2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தேர்தல் வெற்றியில் சிறுபான்மையினருக்கு பங்கில்லையா?

மொஹமட் பாதுஷா   / 2019 நவம்பர் 22 , மு.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில், கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றியைப் பெரும்பான்மையினச் சிங்கள மக்கள் கொண்டாடுகின்ற சூழலில், சஜித் பிரேமதாஸவுக்கு அதிகளவில் வாக்களித்த முஸ்லிம்களும் தமிழர்களும் ஏதோ நடக்கக் கூடாதது நடந்துவிட்டதைப் போல, துக்கம் கொண்டாடுவதைக் காணக் கூடியதாக உள்ளது.   

இத்தருணத்தில், சிறுபான்மைச் சமூகங்கள், தம்மீது தாமே கழிவிரக்கம் கொண்டவர்களாக, காலத்தை வீணே கழிக்காமல், யதார்த்தத்தை உணர்ந்து கொண்டு, இதையும் கடந்து செல்ல வேண்டியிருக்கின்றது.  

உலகில் பிரபலமானதும்   பலமொழிகளிலும் கூறப்படும் ‘இதுவும் கடந்துபோகும்’ என்ற முதுமொழிக்குப் பின்னால், நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த ஒரு ‘சூபிக்’ கதை இருக்கின்றது. ‘வெற்றிகள் மட்டுமல்ல, நாம் எதிர்கொள்கின்ற தோல்விகளும் கடந்துபோகும், என்பதே இக்கதையின் வியாக்கியானமாகும். எனவே, நிஜங்களை விளங்கிக் கொண்டு, அடுத்த அடியை எடுத்து வைப்பதைத் தவிர, சிறுபான்மையினருக்கு வேறு சிறந்த தெரிவுகள் இல்லை.  

இந்த ஜனாதிபதித் தேர்தலில், கோட்டாபய ராஜபக்‌ஷ, 69 இலட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்திருக்கின்ற அதேநேரம், சஜித் பிரேமதாஸ 55 இலட்சம் வாக்குகளைப் பெற்றுத் தோல்வி கண்டிருக்கின்றார்.   

அநுர குமார திஸாநாயக்கவுக்கு, ஐந்து இலட்சம் வாக்குகள் கூடக் கிடைக்கவில்லை. மஹேஷ் சேனாநாயக்க, ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் என்ற சுலோகத்தோடு போட்டியிட்ட எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உட்பட, ஏனைய 32 வேட்பாளர்களும் 40 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற்றிருக்கின்றனர்.  

ஆக மொத்தத்தில், அநுர குமார, சஜித்துக்குக் கிடைக்கும் சாத்தியமிருந்த சிங்கள மக்களின் வாக்குகள் உள்ளடங்கலாகக் கிட்டத்தட்ட 63 இலட்சம் பௌத்தர்களின் வாக்குகளை, கோட்டாபய ராஜபக்‌ஷ அள்ளியிருக்கின்றார். இதன்படி, பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் அவர், ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.   

மறுபுறத்தில், சிறுபான்மை மக்கள் பெருமளவுக்கு சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களித்திருந்தாலும், சிங்கள மக்களின் வாக்குகளைத் தம்வசப்படுத்துவதில் அவர்கள் செய்த தவறின் காரணமாக, சஜித் தோல்விஅடைந்திருக்கின்றார்.  

இலங்கை ஜனநாயகக் குடியரசின் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ எவ்வாறு வெற்றிபெற்றார்? இந்த நாட்டின் ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் சக்தியாக, மார்தட்டிக் கொண்டிருந்த, சிறுபான்மைச் சமூகங்களின் பேராதரவைப் பெற்ற சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கான காரணம் என்ன என்பது பற்றித்தான், அரசியல் அரங்கில் மட்டுமன்றி, சாதாரண மக்களும் பேசிக் கொள்கின்றார்கள்.   

இரு பிரதான வேட்பாளர்களின் வெற்றி அல்லது தோல்வியைத் தீர்மானிக்கக் கூடிய காரணிகள் எவை என்பதைத் தேர்தலுக்கு முன்னரே, இப்பக்கத்தில் வெளியான பத்தியில் பட்டியல் இட்டிருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.  

இந்தத் தேர்தலில் இனவாதம் முக்கியமானதோர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. எல்லாக் காலத்திலும், இனவாதம் ஓர் ஆயுதம்தான்; என்றாலும், இம்முறை நீண்டகால திட்டமிடல்களோடு, சிங்கள மக்களுக்குள் ஆழஊடுருவிச் செல்லும் வகையில் செலுத்தப்பட்டிருக்கின்றது எனலாம்.   

ராஜபக்‌ஷ குடும்பம் ஆட்சிக்கு வந்தால், சிறுபான்மையினருக்கு ஆபத்து என்று, சஜித் ஆதரவு அணியிலிருந்த முஸ்லிம், தமிழ் அரசியல்வாதிகள் அச்சமூட்டினார்களோ, அதேபோல்தான் ‘மொட்டு’ அணியும் தமிழர்களையும் முஸ்லிம்களையும் காட்டி, சிங்கள மக்களிடையே இனவாதப் பிரசாரத்தை மேற்கொண்டது எனலாம்.  

இதுதவிர, ராஜபக்‌ஷ குடும்பத்தில், எல்லோருடைய சேவைகளையும் சிங்கள மக்கள் மத்தியில் சந்தைப்படுத்தக் கூடியநிலையிருந்தபோதும், இந்தப் பக்கத்தில், நல்லாட்சி அரசாங்கத்தினதோ முஸ்லிம், தமிழ் அரசியல்வாதிகளினதோ, ரணில் விக்கிரமசிங்கவினதோ சேவைகளைச் சொல்லி, வாக்குக் கேட்க முடியாத நிலையில், சஜித் பிரேமதாஸவை மட்டுமே விற்கக் கூடியதாக இருந்தது. 

ரணில் - மைத்திரி ஆட்சியில் நிலவிய குழப்பங்கள், செயற்றிறன் அற்ற தன்மை, ‘மொட்டு’ அணியின் அளவுக்கு, ‘அன்னம்’ தரப்பு திட்டமிடல்களை மேற்கொள்ளாமை, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்த பலரே, ஒழுங்காகக் களத்தில் இறங்கி வேலை செய்யாமல் போனமை, சிங்கள மக்களின் மனவோட்டங்களைப் புரிந்து செயற்படுவதில் ஐ.தே.க விட்ட தவறு, ராஜபக்‌ஷக்களைத் தேசத்தின் காவலர்கள் போல, பெருந்தேசிய மக்கள் கருதியமை எனப் பலவிடயங்கள் சஜித்தின் தோல்விக்குக் காரணமாகின.   

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தனது முதலுரையில், “பெரும்பான்மையின மக்களின் பெரும்பான்மை வாக்குகளாலேயே நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளேன்.   
தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் முன்னர் அழைப்பு விடுத்தேன். ஆனால், எனக்கு ஆதரவு வழங்கவில்லை; இப்போது மீண்டும் நாட்டுக்காக இணைந்து செயற்பட அழைப்பு விடுக்கின்றேன்” என்று கூறியிருக்கின்றார். அவர் கூறியிருப்பது, நிதர்சனமான விடயம்தான். ஆனால், இங்கு ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும்.  

முஸ்லிம்களும் தமிழர்களும் ஏன் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க முடிவெடுத்தார்கள் என்பது, ‘மொட்டு’ அணியினருக்குத் தெரியாத விடயமல்ல; ஆனால், முஸ்லிம்களோ, தமிழர்களோ ஹிஸ்புல்லாஹ்வுக்கு வாக்களிக்கவும் இல்லை; சிவாஜிலிங்கத்துக்கு வாக்குப்போடவும் இல்லை.   

இந்த நாட்டின், சிங்கள பௌத்த வேட்பாளரான சஜித் பிரேமதாஸவுக்கே, அதிகளவான வாக்குகளை அளித்திருக்கின்றனர். அத்துடன், முஸ்லிம்கள் இரண்டு தடவை, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வாக்களித்த சமூகம்தான் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.  

இந்தப் பின்னணியில், கோட்டாபய ராஜபக்‌ஷவுக்குச் சிறுபான்மையினர் வாக்களிக்கவில்லை என்றும், எனவே அவர் சிங்கள மக்களுக்கு மட்டுமே உரித்தானவர் என்பது போன்றும், சமூக வலைத்தளங்களில் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இது உண்மையை மறைப்பதுடன், இன்னும் சிறுபான்மையினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான தூரத்தை அதிகரிக்கவே வழிவகுக்கும்.  

பெரும்பாலான சிறுபான்மையினர் சஜித்துக்கு வாக்களித்திருக்கின்றார்கள் என்றாலும், கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு வாக்களிக்கவே இல்லை என்ற பாணியில் கூறப்படும் கருத்துகள் ஏற்றுக் கொள்ள முடியாததும் உண்மைக்குப் புறம்பானதுமாகும்.  

 ஏனெனில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்கள், தமிழர்கள், மலையகத் தமிழர்கள், தென்னிலங்கையில் அங்குமிங்கும் வாழும் முஸ்லிம்கள் எனப் பல இலட்சம் முஸ்லிம்களும் தமிழர்களும் கோட்டாபயவுக்கு வாக்களித்திருக்கின்றார்கள்.  

அந்த வகையில், கிட்டத்தட்ட ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான சிறுபான்மைச் சமூகத்தின் வாக்குகள் இப்போதைய ஜனாதிபதியின் கூடைக்குள் விழுந்திருக்கின்றன.   

இந்த ஐந்து இலட்சம் பேரும், கோட்டாவுக்கு வாக்களிக்காமல், சஜித்துக்கு வாக்களித்தும், அளிக்கப்படாத முஸ்லிம், தமிழர்களின் வாக்குகளும் அன்னத்துக்கு அளிக்கப்பட்டிருந்தால், 50 சதவீதத்துக்கும் அதிமான வெற்றியைப் பெறமுடியாமல் போயிருக்கலாம் என்பதை, சொல்லாமல் விடமுடியாது. எனவே, இந்த வெற்றியில் சிறுபான்மைச் சமூகங்களுக்கும் ஒரு சிறு பங்காவது இருக்கின்றது.  

இவ்வாறு கோட்டாபயவின் வெற்றியில், சிறுபான்மை மக்களுக்குப் பங்கில்லை எனக் காட்டும் விதமாகக் கடும்போக்காளர்களும் மொட்டு ஆதரவு முஸ்லிம் அரசியல்வாதிகளும் கதைவிடுவது, கோட்டாபயவின் வெற்றிக்காக உழைத்த, பல முஸ்லிம் அரசியல் தலைமைகள், தமிழ் அரசியல்வாதிகளையும் மேற்குறிப்பிட்ட பல இலட்சம் வாக்காளர்களையும் கொச்சைப்படுத்துவதற்கு மிக நெருக்கமான செயலாகவே நோக்கப்படும்.  

எனவே, கடந்த காலங்களில் ராஜபக்‌ஷ ஆட்சிக்குத் துணைநின்ற முஸ்லிம்கள், இம்முறை இவ்வாறான ஒரு நிலைப்பாட்டை எடுக்க நேரிட்டது என்பதையும் தமிழர்களின் நம்பிக்கையை இன்னும் அதிகமாக ராஜபக்‌ஷ குடும்பம் வெல்ல வேண்டியிருக்கின்றது என்ற விடயத்தையும் இந்த வாக்களிப்பின் ஊடாகப் புதிய ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டியிருக்கின்றது.  

இதேவேளை, சிங்கள மக்களின் மனங்களைக் கவராத தலைமைத்துவத்தையும் செயலாற்றல் இல்லாத கட்சியையும் வைத்துக் கொண்டு, கிளைக் கட்சிகள் போல முஸ்லிம், தமிழ் கட்சிகளைப் பயன்படுத்துவதன் மூலம் இனியும் அரசியல் செய்வது சாத்தியமில்லை என்பதையும் ஐக்கிய தேசியக் கட்சி விளங்கிக் கொள்ள வேண்டும்.  

இப்போது, கோட்டாபய ராஜபக்‌ஷ இந்தநாட்டின் ஜனாதிபதி. எனவே, அவருக்கு ஒரு மிகப் பெரிய பொறுப்பு இருக்கின்றது. முன்னைய காலங்களில் அவர் எவ்வாறு செயற்பட்டிருந்தாலும் இனி அவர் எல்லாச் சமூகங்களையும் நடுநிலையில் நின்று நோக்க வேண்டியவராக இருக்கின்றார். அவரே சொல்லியிருப்பது போல், வாக்களித்த சிங்கள மக்களுக்கு மாத்திரமன்றி, வாக்களிக்காத முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் அவரேதான் ஜனாதிபதி என்பதை மனதிற் கொண்டு, ஒவ்வொரு காலடியையும் எடுத்து வைக்க வேண்டியுள்ளது.  

இந்த நாட்டில், முஸ்லிம்களது அபிலாசைகளை நிறைவேற்றுவதுடன், இனவாதம் பற்றிய கசப்பான அனுபவங்களோடு அச்சத்தில் உறைந்துள்ள முஸ்லிம் சமூகத்தின் நம்பிக்கையை வெல்வதற்கான முயற்சிகளை, ராஜபக்‌ஷ அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.   

இந்த வெற்றியில், சிறுபான்மையினருக்கும் ஒரு சிறு பங்காவது இருக்கின்றது என்பதை மனதிற்கொண்டு, பெரும்பான்மைச் சமூகத்துக்கும் சிறுபான்மைச் சமூகங்களுக்கும் இடையில் இருக்கின்ற இன முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு, மிகச் சரியான அரச தலைவர் கோட்டாபய ராஜபக்‌ஷதான் என்பதை அவர் உணர்ந்து செயற்பட வேண்டும்.  

இந்நிலையில், சிறுபான்மையினர் அதிலும் விஷேடமாக முஸ்லிம்களின் வகிபாகம், இந்த ஆட்சியில் எப்படி இருக்கப் போகின்றது. தமிழர்கள் ஓரளவுக்கு எதிர்க்கட்சி அரசியலும் எதிர்ப்பு அரசியலும் செய்து பழக்கப்பட்டு விட்டனர். முஸ்லிம்களுக்கு அவ்வாறான அனுபவம் மிகக் குறைவாகும்.   

எனவே, கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்குக் குறைந்தளவான பங்களிப்பை வழங்கிய முஸ்லிம்களும் தமிழர்களும், வெற்றிக்குப் பின்னரான காலப்பகுதியில் ராஜபக்‌ஷ ஆட்சியில் பங்கேற்காமல் ஒதுங்கியிருப்பது ஆபத்தானதாகும்.  

கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னர் எப்பேர்ப்பட்டவராக கருதப்பட்டாலும் இனிவரும் பல வருடங்களுக்கு அவர் இலங்கையின் மக்கள் ஆணை பெற்ற ஜனாதிபதி என்பதை, முஸ்லிம் சமூகம் ஞாபகத்தில் வைத்துச் செயற்பட வேண்டும்.   

முஸ்லிம்கள் வாக்களிக்கவில்லை என்ற ஆத்திரத்தையும் மீறி, நல்லெண்ண சமிக்ஞை ஒன்றை ஜனாதிபதியும் ஆட்சியாளர்களும் வெளிக்காட்டும் போது, முஸ்லிம்கள் இன்னும் தாமரை இலைமேல் தண்ணீராக இருக்க முடியாது.  

அதற்காக, முஸ்லிம் கட்சிகள், அரசியல்வாதிகள் எல்லோரும் ஆளும் தரப்புக்குத் தாவ வேண்டும் என்பதில்லை. மாறாக, ராஜபக்‌ஷ அரசாங்கம் செய்கின்ற நல்ல பணிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும்.  

 நாங்கள் ரணிலோடுதான் காலம்முழுக்க இருப்போம் என்றோ, நாங்கள் மஹிந்தவோடுதான் காலங்கடத்துவோம் என்று எந்த முஸ்லிம் அரசியல்வாதி நினைத்தாலும் அது ஒருவிதமான அரசியல் அடிமைத்தன மனநிலையாகும்.  

எனவே, சரியை யார் செய்தாலும் பிழையை எவர் செய்தாலும், சரியைச் சரியென்றும் பிழையைப் பிழையென்றும் சொல்லும் அரசியல் கலாசாரத்தை முஸ்லிம் தலைவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.   

முஸ்லிம் சமூகத்துக்கு யாரேனும் ஓர் ஆட்சியாளரிடம் இருந்து ஏதேனும் அனுகூலங்கள், வரப்பிரசாதங்கள் கிடைக்குமாயின் அதைப் பெற்றுக் கொடுப்பதே சாணக்கியமும் சரியான வியூகமும் ஆகும்.  

முஸ்லிம்களின் நீண்டகாலப் பிரச்சினைகள், அபிலாசைகளை ஒரு அரசாங்கத்திடமிருந்து நிறைவேற்றிப் பெற வேண்டுமாயின் அதற்கு மிகப் பொருத்தமான ஆட்சி இப்போது பெரும்பான்மை மக்களின் பேராதரவுடன் தற்போது நிறுவப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்‌ஷ, மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஆட்சியாகும். நினைத்ததை செய்யக்கூடிய தைரியமும் ஆளுமையும் அவர்களுக்கு இருக்கின்றது.   

ஆதலால், ஒரு வித்தியாசமான ஆட்சியை நடத்தப் போவதாக கூறிவரும் ராஜபக்‌ஷ அரசாங்கத்துடன் முஸ்லிம் சமூகம் நல்லுறவைப் பேணுவதே நல்லது. அவசியம் ஏற்பட்டாலொழிய, தேவையில்லாமல் முரண்படத் தேவையில்லை. அவ்வாறு முரண்டுபிடிப்பதால் அனுகூலங்களை சிக்கல்களையே முஸ்லிம்கள் சந்திக்க நேரிடும்.  

விரைவில் கலைக்கப்படும் கடும்போக்கு அமைப்புகள்

கடந்த ஆறேழு வருடங்களாக நாட்டில் இடம்பெற்ற இனவாதப் பிரசாரங்கள் மற்றும் இனவெறுப்புச் செயற்பாடுகளுக்கு முன்னின்ற இரு கடும்போக்கு அமைப்புகள், தமது செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவந்து, சங்கத்தை கலைக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.  

நாம் எதிர்பார்த்த சிங்களப் பௌத்த தலைவர் ஒருவர், இந்த நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு விட்டார்; இனி நாம் ஓர் அமைப்பாக இயங்க வேண்டிய அவசியமில்லை என்று பொதுபலசேனாவும் அதனைத் தொடந்து சி ங்கள ராவய அமைப்புக்கள் அறிவித்துள்ளன.  

உண்மையிலேயே, இந்த நாட்டின் இனவாத பிரசாரங்கள், நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று பல வருடங்களாக குறிப்பாக முஸ்லிம்கள் அவாவி நிற்கின்றனர்.   

அந்த வகையில், இவ்வாறு இனவாதத்துக்குப் பெயர்போன அமைப்புகள் தமது கடைகளை மூடுவது முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி நாட்டில் வாழும் இனவெறுப்புக்கு எதிரான அனைத்து மக்களுக்கும் ஆறுதலான செய்திதான்.  

ஆனால், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட உடனேயே, எமது இலக்கு அடையப்பட்டு விட்டது என்ற தோரணையில் சங்கத்தை கலைப்பதாக அறிவித்துள்ளமை, முஸ்லிம்களுக்கு இன்னுமோர் ஐயப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.  

அதாவது, ராஜபக்ச போன்ற ஒரு சிங்களத் தலைவரை ஜனாதிபதியாக்க வேண்டும் என்பதற்காக இவ்வமைப்புகள் உருவாக்கப்பட்டனவா அல்லது முன்னரே பேசப்பட்டதைப் போல இவரை ஆட்சிக்கு கொண்டு வரும் மறைமுக நோக்கோடு வளர விடப்பட்டனவா என்பதுதான் அந்தச் சந்தேகமாகும்.  

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் பேருவளை, அளுத்கம கலவரம் இடம்பெற்ற போதும், பின்னர் மைத்திரி  ரணில் ஆட்சியில் திகண, அம்பாறை, மினுவாங்கொடை கலவரங்கள் இடம்பெற்ற வேளையிலும் மேற்குறிப்பிட்ட அமைப்புகள் களத்தில் நின்றன. ஞானசார தேரர், மாகல்ககந்தே தேரர் உள்ளிட்ட பலர் இனவெறுப்பு கருத்துகளைத் தெரிவித்தனர்.   

ஆனால், அன்று பாதுகாப்புச் செயலாளராக இருந்த இன்றைய ஜனாதிபதியாலோ, பாதுகாப்பு அமைச்சராகப் பின்னர் பதவிவகித்த ரணில் விக்கிரமசிங்கவாலோ மேற்சொன்ன இனவாத நடவடிக்கைக்காக அந்த காவியுடைதாரிகளை சிறையிலடைக்க முடியவில்லை.

எக்னலியகொட வழக்கில் சிறைக்குச் சென்ற ஞானசார தேரருக்கும் பின்னர் மைத்திரி மன்னிப்பு வழங்கினார்.  

இவ்வாறு எந்த ஆட்சியாளர்களாலும் முடிவுக்கு கொண்டுவர முடியாதிருந்த இனவாத அமைப்புகளின் செயற்பாட்டை இன்று அவர்களே, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு முடிவுறுத்தவுள்ளதாக பகிரங்கமாகவே அறிவித்திருக்கின்றமை கவனிக்கத்தக்கது.  

ஒன்றில், இவ்வமைப்புகள் கற்பிதம் சொல்வது போல, அவர்கள் திருப்திப்படக்கூடிய ஒரு பௌத்த தலைவரையே அவர்கள் எதிர்பார்த்து செயற்பட்டிருக்கின்றனர். அல்லது, முன்னமே அவதானிகள் எதிர்வுகூறியதைப் போல மிகத் தெளிவான அரசியல் நோக்கங்களுக்காக இவ்வமைப்புகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.  

எது எவ்வாறெனினும், முஸ்லிம்கள், தமிழர்களின் மத்தியில் இனவாதிகளாக சித்திரிக்கப்பட்ட ராஜபக்சக்கள் அதிகாரத்துக்கு வந்துள்ள சூழலில், இனவாத அமைப்புகள் கலைக்கப்படுவது மட்டுமன்றி, இனவாத செயற்பாடுகளும் முடிவுக்கு கொண்டு வரப்படுமாயின், முஸ்லிம்கள் சற்று ஆறுதலடைவார்கள் என்பது மட்டும் நிச்சமயானது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .