2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தமிழ்த் தேசியமும் அபிவிருத்தி அரசியலின் தேவையும்

புருஜோத்தமன் தங்கமயில்   / 2020 ஜூலை 01 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்று, சில தினங்களுக்குள்ளேயே நாட்டிலுள்ள முக்கிய ஊடகங்களின் ஆசிரியர்கள், பிரதானிகளை அழைத்து சந்திப்பொன்றை நடத்தினார். அந்தச் சந்திப்பில், யாழ்ப்பாணத்திலிருந்து இயங்கும் ஊடக நிறுவனமொன்றின் முதலாளியும் கலந்து கொண்டிருந்தார்.  

 அந்த ஊடக நிறுவனத்தின் முதலாளி, 2010 முதல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் கூட்டமைப்பின் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.   

வழக்கமாக, ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்களும், பிரதானிகளுமே ஜனாதிபதிகளுடனான இவ்வாறான சந்திப்புகளுக்கு அழைக்கப்படுவதுண்டு. இது, ஜே.ஆர்.ஜெயவர்தன காலத்திலிருந்து தொடர்ந்துவரும் நடைமுறையாகும். ஆனால், குறித்த ஊடக முதலாளி, தன்னுடைய ஊடகத்தின் ஆசிரியரைச் சந்திப்புக்கு அனுப்புவதைத் தவிர்த்துவிட்டு தானே பங்கேற்றார். அதன் பின்னால், பெரிய காரணமும் இருந்தது.   

அந்தச் சந்திப்பில், குறித்த ஊடக முதலாளி, தன்னுடைய வவுனியாவிலுள்ள இரும்புத் தொழிற்சாலைக்கான வரி விலக்கை, கடந்த காலத்தில் நல்லாட்சி அரசாங்கம் வழங்கியதைப் போன்று, புதிய அரசாங்கமும் வழங்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரியிருக்கிறார். ஊடகத்துறையினருடனான உரையாடலில், இவ்வாறான வர்த்தக ஒப்பந்தப் பேச்சை ஒருவர் தோற்றுவிப்பார் என்பதை, சற்றும் எதிர்பார்க்காத கோட்டா சற்றுச் சினத்துடன், “...வர்த்தக விடயங்கள் இங்கு பேசப்பட வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். இவை பற்றி, நீங்கள் பிரதமரிடம் பேசுங்கள்” என்றிருக்கிறார்.   

நிற்க,   

தமிழ்த் தேசிய அரசியல் களம், அரசியல் தீர்வு என்கிற பிரதான விடயத்தை முன்வைத்தே இயங்கி வந்திருக்கின்றது. தமிழ்த் தேசிய அரசியலை, தந்தை செல்வா தலைமையேற்ற காலம் முதல், இன்றைக்கு 70 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், அதுதான் அடிப்படையாக இருக்கின்றது.   

போராட்ட வடிவங்களும், தலைமைகளும் மாறியிருக்கின்றன. அரசியல் தீர்வின் இறுதி அடைவு தொடர்பிலும் கூட, காலங்களுக்கு ஏற்ப சமஷ்டி, தனிநாடு என்கிற மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால், அரசியல் தீர்வு என்கிற விடயம் அடிப்படைக் கோரிக்கையாக இருந்து வருகின்றது.   

பாரம்பரிய அடையாளங்களைக் கொண்ட ஒரு மக்கள் கூட்டமாக, சுயநிர்ணய கோரிக்கைகளுக்குள் இருக்கின்ற போதும், அதற்கான போராட்டம் காலங்கள் தாண்டியும் நீடிக்கின்ற போதும், அந்த மக்கள் கூட்டம் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான விடயங்கள் இருக்கின்றன. குறிப்பாக, பொருளாதாரமும் கல்வியும் சர்வதேச உறவும் அவற்றில் முக்கியமானவை.   

ஒரு சமூத்தைத் திட்டமிட்டு அழிக்க நினைக்கும் தரப்புகள், முதலில் பொருளாதாரத்திலும் கல்வியிலுமே கையை வைக்கின்றன. அதன் பிறகுதான், காணி, நிலத்தை நோக்கி நகர்கின்றன. சிங்கள பௌத்த பெருந்தேசியவாதமும் தமிழ் மக்களுக்கு எதிராக அதைத்தான் செய்து வந்திருக்கின்றது. அதில், சிங்கள ஆட்சியாளர்கள் நினைத்துப் பார்க்காத வெற்றியையும் கண்டிருக்கிறார்கள்.   

அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்தில், தமிழ் மக்கள் தங்களை வெகுவாக அர்ப்பணித்து இருக்கிறார்கள். ஆனால், அந்த அர்ப்பணிப்புக்கான பலன்களை அடைந்திருக்கிறார்களாக என்றால், இல்லை என்பதுதான் பதில். 

அரசியல் உரிமைப் போராட்டத்தோடு, பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட விடயங்களையும் சமஅளவில் தங்களோடு பேணிப் பாதுகாக்கவில்லை; அதற்கான கவனத்தைத் தவறவிட்டு இருக்கிறார்கள் என்பனவும் அதற்கான காரணங்களாகும்.   

ஆயுதப் போராட்ட காலத்தில், கணிசமான தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து இருக்கிறார்கள். உயிர்ப் பாதுகாப்பு, பொருளாதார முன்னேற்றம், கற்றலுக்கான ஆர்வம் உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து, புலம்பெயரக்கூடிய வசதி வாய்ப்புள்ளவர்கள் சென்றிருக்கிறார்கள். அதில் யாரும் தப்பும் சொல்வதற்கு இல்லை.  இப்படியான புலம்பெயர்வு, தமிழர் சார்ந்து பெரும் பொருளாதார முன்னேற்றங்களை, அந்தந்த நாடுகளில் கண்டுமிருக்கின்றது.   

ஆனால் தாயகத்தில், அதாவது, அரசியல் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற களத்தில், பொருளாதாரமும் கல்வியும் யாரும் நினைத்துப் பார்க்க முடியாதளவுக்கு, செங்குத்தான வீழ்ச்சியைப் பதிவு செய்திருக்கின்றது. 

முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான கடந்த 11 ஆண்டுகளில், நலிந்து, அழிந்து போகும் நிலையிலுள்ள வடக்கு, கிழக்கின் பொருளாதாரத்தையும் கல்வியையும் மீளக்கட்டமைப்பதற்கான ஏதாவது கட்டமைப்பு, அடையாள மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றதா என்கிற கேள்வி முக்கியமானது. ஏனெனில், அந்தக் கேள்வியைத் தவிர்த்துவிட்டு, எந்த உரையாடலையும் செய்யவும் முடியாது.   

இந்த இடத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரதான பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டிய கடப்பாட்டோடு இருக்கின்றது. ஏனெனில், கடந்த பத்து ஆண்டுகளாக, தமிழர் அரசியல் பரப்பில் கூட்டமைப்பே தலைமைத் தரப்பு. அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் விடயங்களுக்காக வெளிப்படுத்திய கடப்பாட்டின் ஒரு சதவிகித்தைக்கூட பொருளாதாரம், கல்வி விடயங்களில் கூட்டமைப்பு காட்டியிருக்கவில்லை.   

அரசியல் தீர்வும் பொறுப்புக்கூறல் விடயமும் குறுகிய காலத்துக்குள் நடந்துவிடும் ஒன்றல்ல.  
கூட்டமைப்புக்குள் இருக்கின்ற முக்கியஸ்தர்களில் யாராவது பொருளாதாரம், கல்வி தொடர்பிலான துறைசார் பெரும் அனுபவத்தோடு இருக்கிறார்களா என்றால், யாரும் இல்லை.   

ஆசிரியர்களும் அதிபர்களும் அரச உத்தியோகத்தர்களும் கூட்டமைப்புக்குள் உள்வாங்கப்படுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், அவர்கள் உள்வாங்கப்படுவது என்ன நோக்கத்துக்காக என்று பார்க்கப்பட வேண்டும். வாக்குச் சேகரிப்பு என்கிற ஒற்றை அடிப்படையில்தான் அவர்கள் உள்வாங்கப்படுகிறார்கள். 

ஒரு தேர்ந்த பொருளாதார, கல்விக் கட்டமைப்பை மீள நிறுவிக் கொள்வதற்கான நிபுணர்களைக் கொண்ட அணியொன்றை, கூட்டமைப்பு குறைந்தது நல்லாட்சிக் காலத்திலாவது உருவாக்கியிருக்க வேண்டும். அது, அனைத்து மட்டங்களிலும் ஊடாடல்களைச் செய்திருக்க வேண்டும்.  

இரா.சம்பந்தனையும் எம்.ஏ. சுமந்திரனையும் சுற்றிய கூட்டமைப்பின் திரட்சி என்பது, துறைசார் நிபுணர்கள் போதியளவில் இல்லையென்ற நிலையால் உருவாகிய ஒன்று. கட்சியிலுள்ள அனைவரும் தீர்வு பற்றித்தான் பேசுகிறார்கள். அதுதவிர்ந்து, உடனடியாக மக்கள் எதிர்நோக்கி நிற்கிற பொருளாதார, கல்வி முன்னேற்றங்கள் குறித்துப் பேசுவதற்கு ஆட்களில்லை. அப்படியான கேள்விகளைக் கூட்டமைப்பிலுள்ள யாரும் எதிர்கொள்வதற்கும் தயாரில்லை.   

வடக்கு மாகாண சபையைக் கூட்டமைப்பு வெற்றிகொள்ளும் போது, அதனூடாகவேனும் ஒரு பொருளாதார ‘கல்வி’ சமூக மீள் எழுச்சிக் கட்டமைப்பொன்றைத் தோற்றுவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சி.வி. விக்னேஸ்வரன், 450க்கும் அதிகமான தீர்மானங்களை மாகாண சபையில் நிறைவேற்றியதைத் தவிர வேறு விடயங்களில் கவனம் செலுத்தியிருக்கவில்லை.   

மாறாக, மாகாண சபைக்குள் இருந்து கொண்டும் அதன் எல்லைகளுக்கு அப்பாலான அரசியலைப் பற்றியே பேசிக் கொண்டிருந்து காலத்தைக் கடத்தினார்கள். தெற்கிலுள்ள மாகாண சபைகள், தங்களுக்கான நியதிச் சட்டங்களை உருவாக்கிக் கொண்டு, தமக்கான அதிகாரத்தின் எல்லை வரை சென்று செயற்பட்டிருக்கின்றன. ஆனால், கூட்டமைப்பும் விக்னேஸ்வரனும் குடுமிப்பிடிச் சண்டை போட்டு, ஓய்ந்ததுதான் மிஞ்சியது.   

கூட்டமைப்பிடம் மட்டுந்தான் பொருளாதாரம், கல்வி போன்ற கட்டமைப்புகள் குறித்து, எந்தவித சிந்தனையும் செயலும் இல்லையென்று இல்லை. தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிலுள்ள எந்தக் கட்சியிடமும் இவை குறித்த எந்தப் புரிதலும் இல்லை; இலக்கும் இல்லை. இந்தத் தேர்தல் காலத்திலும் இதையே அவர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.   

ராஜபக்‌ஷக்கள் ஆட்சிக் காலத்தில், அரசியல் தீர்வு குறித்த அடைவுகள், சிறிதும் நகராது என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான், தற்போதைய தேர்தல் பிரசாரங்களில், கூட்டமைப்பின் வேட்பாளர்களை நோக்கி, அதிகம் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அமைச்சுப் பொறுப்புகளை, கூட்டமைப்பு ஏன் பொறுப்பேற்கக் கூடாது என்பது வரையில், கேள்விகள் எழுப்பப்படுகின்றன.  

 ராஜபக்‌ஷக்களுடன் இணைந்து, ஆட்சியில் பங்காளிகள் ஆக வேண்டும் என்று, இந்தப் பத்தியாளர் கூற வரவில்லை. ஆனால், பொருளாதாரம், கல்வி விடயங்களில் ஒரு கட்டமைப்பை உருவாக்கி, கடந்த பத்து ஆண்டுகளில் கூட்டமைப்பு செயற்பட்டிருந்தால், அடைந்திருக்கக் கூடியவை அதிகமாக இருந்திருக்கும்.   

மாறாக, கூட்டமைப்பிலுள்ள தனி நபர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ தமிழ் மக்களிடம் பெற்ற வாக்குகளைக் கொண்டு, தனிப்பட்ட நலன்களை அடைவது என்பது அயோக்கியத்தனமானது.  

 தமிழ்த் தேசிய அரசியலில் ‘வியாழேந்திரன்’கள் புதிதில்லை. ஆனால், உள்ளுக்குள் இருந்துகொண்டே, தங்களின் தனிப்பட்ட நலன்களை நிவர்த்திப்பதற்காக கூட்டமைப்பையும் தமிழ் மக்களையும் கையாளும் நிலை மாற்றப்பட வேண்டும். ஏனெனில், தமிழ் மக்கள் சார் அரசியல் என்பது, சுயநலவாதிகளுக்கானது அல்ல. அது ஒட்டுமொத்த சனக்கூட்டத்துக்குமானது.   
தமிழ் மக்களின் வயிறு, பட்டினியால் எரியும் நிலை மாற்றப்பட வேண்டும். அதுவும், அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்தின் அடிப்படை.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .