2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தூண்டப்பட வேண்டிய அச்ச உணர்வு

Thipaan   / 2017 ஜூன் 15 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தினந்தோறும் அல்லது வாராந்தம், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக, பாலியல் வன்முறை தொடர்பான செய்தி வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இது, இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் காணப்படும் வழமையாகவுள்ளது. 

பாலியல் வன்முறைகள், அதனைத் தொடர்ந்து சில வேளைகளில் நடத்தப்படும் படுகொலைகள் தொடர்பில் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டாலும் சிலர் தண்டிக்கப்படுவதுடன், பலர் விடுதலையாகின்றனர். சரியான சாட்சியங்கள் இல்லாமையும், பாதிக்கப்பட்டவர், தனக்கு ஏற்பட்ட வன்முறையை பகிரங்கமாகத் தெரிவிக்க மறுப்பதும் அல்லது மறைப்பதுமே பலரின் விடுதலைக்குக் காரணமாகிறது.

தனிநபரொருவருக்கு எதிராகவோ, சமுதாயமொன்றுக்கு எதிராகவோ, அதிகார அல்லது உடல் வலிமையை வேண்டுமென்றே பயன்படுத்தி, உடல், உள ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துதல் அல்லது ஏற்படுத்த எத்தனித்தல் வன்முறை எனப்படுகிறது. பல வகையான வன்முறைகள் காணப்படுகின்ற போதும், குறிப்பாக பாலியல் வன்முறை பாரிய விளைவுகளை சமுதாயமொன்றில் ஏற்படுத்துகிறது.

பாலியல் வன்புணர்வு, பாலியல் ரீதியாக அடிமைப்படுத்துதல், கட்டாய பாலியல் தொழில், வலிந்து கர்ப்பமாக்குதல், கட்டாயக் கருக்கலைப்பு, பாலியல் சார்ந்த கேலி, மிரட்டல் என்பன பாலியல் வன்முறைக்குள் அடங்குகின்றன.

இந்த வன்முறைகள் முப்பாலார் மீதும் மேற்கொள்ளப்படுகின்றபோதும், பெண்களும் சிறுவர்களுமே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். பட்டியல்படுத்தவும் கருத்துக்கணிப்பு மற்றும் புள்ளிவிவரங்களிலும் பதியப்படுகின்றனர். 

சமுதாயத்தின் மீதான அச்சம் மற்றும் எதிர்காலம் தொடர்பான அச்சத்தின் காரணத்தினாலேயே, பாலியல் வன்முறைகள் பல வெளித்தெரியாமல், வன்முறையாளர்கள் தப்பிக்கின்றனர். பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகள், படுகொலைகளில் முற்றுப்பெறுவதாலேயே குற்றம் பகிரங்கமாகிறது.

ஆண் பால், பெண் பால் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் மீதும் பாலியல் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. பெரும்பாலான ஆண் பாலினத்தவர்கள் சிறுவர்களாகவே இருக்கின்றனர். வன்முறையாளர்களில்  ஆண்களும் பெண்களும் அடங்குகின்றனர்.

குறிப்பாக உளவியல் ரீதியான வன்முறைகள், பெண்களால் பெண்கள் மீதுஅதிகமாகப் பிரயோகிக்கப்படுகிறது. மேலும், மூன்றாம் பாலினத்தவர்களில், திருநங்கைகளும் திருநம்பிகளும் அடங்குகின்றனர். 

பிறப்பில் ஆண்களாவும் உணர்வு ரீதியாக தங்களைப் பெண்களாகவும் உருவகித்துக் கொள்வோர் திருநங்கைகள் என்றும் பிறப்பில் பெண்களாக இருந்து, ஆண்களாகத் தங்களை உருவகித்துக் கொள்வோர் திருநம்பிகள் என்றும் அழைக்கப்படுகின்றனர். 

எமது அண்டை நாடான இந்தியாவில் பாலியல் சார்ந்த கேலி மூலமே, அதிகளவில், திருநங்கைகள்  தாக்கப்படுகின்றனர். நேடியாகவும் சரி, சினிமா போன்ற ஊடகங்களாலும் சரி பாரியளவில் தாக்கப்பட்டு சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட அவர்கள், திருநங்கைகள் என்ற சமுதாயமாக ஒன்றிணைந்துள்ளனர். இவர்களை, 2015ஆம் ஆண்டு முதல், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தமிழக அரசாங்கம் இணைத்தது.

திருநம்பிகள் எனப்படுபவர்கள் வெளித்தெரிவது குறைவு. ஏனெனில் பிறப்பில் பெண்ணாக இருந்து ஆணாகத் தம்மை உருவகிக்கும் போதும், அந்தப் பெயருடன் சமுதாயத்தில் வாழ்வதற்கான அச்சம் அதற்கான காரணமாக இருக்கலாம். ஏனெனில் பிறப்பில் பெண்ணாக இருப்பதால் இவர்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன. 

எனினும், விளையாட்டு, கலை, அரசியல் துறைகளில் பிரபலமான திருநம்பிகள், ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிகமாக உள்ளனர். இவர்கள், பிரபலங்களாகப் பட்டியல்படுத்தப்பட்டும் உள்ளனர். 

பாலியல் வன்முறைகளின் விளைவுகளாக வலிந்து கர்ப்பமாதல், பாதுகாப்பற்ற கருச்சிதைவு, உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய காயங்கள், பாலியல் மூலம் பரவும்  எச்.ஐ.வி போன்ற பால்வினைத் தொற்றுகள் என்பன காரணமாகவும் மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. 

முரண்பாடுகளின் போது, பாலியல் வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினம், வருடாந்தம் ஜூன் 19ஆம் திகதியன்று அனுஷ்டிக்கப்பட வேண்டும் என, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை 2015ஆம் ஆண்டு அறிக்கை விடுத்தது.

“நீதியூடாகவும் அச்ச உணர்வைத் தூண்டுவதன் மூலமாகவும் பாலியல் வன்முறைக் குற்றங்களைத் தடுத்தல்” என்ற தொனிப்பொருளிலேயே முரண்பாடுகளின் போது, பாலியல் வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினம், இவ்வாண்டு அனுஷ்டிக்கப்படவுள்ளது.

உலக அளவில், மூன்று பெண்களில் ஒருவர், பாலியல் ரீதியாக அல்லது உடல் ரீதியாக வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றார் என, ஒரு கருத்துக் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மிகவும் பாரதுரமானதொரு விடயமாகக் காணப்படுகிறது.

நெருங்கிய துணைவர்களால் மேற்கொள்ளப்படும் வன்முறைகளில் 37.7 சதவீதமானவை தென்கிழக்கு ஆசிய நாடுகளான பங்காளாதேஷ், இந்தியா, மியன்மார், தாய்லாந்து ஆகியவற்றில் இடம்பெறுவதாக அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், இலங்கையும் அடங்குகிறது.

வளர்ச்சியடைந்த மற்றும் உயர், தனிநபர் வருமானம் பெறும் நாடுகளில், பாலியல் வன்முறைகள் குறைவாகவே காணப்படுகின்றன.

துணையைத் துன்புறுத்தல் பல வடிவங்களில் வெளிப்படலாம். அடித்தல், பயமுறுத்தல், பாலியல் வற்புறுத்தல், உளவியல் முறையில் வற்புறுத்தல், திருமண முறிவு என்று பயமுறுத்தல், குடும்பத்தை விட்டு வெளியேறி விடுவேன் என்று பயமுறுத்துதல் என்று பல வழிகளில் இது வெளிப்படலாம்.

வீடு, சமூகம், வேலை செய்யும் இடம், பொது இடம், போக்குவரத்து ஆகியவற்றின் போதும் அனர்த்தங்கள் மற்றும் யுத்தம் என்பவற்றால் ஏற்படும் உள்நாட்டு இடம்பெயர்வு போன்றவற்றின் போதும் பாலியல் வன்முறைகள் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

இலங்கையிலுள்ள பெண்களில் 30 தொடக்கம் 40 சதவீதமானோர் ஏதோவொரு வகையில் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இலங்கையிலுள்ள 60 சத வீதமான பெண்கள், உடல் ரீதியாவும் வார்த்தைகளாலும், தெருக்கள், பஸ்கள், ரயில்களில் பயணிக்கும் போதும்  வழக்கமாக பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர் என, தரவு ஒன்று குறிப்பிடுகிறது.

விசேடமாக, இலங்கையின் பொதுப் போக்குவரத்து. ரயில் மற்றும் பஸ்களில் பயணிக்கும் பெண்களில் பலர் உடல் ரீதியான பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். வன்புணர்வுச் சம்பவங்கள் பதிவுசெய்யப்படவில்லை என்றாலும் இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகக் காணப்படுகிறது.

வேலைக்குச் செல்லும் பெண்களும் பல்கலைக்கழகங்கள், பாடசாலைக்குச் செல்லும் மாணவியரும் போக்குவரத்தின் போது வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படினும், தங்களுடைய குடும்பம், சமுதாயம் போன்றவற்றுக்கு அஞ்சியே முறைப்பாடு செய்யவதைத் தவிர்க்கின்றனர். 

சில பெண்கள், துணிந்து முறைப்பாடு செய்தாலும், அலட்சியம் மற்றும் குற்றம் செய்தவருக்குத் தண்டனை வழங்க சாட்சியங்கள் போதாமை என்பவற்றால், காலம் வீணடிக்கப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்களைக் கண்டே பலரும் முறையிட விரும்புவதில்லை.

இதற்கான சரியான தீர்வு பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், வீதியிலோ, போக்குவரத்தின் போதோ பெண்களுக்கு ஏற்படுத்தப்படும் வன்முறைகள் தொடர்பில், பாதிக்கப்படாதோரும் உரிய அதிகாரிகளும் கவனஞ்செலுத்தவேண்டும். 

இன்னொருவருக்கு இடம்பெறும்போது ஏற்படும் அலட்சியம் நமக்குத் தெரிய வாய்ப்புக் குறைவு. பாதிக்கப்படும் போதே அதை நாம் உணர்வோம். ஏனெனில், சில எதிர் மறையான எண்ணங்களும்  சிந்தனைகளும் முளையிலேயே அகற்றப்பட வேண்டியதொன்றாகக் காணப்படுகிறது. 

மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெறும் உள்நாட்டு யுத்தம் காரணமாக, ஐரோப்பிய நாடுகளுக்குக் குடியேறிய அகதிகளில் 34 சதவீதத்துக்கும் அதிகமான பெண்களும் சிறுவர்களும் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது. 

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது, வடபகுதியிலும் தென்பகுதியிலும் பெண்கள், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது. இவற்றிலும் பல சம்பவங்கள் வெளியாகாமலேயே போய்விட்டன. 

வடபகுதியில் ஏராளமான பாலியல் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன என்று கூறப்படுகின்றன. யுத்தம் இடம்பெறும் அநேகமான நாடுகளில் இதுபோன்ற குற்றச் செயல்கள்  இடம்பெறுகின்றன. எனினும், குற்றச் செயல்களில் ஈடுபட்டோரை அடையாளம் காண்பதென்பது மிகவும் கடினமானதொன்றாகவே காணப்படுகிறது. 

தென் பகுதியில், இராணுவத்திலிருந்து யுத்தத்தின்போது உயிரிழத்தல், கணவன் மார்களை இழந்த பெண்களும் தாம் வேலைகளுக்குச் சென்ற இடத்திலோ அல்லது அயல் வீட்டைச் சேர்ந்தவராலோ பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்கள் காணப்படுகின்றன.

அதுமட்டுமின்றி, யுத்தம் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களாலோ, இளவயதில் கணவன்மாரை இழந்த பெண்கள் மறுதாரம் செய்யும் போது, முதற்தாரத்தின் பெண் பிள்ளைகள், புதிய தாரத்தின் உறவினர்களால் அல்லது கணவரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தபட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளதுடன், குறித்த பெண்ணும் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றார்.

மறுதாரம் செய்வோரும் கணவன் மாரை இழந்த பெண்களும், சமுதாயத்தில் நல்ல நிலையில் இருக்கின்றபோதும், பெரும்பாலானோரின் நிலை, மேற்குறிப்பிட்டவாறே காணப்படுகிறது.

தற்போதும், பெண்கள் மட்டுமின்றி, சிறுவர்களும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர்.

சிறுவர்களைப் பொறுத்தவரை, வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பலர் உடல் ரீதியாகவும் பாரியளவில் மனரீதியாகவுமே பாதிக்கப்படுகின்றனர். இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் யாரிடமாவது கூறினால் வீட்டில் உள்ளவருக்கு ஏதேனும் தீங்கு செய்து விடுவேன் என்று வன்முறையாளி பயமுறுத்தலாம். வன்முறையாளி, சிறுவருக்குத் தெரிந்தவராக இருந்தால், தமக்குள் இருக்கும் விடயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் சொல்லக்கூடும்.

எனினும், இதுபோன்ற வன்செயல்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு, வழக்கமான செயல்களிலிருந்து விலகியிருத்தல், கல்வி மற்றும் நித்திரையில் பாதிப்பு  என்பன ஏற்படக்கூடும். இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்கு, சரியான மற்றும் தவறான தொடுதல் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை பெற்றோர் விளக்குதல் வேண்டும்.

அவர்களுடைய உடல் அவர்களுக்கே சொந்தம் யாருக்கும் அதை பயன்படுத்தவோ, தீங்கு செய்யவோ உரிமை இல்லை என்பதையும் கூறவேண்டும்.

2015ஆம் ஆண்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சேயா சந்தவமி, அண்மையில் மூதூரில் சிறுமிகள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் வரை, பாலியல் வன்முறைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. முதலில் ஊடகங்கள் வாயிலாகத் தகவல்கள் வெளியாகினாலும் காலப்போக்கில் அவை மங்கிவிடுகின்றன. 

சேயா சந்தவமியின் வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனினும், ஏனைய வழக்குகள், போதிய சாட்சியம் இல்லாமை போன்ற காரணங்களால் நிலுவையில் உள்ளன.

பெயருக்கும் மரியாதைக்கும் ஏற்படும் கெடுதல் மற்றும் வன்முறையாளரைவிட பாதிக்கப்பட்டோர் நிந்திக்கப்படல்,  சட்ட நிவாரணம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருத்தல் போன்ற காரணங்களாலேயே பாலியல் தொந்தரவுகள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்யப்படுவது குறைகிறது.

இதுபோன்ற எண்ணங்கள் குறையவேண்டும். ஏனெனில், வன்முறையாளர்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்படவேண்டும். பொது இடங்களில் மேற்கொள்ளப்படுகின்ற பாலியல் தொந்தரவுகளுக்கு அபராதத்துடன் கூடிய ஐந்து வருடங்கள் சிறைதண்டனை விதிக்கப்படும். குற்றம் இழைத்தவர், பாதிக்கப்பட்டவருக்கு நட்டஈடு செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்படலாம். 

சட்டங்கள், ஓரளவு கடுமையாகக் காணப்படுகின்றபோதும், தங்களுக்கு எதிரான வன்முறைகளைப் பெண்கள் வெளிக்கொணராமையே, பாரிய பிரச்சினையாகக் காணப்படுகிறது. 

இது தொடர்பான சமூக விழிப்புணர்வு உருவாக்கப்பட்டு, சமூக அணுகுமுறைகள் மாற்றப்பட வேண்டும்.  அதுமட்டுமின்றி, குற்றவாளிகளாக இனங்காணப்படுவோருக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்படவேண்டும். 

டெல்லியில், மருத்துவ மாணவியொருவர் ஓடும் பஸ்ஸில் வைத்து வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட வழக்கில்,   குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 4 பேருக்கும் டெல்லி விரைவு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத்  தீர்ப்பளித்தது. இந்தச் சம்பவம் இடம்பெற்று 9 மாதங்களிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. 

இதேபோன்று, பல நாடுகளிலும் குறுகிய காலத்துக்குள் சந்தேகநபர்கள் கைது செய்யப்படுகின்றனர். அவர்களில் குற்றவாளிகள் இனங்காணப்பட்டு, தண்டனைகள் வழங்கப்படுகின்றன. சில நாடுகளில், வழங்கப்படும் தண்டனை மிகவும் கடுமையானதாகவே உள்ளது. 

மத்திய கிழக்கு நாடுகளில், பாலியல் வன்முறை போன்ற குற்றச்செயல்களுக்கு அவயவங்களைத் துண்டித்தல், பாரதுரமான குற்றச் செயல்களுக்கு மரண தண்டனை என்பன வழங்கப்படுகின்றன. உலக நாடுகளாலும் பல அமைப்புகளாலும் அவ்வாறான தண்டனைகள், மனித உரிமை மீறல் என குறிப்பிடப்படுகிறது.

சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் தான் குற்றங்கள் குறையும். சட்டப்படி வழங்கக் கூடிய ஆகக் கடுமையான தண்டனைகளை வழங்குவதன் மூலமே, நீதியூடாகவும் அச்ச உணர்வைத் தூண்டுவதன் மூலமாகவும் பாலியல் வன்முறைக் குற்றங்களைத் தடுத்தல் என்ற இவ்வாண்டுக்கான தொனிப்பொருள் அர்த்தமுள்ளதாக அமையும். அதன் மூலமே, பாலியல் வன்முறைகளில் ஈடுபட எத்தனிப்போரின் எண்ணிக்கையும் குறையும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .