்றாலும், இந்த அசாத்திய பலமுள்ள பா.ம.க - அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றிருப்பது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கூடுதல் பலம். அதே நேரத்தில் தி.மு.கவின் பக்கம் இந்தத் தொகுதியில் கனிசமான வாக்கு வங்கி உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்கிறது.

 2019 நாடாளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் தி.மு.க கூட்டணியில்- ஆனால் தி.மு.கவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எழுத்தாளர் ரவிக்குமார், பா.ம.க நிறுத்திய வேட்பாளரான வடிவேல் ராவணனை விட 9 ஆயிரம் வாக்குகள்  அதிகம்பெற்று வெற்றி பெற்றார். ஆகவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஸ்டாலினுக்குக் கூடுதல் பலம். அ.தி.மு.கவுக்கும் தி.மு.க.வுக்கும் முறையே இந்தத் தொகுதியில் பா.ம.கவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பக்கத்தில் இருப்பது தனிப்பலம்.  

இதனால் தொகுதியில் “தேர்தல் போட்டி” எப்படி உருவாகப் போகிறது என்பதை உன்னிப்புடன் வாக்காளர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கு தி.மு.கவின் தேர்தல் பொறுப்பைக் கவனிக்கும் “கப்டனாக” முன்னாள் அமைச்சர் பொன்முடி இருக்கிறார். ஆனால் அ.தி.மு.க சார்பில் தேர்தல் பொறுப்பை அமைச்சர் சிவி சண்முகம் கவனிக்கிறார்.

ஆகவே தொகுதிக்குள் “பொன்முடி”க்கும், “சிவி சண்முகத்துக்கும்” ஆன போட்டியாக மாறுமா, அல்லது “எடப்பாடி பழனிச்சாமி”க்கும் “ஸ்டாலினுக்கும்” ஆன போட்டியாக உருவெடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில் தேர்தல் களம் “வன்னியர்” சமுதாயத்துக்கும், “தலித்” சமுதாயத்துக்குமான போட்டியாக மாறிவிடக் கூடாது என்பதில் அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரு கட்சிகளுமே கவனமாக காய் நகர்த்துகின்றன.அதனால்தான் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் சிவி சண்முகம், “கப்டன் விஜயகாந்த் நன்றாக இருந்திருந்தால் ஸ்டாலின் 2016இல் அடையாளம் தெரியாமல் போயிருப்பார்” என்று காட்டமான தாக்குதலை தொடுத்தார். ஆனாலும் அமைச்சர் நினைப்பது போல் இந்தத் தொகுதி  போட்டியில் அ.தி.மு.கவும் தி.மு.கவும் நின்றாலும்- வாக்காளர் மத்தியில் “வன்னியரா” அல்லது “தலித்தா” என்ற போட்டியே நிலவும் என்று தெரிகிறது. பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் டொக்டர் ராமதாஸ் இந்தத் தொகுதியில் பிரசாரத்துக்குச் சென்ற பிறகுதான் தேர்தல் களமும் தேர்தல் களத்தில் உள்ள “தேர்தல் போட்டியும்” சூடு பிடிக்கும். தேர்தல் முடிவுகள் எந்தத் திசையில் பயணிக்கிறது என்பதும் தெரியவரும்.  

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில், காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. அங்கு இயற்கையாகவே காங்கிரஸுக்கு பலமுண்டு. அதிலும் குறிப்பாக தி.மு.கவுடன் கூட்டணி சேர்ந்திருப்பதால் அங்கு 17,000 வாக்குகளுக்கு மேல் கூடுதல் பலத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்தத் தொகுதியில் தி.மு.க நாடாளுமன்ற வேட்பாளர் ஞான திரவியம் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தார். காங்கிரஸ் கட்சிக்குள் வழக்கம் போல் “குஸ்திகளும்” “கோஷ்டி சண்டைகளும்” இருந்தாலும், அக்கட்சியின் வெற்றிக்கு தி.மு.கவின் ஒத்துழைப்பு முக்கியமாகத் தேவைப்படுகிறது. அடுத்து வரப்போகின்ற உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்ற தேர்தல் போன்றவற்றை மனதில் வைத்து, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியைக் காங்கிரஸிடமே கொடுத்திருக்கிறது தி.மு.க   இன்றைய சூழ்நிலையில், நாங்குநேரி தொகுதி, காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருக்கிறது. விக்ரவாண்டி தொகுதி தி.மு.கவுக்கு கடுமையான போட்டியாக இருக்கிறது. நாங்குநேரியில் காங்கிரஸ் வெற்றி பெற்று- விக்ரவாண்டியில் தி.மு.க தோற்றால் எதிர்காலத்தில் அமையும் கூட்டணியில், காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கே தி.மு.க பெரும் சிரமப்படும் சூழல் உருவாகும். ஆனால் அதே நேரத்தில் தி.மு.க விக்ரவாண்டியில் வெற்றி பெற்று நாங்குநேரியில் காங்கிரஸ் தோற்றால் “தி.மு.கவினர் காலை வாரி விட்டார்கள்” என்ற பரப்புரை தொடங்கும். ஆகவே எப்படிப் பார்த்தாலும், காங்கிரஸ்- தி.மு.க கூட்டணியில் இந்த இடைத் தேர்தல் வெற்றியோ தோல்வியோ ஒரு தாக்கத்தை உருவாக்கும்.ஆனால் அ.தி.மு.கவுக்கு இந்தத் தொகுதிகளில் தி.மு.கவோ அல்லது காங்கிரஸோ வெற்றி பெறுவதால் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதனால் இதுவரை நடைபெற்ற இடைத் தேர்தல்களில் இந்த இடைத் தேர்தல்தான் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி- அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.   

அ.தி.மு.க மிகவும் தாமதம் செய்து பா.ஜ.க.வின் ஆதரவைக் கோரியிருந்தாலும் அடுத்து வரப் போகின்ற உள்ளாட்சி தேர்தலில் “அ.தி.மு.க- பா.ஜ.க” கூட்டணி தொடர்வதற்கும் இந்த இடைத் தேர்தல்கள் அச்சாரமாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே நடைபெறுகின்ற நாங்குநேரி, விக்ரவாண்டி இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்றால்- அது முதலமைச்சர் பழனிச்சாமியின் வெற்றியாகப் பார்க்கப்படும். அதற்கு இந்த இடைத் தேர்தல் பயன்படட்டும் என்ற நோக்கில்தான் தற்போது அ.தி.மு.க அமைச்சர்களும் முதலமைச்சரும் நாங்குநேரி, விக்ரவாண்டி இடைத் தேர்தல்களில் முகாம் அடித்திருக்கிறார்கள்.  இதைத் தாக்குப்பிடித்து தி.மு.க. எப்படி நாடாளுமன்ற வெற்றி முகத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் போகிறது என்பது தற்போதைய சுவாரஷ்யான கேள்வியாக இருக்கிறது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X