2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

திம்புவில் சந்திப்பு

என்.கே. அஷோக்பரன்   / 2018 நவம்பர் 12 , மு.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

  தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 169)

பேச்சுவார்த்தையும் எதிர்ப்பும்  

இலங்கை அரசாங்கத்தையும் தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள் உள்ளிட்ட தமிழ்த் தரப்பையும் பூட்டானின் தலைநகரான திம்புவில், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இணங்கச் செய்ததில் இந்தியா வெற்றி கண்டிருந்தது.   

இதற்காக, ஏறத்தாழ ஆறுமாத காலமாக இந்திய வௌியுறவுச் செயலாளர் ரொமேஷ் பண்டாரி, கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்டிருந்தார். ஆனால், இருதரப்பும் சுயவிருப்பின் அல்லது தன்முனைப்பின் பேரில், இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளச் சம்மதித்திருக்கவில்லை என்பது, இங்கு கோடிட்டுக் காட்டப்பட வேண்டியது.   

இருதரப்பின் மீது, இந்தியா கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்தே, அவர்களைப் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வந்திருந்தது என்பது, மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்ல வேண்டிய ஒரு விடயமாக இருக்கிறது. 

இதனால்தான், இருதரப்பின் முதல்மட்ட தலைமைகள், இந்தப் பேச்சுவார்த்தைகளில் பங்குகொண்டிருக்கவில்லை என்பதும், இங்கு குறிப்பிட்டு அவதானிக்கப்படக் கூடியது.  இங்கு, இனப்பிரச்சினைத் தீர்வுக்காக, இருதரப்பும் பேச்சுவார்த்தைக்கு வந்தன என்பதைவிட, இந்தியாவின் அழுத்தத்தால்தான் பேச்சுவார்த்தைக்கு வந்தன என்பதே நிதர்சனமாகும்.  

தமிழ்த் தரப்பின் எதிர்ப்பு  

தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள், பேச்சுவார்த்தைகளில்   கலந்துகொள்கின்றன என்ற செய்தி, தமிழர் தாயகப் பகுதிகளில், குறிப்பாக வடக்கில், அதுவும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில், வரவேற்பைப் பெறவில்லை என்பதுடன், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக, ரீ.சபாரட்ணம் பதிவு செய்கிறார். 

பேச்சுவார்த்தை என்ற பெயரில், பல தசாப்தங்களாகத் தாம் ஏமாற்றப்பட்டதாலேயே, பேச்சுவார்த்தை வழியை மட்டுமே நாடியிருந்த, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைத் தாம் நிராகரித்து, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள்பால், தமது விடுதலைக்கான நம்பிக்கையைக் கொண்டிருந்த நிலையில், தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களும்  அதே பேச்சுவார்த்தை வழிக்குத் தற்போது சென்றதால், ஏற்பட்ட அதிருப்தியே இது என்பது, ரீ.சபாரட்ணத்தின் கருத்தாக அமைகிறது.   

யாழ்ப்பாணம் எங்கும், இந்தப் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு எதிராக, இளைஞர்கள் தமது எதிர்ப்பை வௌிப்படுத்தி இருந்தனர். ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள், வீதிநாடகங்கள், சுவரொட்டிகள் எனப் பல்வேறு வகைகளில் இந்த எதிர்ப்பு வௌிப்பட்டிருந்தது. பேச்சுவார்த்தையைத் தம்மீது திணித்த இந்தியா மீதும், இளைஞர்கள் சினங்கொண்டிருந்ததாக, ரீ.சபாரட்ணம் குறிப்பிடுகிறார்.  

இந்தியா தன்னுடைய விருப்பத்தை, எங்கள் மீது திணிக்க முயல்கிறது என்று அவர்கள் சுட்டிக்காட்டியதுடன், தங்களுக்குத் “தமிழீழம் வேண்டும்” என்றும் குரல் கொடுத்தனர். 

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் ஆகியோரால் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. மேலும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தினது உருவப்பொம்மைக்கு எரியூட்டியும் அவர்கள், தமது எதிர்ப்பை வௌிக்காட்டி இருந்தனர்.   

 அமிர்தலிங்கத்துக்கு எதிராகக் கோஷமிட்ட அவர்கள், ஜே.ஆருடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம், ‘அரசியல் தற்கொலை’ செய்துகொண்ட பின்னும், அமிர்தலிங்கத்துக்குத் தன்னுடைய முட்டாள்தனம் புரியவில்லை என்று சுட்டிக்காட்டினார்கள்.   

மேலும், இந்திய பெரியண்ணனின் கட்டளைக்குத் தலைசாய்க்கும் அடிமைகளாக, சில தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள் மாறியிருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டும் வீதிநாடகங்களும் அரங்கேற்றப்பட்டிருந்தன. 

இது, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கமொன்றின் ஆதரவாளர்களால், மற்றைய தமிழ் இளைஞர் ஆயுத இயக்கமொன்றின் மீது, குற்றஞ்சாட்டும், மட்டந்தட்டும் நடவடிக்கையாகக் கூட இருக்கலாம் என்பதையும், இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  

அரசாங்கத் தரப்பில் எதிர்ப்பு  

மறுபுறத்தில், இலங்கை அரசாங்கத்துக்கு உள்ளேயும், திம்புப் பேச்சுவார்த்தைகளுக்குக் கடுமையாக எதிர்ப்பு இருந்தது. குறிப்பாக, இந்தியாவையும் இந்தியத் தலையீட்டையும் முற்றாக வெறுத்த பிரதமர் ரணசிங்ஹ பிரேமதாஸ, போர் மூலம், தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களை முற்றாக இல்லாதொழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்ட, தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி ஆகியோர், திம்புப் பேச்சுவார்த்தைகளைக் கடுமையாக எதிர்த்தவர்களில் முக்கியமானவர்கள் என்று, இலங்கைக்கான அன்றைய இந்திய உயர் ஸ்தானிகராக இருந்த ஜே.என். திக்ஸிட், தன்னுடைய நூலொன்றில் பதிவு செய்கிறார்.   

குறிப்பாக, பிரதமர் பிரேமதாஸவின் எதிர்ப்பானது, சர்வகட்சி மாநாடு நடந்த காலம் தொட்டு வௌிப்பட்டுக் கொண்டிருந்தது. இதுபற்றிக் கருத்துரைக்கும் ஜே.என். திக்ஸிட், பிரதமர் பிரேமதாஸ வௌிப்படையாகவும் எதுவித தயக்கமும் இன்றி, பௌத்த துறவிகள்,  மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பியின்) சில தரப்புகள் ஆகியனவற்றை, அரசியல் மீளிணக்கப்பாடு தொடர்பில், ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன முன்னெடுத்த நடவடிக்கைகளைச் சிதைக்கப் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்துகிறார்.   

ஜே.ஆர்.ஜெயவர்தனவே பல கட்டுப்பாடுகளுடனும் தயக்கத்துடனுமே சில நடவடிக்கைகளை முன்னெடுக்கிறார் என்று தெரிந்துகொண்டுமே, அவர்கள் இந்த எதிர்ப்புகளை முன்னெடுத்தார்கள் என்று ஜே.என். திக்ஸிட் கோடிட்டுக் காட்டுகிறார்.  

ரணசிங்ஹ பிரேமதாஸ, லலித் அத்துலத்முதலி உள்ளிட்டவர்களின் இந்த எதிர்ப்பை, இரண்டுவிதமாக நோக்கலாம். 

முதலாவதாக, ஜே.ஆரின் ‘நரித் தந்திர’ உபாயங்களை, அழுத்தமாகக் கருத்தில் கொள்பவர்கள், பிரேமதாஸ, அத்துலத்முதலி உள்ளிட்டவர்களின் எதிர்ப்பும், ஜே.ஆரின் தந்திரோபாயத்தின் ஒரு பகுதி என்பார்கள்.   

அதாவது, நான் தயக்கத்துடன் ஆதரவளிப்பது போல ஆதரவளிக்க, என்னுடைய அமைச்சர்களான நீங்கள், அதை எதிர்ப்பது போல, எதிர்ப்பை வௌிப்படுத்த, இறுதியில் இந்தியாவிடமும் சர்வதேசத்திடமும், “நான் முயற்சி செய்தேன்; ஆனால், என்னுடைய அமைச்சர்களே இதை எதிர்க்கிறார்கள், பௌத்த துறவிகள் எதிர்க்கிறார்கள், சிங்கள மக்கள் எதிர்க்கிறார்கள் என்று சுட்டிக்காட்டி, நான் விரும்பினாலும், இவர்கள் விரும்பாது, இதை நிறைவேற்ற முடியாது” என்று சொல்ல, அது வாய்ப்பாக இருக்கும் என்ற தந்திரமே அதுவாகும். சர்வகட்சி மாநாட்டிலும் ஜே.ஆர், இதையொத்த தந்திரத்தையே கையாண்டிருந்தார் என்பதையும் நாம் காணலாம்.  

 அரசியல் கட்சிகள் பங்கேற்க வேண்டிய மாநாட்டில், பௌத்த துறவிகள் அழைக்கப்பட்டது ஏன் என்ற கேள்விக்கான பதிலில்தான், இந்தத் தந்திரம் ஒளிந்திருக்கிறது.   

இரண்டாவது வகையில் நோக்கினால், உண்மையில் ஜே.ஆர், சாத்தியமானதொரு தீர்வை அடைய விரும்பியிருக்கலாம். அவர் 80 வயதை எட்டவிருந்தார். ஜனாதிபதியாகத் தன்னுடைய இரண்டாவது பதவிக்காலத்தில் இருந்தார்.அவருடைய மகன், நேரடி அரசியலில் இருக்கவில்லை. அப்படியே வந்தாலும், உடனடியாக அடுத்த தலைவராகக் கூடிய நிலையில் அவர் இருக்கவில்லை. அவரது பாரியார் அரசியல் படோடாபங்களையே விரும்பியிராத ஒருவர் என்று, இன்றுவரைகூட, முதற்பெண்மணி ஒருவருக்கு உதாரணமாகப் பலராலும் புகழப்படுபவர். 

ஆகவே, அவரது குடும்பத்தில், அரசியல் அதிகாரப்பதவிக்கு வர, அல்லது அந்த இடத்தைத் தொடர்ந்து தக்க வைக்கவேண்டிய தேவையுடன் எவரும் இருக்கவில்லை.  

 மேலும், அடுத்த நிலைத் தலைவர்கள் சிலர், தாமாகவே உருவாகி இருந்தார்கள், சிலரை, ஜே.ஆரே உருவாக்கியிருந்தார். ஆகவே, தன்னுடைய அரசியல் வாழ்வு, தன்னுடைய இந்த ஜனாதிபதி பதிவிக்காலம், முடிவடைவதோடு முடிந்துவிடும் என்பது, ஜே.ஆருக்கு சர்வ நிச்சயமாகத் தெரிந்திருக்கும். 

ஆகவே, அதற்குள் இந்தப் பிரச்சினைக்குத் தன்னாலியன்றதொரு தீர்வை அடைவதற்கு, ஜே.ஆர் நேர்மையாகவே முயற்சித்திருக்கலாம் என்று சொல்பவர்களின் கருத்தில், உண்மை இல்லாமலும் இல்லை.   
மறுபுறத்தில், இந்தத் தீர்வு முயற்சிகளை எதிர்த்தவர்களின் நிலையானது, வேறானதாக இருந்தது. அவர்கள், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டியில் இருந்தார்கள். அடுத்தடுத்த தலைவர்கள், அடுத்தடுத்த ஜனாதிபதி என்ற போட்டியில், பிரதமர் ரணசிங்ஹ பிரேமதாஸ, தேசியப் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி ஆகியோர் இருந்தனர் என்பது, மிக வௌிப்படையான உண்மை.   

ஆகவே, அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கு மிக இலகுவான வழியாக, எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க உருவாக்கிவிட்டுச் சென்றிருந்த, இனவாத அல்லது இனமய்ய வாக்குவங்கி, இலங்கையில் அரசியலை முன்னெடுக்க வேண்டிய நிலையில் அவர்கள் இருந்தார்கள்.

அன்றைய சூழலில், அரசியல்வாழ்வின் அந்திமக் காலத்திலிருந்த ஜே.ஆருக்கு, அந்தத் தேவை இல்லாதிருப்பினும், பிரேமதாஸ, அத்துலத்முதலி ஆகியோருக்கு அது இருந்தது என்ற அரசியல் யதார்த்தம், இங்கு கவனிக்கப்பட வேண்டியது.  

 ஆகவே, திம்புப் பேச்சுவார்த்தையை அவர்கள் எதிர்த்தமைக்கு இது ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். எதுஎவ்வாறாக இருப்பினும், ஒட்டுமொத்தத்தில் இருதரப்பும், வேண்டாவெறுப்பாகத் திம்புப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்தன என்பதுதான் உண்மை.  

திம்புவைச் சென்றடைந்த பிரதிநிதிகள்  

1985 ஜூலை எட்டாம் திகதி, பூட்டானின் தலைநகரான திம்புவில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாக இருந்த நிலையில், திம்பு சென்ற இருதரப்புப் பிரதிநிதிகளும் மத்தியஸ்தம் வகிக்கும் இந்தியப் பிரதிநிதிகளும் கடும் பாதுகாப்புக்கு மத்தியில், திம்புவில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.   

ஜே.ஆரின் சகோதரர் எச்.டபிள்யூ.ஜெயவர்தன தலைமையில், இலங்கை அரசாங்கம் சார்பில் கலந்துகொண்டிருந்த குழு, கடுமையான பாதுகாப்புடன் ஒரு விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அதேவேளை, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரீ.ரீ.ஈ), தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈரொஸ்) ஆகியவற்றையும் அரசியல் கட்சியான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியையும் (ரீ.யு.எல்.எப்) உள்ளடக்கிய 13 பிரதிநிதிகளைக் கொண்ட தமிழர் தரப்பு, மற்றொரு விடுதியில் கடுமையான பாதுகாப்புடன் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.   

திம்பு நகர் முழுவதும், பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு இருந்ததோடு, ஊடகவியலாளர்கள், சுற்றுலாப்பயணிகள் கூடப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் காலத்தில், பூட்டானின் தலைநகருக்குள் நுழையத் தடைவிதிக்கப்பட்டிருந்தனர்.  

தமிழ்ப் பிரதிநிதிகள், ஏறத்தாழ பணயக் கைதிகளாக, திம்புவில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக ரீ.சபாரட்ணம் விவரிக்கிறார். 

விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த அவர்கள், வௌிநபர்களோடு தொடர்பு கொள்வதற்குத் தடைவிதிக்கப்பட்டு  இருந்ததாகவும், சென்னையின் இரகசிய இடமொன்றிலிருந்து, ஒரு தொலைபேசிக்கு மட்டுமே, அவர்கள் தொடர்புகொள்ள அனுமதிக்கப்பட்டதாகவும், அது அவர்களது தலைவர்களோடு, அவர்கள் பேசுவதற்காக, இந்திய உளவுத்துறையான றோவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் ரீ.சபாரட்ணம் பதிவு செய்கிறார்.   

பேச்சுவார்த்தை ஆரம்பமாக இருந்த நிலையில், தமது இரண்டாம் மட்ட பிரதிநிதிகளைத் திம்புவுக்கு அனுப்பிவிட்டு, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களின் தலைவர்கள், சென்னை திரும்பி இருந்தார்கள். பத்மநாபா, சிறிசபாரட்ணம், பாலகுமார் ஆகியோர் சென்னையில் தங்கியிருந்த நிலையில், அன்ரன் பாலசிங்கத்தை சென்னையில் பேச்சுவார்த்தைகளைக் கவனித்துக் கொள்ளவிட்டுவிட்டு, பிரபாகரன் சேலம் சென்றிருந்ததாகப் பதிவு செய்யும் ரீ.சபாரட்ணம், திம்புப் பேச்சுவார்த்தைகள் நிச்சயம் தோல்வி காணும் என்று பிரபாகரன் கருதியிருந்ததாகவும் அவர், அடுத்தகட்ட இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில், திட்டமிடவே சேலத்தில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாமுக்குச் சென்றிருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.  

கிட்டத்தட்ட, இந்தியாவின் பலாத்காரத்தினால்தான், இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது என்றால் அது மிகையல்ல. ஆனால், இதில் கவலைக்குரிய இன்னொரு விடயம் இருந்தது. 

பேச்சுவார்த்தை மேசைக்கு, இருதரப்பையும் அழைத்துவரக் கங்கணங்கட்டிக்கொண்டு செயற்பட்ட இந்தியா, பேச்சுவார்த்தைகளின் நிகழ்ச்சி நிரலில், அதேயளவு அக்கறையைக் காட்டவில்லை என்பது, பேச்சுவார்த்தைகள் தொடங்கியபோது அனைவராலும் உணரப்பட்டது.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .