2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தவறவிடப்பட்ட வாய்ப்புகள்

கே. சஞ்சயன்   / 2020 ஓகஸ்ட் 11 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில், பொதுத் தேர்தல் எப்படியோ அமைதியாக நடந்து முடிந்து விட்டது.   

ஆனால், வடக்கு, கிழக்கு தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில், வாக்களிப்பு கணிசமாகக் குறைந்திருக்கிறது.  

ஒன்பது மாதங்களுக்கு முன்னர் நடந்த ஜனாதிபதித் தேர்தலில், சிங்கள பௌத்த மக்கள் தனித்து, ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக விழுந்தடித்துக் கொண்டு வாக்களித்து, அமோக வெற்றியை ஈட்டிக் கொடுத்தார்கள். ஆனால், இந்தப் பொதுத் தேர்தலில், அதிகம் சலித்துப் போயிருக்கிறார்கள்; அல்லது, பயந்து போயிருக்கிறார்கள்.  

குருநாகல் மாவட்டத்தில், 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும் போது, வாக்களிப்பு 15 சதவீதத்தால் சரிந்திருக்கிறது. களுத்துறை, இரத்தினபுரில் 10 சதவீத சரிவு ஏற்பட்டிருக்கிறது.  

ஜனாதிபதித் தேர்தலில், பொதுஜன பெரமுனவின் வாக்கு வங்கியைப் பலப்படுத்திய மாவட்டங்களில், கணிசமான வாக்களிப்பு வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.   

யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு ஆகிய மூன்று மாவட்டங்கள்தான், 2015ஆம் ஆண்டு தேர்தலை விட, அதிகளவு வாக்குகளைப் பதிவு செய்திருக்கின்றன.  

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் மாத்திரம்தான், வாக்களிப்பு வீழ்ச்சிக்குக் காரணம் அல்ல. வாக்காளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நம்பிக்கையீனமும் விரக்தியும் கூட இதற்குக் காரணமாகும்.  

இவ்வாறான ஒரு தேர்தலை, அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதே உண்மை.  

ஜனாதிபதித் தேர்தல் நடந்த சூட்டோடு சூடாக, பொதுத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தால், பொதுஜன பெரமுனவுக்கு இன்னும் கூடுதல் வாக்குகளையும் ஆசனங்களையும் பெறக் கூடிய நிலை இருந்திருக்கும். கடந்த ஏப்ரல் மாதம், திட்டமிட்டபடி தேர்தல் நடத்தியிருந்தால் கூட, இதைவிட அதிக ஆசனங்களை எதிர்பார்த்திருக்க முடியும்.  

கடந்த நவம்பர் மாதம், ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷ வெற்றி பெற்ற பின்னர், “பொற்காலம் மலரப் போகின்றது” என்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. நாடாளுமன்றப் பலம் இல்லை என்று சாக்குப் போக்குச் சொன்ன அவர், பின்னர் நாடாளுமன்றம் இல்லாமல் தற்றுணிபுடன் முடிவுகளை எடுத்திருந்தாலும், பொருளாதாரம், ஏனைய பிரச்சினைகளைக் கையாளுவதில் சரியாக வெற்றி பெறவில்லை.   

கொரோனா வைரஸ் தொற்று, அரசாங்கத்துக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால், சடுதியாக மக்களின் வாழ்க்கைத் தரம் கீழே இழுத்து வீழ்த்தப்பட்டது. இதற்கு, கொரோனா வைரஸை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. அரசாங்கத்தின் கையாலாகாத்தனம், வினைதிறன் இன்மை போன்றவற்றையும் சுட்டிக்காட்டியாக வேண்டும்.  

பொருளாதாரத்தைக் கையாளுவதில், தற்போதைய அரசாங்கத்தின் இயலாமையை இந்த ஒன்பது மாதகால ஆட்சி அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறது.   

இவையெல்லாம், தேர்தலில் மறைமுகமாகத் தாக்கம் செலுத்தக் கூடிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்திருந்தன. ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் விளிம்பில் இருந்து கொண்டு, பொதுத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொண்டிருக்கக் கூடிய அரசாங்கத்துக்கு, கொரோனா வைரஸ் பரவுகை பின்னடைவை ஏற்படுத்தியது.  

ஏனென்றால், ஒன்பது மாதகால ஆட்சி, அடுத்து வரும் ஐந்தாண்டுகளின் மீது, அதிக நம்பிக்கையை வைக்கக் கூடிய வகையில் இருக்கவில்லை. உண்மையில், எதிர்க்கட்சிகளை விட, இந்தத் தேர்தலை அதிகம் பாதகமான சூழ்நிலையில், எதிர்கொண்டது ஆளும்கட்சி தான்.  

எதிர்க்கட்சிகளின் தவறுகளால், இந்தத் தேர்தல் முற்றிலும் ஆளும்கட்சிக்கு சாதகமானதாக மாறிப் போனது. எதிர்க்கட்சிகள், தமக்கிடையில் மோதிக் கொள்வதில் கவனம் செலுத்தினவே தவிர, ஆளும்கட்சியைச் சரியாகக் குறிவைக்கவில்லை.  

குறிப்பாக, ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு, இலங்கையின் அரசியல் தலைவிதியை மாற்றும் வாய்ப்பைத் தவற விடப்பட்டமைக்கு முக்கியமான காரணம் ஆகும். சஜித் பிரேமதாஸ தலைமையில், ஐக்கிய மக்கள் சக்தி தனித்துப் போட்டியிட்டதாலும், இரண்டு கட்சிகளும் தமக்குள் மோதிக் கொண்டதாலும், பொது எதிரியை அவர்களால் கவனிக்க முடியாமல் போனது.  

பொதுஜன பெரமுனவுக்கு இது வசதியாகிப் போனது. கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு போன்ற பல பாதகமான நிலைமைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு, ரணில்- சஜித் மோதல் ராஜபக்‌ஷக்களுக்குக் கை கொடுத்தது.  

ரணில்- சஜித் அணியினர் ஒருவரை ஒருவர் தூற்றிக் கொண்டும், சேறடித்துக் கொண்டும் இருந்த போது, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவோ, சரியான போட்டி இல்லாததால், “இந்தத் தேர்தல் சலிப்பாக இருக்கிறது” என்று, பிரசாரக் கூட்டங்களில் பேசிக் கொண்டிருந்தார்.  

தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டங்கள், முடிவுகள் ஆகியவை கடும் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவையாக இருந்த போதும், அதைப் பிரசாரமாக்குவதற்கு எதிர்க்கட்சிகள் அதிகளவில் நேரத்தைச் செலவிடவில்லை.  

கொரோனா வைரஸ் பரவுகைக்குப் பின்னர், அரசாங்கம் சாதாரண மக்களைக் கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்கவில்லை. அவ்வாறு முடிவு எடுக்கப்பட்டிருந்தால், ஒரு கிலோ மஞ்சள் தூளுக்கு 4,000 ரூபாயை அவர்கள் கொடுக்க வேண்டிய நிலை வந்திருக்காது. 200, 300 ரூபாய்க்குக் கிடைத்த உளுந்தை, அவர்கள் 800, 900 ரூபாயைக் கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.   

கொரோனா வைரஸ் நெருக்கடியின் போது, அரசாங்கம் 65 ரூபாய்க்கு பருப்புக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயித்த போது, அது எத்தனை பேருக்குக் கிடைத்தது? 100 ரூபாய்க்கு ரின் மீனுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்த அரசாங்கத்தால், அதை வழங்க முடிந்ததா?  

அரசாங்கம் வெறுமனே, கட்டுப்பாட்டு விலையை அறிவித்து விட்டு இருந்ததே தவிர, அதைச் செயற்படுத்துவதற்கான பொறிமுறையை உருவாக்கவில்லை.   

நுகர்வோர் அதிகார சபைத் தலைவர் பதவிக்கு, இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சாந்த திஸநாயக்கவை நியமித்தும் கூட, சாதாரண மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை.  

இறக்குமதிகளுக்குத் தடைவிதித்ததன் மூலம், சாதாரண மக்களின் நுகர்வுப் பொருள்களாக இருந்தவையும் கூட, இப்போது, வசதி படைத்தவர்களால் கூட நுகர முடியாத பொருள்களாக மாறியிருக்கின்றன.  

கடந்த ஆறு மாதங்களுக்குள், நாட்டின் பொருளாதாரம் மிகமோசமான பாதிப்பைச் சந்தித்திருக்கிறது. இந்தப் பாதிப்பில் இருந்து, புதிய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிந்தாலும் மீள முடியாது. ஏனென்றால், இந்தக் காலகட்டத்தில் ஏராளமான தொழில்கள் கைவிடப்பட்டுள்ளன; உற்பத்திகள் முடங்கியுள்ளன; இலட்சக்கணக்கானோர் வேலையை இழந்து போயுள்ளனர். இதற்கு முன்னர், வேலையை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள் தான் இருந்தனர். இப்போது, இருந்த வேலையையும் இழந்து போயிருப்பவர்கள் தான் அதிகம்.  

இவர்களுக்கான தொழில்வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பது, வாழ்வாதாரத்தை உயர்த்துவது, பொருளாதார நிலையை உறுதிப்படுத்துவது என்று, எதையும் செய்ய முடியாத நிலையில் அரசாங்கம் இருக்கிறது.  

தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் தான், நாட்டின் பொருளாதாரத்தை நிமிர்த்த முடியும் என்று பிரசாரம் செய்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்தப் பிரசாரத்தைச் சரியாக முன்னெடுக்கவுமில்லை; நம்பிக்கையை ஏற்படுத்தவுமில்லை.  

தேர்தல்களில் எல்லாப் பிரச்சினைகளையும் விட அதிகளவில் எதிரொலிக்கக் கூடியது பொருளாதாரப் பிரச்சினைகள் தான். அரசியல் பிரச்சினைகளை விட, இதற்குச் சக்தி அதிகம். ஏனென்றால், பொருளாதாரப் பிரச்சினை என்பது, சாதாரண மக்களின் வயிற்றுடன் தொடர்புடையது.  

கொரோனா வைரஸ் முடக்க காலம், பெரும்பாலான மக்களின் வயிற்றில் அடிக்கத் தவறவில்லை. மூன்று வேளை சாப்பிட்டவர்களில் பலர், இரண்டு நேரம் சாப்பிடவே கஸ்டப்பட்டனர். இந்நிலைமை, கொரோனா வைரஸ் பரவுகையால் வந்த நிலை அல்ல; பொருளாதாரத்தைக் கையாளுவதில் ஏற்பட்ட தவறால் வந்த நிலை ஆகும்.   

இத்தகைய நிலைமையை, எதிர்க்கட்சிகள் சரியாக மக்களின் முன்பாகக் கொண்டு சென்றிருந்தால், அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளியிருக்கலாம். அந்தப் பொன்னான வாய்ப்பை, எதிர்க்கட்சிகள் தவற விட்டு விட்டன. வாய்ப்புகள் எப்போதும் வருவதில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்டு, இழுத்தடித்துச் சென்ற போது, அரசாங்கமே கலக்கமடைந்தது.  

இவ்வாறான வாய்ப்பை, எதிர்க்கட்சிகள் உள்மோதலுக்கே பயன்படுத்திக் கொண்டன. அந்த வாய்ப்பு பொது எதிரியை வீழ்த்துவதற்கு, பொது எதிரியைப் பலவீனப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டு இருக்கவில்லை.  

வரலாறு எப்போதும் மனிதனுக்குப் படிப்பினைகளைத் தந்து கொண்டே செல்லும். அந்தப் படிப்பினைகளில் இருந்து, பாடம் கற்றுக் கொள்பவனால் தான், வெற்றி பெற முடியும்.  

எதிர்க்கட்சிகள் அந்தப் பாடத்தைக் கற்றுக் கொள்ளத் தவறியதன் விளைவு தான், இந்தத் தேர்தல் முடிவு எனலாம்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .