2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தமிழ்க் கட்சிகளின் அணுகுமுறைகள் மாறுமா?

கே. சஞ்சயன்   / 2020 ஜூலை 05 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத் தேர்தல் பிரசாரங்களில், தமிழ் அரசியல் கட்சிகள் சில முன்வைக்கின்ற கருத்துகள் தொடர்பாகப் பரவலான விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.  

நாடாளுமன்ற அரசியலுக்கு அப்பாற்பட்ட பல விடயங்கள், இந்தத் தேர்தலில் வாக்குறுதிகளாக முன்வைக்கப்பட்டு,  பிரசாரப்படுத்தப்பட்டு வருவதே இந்த விமர்சனங்களுக்குக் காரணம்.  

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல கட்சிகள், கடந்த ஒரு தசாப்த காலமாக முன்வைத்து வருகின்ற போர்க்குற்றங்களுக்கு, சர்வதேச விசாரணையை வலியுறுத்துவோம் என்பதை, உதாரணத்துக்குக் குறிப்பிடலாம்.  

இறுதிக்கட்டப் போரின் போது நடந்த மீறல்கள், குற்றங்களுக்குத் தமிழ் மக்கள், நீதி கோரிப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் போராட்டங்கள், முடிவற்று நீண்டு கொண்டிருக்கின்றன.   

ஆனால், தமிழ் மக்கள் எதிர்பார்த்த, எதிர்பார்க்கின்ற சர்வதேச விசாரணை என்பது, ‘கைக்கு எட்டாத கனி’யாகவே இருந்து கொண்டிருக்கிறது.  

சர்வதேச போர்க்குற்ற விசாரணையை, உள்நாட்டு அரசியல் மாத்திரம் தீர்மானிக்கக் கூடியது அல்ல.   

அதைத் தீர்மானிக்கின்ற நிலையில், சர்வதேச அரசியலும் இருக்கிறது என்பதை மறந்து, பலவேளைகளில் தமிழ் அரசியல் கட்சிகளும் நடந்துகொண்டு விடுகின்றன.  

நாடாளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கும் சர்வதேச விசாரணைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.  இவ்வாறான எந்தவொரு சபைகளினாலும், அந்த விசாரணையைக் கொண்டு வர முடியாது.  

இலங்கையின் நாடாளுமன்றக் கட்டமைப்பின் ஊடாக, தமிழ்மக்களின் பிரச்சினைகள் எதற்குமே, தீர்வு காண முடியாது என்பதே உண்மை.  

நாடாளுமன்றத்தில், இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அரசமைப்பு மாற்றம் உள்ளிட்ட எல்லா நடவடிக்கைளுமே, பொய்த்துப் போனது தான் வரலாறு.  

எனவே, நாடாளுமன்ற அரசியலின் ஊடாக, தமிழ் மக்களின் அரசியல்,  உரிமைகள் ஆகியவை சார்ந்த பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கலாம் என்று, கொடுக்கப்படும் வாக்குறுதிகள் போலியானவை.  

இவ்வாறான நிலையில், சர்வதேச விசாரணை போன்ற, இலங்கையின் கையில் இல்லாத விடயங்களை, இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலின் ஊடாக நிறைவேற்ற முடியும் என்பது, மிகையான கற்பனை.  

எனினும், இதுபற்றிய எந்தத் தூரநோக்கும் இல்லாமல் தான், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போன்ற கட்சிகள், கடந்த காலத்தில் இந்த விடயத்தை முன்னிறுத்தி, தேர்தல்களில் பிரசாரம் செய்தன.  இப்போதும் அதையே திரும்பவும் செய்ய முனைகின்றன.  

இந்த நாடாளுமன்றத் தேர்தலில், வெற்றியைப் பெற்று விட்டால், சர்வதேச உதவியுடன் தமிழரின் பிரச்சினையைத் தீர்க்க முற்படுவோம் என்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அண்மையில் கூறியிருக்கிறார்.  

இதுபோலத் தான், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனும் கூறிக் கொண்டிருக்கிறார்.  

இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கும், சர்வதேசத்தை இழுத்து வருவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.  

அதைவிட, இவர்கள் அழைத்தவுடன், சர்வதேசம் ஓடி வந்து தீர்த்து வைக்கும் என்பதும் மிகையான கற்பனை.   

அவ்வாறானதொரு தோற்றத்தை உருவாக்குவது முட்டாள்தனமானது என்பதைத் தெரிந்து கொண்டே, தமிழ்க் கட்சிகள் பலவும், திரும்பத் திரும்ப அதையே கூறிக் கொண்டிருக்கின்றன.  

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், யதார்த்தத்துக்கு வெளியே, கற்பனை உலகில் பயணம் செய்வதையே விரும்புகின்றன.  

தமிழ் மக்களிடம் உள்ள உணர்வுகளைக் கூர்மைப்படுத்தி, அதன் ஊடாக அரசியல் செய்வதை, அவர்கள் சுலபமானதாகப் பார்க்கிறார்கள்.  

நாடாளுமன்றத் தேர்தலில், போட்டியிடும் போது, அதனூடாகத் தீர்க்க வேண்டிய, தீர்க்கக் கூடிய விடயங்களை முன்னிறுத்திப் பிரசாரம் செய்வது தான் சரியானது.  

நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தால், எதைச் செய்ய முடியுமோ, அதைத் தான் வெளிப்படுத்த வேண்டும்.  

அதற்கு அப்பாற்பட்ட விடயங்களை முன்னிறுத்துவது, சரியான அணுகுமுறையல்ல.  

அதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலில் கிடைக்கும் வாக்குகளை, தமது கொள்கை, நிலைப்பாடுகளுக்குக் கிடைக்கும் அங்கிகாரமாக வெளிப்படுத்த முடியும் என்றொரு காரணம், தமிழ்க் கட்சிகளால் கூறப்படுகிறது.  

தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கு இணைந்த தாயகத்தை, தேசியத்தை, தன்னாட்சி உரிமையை வலியுறுத்தியே தமிழ்க் கட்சிகளுக்கு வாக்களித்து வந்திருக்கிறார்கள்.  

காலத்துக்குக் காலம், தமிழ் மக்களின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவதற்கான ஓர் ஆணையாகவே, தேர்தல்கள் பார்க்கப்பட்டு வந்திருக்கின்றன.  

உதாரணத்துக்கு, 1977ஆம் ஆண்டுத் தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டணிக்குக் கிடைத்த வாக்குகள், தமிழர் பிரச்சினைக்குத் ‘தமிழீழம்’ தான் தீர்வு என்று, வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு, அளிக்கப்பட்ட ஆணையாகவே பார்க்கப்பட்டது.   

இப்போதும் அந்தத் தீர்மானத்தை முன்னிறுத்தியே, அரசியல் செய்யப்படுகிறது.  

அதற்குப் பின்னரும், நெருக்கடியான காலங்களிலும், அரசாங்கத்தின் நிலைப்பாடுகளை மறுத்தும், தமது தனித்துவத்தை வெளிப்படுத்துவதற்காகவும் பல்வேறு தேர்தல்களில் தமது ஆணையைத் தமிழ் மக்கள் தேர்தல்களில் வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள்.  

இவ்வாறான ஆணையைக் கொண்டு தமிழ் மக்கள் எதை அடைந்திருக்கிறார்கள் என்ற கேள்வி இருப்பதை மறுக்க முடியாது.  

தேர்தல்களில் அளிக்கப்படும் ஆணையை, சர்வதேசம் மதிக்குமாக இருந்தால், அதை ஏற்றுக் கொள்ளுமாக இருந்தால், 1977 தேர்தலுக்குப் பின்னர், தமிழீழத்தை சர்வதேசம் ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்.  

2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை முன்னிறுத்திய தமிழ் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு, தமிழ் மக்கள் ஏகோபித்த ஆணை வழங்கினர்.  

அந்த ஆணையை, மதித்திருந்தால், விடுதலைப் புலிகளுக்கு எதிரான சர்வதேச நகர்வுகள், தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.  

அதுபோல, வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அளிக்கப்பட்டதைப் போன்றதொரு பாரிய மக்கள் ஆணைக்கு, உரிய மரியாதை கிடைத்திருக்க வேண்டும்.  

ஆனால், ஜனநாயக ரீதியாக அளிக்கப்பட்ட இத்தகைய ஆணைகளால், சர்வதேசத்தின் நிலைப்பாடுகளை அசைத்துப் பார்க்க முடியவில்லை.  

மக்களின் இறைமை, மக்களின் ஆணை என்பதற்கு அப்பால், சர்வதேசம், வேறொன்றைத் தான் எதிர்பார்க்கிறது.  

அது சர்வதேச அரசியல் சூழமைவு. அந்த சர்வதேச அரசியல் தான், மக்களின் ஏகோபித்த ஆணையை, செல்லாக் காசும் ஆக்குகிறது. அதே சர்வதேச அரசியல் தான், ‘பேனைப் பெருமாள்’ ஆகவும் மாற்றுகிறது.  

எனவே, நாடாளுமன்றத் தேர்தலில் அளிக்கப்படும் வாக்குகளை வைத்து, சர்வதேச துணையுடன் தீர்வை வழங்கப் போவதாகக் கூறிக் கொண்டிருப்பதும் சரி, நடைமுறைச் சாத்தியமற்ற தீர்வுகளை முன்வைத்து வாக்குகளைக் கேட்பதும் சரி, முறையான அணுகுமுறையா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய நிலையில், தமிழ்க் கட்சிகள் உள்ளன. நாடாளுமன்ற அரசியலை நிராகரிக்கும் தரப்புகள், நாடாளுமன்ற ஆசனங்களுக்காகப் போட்டியிடுகின்றன. இதுவும் ஒரு முரண்பட்ட விடயம் தான்.  

இலங்கையின் நாடாளுமன்றம், அதன் அதிகார எல்லைக்குள் எதைச் செய்ய முடியுமோ, அதற்கேற்ற வாக்குறுதிகளையும் திட்டங்களையும் முன்வைத்து, தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பதற்குத் தமிழ்க் கட்சிகள் முற்பட வேண்டும்.  

தமிழ்க் கட்சிகளிடம், ஆக்கபூர்வமான திட்டங்களை முன்வைக்கும் ஆற்றல் இல்லை என்பது, பொதுவான குற்றச்சாட்டு.  

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை, அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கக் கூடிய திட்டங்களும், அவற்றை நிறைவேற்றுவதற்கான உபாயங்களையும் முன்வைப்பதன் மூலம், அந்தக் குற்றச்சாட்டை, தமிழ்க் கட்சிகள் பொய்யாக்க முடியும்.  

அதேவேளை, தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் யார் என்பதைத் தீர்மானிப்பதில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முக்கிய பங்கு உள்ளதை யாரும் மறுக்க முடியாது.  
தமிழ் மக்களின் வாக்குகள் தான், அவர்களின் அரசியல் பிரதிநிதிகள் யார் என்பதை, வெளியுலகம் ஏற்றுக் கொள்ளும்.  

கடந்த காலங்களில், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு, அவ்வாறு தான் அங்கிகாரம் அளிக்கப்பட்டது.  இப்போது, தமிழ்த் தேசிய கட்சிகள், ஒரு தரப்புக்கு அவ்வாறு அங்கிகாரம் அளிக்க வேண்டியதில்லை; பல கட்சிகள் சென்றால் கூட, நல்லதே நடக்கும் என்று கூற ஆரம்பித்திருக்கின்றன.  

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் இருந்து, ஆசனங்களைப் பிடுங்கிக் கொள்வதற்காக, ஒரே பிரதிநிதிகளைத் தெரிவு செய்து, எதை கண்டோம், போட்டியாகச் செயற்படக் கூடியவர்களையும் தெரிவு செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்துகின்றனர்.  

இவ்வாறான மாற்றத்தைப் போலவே, தமிழ்க் கட்சிகள், தமது தேர்தல் அணுகுமுறைகளிலும் மாற்றங்களைச் செய்வதில், தவறு இருப்பதாகத் தெரியவில்லை.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .