2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தி. மு. கழகத்தை திணறடித்துள்ள தமிழக இடைத்தேர்தல் வெற்றி

எம். காசிநாதன்   / 2018 ஜனவரி 02 , பி.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.கே நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில், சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கிய 
டி.டி.வி தினகரன், 40 ஆயிரத்து 407 வாக்குகள் வித்தியாசத்தில், வெற்றி பெற்றிருப்பது, பல அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.   

இடைத்தேர்தல் ஒன்று, ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியத்தையும் பிரதான எதிர்க்கட்சிக்குக் கலக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கும் என்றால், அது ஆர்.கேநகர் சட்டமன்ற இடைத்தேர்தலாகத்தான் இருக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.   

2004இல் நடைபெற்ற மங்களூர் சட்டமன்ற இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.கவை எதிர்த்து, திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது. ஆனால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பிரபலமான இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்ட ஆளுங்கட்சி தோற்று விட்டது.   

அரை நூற்றாண்டுக்கு மேலாக, மக்கள் மத்தியில் அறிமுகமாகியிருக்கும் உதய சூரியன் சின்னத்தில் நின்ற பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம், கட்டுத் தொகையைப் பறிகொடுத்து விட்டது. 20 நாட்களுக்குள், குக்கர் சின்னத்தை பெற்று, சுயேட்சையாகப் போட்டியிட்டு, ஓர் இடைத்தேர்தலில் டி.டி.வி தினகரன் வெற்றி பெற்றிருக்கிறார்.   

ஆர்.கே நகர் சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தமட்டில் “அ.தி.மு.கவின் கோட்டை” என்று, சென்னை மாநகரத்தில் வர்ணிக்கப்படும் தொகுதி. இங்குள்ள அனைத்து தொகுதிகளிலும் 1977இல், தி.மு.க வெற்றி பெற்ற போது, எம்.ஜி.ஆர் தலைமையிலான அ.தி.மு.க ஆர்.கே நகர் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது.   

அப்போது, நடிகர் ஐசரி வேலன் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினரானார். அதன் பிறகு, 1989, 1996 தவிர மற்ற காலகட்டங்களில் நடைபெற்ற தேர்தல்களில், அ.தி.மு.கவே இத்தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அ.தி.மு.கவுக்கு, ஜெயலலிதா தலைமையேற்றப் பின்னர், அந்த இரு வெற்றிகளும் தி.மு.க.வுக்குக் கிடைத்தது.    அதே நேரத்தில், 2001 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு, 16 வருடம் தொடர்ந்து அ.தி.மு.கவே இங்கு வெற்றி பெற்று வருகிறது. குறிப்பாக, ஜெயலலிதாவின் தொகுதியாகவே இது மாறியது. பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கின் காரணமாக, சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்த ஜெயலலிதா, இங்கு 2015இல் முதன் முதலாகப் போட்டியிட்டார்.   

அப்போது, தி.மு.க, தேர்தலைப் புறக்கணித்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் மகேந்திரன், அவரை எதிர்த்து போட்டியிட்டார். ஆனால், 1 லட்சத்து 50 ஆயிரத்து 722 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றார்.   

பிறகு 2016 சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற போது, இங்கு போட்டியிட்ட ஜெயலலிதாவை எதிர்த்து, தி.மு.க நின்றது. அக்கட்சி, அப்போது 57 ஆயிரத்து 673 வாக்குகளைப் பெற்றாலும், மீண்டும் ஜெயலலிதா 39 ஆயிரத்து 545 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.   

ஆனால், அந்தச் சாதனைகளை முறியடித்து, இப்போது ஆர்.கேநகர் இடைத் தேர்தலில், டி.டி.வி தினகரன் 40 ஆயிரத்து 707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றமை, “இடைத் தேர்தல்” வரலாற்றில் முத்தாய்ப்பு வைத்தது போல் அமைந்திருக்கிறது.   

தினகரனும் சரி, அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனனும் சரி, “பத்தாயிரம் ரூபாய்” “ஆறாயிரம் ரூபாய்”, வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்தார்கள் என்று புகார் கிளம்பியது.   
அதனால்தான், தேர்தல் வெற்றியை “பணநாயகத்துக்கும்” ஜனநாயகத்துக்கும் இடையிலான போட்டி என்று, எதிர்க்கட்சிகள், தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர், பிரசாரத்தைத் தொடங்கியிருக்கின்றன.   

சொல்லப் போனால், ஆட்சி அதிகாரத்திலுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் “தி.மு.கவுடன்- தினகரனும் இரகசிய கூட்டணி வைத்து, வெற்றி பெற்றுள்ளார் தினகரன்” என்று, குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள்.   

ஆனால், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினோ, “தினகரனின் பணத்தையே, வாக்காளர்களுக்கு அமைச்சர்கள்தான் கொடுத்தார்கள்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.கவுக்குச் சோதனையான இடைத் தேர்தலாக இருந்தாலும், மிகப்பெரும் சோதனையை, இந்த இடைத்தேர்தல் மூலம் சந்தித்து இருப்பது தி.மு.கதான்.   

தி.மு.க.வுக்கு இந்தத் தொகுதியில் கடைசியாக நடைபெற்ற 2016 சட்டமன்றத் தேர்தலில், 57 ஆயிரத்து 673 வாக்குகள் கிடைத்தது. ஆனால், அந்த வாக்கு, இந்தத் தேர்தலில் 24 ஆயிரத்து 651 ஆக குறைந்து, தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ், கட்டுத் தொகையை இழந்துள்ளார்.   

அ.தி.மு.கவின் வாக்குகளுக்கு தினகரனும்- மதுசூதனனும் போட்டியிட்டார்கள். அந்தக் கட்சிகளுக்குள் பிரிந்து கொள்ளும் அ.தி.மு.க வாக்கு வங்கியால், தி.மு.க எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அ.தி.மு.கவுக்குள் ஏற்பட்டுள்ள பிளவு, பிரிந்து நின்ற இன்னொரு சுயேட்சை வேட்பாளருக்கு சாதகமாக அமைந்திருப்பது, தி.மு.க.வுக்கு திகிலை ஏற்படுத்தியிருக்கிறது.   

இது, இடைத் தேர்தல் முடிவு என்று கூறினாலும் “அ.தி.மு.கவுக்கு மாற்று” என்ற இமேஜில் இருக்கும் தி.மு.க.வுக்கு இந்தத் தோல்வி, கலக்கத்தை ஏற்படுத்தி விட்டது. அதனால்தான், அக்கட்சியின் சார்பில் உடனடியாக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டப்பட்டு, ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் என்ன நடைபெற்றது என்பது பற்றி விசாரித்து அறிக்கை அளிக்க குழுவும் அமைக்கப்பட்டது.   

ஆளுங்கட்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய வாக்காளர்கள் பிரதான எதிர்கட்சிக்கு ஆதரவு தெரிவிக்காமல், சுயேட்சை வேட்பாளரை வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். அந்த வினோதம்தான், பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. ஆனால், இந்த வினோதத்துக்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை.   

89 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள தி.மு.க, அ.தி.மு.க, ஆட்சியை இதுவரை ஒன்றும் செய்ய முடியவில்லை என்ற ஆதங்கம், தி.மு.க வாக்காளர்களிடம் இருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி, உடல் நலக்குறைவால் இருக்கும் கருணாநிதியை சந்தித்தது, 
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் தினத்தில் 2-ஜி அலைக்கற்றை வழக்கில் தி.மு.க.வுக்குக் கிடைத்த விடுதலை எல்லாம், “தி.மு.கவும்- பா.ஜ.கவும் நெருங்கிச் செல்கின்றன” என்ற தோற்றத்தை, சிறுபான்மையின வாக்காளர் மத்தியில் ஏற்படுத்தி விட்டது.   

அது மட்டுமின்றி, தொடர்ந்து மத்தியிலுள்ள பா.ஜ.க அரசாங்கத்தின் கடும் நடவடிக்கைகளுக்கு உள்ளாகும் டி.டி.வி. தினகரன், சிறுபான்மையின மக்கள் கண்களில் “பா.ஜ.க. எதிரியாக” தெரிகிறார். இந்த அடிப்படையில், தி.மு.கவுக்கு விழ வேண்டிய சிறுபான்மையின வாக்குகள், தொகுதியில் ஒட்டுமொத்தமாக டி.டி.வி தினகரனுக்குச் சென்று விட்டதுதான், தேர்தலின் முடிவுகளில் பிரதிபலிக்கிறது.   

அதே நேரத்தில், 2016 சட்டமன்ற தேர்தலில், ஜெயலலிதா பெற்ற 97 ஆயிரம் வாக்குகளில் 48 ஆயிரம் வாக்குகளை மட்டும்தான், அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனன் பெற முடிந்திருக்கிறது. ஆகவே, ஜெயலலிதா பெற்ற மீதியுள்ள 50 ஆயிரம் வாக்குகளை, டி.டி.வி. தினகரன் பெற்று விட்டார்.   

ஆகவே, இரத்துச் செய்யப்பட்ட இடைத் தேர்தலில் போட்டியிட்டு, தொகுதி மக்கள் மத்தியில் பிரபலமான டி.டி.வி தினகரனுக்கு, அ.தி.மு.க வாக்குகளும், சிறுபான்மையின வாக்குகளும் கை கொடுத்துள்ளன.   

ஆனால் தி.மு.க. வாக்குகளும் தினகரனுக்கு விழுந்ததுதான் மிகப்பெரிய அதிர்ச்சியாக தி.மு.க.வுக்கு  அமைந்துள்ளது. எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது 13 வருடங்கள் தி.மு.கவால் ஆட்சிக்கு வர முடியவில்லை.   

அந்தக் காலகட்டத்தில், தி.மு.க வாக்குகள் அக்கட்சியிடமே உறுதியாக இருந்தன. ஜெயலலிதா 2011 சட்டமன்ற தேர்தல், 2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் தொடர் வெற்றி பெற்றார். ஆனால், தி.மு.க வாக்குகள், கட்சியை விட்டு விலகிச் செல்லவில்லை.    ஆனால், இந்த முறை, அ.தி.மு.கவுக்கு, எடப்பாடி பழனிசாமி தலைமையேற்றிருக்கும் நேரத்தில், தி.மு.க வாக்குகள் விலகி, முன்பு அ.தி.மு.கவிலிருந்த- அதுவும் தி.மு.கவின் பரம எதிரியாகக் கருதப்படும் சசிகலாவின் உறவினரான, தினகரனுக்கு விழுந்திருக்கிறன.   

இதற்கு மிக முக்கிய காரணம் “எம்.ஜி.ஆர்- கருணாநிதி” “கருணாநிதி- ஜெயலலிதா” என்று, அ.தி.மு.க வாக்காளருக்கும் தி.மு.க வாக்காளருக்கும் இடையிலிருந்த “எதிரி மனப்பான்மை” இப்போது விலகி விட்டது. அ.தி.மு.க வாக்காளருக்கு, “ஸ்டாலின் எதிர்ப்பு” மனப்பான்மையும் இல்லை. தி.மு.க வாக்காளருக்கு, “எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு” அல்லது “தினகரன் எதிர்ப்பு” என்ற எண்ணமும் இல்லை.   

இந்தப் புதுவித மாற்றம், ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் நடைபெற்றது. அதன் பலனை, களத்தில் விறுவிறுப்பாக பண மழையுடன் நின்ற டி.டி.வி தினகரன் அனுபவித்திருக்கிறார் என்பதுதான் யதார்த்தம் என்றாலும் அ.தி.மு.கவுக்கு மாற்று தி.மு.க என்றத் தோற்றம், பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் புதுவித மாற்றத்துக்கு வித்திட்டுள்ளது.   

ஆர்.கே நகர் இடைத் தேர்தல் முடிவுகள், தமிழக அரசியலில் தினகரனை தி.மு.க.வுக்கு மாற்றாக உருவாக்கும் பாதைக்கு, ஒரு வழிகாட்டியாக அமைந்திருக்கிறது. ஆனால், அதற்கான கட்சிக் கட்டமைப்பு, முழுமையான அ.தி.மு.க தினகரன் கையில் கிடைத்தால் மட்டுமே நடக்கும்.   

அதற்கு, தற்போதுள்ள “ஆட்சி” என்ற அதிகாரத்தை, அ.தி.மு.கவிடமிருந்து அகற்றும் நடவடிக்கையை, தினகரன் எடுப்பார் என்று, அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தாலும், அதற்கு இப்போதைக்கு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோ, தினகரனுடன் தி.மு.க.வும் இணைந்து ஆட்சிக் கலைப்பு விவகாரங்களில் ஈடுபடுவதற்கோ வாய்ப்பு இல்லை.   

ஆகவே, தினகரனுக்கு கிடைத்த ஆர். கே நகர் வெற்றி, அரசியல் மாற்றத்துக்கு உதவ இடமில்லை. அதே நேரத்தில், “நமக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள்” என்ற தி.மு.கவின் நம்பிக்கையை சிதறடித்து விட்டது என்பது மட்டும் உண்மை.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X