2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தேசிய அரசியலை மீண்டும் தமிழ்நாடு தீர்மானிக்கும்

எம். காசிநாதன்   / 2019 மார்ச் 19 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோடை வெப்பம், கொழுந்து விட்டுத் தாக்கத் தொடங்கி இருக்கின்ற நிலையில், பரபரப்பான பேச்சுவார்த்தைகள், விறுவிறுப்பான பேட்டிகள் என்று, கடந்த சில வாரங்களாகச் சூடாகிக் கொண்டிருந்தது தமிழகத் தேர்தல் களம்.   

இப்போது, தொகுதிப் பங்கீடுகள் முடிந்து, அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது அந்தக் களம். திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் மட்டுமே, கூட்டணி அமைக்கும் பலமுள்ள கட்சிகள் என்பது, மீண்டுமொருமுறை ஜெயலலிதாவும் கருணாநிதியும் இல்லாத சூழ்நிலையிலும் பறை சாற்றப்பட்டுள்ளது.   

இருபெரும் தலைவர்களும் இல்லாத சூழ்நிலையில், தமிழகத் தேர்தல்க் கூட்டணி, எப்படித் திசை மாறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதாக் கட்சியும் மாநிலத்தில் உள்ள தி.மு.கவையும் அ.தி.மு.கவையும் தங்கள் இஷ்டத்துக்கு, ஆக்கிரமித்துக் கொள்ளப் போகின்றன என்ற எண்ணங்கள், வலம் வந்தன.   

ஆனால், அந்த மாயை இப்போது விலகி, இரு பெரும் தலைவர்களும் இல்லையென்றாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை, திராவிடக் கட்சிகளை விட்டால், வேறு எந்தக் கட்சிக்கும், கூட்டணி அமைக்கும் பலமில்லை என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது.  

கடந்த சட்டமன்றத் தேர்தலில், தனித்துப் போட்டியிட்டு தி.மு.கவை, ஆட்சிக்கு வரவிடாமல் செய்த, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள கட்சிகளும் கூட, இப்போது அ.தி.மு.க, தி.மு.க கூட்டணிக்குள் ஐக்கியமாகி விட்டன.  

‘திராவிடக் கட்சிகளுக்கு மாற்று’ என்ற டொக்டர் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க, அ.தி.மு.க கூட்டணியிலும், ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சித்து, மக்கள் நலக்கூட்டணி அமைத்து, அதற்குத் தலைமை ஏற்ற விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.கவும் அ.தி.மு.க கூட்டணியில் இருக்கின்றன.   

“பா.ஜ.கவுடன், இருநூறு சதவீதம் கூட்டணி இல்லை” என்று கூறிய டொக்டர் ராமதாஸுக்கு, பா.ஜ.கவும் இடம்பெறும் கூட்டணியில் அங்கம் வகிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. திராவிடக் கட்சிகளை மீறி, தமிழகத்தில் வேறு எந்தக் கட்சியும் அரசியலை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதற்கு, இந்தக் காட்சிகள், சாட்சிகளாக அமைந்து விட்டன.  

அ.தி.மு.க கூட்டணியில், நடைபெற்றுள்ள தொகுதிப் பங்கீட்டில், அ.தி.மு.கவுக்கு அடுத்தபடியாக, பா.ம.கட்சி, ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளையும் ஒரு மக்களவைத் தொகுதியையும் பெற்றிருக்கிறது.   

தே.மு.தி.கவோ, “பா.ம.கவுக்குச் சமமாகத் தொகுதிகள் வேண்டும்” என்று, முட்டி மோதிப் பார்த்து விட்டு, ஒரேநேரத்தில் இரு கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை  நடத்தி, முகத்திரை கிழிந்ததால், கிடைத்ததே மகிழ்ச்சி என்ற அடிப்படையில், நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு அ.தி.மு.கவுடன் கூட்டணி ஒப்பந்தம் போட்டுள்ளது.   

அதேபோல், தி.மு.க கூட்டணியில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பெற்று, ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்குத் தி.மு.க கூட்டணியில் இடம்பிடித்துள்ளது.   

இந்தக் காட்சிகள் எல்லாமே, தி.மு.கவுக்கு மாற்று அ.தி.மு.க; அ.தி.மு.கவுக்கு மாற்று தி.மு.க. இதுதான் தமிழக அரசியல் என்பதை, தேசியக் கட்சிகளான காங்கிரஸுக்கும், பா.ஜ.கவுக்கும், மாநிலத்தில் உள்ள பிற கட்சிகளான பா.ம.க, ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், கொம்யூனிஸ்ட் இயக்கங்கள், தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளுக்கும் உணர்த்தும் விதமாக, இரு கட்சிகளின் தொகுதிப் பங்கீடுகளும் முடிவடைந்திருக்கின்றன.  

அ.தி.மு.க கூட்டணியில், அ.தி.மு.க 20 இடங்களில் போட்டியிடுகிறது. அதே போல், தி.மு.க கூட்டணியில், தி.மு.கவும் 20 இடங்களில் போட்டியிடுகிறது.  

இரண்டு திராவிடக் கட்சிகளும், சரிசமமாகப் போட்டியிட்டாலும், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் சிலவற்றில், தி.மு.க, அ.தி.மு.கவின் சின்னங்களில் போட்டியிடும் வாய்ப்பு உள்ளதால், இந்த எண்ணிக்கை, சற்று உயரும்.  

அ.தி.மு.கவைப் பொறுத்தவரை, அக்கட்சிக்கு டி.டி.வி தினகரனின் போர்க்கொடியால், இன்றைக்குப் பலவீனப்பட்டு நிற்கிறது. அதிகாரத்துக்கு பொறுப்பான அநேகர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.கவில் இருந்தாலும், தொண்டர்கள் பட்டாளம், தினகரன் பக்கமே இருப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.   

இந்தப் பலவீனத்துடன், இரு முக்கிய எதிர்மறை நிலைகளுடன் அ.தி.மு.க, தேர்தலைச் சந்திக்கிறது. ஒன்று, வரலாறு காணாத அளவுக்கு, பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழகத்தில் வீசும் ‘வெறுப்பு அலை’.   
இன்னொன்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசாங்கத்துக்கு எதிரான, கடுமையான எதிர்ப்பு அலை.   

இந்த வெறுப்பு அலையும் எதிர்ப்பு அலையும் ஜோடி போட்டுக் கொண்டு, அ.தி.மு.க தலைமையிலான அணிக்கு, மிகப் பெரிய சோதனையை ஏற்படுத்தக் காத்திருக்கிறது. போதாக்குறைக்கு எடப்பாடி பழனிசாமியை, மிக மோசமாகச் சென்ற மாதம் வரை விமர்சித்த, பாட்டாளி மக்கள் கட்சிக்கும் அ.தி.மு.கவுக்கும் ஏற்பட்டுள்ள ‘பொருந்தாக் கூட்டணி’, மேலும் ‘கிடுக்கிப்பிடி’ பிரச்சினையை, அ.தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு ஏற்படுத்தியுள்ளது.   

டி.டி.வி தினகரனின் பிளவால், தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க என்ற கட்சி, தமிழகத்தில் உள்ள, எந்த ஒரு நாடாளுமன்றத் தொகுதியிலும், சொந்தமாக 30 சதவீத வாக்குகளைப் பெற முடியாத நிலைமையில் தவிக்கிறது.   

இப்படிப்பட்ட சூழ்நிலையில், மக்கள் மனதில் எதிர்மறையாக இருக்கும் கட்சிகளின் கூட்டணி, மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருப்பதால், கொங்கு மண்டலம், அதாவது மேற்கு மாவட்டங்களில், அ.தி.மு.கவுக்கு அமோக செல்வாக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.   

ஆனால், இப்போது பொள்ளாச்சியில் பூதாகரமாகியுள்ள இளம்பெண்கள் மீதான பாலியல் புகார், மேற்கு மாவட்டங்களில் தாய்மார்களின் வாக்கு வங்கியை, அ.தி.மு.க பெருமளவில் பறிகொடுக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.   

ஆகவே, அ.தி.மு.க அமைத்துள்ள கூட்டணி, ‘மெகா கூட்டணி’ போல் தோற்றமளித்தாலும், களத்தில், அக்கட்சிகளுக்கு இருக்கும் கடுமையான பலவீனங்கள், எதிர்ப்பு, வெறுப்பு அலைகள், தேர்தல் வெற்றிக்குக் கைகொடுக்கும் என்று, நம்பிக்கையுடன் சொல்வதற்கில்லை.   

அதேநேரத்தில், ‘வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு 2,000 ரூபாய் வழங்கியதால், வாக்குகளை வாரிக் குவித்து விட முடியும்’ என்று அ.தி.மு.கவும் ‘விவசாயிகளுக்கு முதற்றடவையாக, 2,000 ரூபாய் வழங்கியதால், வாக்குகள் வந்து குவிந்து விடும்’ என்று பா.ஜ.கவும் நினைக்கின்றன. அந்தக் கனவு நிஜமாகுமா என்பதுதான் இப்போதுள்ள கேள்விக்குறி?  

திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் தி.மு.க, மக்கள் எதிர்பார்க்கும் கட்சியாக இருப்பது ஒரு சிறப்பு. அதேபோல், மோடிக்கு இருக்கும் எதிர்ப்பு, இன்னொரு சிறப்பு. இந்த இரு சிறப்புகளும் தி.மு.க அணியின் முக்கிய மூலதனங்களாக இருக்கின்றன.   

காங்கிரஸ் கட்சியை, முன்கூட்டியே தி.மு.க சேர்த்துக் கொண்டதன் மூலம், மூன்றாவது அணி ஒன்று, தமிழகத்தில் உருவாகாமல் தடுத்திருக்கிறது.   

காங்கிரஸ் கட்சியை வெளியே விட்டிருந்தால், டி.டி.வி தினகரன், நடிகர் கமல்ஹாசன் போன்றோர், தி.மு.க மற்றும் அ.தி.மு.க இல்லாமல், மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கக் கூடும்.   

தமிழகத்தில் ஒன்பது நாடாளுமன்றத் தொகுதிகளை, காங்கிரஸுக்குக் கொடுத்த தி.மு.கவின் மீது விமர்சனங்கள் எழுந்தாலும், மூன்றாவது அணியைத் தடுக்கும் வியூகமே இந்த ஒன்பது தொகுதியின் பரம இரகசியம் என்பது அரசியல் பார்வையாளர்களுக்குப் புரியாமல் இல்லை.  

அப்படியோர் அணி, காங்கிரஸ் தலைமையில் அமைய வாய்ப்பு அளித்திருந்தால், தி.மு.கவுக்குக் கிடைக்கும் மதச்சார்பற்ற வாக்குகள்தான் பறி போயிருக்கும்.   

அடுத்ததாக, கொம்யூனிஸ்ட் இயக்கங்கள், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள், தி.மு.க கூட்டணியில் இருக்கின்றன. என்றாலும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புக்கு ஒரு வெறுப்பு நிலை இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இரு தொகுதிகளை, தி.மு.க கூட்டணியில் பெற்றிருக்கும் அந்தக் கட்சி, தேர்தல் களத்தில் பிரசாரத்தை எப்படிப் புதுவித பாணியில் எடுத்துச் செல்லப் போகிறது? வெறுப்பு நிலை, எப்படி மாற்றப் போகிறது என்பதை வைத்தே, அந்த அணிக்கு விடுதலைச் சிறுத்தைகளால் இலாபமா, நட்டமா என்ற கணக்கு, தேர்தல் முடிவுகளில் தெரிய வரும்.  

ஆகவே, 2019 நாடாளுமன்றத் தேர்தல் களம், தமிழகத்தில் தயாராகி விட்டது. பிரதமர் நரேந்திர மோடியும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தங்களின் கூட்டணிகளுக்காக, முதல் பிரசாரத்தை மேற்கொண்டு விட்டார்கள்.   

தி.மு.க, அ.தி.மு.க அணிகளில் எந்தெந்தக் கட்சிகள் என்பதும் இறுதி வடிவம் பெற்று விட்டது. இனிவரும் தேர்தல் பிரசாரம், தேர்தல் நடைமுறைகளில் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள், பிரசாரத்தில் ஒருவருக்கொருவர் காரசாரமாக பறிமாறிக் கொள்ளப் போகும் கடும் சொற்கள், எல்லாம் இனி தலைப்புச் செய்திகளாகும்.   

கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க 37 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றது. “நான் பிரதமராவேன்” என்று, ஜெயலலிதா பெற்ற அந்த வெற்றியால், தேசிய அரசியலை நிர்ணயிக்க முடியவில்லை. அதிக எம்.பிக்கள் இருந்தும், கடந்த ஐந்து வருடங்களில், தமிழகம் முக்கியத்துவம் இழந்தது.   

பாரதிய ஜனதாக் கட்சி, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்ததுதான் அதற்குக் காரணம். ஆனால், இந்த முறை நிலைமை மாறியிருக்கிறது. தமிழகத்திலும் புதுச்சேரியிலும் பெறும் 40 தொகுதிகள் வெற்றி, தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெறும். தேசிய அரசியலைத் தமிழகம் தீர்மானிக்கும் காலம் மீண்டும் திரும்பும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .