2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தமிழ்த் தலைவர்கள் சிந்திப்பார்களா?

Editorial   / 2020 ஜனவரி 19 , பி.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இலட்சுமணன்

கிழக்கின் அரசியல் நிலைவரங்களைப் புரிந்து கொண்டும் கிழக்குத் தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் என்ற கோஷங்களை முன்வைத்துக் கொண்டும், தமிழ் அரசியல் கட்சிகளும் மாற்றுக் கட்சிகளும், ஒன்றுபடாமல், பிரிந்து நின்று பல்வேறு பிரயத்தனங்களையும் தகிடுதத்தங்களையும் நீயா, நானா எனக் கங்கணம் கட்டிக் கொண்டு ஆடுகின்றன. 

தமிழர் அரசியல் வரலாற்றில், தேர்தல் காலங்களில் உரிமை, சலுகை பற்றி பேசிக் காலத்தைக் கடத்தியவர்கள் இன்று, அபிவிருத்தி பற்றியும் பேரம் பேசல்கள் பற்றியும் பிரதிநித்துவத்தைக் காப்பாற்றுவது பற்றியும் கருத்துகளை முன் வைக்கின்றார்கள்.

இருந்தபோதும், இங்கு எல்லோருமே, தமிழரின் ஒற்றுமை விடயத்தில், கீரியும் பாம்பும் போலவே உள்ளனர். 

உண்மையில், தமிழ் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றும் சிந்தனை யாருக்காவது இருந்தால், அவர்கள் அல்லது  தமிழ் கட்சிகள் ஒன்றுபட வேண்டும். 

போட்டித் தவிர்ப்புகளைச் செய்ய  வேண்டும்; பரஸ்பர விட்டுக்கொடுப்புகள் செய்து, செயலாற்ற வேண்டும். ஆனால், இத்தகையதொரு தர்க்கரீதியான நியாயப்பாட்டுக்கு, தமிழ் மக்கள், தமிழ்த் தரப்புகள் வருவதற்கு, எவரும் தயாராக இல்லை என்பதே, உண்மையான விடயமாகும். 

இந்த வகையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ்க் கட்சிகளை விட, எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகி வரும் தமிழ்க் கட்சிகளின் எண்ணிக்கை, மிகமிக அதிகம் என்ற நிலையே, தற்போது நிலவுகின்றது.

 இதைவிட, தமிழ்க் கட்சிகளிடையே கூட்டுகளுக்கான பிடுங்குப்பாடுகளும் போட்டா போட்டிகளும் நிபந்தனைகளும் அதிகமதிகமாகக் காணப்படுகின்றன.

இத்தகைய சிக்கல் மிக்க சூழ்நிலையில், எத்தகைய கொள்கைகளும் விளக்கங்களும் இல்லாமல், இன்று அரசியல் கூட்டுகள் உருவாக்கி உள்ளன. இந்தக் கூட்டுக்குள், எத்தனை கூட்டுகள் வாக்கு வங்கிகள் உள்ள அரசியல் கூட்டுகள் என்பதை எல்லாம், மக்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். 

கிழக்கில் தமிழர் உரிமை தொடர்பாகவும் அபிவிருத்தி தொடர்பாகவும் பேசியபடி மூன்று அல்லது நான்கு கூட்டுகள் இம்முறை தேர்தலில் களமிறங்கியுள்ள. 

இவற்றில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பொதுஜன பெரமுன கூட்டு, ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, சீ. வி விக்னேஸ்வரன் தலைமையிலான மாற்றுத் தலைமை அணி, சுயேச்சைக் குழுக்கள் எனப் பல்வேறு குழுக்கள், களமிறங்கத் தயாராகி வருகின்றன. 

இருந்தபோதும், கட்சிகளது கொள்கைகள், வாக்குவங்கி, பின்புலம், அடித்தளம் என்பவை, எத்தகையவை என்பது தொடர்பாக, இந்தக் கட்சிகள் அனைத்தும் புரிந்துகொண்டுதான் களமிறங்குகின்றனவா? அல்லது, இம்முறை கிழக்கின் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிக்கும் நோக்கில் களமிறங்குகின்றனவா? என்றும், தமிழ் மக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கப் போவதாகவும் தமிழ் மக்களின்  இருப்பும் பிரதிநிதித்துவமும் தமிழ் முதலமைச்சர் ஒருவரைக் கிழக்குக்குப் பெற்றுக்கொடுப்பதில், உறுதியாக நின்று உழைக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் அதன் காரணமாக, எந்தவித நிபந்தனையும் அற்ற முறையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவிப்பதாகத் தெரிவித்துள்ளது.

இச்சூழ்நிலையில், இச்செயற்பாட்டையும் விட்டுக்கொடுப்புடன் கூடிய முன்மாதிரியான ஆதரவையும் சுயலாபங்களுக்கான காய்நகர்த்தல் என்றும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியானது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆசனத்துக்குக் கிழக்கில் ஆசைப்படுவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த விமர்சனம், ஒற்றுமைச் செயற்பாட்டை சீர்குலைக்கும், பேரினவாத சக்திகளுக்குத் துணைபோகும் தன்மை கொண்டதாகவே பார்க்கப்படுகிறது. 

கிழக்கின் அரசியல் நிலை தொடர்பாக, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முற்போக்கான இந்த முடிவு, ஒரு அரசியல் கட்சியின், அரசியல் சாணக்கியம் மிக்கதாகவும் ராஜரீக மூலோபாய அணுகுமுறைகளைக் கொண்டதாகவும் இத்தகைய அரசியல் நகர்வுகள் தொடர வேண்டும் என்றே தமிழ் மக்களால் பார்க்கப்படுகிறது. 

ஒற்றுமையின் அவசியத்தை, கொள்கைகளுக்கு அப்பால் வலியுறுத்தி நிற்கும், கிழக்குத் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் நலன் சார்ந்த சேவைகளின் மூலோபாயமான சிந்தனையும் வடக்கு, கிழக்கு மக்களின் பலத்தையும் உறுதிப்படுத்துவதற்கும் எடுக்கப்பட்ட ஆரோக்கியமான அரசியல் நகர்வாகவே, இந்த அணுகுமுறை அரசியல் விமர்சகர்களாலும் நோக்கப்படுகின்றது. 

இதுவரை, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக வாய்கிழிய கத்தும், எந்தவோர்அரசியல் கட்சியாக இருந்தாலும் இத்தகைய கைங்கரியம் எவராலும், எந்தக் கட்சியாலும் முன்னெடுக்கப்படவில்லை என்பதையும் அரசயல் விமர்சகர்கள்  சுட்டிக்காட்டியுள்ளனர். 

இந்நிலையில், கிழக்கின் அரசியல் நிலை தொடர்பாக, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்  மன்னார் மாவட்ட அரசியல் பொறுப்பாளர், கிழக்கின் அரசியல் யதார்த்த நிலை தொடர்பாக, ஊடகங்களின் மூலம் வெளிப்படுத்திய கருத்துகள், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது அரசியல் நிலைப்பாட்டில், மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளைத் தங்கள் கட்சிக் கொள்கைக்கு  மேலாக முன்னெடுக்கும் ஜனநாயகப் பண்பை வெளிகாட்டி நிற்கிறது.

அரசியல் கட்சிகளின் ஒற்றுமைக்கு வலுவூட்டக் கூடய, இந்த அணுகுமுறை என்பது, ‘மக்களுக்காகவே அரசியல்’ என்பதாகவே அமையுமே தவிர, ‘அரசியலுக்காக மக்கள் அல்ல’ என்பதை மிக நிதானமாக வெளிக்காட்டி நிற்கிறது. 

உண்மையில், தமிழ்த் தேசிய அரசியல், விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றுப் பதிவுகளில் இத்தகைய முன்மாதிரியான முன்னெடுப்புகள் பதியப்பட வேண்டும். 

ஏனெனில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியானது கொள்கை ரீதியாக அன்றி, செயற்பாடுகள் ரீதியாக முரண்பட்டு, வெளியேறிச் சென்றது என்பதுவே கடந்த கால நிகழ்வாகும். ஆயினும், அச் செயற்பாடு அல்லது விலகலானது, கட்சி நலன் சார்ந்த ஒரு விடயமாகவே நோக்கப்பட்டது. 

ஆனால், இத்தகைய போட்டித் தவிர்ப்புகள், பரஸ்பர விட்டுக்கொடுப்புகள் இன்றைய அரசியல் நிலைமைகளில், மிகவும் கருத்தாளமாக ஊன்றிச் சிந்திக்க வேண்டியதாகும். 

அதாவது, கிழக்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்க எடுத்த முடிவானது, விடுதலைப் போராட்டமானது அரசியல் ரீதியாகவும் இனரீதியாகவும் வர்க்க ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை உண்மையாக வேண்டிநிற்பதால்,  அந்த இலக்கை அடைவதற்கான ஒரு விட்டுக்கொடுப்பாகவே இந்த ஆதரவை வெளிக்காட்டி நிற்கிறது. 

தமிழனம், தொடர்ச்சியான இழப்புகளையும் தியாகங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. தாயகக் கனவுகளுக்கான இலட்சிய வேட்கைகள், ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னும் ஓயவில்லை. 

மக்கள் மனங்களுக்குள் பொங்கியும் பொசுங்கியும்  வெந்தும் கொண்டிருக்கின்றனர். நியாயமான அரசியல் தீர்வுகளும் நிம்மதியான வாழ்க்கையும் இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளன.

சர்வதேசம் காப்பாற்றுமா, ஜெனீவா காப்பாற்றுமா, இந்தியா காப்பாற்றுமா, 13 முழுமையாக வருமா, அரசியல்  தீர்வு இன்று வருமா, நாளை வருமா போன்ற நியாயபூர்வமான கனவுகளுடனும் ஏக்கங்களுடனும் ஈடுசெய்ய முடியாத இழப்புகளுடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்குத்தான் இந்த முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். 

ஆனால், தமிழ்த் தேசிய அரசியல், குறுகிய உணர்வையும் உணர்வெழுச்சியையும் வௌிப்படுத்தும்  குதர்க்க அரசியல்வாதிகளுக்கு எவ்வாறு தெரியப்போகிறது; தெரிந்து கொண்டு, எப்போது சரியான பாதையில் பயணிக்கப் போகிறார்கள்.

தேர்தலில் போட்டியிடுவது என்பது, வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே இருக்க வேண்டும். இதுவே, பலரது போராட்டக் கனவுகளாகவும் கொள்கைகளாகவும் இருக்கின்றன. 

இதற்கு மறுதலையான, விசம் நிறைந்த கொள்கைகள், நிராகரிக்கப்படும் போதே, மக்களின் உண்மையான விடுதலை என்பது, அதுவும் அரசியல் விடுதலை என்பது நிதர்சனமாகும்.

எனவே, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது, தற்போதைய அரியல் சூழலில், தமிழ் மக்களின் தனித்துவத்தையும் அவர்களது நீண்ட நாள் அபிலாசைகளையும் பாதுகாக்கப் பயன்படுத்தப்பட வேண்டும். 

துன்பப்படும் மக்களுக்கு, குறைந்தபட்சம் அரசியல் தீர்வாவது கிடைக்க வேண்டும் என்ற சிந்தனை, வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் மனங்களில் என்றும் மறக்கவும் மறைக்கவும் முடியாத உண்மையாக உள்ளது.

ஆனால்,  எமது அரசியல் களநிலைவரங்களும் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளும் ‘விடாக்கண்டன் கொடாக் கண்டன்’ நிலையில் உள்ள, அரசியல் கொள்கைகளற்ற தமிழ்பற்று, தாய்மண் பற்றற்ற செயற்பாடுகளாகவே உள்ளன.

இத்தகைய சிந்தனைகளை மழுங்கடித்து, கிழக்கில் ஒருசிலர் எடுத்த தீர்மானம், மக்களின் அபிமானத்தைப் பெற்றிருப்பது, ஏனைய அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு முன்னுதாரணமாகும்.

எனவே, கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால், மக்கள் நலனுக்காக ஒன்றுபடும் எந்தவோர்அரசியல்வாதியும் எந்தவோர் அரசியல் கட்சியும் மக்களிடமிருந்து பிரிக்க முடியாத ஒரு சக்தியாகத் திகழும். இதை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி செய்திருப்பது, தமிழ்  மக்களால் பெரிதும் பாராட்டப்படுகின்றது. எனவே, அரசியல் தலைவர்கள், இம் முன்மாதிரி குறித்து சற்றுச் சிந்திப்பார்களா? 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .