2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தமிழ் மக்களுக்குத் தேவை அபிவிருத்தியா, அதிகாரமா ?

கே. சஞ்சயன்   / 2019 பெப்ரவரி 22 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிழ் மக்கள் ஒன்றும் கூடுதல் அதிகாரங்களைக் கேட்கவில்லை. வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் தான் அதிகாரப் பகிர்வைக் கேட்கிறார்கள்” இது முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்‌ஷ அண்மையில் கூறியிருந்தார்.   

அவரது அந்தக் கருத்தை அப்படியே பிரதி செய்யும் வகையில் கருத்து வெளியிட்டிருக்கிறார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.   

“வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் தான், கூடுதல் அதிகாரங்களைக் கேட்கிறார்களே தவிர, அங்குள்ள மக்கள் அல்ல; அங்குள்ள மக்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் பொருளாதார அபிவிருத்தியும் நிம்மதியும் தான்” என்று, அவர் சில நாள்களுக்கு முன்னர் கூறியிருக்கிறார்.  

மஹிந்த ராஜபக்‌ஷ, தமிழ் மக்களைப் புரிந்து கொண்டது இவ்வளவு தான் என்பது, ஆச்சரியத்துக்குரிய ஒன்றல்ல. ஆனால், அமைச்சர் ராஜித சேனாரத்ன, அதை வழிமொழியும் வகையில் கூறியிருப்பது தான், ஆச்சரியமானது.  

அரசியல் ரீதியாக மஹிந்த ராஜபக்‌ஷவுடன் மல்லுக் கட்டுபவர்களில் ராஜித சேனாரத்னவும் ஒருவர்; இடதுசாரி வழியில் வந்தவர். தமிழ் மக்களில் பலருடனும் தமிழ் அரசியல்வாதிகளுடனும் அதிக நெருக்கம் கொண்டவர்.  

ஆனாலும், அவரால் மஹிந்த ராஜபக்‌ஷவைப் போலவே, தமிழ் மக்களைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழ் மக்களின் அபிலாஷைகள், விருப்பங்களைத் தெரிந்து கொள்ள முடியவில்லை.  

தமிழ் மக்கள், கூடுதலான அதிகாரங்களைக் கேட்கவில்லை என்றும், ஏதோ, அரசியல்வாதிகள் தான் அதற்காக முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், தெற்கின் இரண்டு பிரதான அரசியல் சக்திகளிடம் இருந்தும் வெளியாகி இருக்கின்ற இந்தக் கருத்தைச் சாதாரணமாக எடை போட்டு விடக் கூடாது.  

மஹிந்த ராஜபக்‌ஷ, தமிழ் மக்கள் தொடர்பாக, இன்னமும் தப்பான கணக்கைத் தான் போட்டுக் கொண்டிருக்கிறார். நான்கு கால் முயலைப் பிடித்துக் கொடுத்தாலும், மூன்று கால் தான் என்று வாதிடக் கூடியவர்.  

தமிழ் மக்களுக்கான தீர்வு, அதிகாரப் பகிர்வு, அரசியல் அதிகாரங்கள், உரிமைகள் விடயத்தில், அவர் எந்த விட்டுக்கொடுப்புக்கும் தயாரில்லாதவர்.  அவரைப் பொறுத்தவரையில், தமிழ் அரசியல்வாதிகளை ஒதுக்கி விட்டு, தமிழ் மக்களுடன் நெருங்கிச் செல்லும் ஆர்வத்தில் இருக்கிறார். அண்மையில் கூட அவர், அதை வெளிப்படையாகக் கூறியிருந்தார்.  

ஆனால், தமிழ் மக்களுடன் எவ்வாறு நெருங்கிச் செல்வது என்பது தொடர்பாக, சரியான ஆலோசனை கொடுக்கும் எவரும், அவருக்கு அருகில் இல்லை என்பது தெளிவாகவே தெரிகிறது. தமிழ் மக்கள், தமக்கான உரிமை, அதிகாரங்கள் விடயத்தில் எந்தச் சமரசத்துக்கும் இடமளிக்காதவர்கள் என்பதைக் கூட, சரியாகக் கணக்குப் போடத் தெரியாதவராக அவர் இருக்கிறார்.  

போர் முடிந்த பின்னர், பசில் ராஜபக்‌ஷவின் மூலம், வடக்கில் அபிவிருத்தி அரசியலை முன்னெடுத்து, வடக்கு மாகாண சபையின் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கனவுக் கோட்டை கட்டி, அது முற்றாகவே தரைமட்டமாகிய போதும், தமிழ் மக்களின் நாடியைப் பிடித்துப் பார்க்கத் தெரியாதவர் அவர். 2015ஆம் ஆண்டு,  ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்குகளின் ஊடாக, மஹிந்த ராஜபக்‌ஷவை முழுமையாக நிராகரித்த பின்னரும் கூட, தமிழ் மக்கள் எதற்கு முன்னுரிமை கொடுத்தனர் என்பதைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார் அவர். அவர் அப்படி இருப்பது பெரிய ஆச்சரியத்துக்குரிய விடயமன்று. ஆனால் அமைச்சர் ராஜித சேனாரத்ன அப்படியல்ல!   

ராஜித சேனாரத்ன, தமிழ் மக்களுடன் நெருங்கிப் பழகுபவர். தமிழ் அரசியல் தலைவர்களுடன், கட்சி வேறுபாடின்றித் தொடர்புகளை வைத்திருப்பவர். ஆனால், அவரது கண்ணையும் மறைத்திருக்கிறது, அபிவிருத்தி அரசியல் என்பதுதான் ஆச்சரியம்.  

கடந்த டிசெம்பர் மாதம், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம், மீண்டும் பதவிக்கு வந்த பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அபிவிருத்தி அரசியலை நோக்கிச் சாய ஆரம்பித்துள்ளது. அரசமைப்பு மாற்றம், அரசியல் தீர்வு போன்ற வாக்குறுதிகளை, எஞ்சியிருக்கும் குறுகிய காலத்துக்குள் நிறைவேற்றப்படுவது சாத்தியமில்லை என்ற நிலையில், கிடைத்திருக்கும் குறுகிய கால இடைவெளிக்குள், தமிழ் மக்களுக்கு சாத்தியமானளவு பொருளாதார உதவிகளையும் திட்டங்களையும் பெற்றுக் கொடுப்பதில் கூட்டமைப்பு கவனம் செலுத்தி வருகிறது,  

கடந்த வாரம், சில நாள்கள் வடக்கில் தங்கியிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பல புதிய திட்டங்களை, ஓடி ஓடி ஆரம்பித்து வைத்தார். ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசினார். அவற்றையெல்லாம் நிறைவேற்றுவதற்குப் போதுமான நிதி, அரசாங்கத்திடம் உள்ளதா என்பது சந்தேகம்.  

ஆனாலும், டிசெம்பரில் ஐ.தே.க அரசாங்கத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முண்டு கொடுத்துக் காப்பாற்றிய பின்னர், வடக்கின் மீதான அரசாங்கத்தின் கவனம், அதிகரித்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்க முடியாது. கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், இப்போது புதிய திட்டங்களுக்கான அடிக்கற்களை நாட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள். உரிமைக்கான அரசியலுடன், அபிவிருத்தி அரசியலையும் முன்னெடுக்கும் உத்தியை, கூட்டமைப்பு கையாள ஆரம்பித்திருக்கிறது. இது, ஐ.தே.க அரசாங்கத்துக்கு, உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. அபிவிருத்தி அரசியலை வைத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மடக்கிப் போட்டுக் கொள்ளலாம் என்று, அரசாங்கம் நினைத்திருக்கிறதோ தெரியவில்லை. அந்தத் தப்புக்கணக்கில் இருந்து தான், அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு கூறியிருக்கலாம்.   

இதுவே, தமிழ் மக்கள் அபிவிருத்தியையும் எதிர்காலத்தையும் பற்றியே சிந்திக்கிறார்களே தவிர, அதிகாரங்களைப் பற்றி கவலைப்படவில்லை என்று அவர் கருதும் நிலையை ஏற்படுத்தியிருந்தால், அதற்குத் தமிழ் அரசியல்வாதிகளும் பொறுப்பேற்க வேண்டும்.  

தமிழ் மக்கள், தமக்கான அதிகாரம், உரிமைகளை விட, அபிவிருத்தியைப் பற்றியே அதிகம் சித்தித்திருந்தார்கள் என்றால், தேர்தல்களின் போது, உரிமைகளை மட்டும் முன்னிறுத்தி, அரசியல் செய்தவர்களைத் தெரிவு செய்திருக்க மாட்டார்கள்.  

தமிழ் மக்கள் தனிநாடு கேட்கவில்லை; அதைக் கேட்டது புலிகள் தான்; பிரபாகரன் தான் என்றவர்கள், தமிழ் மக்கள் சமஷ்டியைக் கேட்கவில்லை; தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தான், அதைக் கேட்கிறது என்றவர்கள், இப்போது, தமிழ் மக்கள் அதிகாரங்களையே கேட்கவில்லை என்ற நிலைக்கு வந்திருக்கிறார்கள்.  

அதாவது, தனிநாடு, சமஷ்டி என்ற கோரிக்கைகள், மேலிருந்து கீழ் நோக்கியதாக, இப்போது சாதாரணமாக, அதிகாரங்களில் வந்து நிற்கிறது.   

அதிகாரங்கள், உரிமைகளைத் தமிழ் மக்கள் கேட்கவில்லை என்றால், 30 ஆண்டுகளாகப் போர் நீடித்தது எப்படி? இன்றைக்கும், தனிநாடு கோரிய புலிகளைத் தமிழ் மக்கள் நினைத்துக் கொண்டிருப்பது ஏன்?  
தமிழ் மக்களின் அபிலாஷைகளை, சிங்கள அரசியல் தலைமைகள் இன்னமும் ஏற்றுக்கொள்ளும் மனோநிலையில் இல்லை. அது, இடதுசாரித் தலைவர்களாக இருந்தாலும் சரி, பேரினவாதத் தலைவர்களாக இருந்தாலும் சரி, அவர்களின் சிந்தனைகளில் வேறுபாடு இல்லை.  

இந்த இடத்தில், மஹிந்த ராஜபக்‌ஷவும் ராஜித சேனாரத்னவும் ஒரே மாதிரித் தான் தெரிகிறார்கள். தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் எதிர்பார்ப்புகளையும் புரிந்து கொள்ளாமல், வெறும் அரசியல்வாதிகளின் அபிலாஷைகளாகவே, அவற்றை மட்டுப்படுத்திக் கொள்ள அவர்கள் முனைகிறார்கள்.  

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை, மறுப்பதற்கான ஓர் உபாயமாகவும் அவர்கள் இதைக் கையாளுகிறார்கள்.  

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு, அவர்கள் எதிர்பார்க்கின்ற தீர்வு ஒன்றை வழங்குவதற்குத் தயாரில்லாதவர்கள் தான், தமிழ் மக்கள் அவற்றை எதிர்பார்க்கவேயில்லை என்று கதை கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  

சரி, தமிழ் மக்கள் அதிகாரத்தைக் கேட்கவில்லை; உரிமைகளைக் கேட்கவில்லை; சமஷ்டியையோ, தனிநாட்டையோ கேட்கவில்லை என்றே வைத்துக் கொள்வோம்.   

அவர்கள் எதிர்பார்க்கின்ற அபிவிருத்தியை, வளமான வாழ்வையாவது கொடுக்கின்ற வேலையை, கடந்த 10 ஆண்டுகளில் எந்த அரசாங்கமாவது, மேற்கொண்டிருக்கிறதா?  

மஹிந்த அரசைக் குற்றம்சாட்டிய தற்போதைய அரசாங்கம் மாத்திரம், தமிழ் மக்களின் அபிவிருத்திக்கு, செழிப்புக்கு என, எத்தகைய பாரிய திட்டங்களை முன்னெடுத்திருக்கிறது?  

ஒன்று கூடக் கிடையாதே. பிறகெப்படி தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு அபிவிருத்தி தான் என்று, அவர்களால் கூற முடிகிறது?  

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை, தமிழ் தலைமைகள் பிரதிபலிக்கவில்லை என்றால், அவர்களின் அபிலாஷைகளை அறிந்து கொள்வதற்கு, வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியாக, ஒரு கருத்தறியும் முயற்சியையாவது முன்னெடுக்கும் துணிச்சல் அரசாங்கத்துக்கு இருக்கிறதா?  

அபிவிருத்தியா, அதிகாரங்களா தேவை என்று, தமிழ் மக்களிடம் ஒரு கருத்து வாக்கெடுப்பு நடத்தும் துணிச்சல் அரசாங்கத்துக்குக் கிடையாது.

துணிந்து அவ்வாறான ஒரு கருத்து வாக்கெடுப்பை நடத்தி விட்டு, அதற்குப் பின்னர், தமிழ் மக்களின் அபிலாஷைகள் பற்றிக் கூறினால், பொருத்தமாக இருக்கும்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .