2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘தவளை’களில் எவ்வளவு தவறு?

Gopikrishna Kanagalingam   / 2018 டிசெம்பர் 06 , மு.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் அண்மைய வாரங்களில் நிலவிய, நிலவிவரும் அரசியல் நெருக்கடிகள் காரணமாக, அரசியல் பற்றிய விழிப்புணர்வு, மக்களிடத்தில் அதிகரித்திருந்தது. இந்த அரசியல் நெருக்கடியின் ஏனைய பாதிப்புகளெல்லாம் வேறு விதத்தில் இருந்தாலும், அரசியல் விழிப்புள்ள சமூகமொன்றை அடையாளங்காட்டியதில், இந்தப் பிரச்சினைகளில் காரண கர்த்தாக்களாகிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோருக்கு நன்றி செலுத்த வேண்டியிருக்கிறது.  

இப்படியான காலகட்டத்தில், பணத்துக்காகவோ அல்லது வேறு சலுகைகளுக்காகவோ, ஒரு பகுதியிலிருந்து மற்றைய பகுதிக்கு மாறியோரைப் பற்றிய விமர்சனங்களும் அதிகரித்திருந்தது. இப்படியாகத் தாவியவர்களை, “தவளைகள்” என்று, பரவலான ரீதியில் விமர்சனங்களை வழங்கியமையையும் காணக்கூடியதாக இருந்தது.  

இந்த நிலையில் தான், இந்தத் தவளைகள் பற்றிப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால், அண்மைக்கால அரசியல் அவதானிப்புகளில் அநேகமானவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்‌ஷ, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும் அரசமைப்பையும் சுற்றியே காணப்பட்டது. இந்தத் தவளைகளை, இன்னும் சிறிது காலத்தில் நாம் மறந்துவிடக் கூடும்.  

தவளைகள் என்று வரும் போது, வசந்த சேனாநாயக்க, வடிவேல் சுரேஷ் போன்ற, ஒரு சில நாள்களில் இரண்டு பகுதிகளுக்கும் தாவியோரை விட்டுவிடுவோம். அவர்களைப் பற்றிய ஆய்வென்பது பொருத்தமற்றது. வேண்டுமானால், வைத்தியசாலையின் எக்ஸ்-கதிர் அறைக்குக் கூட்டிச் சென்று, முள்ளந்தண்டின் பாதிப்புகளைப் பற்றிய எக்ஸ்-கதிர் ஆய்வை மேற்கொள்ள வேண்டும். சில வேளைகளில், முள்ளந்தண்டிலி அல்லது முதுகெலும்பிலி என்று முடிவு கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.  
எனவே, இப்பகுதியில், வியாழேந்திரன் போன்ற, ஒரு தடவை அல்லது இரண்டு தடவைகள் கட்சி மாறிய தவளைகளைப் பற்றிப் பார்ப்பது தான் சரியாக இருக்கும்.  

இவர்களைப் பற்றிய விமர்சனத்தை முன்வைக்கும் போது, “பணத்துக்காகச் சோரம் போனவர்கள்” என்ற விமர்சனம், முக்கியமாக முன்வைக்கப்பட்டது. மஹிந்த தரப்புக்கு ஆதரவு வழங்குவதற்காக இவர்கள் பணம் பெற்றுக்கொண்டமை உண்மையானால் (அப்படி இருக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளனவென, இதுவரை எமக்குள்ள ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், சந்தேகத்தின் பலனை அவர்களுக்கு வழங்குவோம்), அந்த விமர்சனம் நியாயமானது தான். ஒரு கொள்கைக்காக வாக்குகளை வாங்கிவிட்டு, இன்னொரு தரப்புக்காக, பணத்தையோ அல்லது வேறு சலுகைகளையோ பெற்றுக்கொண்டு, வாக்களித்த மக்களின் விருப்புகளுக்கு எதிராகச் செயற்படுவது, மன்னிக்கப்பட முடியாத ஒரு குற்றம் தான். அதில் மாற்றுக் கருத்துகள் இருக்கத் தேவையில்லை.  

பணம் பரிமாறப்பட்டமை தொடர்பில், பல்வேறு தகவல்கள் வந்தன. ஐ.தே.கவின் ரங்கே பண்டார எம்.பி, தனக்குப் பணம் வழங்க முன்வந்ததாக, பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார். அத்தோடு, தனக்கும் எஸ்.பி. திஸாநாயக்க எம்.பிக்கும் இடையில் காணப்பட்ட உரையாடலின் ஒலிப்பதிவையும் அவர் வழங்கியிருந்தார். இன்னும் பல தரப்புகளும், அவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்தன. சில நாள்களுக்கு முன்னர் கருத்துத் தெரிவித்திருந்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா எம்.பி, 60 மில்லியன் ரூபாய் முதல் 500 மில்லியன் ரூபாய் வரை, தன்னிடம் பேரம்பேசப்பட்டது எனத் தெரிவித்தார்.  

தன்னை நல்லவர் என்று காட்டிக்கொள்ளவோ அல்லது தனக்கு இவ்வளவு பெறுமதி இருக்கிறது என்று காட்டிக்கொள்ளவோ, சாந்தி எம்.பி அவ்வாறு தெரிவித்தார் என, விமர்சகர்கள் கூறலாம். ஆனால், 500 மில்லியன் ரூபாய் வரை இலஞ்சம் பேசப்பட்டது என்பதை, ஜனாதிபதி சிறிசேனவே, நாட்டு மக்களுக்கு அறிவித்திருக்கிறார். எனவே, சாந்தி எம்.பியின் குற்றச்சாட்டுகளை நம்பாமலிருப்பதற்கு எந்தவிதக் காரணமும் இல்லை.  

இந்த நிலையில் தான், எம்மை நாமே, எமது மனசாட்சிக்கு உட்பட்டுக் கேட்க வேண்டிய கேள்வியொன்று இருக்கிறது: “நாடாளுமன்ற உறுப்பினராக நானிருந்து, எனக்கு 500 மில்லியன் ரூபாய் தரப்பட்டால், மற்றைய தரப்புக்கு நான் தாவுவேனா, மாட்டேனா?”.  

இந்தக் கேள்விக்கான பதிலை வழங்குவதற்கு முன்பாக, சில தரவுகளையும் கூறிவிடுவது முக்கியமானது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான மாதாந்த ஊதியமும் கொடுப்பனவுகளும், சில இலட்சம் ரூபாய்களைத் தாண்டிச் செல்லாது. இலங்கையில் இறுதியாக வெளியிடப்பட்ட, வருமானம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, குடும்பமொன்றுக்கான மாதாந்த சராசரி வருமானம், 62,237 ரூபாயாகும் (இடைநிலை வருமானம், 43,511 ரூபாயாகும் என்பதையும் கவனிக்குக). நாடாளுமன்றத்துக்கு, மிகப்பெரிய தொழில்களை மேற்கொண்டுவிட்டுச் செல்பவர்கள் ஒருபக்கமாகவிருக்க, நாட்கூலிகள் போன்று வாழ்க்கையின் பெரும்பாகத்தைக் கழித்துவிட்டு நாடாளுமன்றம் செல்பவர்களுக்கு, பணமென்பது மிகப்பெரிய ஒன்று. இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டுவிட்டு, மேற்படி கேள்விக்கான பதிலைத் தேடுதல் அவசியமானது.  

மேற்படி கேள்வியின் அர்த்தம், பணம் பெறுவது சரியானது என்பதல்ல. பணம் பெறுவது, இலங்கையின் சட்டத்துக்கு எதிரானது; குற்றம்; அதற்கெதிரான தண்டனைகள் வழங்கப்படுவது அவசியமானது. இவற்றில் எந்த மாற்றுக் கருத்துகளும் இல்லை. ஆனால், முக்கியமானதொரு கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது: இப்படியாகப் பணத்தைப் பெறுபவர்கள், நோயாக இருக்கிறார்களா, இல்லாவிட்டால் நோய்க்கான அறிகுறியாக அவர்கள் இருக்கிறார்களா?  

இவர்கள், வெறுமனே நோய் அறிகுறியென்பதில் எச்சந்தேகமும் இல்லை. காலங்காலமாக, நோய் அறிகுறிகளைக் குணப்படுத்துவதற்கு எவ்வளவோ முயன்றிருக்கிறோம்; நோயைக் குணப்படுத்துவதற்கு நாம் முயன்றதில்லை என்பது தான் உண்மையானது.  

இலங்கையின் மொத்தத் தேசிய உற்பத்தி, சுமார் 90 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலராகக் கருதப்படுகிறது. வீழ்ச்சியடைந்த தற்போதைய ரூபாயின்படி, அது, 16 ட்ரில்லியன் 117 பில்லியன் 200 மில்லியன் ரூபாயாகும். இப்படியாகச் சிறிய பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கையில், 500 மில்லியன் ரூபாய் என்பது, சாதாரண மனிதர்களால் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு தொகை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.  

இப்படியான பின்னணியில் நாம் கேட்க வேண்டிய கேள்விகளாக, இவ்வாறான ஊழலும் இலஞ்சமும் இலங்கையில் நிலவுவதற்கு என்ன காரணம்? இப்படி மிகப்பெரிய தொகைகள் பரிமாறுவதைப் பற்றி, பெருமளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்?  

இலங்கையின் சட்ட அமுலாக்கத் துறை, அண்மைக்காலத்தில் என்னதான் சுயாதீனமாக மாறியிருந்தாலும் கூட, மிகப்பெரிய அரசியல் தலைகளை ஆட்டுவிக்கும் அளவுக்கு, அது முன்னேறவில்லை என்பது தான் உண்மையானது. தன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்து வந்த சி.ஐ.டி அதிகாரியை, அதுவும் சிங்கள அதிகாரியை, தமிழீழ விடுதலைப் புலிகளோடு சம்பந்தப்பட்டவர் என, நாட்டின் உயர்நிலைப் படை அதிகாரி, நாட்டின் ஜனாதிபதியின் முன்னிலையில், தேசிய பாதுகாப்புச் சபையில் குற்றஞ்சாட்டி, குறித்த அதிகாரியை இடமாற்றம் செய்யுமளவுக்குத் தான், நாட்டின் நிலைமை இருக்கிறது.  

இப்படியான நிலைமையிருக்கும் போது, நாட்டின் முக்கிய அரசியல்வாதிகளின் நேரடி வழிகாட்டலில், இல்லாவிட்டால் நேரடியான/மறைமுக ஆதரவுடன் இடம்பெறும் இந்தப் பணப்பரிமாற்றங்களை எப்படி அவர்கள் பிடிக்கப் போகிறார்கள்?  

அதேபோல், இலங்கையின் தேர்தல் கட்டமைப்பு, தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு இலகுவானதல்ல. பல மில்லியன் ரூபாய்களை “முதலிட்டு” தான், தேர்தலில் போட்டியிட வேண்டியிருக்கிறது. அப்படிப் பணத்தை “முதலிட்டவர்கள்”, அந்த “முதலீட்டுக்கான இலாபத்தை”, எப்படியாவது பெற்றுவிட வேண்டுமெனத் துடிப்பதொன்றும் ஆச்சரியமில்லை. எனவே, பணத்தை இறைத்துத் தான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற இந்தக் கட்டமைப்பையும் மாற்றுவது அவசியமானது.  

அதேபோல், இலங்கையின் தேர்தல் சட்டத்தில், தேர்தல் பிரசாரத்துக்கான நிதிச் செலவீனம் தொடர்பாகக் கட்டுப்பாடுகளை விதிக்கும் ஏற்பாடுகள் மிகக் குறைவாக உள்ளன. அதற்கான முயற்சிகளை, நாடாளுமன்ற உறுப்பினர்களும் எடுப்பதில்லை. தங்களது மோசடிகளைக் கட்டுப்படுத்தும் சட்ட ஏற்பாடுகளை, அவர்களாகக் கொண்டுவருவார்கள் என எதிர்பார்ப்பதும், ஒரு வகையில் முட்டாள்தனமானது தான். இதற்கு, மக்களின் உச்சக்கட்ட அழுத்தம் தேவைப்படுகிறது.  

இப்படி, பல துறைகளில் காணப்படும் பிரச்சினைகளையும் குறைபாடுகளையும் தீர்ப்பதற்கான முயற்சிகளை எடுக்காமல், “தவளை”களை மாத்திரம் தண்டிப்பதென்பது, பெரிதளவுக்குப் பயனைத் தராது. அதற்காக, “தவளை”களைத் தண்டிக்கக்கூடாது என்றில்லை; ஆனால், “தவளை”களைத் தண்டிப்பதோடு கடமை முடிந்துவிட்டது என்றெண்ணுவது முட்டாள்தனமென்பது தான், ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒன்றாகவுள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .