2024 மார்ச் 28, வியாழக்கிழமை

திருவிழா முடிந்தது... சோற்றுக்கு என்ன வழி?

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   / 2020 ஓகஸ்ட் 07 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் திருவிழா முடிந்தது. தேர்தல் வாக்குறுதிகளும் இத்தோடு முடிந்துபோம். இனிக் கொஞ்சம் நிதானமாகச் சிந்திப்போம். 

கொவிட்-19 தொற்றுக் காலத்தில், இலங்கை பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கிறது. கடந்த ஒருமாத கால தேர்தல் பிரசாரங்கள், நெருக்கடிகளை உருமறைப்புச் செய்து, மக்களின் கவனத்தைக் கச்சிதமாகத் திசைதிருப்பி இருக்கின்றன. ஆனால், அவை ஒவ்வொன்றாக, இலங்கையர்களைப் பாதிக்கும். அந்தப் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு, நாம் தயாராக இருக்கிறோமா?

நடந்து முடிந்துள்ள தேர்தல், இனங்களுக்கு இடையே ஒற்றுமையை வளர்ப்பதற்குப் பதிலாக, இனமுரண்பாடுகளைக் கூர்மையாக்கி உள்ளது. இது எதிர்பார்த்ததே!

ஒருபுறம், சிங்கள பௌத்த தேசியவாதத்தின் சிறந்த காவலர்கள் யார் என்ற போட்டியில், பிரதான சிங்களக் கட்சிகள் களமிறங்க, மறுபுறம், தமிழ்த் தேசியத்தின் காவலர்கள் யார் என்ற போட்டியில், தமிழ்க் கட்சிகள் போட்டியிட்டன. இன்னொருபுறம், தமிழ்-முஸ்லிம் உறவை, வெகுவாகப் பாதிக்கும் வகையில், கிழக்கில் காட்சிகள் அரங்கேறின. 

தமிழ்த் தேசியம் போலவே, முஸ்லிம் தேசியமும் பிளவுபட்டு, வாக்குவங்கி அரசியலுக்குள் சிக்கித் தவிக்கிறது. மலையகத் தமிழரது அரசியல், சமரச-சலுகை அரசியலுக்குள் தன்னைச் சீரழித்து, அதிலிருந்து மீள இயலவில்லை. உருவான மாற்றுகளும், அதே சேற்றுக்குள் தம்மைப் புதைத்ததைவிட, அப்பால் எதையும் சாதிக்கவில்லை. 

உணர்ச்சிகரத் தேசியவாதங்கள் தூண்டப்பட்ட வீராவேசப் பேச்சுகள் முடிவுக்கு வந்தாலும், அவை ஏற்படுத்திய தாக்கம் பெரிது. சமூகங்களுக்கிடையே இனப்பகையும் துவேசமும் தூண்டப்பட்டுள்ளன. 

பெருந்தேசிய அகங்காரம், புதிய கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் ஆபத்துக்கு உள்ளாகியுள்ள சிறுபான்மை இனங்கள், தங்களுக்குள் முரண்பட்டு நிற்கின்றன. தேர்தல் அரசியல், சிறுபான்மையினருக்கு அளித்துள்ள மோசமான பரிசுகளில், இது முதன்மையானது. 

பிரச்சினைகளை, மற்றவர்களுடைய கண்ணோட்டத்திலும் விளங்குவதன் மூலமே, அமைதியான தீர்வுகளைப் பெற இயலும். மதவாதமாயினும் தேசியவாதமாயினும் இனவாதமாயினும், அவை, அவ்வாறான ஒரு விரிந்த பார்வையை மறுக்கின்றன. 

குறிப்பிட்ட ஒரு தரப்பின் நலன்களை மட்டுமே வலியுறுத்துகின்ற எவரும், சரி எது, பிழை எது என்றோ, நியாயம் எது, அநியாயம் எது என்றோ, சிந்திக்க விரும்பாதவர்களாவர். 

எந்தப் பிரச்சினையிலும், மற்றவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, நாமே தீர்ப்பு வழங்குவது எளிது. ஆனால், நமது முடிவுகள், மற்றவர்களுக்கு ஏற்புடையனவாக இருக்கும் வாய்ப்பு அரிது.

இன்று, நாடு பல நெருக்கடிகளை ஒருங்கே எதிர்கொள்கிறது. இவற்றைத் தீர்ப்பதற்கோ, இவை குறித்து, திறந்த மனதுடன் பேசுவதற்கோ, எந்தவொரு தேசியவாதமும் தயாராக இல்லை. நெருக்கடிகளுக்கான பதில், எந்தத் தேசியவாதத்திடமும் இல்லை. 

ஒன்றுக்கு ஒன்று, எதிரெதிர்த் திசையில் செயற்படுவதன் மூலம், தேசியவாதங்கள் தம்மைத் தக்கவைக்கின்றன. இதன் மூலம், அடிப்படைப் பிரச்சினைகளை மடைமாற்றுவதில் வெற்றியடைகின்றன. 

இலங்கை மிகப்பாரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது. இதற்குக் குறுகிய காலத்தில், தீர்வு காணவியலாது. நீண்ட காலத்தில் தீர்வுகாண்பதற்கான திட்டங்கள், அரசாங்கத்திடமோ,  தெரிவாகவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களிடமோ இருப்பதாகத் தெரியவில்லை. இந்த அவலநிலையை, தேர்தல் பிரசாரங்கள் வெளிக்காட்டின. 

2013ஆம் ஆண்டுமுதல், பொருளாதாரக் குறிகாட்டிகள், மோசமான சரிவைச் சந்தித்து வருகின்றன. அதைத் தொடர்ந்து, இரண்டு ஆட்சி மாற்றங்களை, நாடு கண்டுவிட்டது. எதிர்த்தரப்பின் மீது, பழிபோட்டுத் தப்பித்துக் கொள்வதையே, ஆட்சியாளர்கள் வழமையாக வைத்திருக்கிறார்கள். 

கடந்த மாத முற்பகுதியில், உயர், நடுத்தர வருமானம் உள்ள நாடுகளின் பட்டியலில் இருந்த இலங்கையை, குறைந்த, நடுத்தர வருமானம் உள்ள நாடுகளின் பட்டியலுக்கு, உலக வங்கி  தரமிறக்கியது. இது, இலங்கைப் பொருளாதாரத்தின் மோசமான நிலையை எடுத்துக் காட்டும் ஒரு குறிகாட்டியாகும். 

அடுத்த ஒருவருடத்துக்குள், இலங்கை திருப்பிச் செலுத்தவேண்டிய அந்நியக் கடன், ஏழு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகம். இதைச் செலுத்துவதற்கான பொருளாதார வலிமை, இலங்கையிடம் இல்லை. எனவே, வேறு வழிகளில் கடன் பெற்றே, கடனைச் செலுத்த வேண்டிய நிலைக்கு, இலங்கை தள்ளப்பட்டுள்ளது. இதையே, இலங்கை பல ஆண்டுகளாகச் செய்து வருகிறது. இது, இலங்கையை மேலும் கடனாளியாக்குகிறது. 

நாட்டின் வரவுக்கும் செலவுக்கும் இடையிலான வேறுபாடு, அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதேவேளை, பணவீக்கம் தொடர்ச்சியாக அதிகரிக்கிறது. தொடர்ச்சியாக அதிகரிக்கும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, திறைசேரி இருப்பில் உள்ள அமெரிக்க டொலர்களைப் புழக்கத்துக்கு விடுவதன் மூலம், அரசாங்கம், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி வருகிறது. இது தொடர்ச்சியாகச் செய்யக்கூடிய ஒன்றல்ல. 

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் நிலையை நன்குணர்ந்தே, அரசாங்கம் அவசர அவசரமாகத் தேர்தல்களை நடத்தி முடித்துள்ளது. புதிய நாடாளுமன்றமோ, உருவாகவுள்ள புதிய அரசாங்கமோ, இந்த நெருக்கடியில் இருந்து மக்களைக் காக்கும் வல்லமை அற்றது என்பதை, தேர்தல் பிரசாரங்களும் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்களும் தெளிவாக்கியுள்ளன. 

இப்போதும் சவால்களையும் நெருக்கடிகளையும் சந்திக்கப்போவது, சாதாரண உழைக்கும் மக்களும் அடித்தட்டு,  நடுத்தரத் தட்டு வர்க்கத்தினருமே ஆவார்கள். 

கொவிட்-19 பெருந்தொற்றை, நாடு வெற்றிகொண்டு விட்டதுபோல் தோற்றம் காட்டினாலும், மருத்துவத்துறையினரும் பொதுச்சுகாதார அலுவலர்களும் தொடர்ந்தும் அச்சம் வெளியிட்ட வண்ணமே உள்ளனர். 

ஏற்கெனவே, மோசமான நிலையில் இருந்த நாட்டின் பொருளாதாரத்தை, கொவிட்-19 பெருந்தொற்று மேலும் மோசமாக்கியுள்ளது. இந்த நோய்த்தொற்றுக் காலத்தில், பலர் தொழில்களை இழந்துள்ளனர். பலருக்கு பணிக்குறைப்பும் சம்பளக் குறைப்பும் நடந்தேறியுள்ளன. 

கொவிட்-19 தொற்றுக்காக, இன்னொரு முழு அடைப்புக்கு, இலங்கை தயாராக இல்லை. ஆனால், இதைக் கையாள்வதில் தொடர்புடைய தரப்பினருக்கு இடையிலான முறுகல் நிலை, நல்ல சமிக்ஞை அல்ல என்பதையும் இங்கு கோடிட்டுக்காட்ட வேண்டும். 

இன்னொருபுறம், கல்வித்துறை பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்குகிறது. ஒருபுறம் கொவிட்-19 தொற்றின் விளைவால், நிகர்நிலை கற்றல் செயற்பாடுகள் ஊக்குவிக்கப்பட்டாலும், அதன் பலன்கள் கேள்விக்கு உரியனவாகவே இருக்கின்றன. 

2018ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்படி, ஐந்து வயது தொடக்கம் 18 வயது வரையானவர்கள் வாழ்கின்ற வீடுகளில், 40 சதவீதமான வீடுகளிலேயே இணைய வசதி இருக்கிறது. 

பல்கலைக்கழகங்களின் இணையக் கல்வி நடவடிக்கைகளில், மாணவர்கள் சிரமத்துடன் பங்குகொள்வதாக விரிவுரையாளர்கள் தெரிவிக்கிறார்கள். இந்தப் புதியமுறை கற்பித்தல் செயற்பாடுகள், ‘மரத்தில் இருந்து விழுந்தவனை, மாடேறி மிதித்த கதை’யாய், பொருளாதார வலுக்குறைந்த மாணவர்களை, மேலும் ஒதுக்குகின்றது. இவை குறித்து, நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். 

கல்வித்துறை போன்றே மருத்துவத்துறையும் பாரிய சிக்கல்களைக் கொண்டுள்ளது. நீண்ட போராட்டங்களின் ஊடு, இலங்கை தக்கவைத்த இலவச மருத்துவமும் இலவசக் கல்வியும் கேள்விக்குறி ஆகியுள்ளன. இதைத் தொடர்ந்தும் தக்கவைப்பதற்கான போராட்டம், இப்போதைய சூழலில் தவிர்க்க முடியாததாயுள்ளது. 

வினைதிறனான சேவை, உயர்தரமான கல்வி என்ற போர்வைகளில் மருத்துவமும் கல்வியும் தனியார் மயமாக்கப்படும் அபாயத்தை, நாம் எதிர்நோக்கி இருக்கிறோம். 

இதேவேளை, சிறுபான்மையினரின் இருப்பே, ஆப்பு வைக்கும் நிகழ்ச்சிநிரல், பலதளங்களில் அரங்கேறுகிறது. அதைத் தடுத்து நிறுத்தும் வல்லமையோ, போராடும் திறனோ சிறுபான்மை நாடாளுமன்றக் கட்சிகளிடம் இல்லை.

சிறுபான்மைத் தேசிய இனங்களின் இன்றைய அரசியல் அவலம், அவர்களிடையே ஒரு மாற்று அரசியல் எழாததன் விளைவு எனலாம். 

மக்களிடையே பல விடயங்களைப் பற்றிய கொதிப்பு உள்ளது. ஆனால், ஒவ்வொரு நிகழ்வையும் தனித்தனியாகக் காண்பதும் அனைத்துக்கும் பொதுவாக உள்ள விடயங்களை அறிவதும், அந்த அடிப்படையில் மக்களைத் திரட்டுவதும் இப்போதுள்ள எந்தவொரு பிரதான சிறுபான்மை அரசியல் கட்சிக்கும் இயலாதது.

ஏனைய எந்தத் தேசிய இனத்தினதும் பிரச்சினை, நமது பிரச்சினையல்ல என்ற அலட்சியம் போக, மற்றைய சமூகத்தினர் எவரையும், நம்ப இயலாது என்ற சிந்தனைப் போக்கும், தமிழரிடையே வலிந்து தூண்டப்படுகின்றது. 

பிறசமூகங்களின் தலைமைகளின் குற்றங்களை நம்மிடையே பேசுகிற அதேவேளை, அக்குற்றங்களுக்கு நமது தலைமைகள் அளித்துள்ள பங்கையும் நாம் யோசிக்க வேண்டும். 

நம்மிடையே, பிறரின் துன்பங்களைப் பற்றி அக்கறைப்படுவது குறைவு. தமிழ்த் தேசியவாத அரசியலில், அது அறவே இல்லை எனலாம். 

மக்கள் அனைவரையும் பாதிக்கின்ற பிரச்சினைகளைப் பற்றிப் பேசி, அவற்றின் அடிப்படையில் இன, மத, மொழி எல்லைகளைத் தாண்டிய ஒரு பொது உரையாடலை, இவர்கள் ஏன் தவிர்க்கிறார்கள் என்பது சிந்தனைக்குரியது.

அதற்கான பதிலின் ஒரு பகுதியை, சம்பூரில் விவசாய நிலங்களை இழந்த தமிழரையும் வடபுலத்தில் மீன் வளத்தை அந்நியக் கொள்ளையரிடம் பறிகொடுக்கும் மீனவர்களையும் புத்தளத்தில் குப்பைகள் கொட்டுவதால் பாதிப்பை எதிர்நோக்கும் மக்களையும் பற்றிய, வஞ்சகமான நடத்தையில் காணலாம். 

தங்களுடைய சுயலாபத்துக்காகத்  தேர்தல் கண்ணோட்டத்தில் செயற்படுவோர், மக்கள் தமது பிரச்சினைகளைப் பன்முகமாக நோக்குவதை விரும்பமாட்டார்கள். அந்தச் சிந்தனைச் சிறையிலிருந்து விடுபடாதவரை, ஒவ்வொரு சமூகமும் தன்னைத் தனிமைப்படுத்திப் பலவீனமடையும்.

தேர்தலில் வென்றவர்களும் தோற்றவர்களும் திருவிழா முடிந்த களைப்பில் இருப்பார்கள். எங்கள் நிலங்களும் தொழிலும் வருமானமும் கல்வியும் மருத்துவமும் பறிபோகும் காலமதில், அடுத்த வேளைச் சோற்றுக்கு வழி என்ன என்பது பற்றி, சிந்திக்கத் தொடங்குவோம். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X