2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை

முகம்மது தம்பி மரைக்கார்   / 2018 செப்டெம்பர் 25 , மு.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடக்கி வைக்கப்பட்ட குமுறல்கள், அரசியல் கட்சிகளுக்குள் வெடிக்கும் போது, பிளவுகள் உண்டாகின்றன.   

ஐக்கிய தேசியக் கட்சியில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயகவுக்கு, உரிய இடம் வழங்கப்படவில்லை என்கிற நீண்ட காலக் குமுறல்கள் வெடித்த போதுதான், அந்தக் கட்சி உடைந்தது.  
ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது தலைவர் டி.எஸ். சேனநாயக்க, சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதம மந்திரியாகவும் பதவி வகித்தார். அந்தக் காலத்தில் அவர் மேற்கொண்ட அவுஸ்திரேலிய சுற்றுப் பயணமொன்றின் போது, பண்டாரநாயகவை, பதில் பிரதமராக நியமிக்கவில்லை என்பதால், அந்தக் கட்சிக்குள் இருந்து வந்த குமுறல் வெடித்தது.   
அதன் விளைவாக, ஐ.தே.கட்சியை விட்டு, பண்டாரநாயக வெளியேறினார். அதைத் தொடர்ந்து அவர் தலைமையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உருவானது.  

இவ்வாறான பிளவுகளும் பிரிவுகளும் அரசியல் கட்சிகளுக்குப் புதியவையல்ல. குறிப்பாக, இலங்கையின் முஸ்லிம் அரசியலில், இது வாலாயமானதொரு விவகாரமாகும்.   

மிக முக்கிய முஸ்லிம் அரசியல் கட்சியாக இருந்த, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இவ்வாறான உடைவுகள் எக்கச் சக்கமாக நடந்திருக்கின்றன. உடைத்துக் கொண்டு போனவர்கள் உருவாக்கிய கட்சிகள்தான், இப்போது, முஸ்லிம் காங்கிரஸுக்குச் சவாலாகவும் இருக்கின்றன.  

தேசிய காங்கிரஸின் கதை  

முஸ்லிம் காங்கிரஸிலிருந்து உருவான ஓர் அரசியல் கட்சிதான், குதிரையை சின்னமாகக் கொண்ட தேசிய காங்கிரஸ். முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா, முஸ்லிம் காங்கிரஸை உடைத்துக் கொண்டு வெளியேறியமையை அடுத்து, 2003ஆம் ஆண்டு தேசிய காங்கிரஸ் உருவானது.   

ஆரம்பத்தில் ‘அஷ்ரப் காங்கிரஸ்’ என்‌ற பெயரில்தான், இந்தக் கட்சி தொடங்கப்பட்டது. பிறகு ‘தேசிய முஸ்லிம் காங்கிரஸ்’ என்று பெயர் மாற்றப்பட்டது. அதன்பிறகு, ‘முஸ்லிம்’ என்கிற சொல் அகற்றப்பட்டு, அந்தக் கட்சி தேசிய காங்கிரஸானது.  

தேசிய காங்கிரஸை உருவாக்குவதில், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பலர், பெரும் பங்கு வகித்தனர். அவர்களில் எம்.எஸ். உதுமாலெப்பையும் ஒருவராவார். முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் காலத்தில், தீவிர அரசியல் செயற்பாட்டுக்குள் இறங்கியவர் உதுமாலெப்பை.   

1994ஆம் ஆண்டு, அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் மு.கா சார்பாகப் போட்டியிட்டு, அச்சபையின் பிரதித் தவிசாளரானதன் மூலம், அவர் பிரதிநிதித்துவ அரசியலுக்குள் புகுந்தார்.  

அஷ்ரப் காலத்தில், அதாவுல்லாவுடன் உதுமாலெப்பை நெருக்கமாக இருந்தார். அஷ்ரப்பின் மரணத்துக்குப் பின்னர், பிரதியமைச்சராக அதாவுல்லா பதவி வகித்தபோது, அவரின் இணைப்புச் செயலாளராகவும் உதுமாலெப்பை பணியாற்றினார்.   

அதனால்தான், ரவூப் ஹக்கீமுடன் முரண்பட்டுக் கொண்டு முஸ்லிம் காங்கிரஸை விட்டு, அதாவுல்லா வெளியேறியபோது, உதுமாலெப்பையும் மு.காவை விட்டு வெளியே வந்தார்.  

 இப்படி நீண்ட வரலாற்றைக் கொண்ட அவர்களுக்கு இடையிலான உறவில், இப்போது பிளவு ஏற்பட்பட்டிருக்கிறது. அதன் காரணமாக, தேசிய காங்கிரஸில், தான் வகித்து வந்த பிரதித் தலைவர் பதவி உள்ளிட்ட பொறுப்புகள் அனைத்தையும் உதுமாலெப்பை இராஜினாமாச் செய்து விட்டு ஒதுங்கியுள்ளார். இது அதாவுல்லாவுக்குப் பேரிடியாகிப் போயுள்ளது.  

ஒவ்வாமைக்குள் உருவான நட்பு

தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா, அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர். உதுமாலெப்பையின் சொந்த ஊர் அட்டாளைச்சேனையாகும். இரண்டும் அருகருகிலுள்ள பிரதேசங்கள். ஆனாலும், அநேகமான விடயங்களில், இரண்டு ஊர்களுக்கும் ஒத்துப் போவதில்லை. அக்கரைப்பற்றுக்கும் அட்டாளைச்சேனைக்கும் இடையில் எப்போதும் ஓர் ஒவ்வாமை இருந்து வருவது வழமையாகும்.

இவ்வாறானதொரு பின்னணியில்தான், தேசிய காங்கிரஸின் தலைவராக அதாவுல்லாவும் அந்தக் கட்சியின் தளபதி போல் உதுமாலெப்பையும் இணைந்து, அந்தக் கட்சியை வளர்த்தார்கள்.   

அதன் மூலம், சுமார் 15 வருடங்கள் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்தார். அதேபோன்று, கிழக்கு மாகாண சபை உறுப்பினராக எட்டு ஆண்டுகளும் அமைச்சராக ஆறு வருடங்களும் எம்.எஸ். உதுமாலெப்பைக்குப் பதவி வகிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.  

அதாவுல்லாவின் சொந்த ஊரான அக்கரைப்பற்றில், அவருக்கு 10 ஆயிரத்துக்கும் குறையாத நிலையான வாக்கு வங்கி உள்ளது.

 அதேபோன்று, உதுமாலெப்பைக்கு அவரின் சொந்த ஊரான அட்டாளைச்சேனையில் ஐந்தாயிரத்துக்கும் குறையாத நிரந்தர வாக்குகள் இருக்கின்றன. 

மொத்தத்தில், இந்தப் 15 ஆயிரம் வாக்குகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு, அவர்கள் இருவரும், ஒருவரின் வெற்றிக்கு ஒருவர் உதவிக் கொண்டு, அரசியலில் முடிசூடிக் கொண்டு வந்தனர்.  
தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா, எப்போதும் மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆதரவாளராகவே இருந்து வந்தார். அதன் காரணமாக, கடந்த பொதுத் தேர்தலில் அவர் தோற்றுப் போனார். தொடர்ச்சியாக 15 வருடங்கள் அமைச்சராக இருந்து வந்த அதாவுல்லா, நாடாளுமன்ற உறுப்பினராகக் கூட இல்லாமல் போனமை, தேசிய காங்கிரஸுக்குப் பெரும் இழப்பானது.   

இந்தநிலையில், அதாவுல்லா தோற்றுப் போன பிறகும், கிழக்கு மாகாண அமைச்சராக உதுமாலெப்பை பதவி வகித்தார். பிறகு, கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டவுடன், உதுமாலெப்பையும் பதவியிழந்தார். இப்போது, மாகாணத்திலோ, மத்தியிலோ, தேசிய காங்கிரஸுக்கு எந்தவித பிரதிநிதித்துவங்களும் இல்லை. அதனால், அதிகாரத்தில் இல்லாததொரு கட்சியாக, தேசிய காங்கிரஸ் இருந்து வந்தது.  

பிளவு  

இவ்வாறானதொரு சூழ்நிலையில்தான், தேசிய காங்கிரஸின் பிரதித் தலைவரும் அந்தக் கட்சியில் அதாவுல்லாவுக்கு அடுத்த நிலையில் வைத்துப் பார்க்கப்பட்டவருமான, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை, கட்சியில் தான் வகித்த பதவி, பொறுப்புகள் அனைத்தையும் இராஜினாமாச் செய்திருக்கிறார். இந்த விவகாரம், தேசிய காங்கிரஸுக்குள் பாரிய இடியை இறக்கியுள்ளது.  

அரசியலில் அதாவுல்லாவுக்கும் உதுமாலெப்பைக்கும் இடையிலான உறவு வியப்புடன் பார்க்கப்பட்டு வந்தது. அதாவுல்லா மீது, அத்துணை விசுவாசம் கொண்டவராக உதுமாலெப்பை இருந்து வந்தார். அவ்வாறான ஒருவர், அதாவுல்லாவிடம் ஒரு வார்த்தை கூடக் கூறாமல் கட்சியின் பதவி, பொறுப்புகளில் இருந்து விலகுவற்கான காரணம் என்ன என்கிற கேள்வி முக்கியமானதாகும்.  

முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவுக்கு, அடுத்த நபராகக் கட்சிக்குள் இருந்து வந்த உதுமாலெப்பை, கொஞ்சக் காலமாக, ஒதுக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. கட்சிக்குள் இருக்கும் கனிஷ்ட நிலையிலுள்ள சிலரின் ஆலோசனைகளுக்கும் பேச்சுகளுக்கும் கட்சித் தலைவர் அதாவுல்லா முன்னுரிமை வழங்கி வந்ததாகவும், மேற்படி கனிஷ்ட நிலையிலுள்ளவர்கள் உதுமாலெப்பையை விமர்சித்துப் பேசியபோது, அவற்றைக் கண்டும் காணாமல், அதாவுல்லா இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.  

சில வாரங்களுக்கு முன்னர், அக்கரைப்பற்றில் அதாவுல்லா தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில், உதுமாலெப்பை உரையாற்றியபோது, இவற்றைப் பகிரங்கமாகவே கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இன்னொருபுறம், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா, வாரிசு அரசியலைக் கட்சிக்குள் புகுத்தி வருகின்றார் என்கிற குற்றச்சாட்டுகளும் கட்சிக்குள் உருவாகியுள்ளன.   

அதாவுல்லா, தனது மூத்த புதல்வரை, பல வருடங்களுக்கு முன்னர் அரசியலுக்குள் கொண்டு வந்து, அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயர் பதவியையும் பெற்றுக் கொடுத்தார். இதனால், கட்சிக்குள் புகைச்சல் உருவானது. 

இந்த நிலையில், இவ்வருடம் நடைபெற்ற அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில், தனது மூத்த புதல்வரோடு, இளைய புதல்வரையும் சேர்த்து, அதாவுல்லா களமிறக்கினார். இதன் காரணமாக, கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலருக்கு அந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பங்கள் மறுக்கப்பட்டன. இந்த விவகாரம், அதாவுல்லா மீதான அதிருப்தியை கட்சிக்குள் இன்னும் அதிகப்படுத்தியது.  

கருத்து வேறுபாடு  

இன்னொருபு‌றம், முஸ்லிம் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து, கூட்டமைப்பாகக் கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஹசன்அலி, பஷீர் சேகுதாவூத் தலைமையிலான ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள், இந்தக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டன.   

இதன்போது, இந்தக் கூட்டணியில் இணையுமாறு தேசிய காங்கிரஸுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அதை அதாவுல்லா தட்டிக் கழித்தார். 

அதேவேளை, முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பில் தேசிய காங்கிரஸ் இணைய வேண்டுமென, உதுமாலெப்பை விரும்பினார். இந்தக் கருத்து முரண்பாடுதான் அவர்களுக்குள் வெடிப்பை ஏற்படுத்துவதற்குப் பிரதானமான காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.  

இந்த நிலையில், கடந்த உள்ளூராட்சித் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பும் இணைந்து, முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பாக, மயில் சின்னத்தில் போட்டியிட்டன. தேர்தல் முடிவுகள், அம்பாறை மாவட்டத்தில் பல இடங்களில், ஆச்சரியங்களை ஏற்படுத்தின.   

முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாக இருந்த நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய உள்ளூராட்சி சபைகள், முஸ்லிம் கூட்டமைப்பிடம் பறிபோயின. இறக்காமம் பிரதேச சபையின் பிரதித் தவிசாளரை கூட்டமைப்புப் பெற்றுக் கொண்டது.  

உதுமாலெப்பையின் கோபம்  

இவ்வாறானதொரு சூழ்நிலையில், உதுமாலெப்பையின் சொந்த ஊரான அட்டாளைச்சேனையில் முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒன்பது ஆசனங்களும் ஏனைய கட்சிகளுக்கு ஒன்பது ஆசனங்களும் கிடைத்தன. 

அதனால், சபையின் தவிசாளரை துண்டு குலுக்கல் மூலமாகவே தெரிவு செய்ய வேண்டிய நிலை உருவானது. அந்த நடைமுறை பின்பற்றப்பட்ட போது, முஸ்லிம் காங்கிரஸ் சார்பான ஒருவர் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.  

இந்த விவகாரம் உதுமாலெப்பைக்கு, அதாவுல்லா மீது ஆத்திரத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்புடன் தேசிய காங்கிரஸும் இணைந்து போட்டியிட்டிருந்தால், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிகாரத்தை, முஸ்லிம் காங்கிரஸிடம் பறிகொடுக்கும் நிலை வந்திருக்காது என, உதுமாலெப்பை வருந்தினார்.  

 அட்டாளைச்சேனை உள்ளிட்ட சில உள்ளூராட்சி சபைகளை, முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றுவதற்கு, அதாவுல்லாவே காரணமாக இருந்தார் எனவும் உதுமாலெப்பை தரப்பு விசனப்பட்டது.  

மேற்கூறப்பட்ட கோபங்களும் குமுறல்களும் உதுமாலெப்பைக்குள் இருப்பதை, கட்சியின் தலைவர் அதாவுல்லாவும் அறியாமலில்லை. மேலும், கட்சிக்குள் உதுமாலெப்பைக்குச் சார்பான ஒரு தரப்பு உருவாகி வருகின்றமையையும் அதாவுல்லா அவதானித்தார்.   

இதனால், உதுமாலெப்பையின் கை, கட்சிக்குள் ஓங்குவதைத் தடுக்க வேண்டிய நிலை, அதாவுல்லாவுக்கு உருவானது. எனவே, சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற தேசிய காங்கிரஸின் பேராளர் மாநாட்டில், கடந்த 13 வருடங்களாக உதுமாலெப்பை வகித்து வந்த தேசிய அமைப்பாளர் பதவியை, அவரிடமிருந்து கழற்றியெடுத்து விட்டு, வெறும் பெயரளவிலான பிரதித் தலைவர் பதவியை உதுமாலெப்பைக்கு வழங்கினார்.  

மேலும், உதுமாலெப்பை தரப்பு, கட்சியைக் கைப்பற்றுவதற்கு முயற்சித்தாலும் முடியாதபடி செய்யும் பொருட்டு, 11ஆக இருந்த தேசிய காங்கிரஸின் உயர் பீட உறுப்பினர்களின் எண்ணிக்கையை, 29ஆக அதாவுல்லா அதிகரித்தார் என்றும், தனக்கு ஆதரவான பலரை, அவர் இதன்போது உயர்பீட உறுப்பினர்களாக்கினார் எனவும் கூறப்படுகிறது.  

இவ்வாறான பின்னணியில்தான், கடந்த வியாழக்கிழமை (20) தேசிய காங்கிரஸின் பிரதித் தலைவர் பதவியிலிருந்தும் உயர்பீட உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் இராஜினாமாச் செய்வதாக, தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாவுக்கு, பதிவுத் தபால் மூலம் உதுமாலெப்பை அறிவித்திருந்தார். 

இந்த இராஜினாமா, தேசிய காங்கிரஸுக்குள் மட்டுமன்றி, முஸ்லிம் அரசியல் அரங்கிலும் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.  

உதுமாலெப்பை தனது பதவியை இராஜினாமாச் செய்தமையை அடுத்து, அவரைச் சந்தித்து, சமரசம் பேசுவதற்காக, அதாவுல்லா சிலரை கொழும்பு வரைக்கும் அனுப்பி வைத்த போதும், அந்த முயற்சி கைகூடவில்லை. இந்தப் பத்தி எழுதும் வரை, உதுமாலெப்பை இந்த விவகாரம் குறித்து எவரையும் சந்திக்கவில்லை.  

இந்த நிலையில், “கூட்டமைப்பொன்றை உருவாக்கும் பொருட்டு, முஸ்லிம் கட்சிகளுடன் இணைய முடியாது எனக்கூறிக் கொண்டு, தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லா, தொடர்ந்தம் காலங்கடத்த முடியாது” என்று, உதுமாலெப்பை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்திருக்கின்றார்.   

மேலும், “இந்தக் கூட்டமைப்பின் பொருட்டு, அமைச்சர் ரிஷாட்டுடன் ஒன்றிணைந்து செயற்பட முடியாது என்றோ, வேறு கட்சித் தலைவர்களுடன் கூட்டுச்சேர முடியாது என்றோ, அதாவுல்லா கூறக் கூடாது” எனவும் உதுமாலெப்பை வலியுறுத்தியுள்ளார்.  

அப்பிராணிகளுக்கான அறிக்கை  

இதேவேளை, கட்சியின் பதவிகளைத்தான் இராஜினாமா செய்துள்ள போதிலும், தேசிய காங்கிரஸின் அங்கத்துவத்திலிருந்து விலகவில்லை என்றும், தொடர்ந்தும் தேசிய காங்கிரஸிலேயே இருக்கின்றேன் என்றும் உதுமாலெப்பை கூறியிருக்கின்றார்.   

இந்த ‘மாமூல்’ வார்த்தைகள், கட்சியின் பாமர ஆதரவாளர்களை ஆறுதல்படுத்தி இருக்கின்றன. ‘என்ன நடந்தாலும், கட்சியை விட்டும் உதுமாலெப்பை விலகிச் செல்ல மாட்டார்’ என்று, தேசிய காங்கிரஸின் அடிமட்டத் தொண்டர்கள் இதைச் சுட்டிக்காட்டி, சந்தோஷப்பட்டுக் கொள்கின்றனர்.  

ஆயினும், தேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை கிட்டத்தட்ட விலகி விட்டதாகவே, நமக்குக் கிடைக்கும் நம்பகரமான தகவல்கள் கூறுகின்றன. அதாவுல்லாவுக்கும் உதுமாலெப்பைக்கும் இடையிலான இந்தப் பிளவு, இனி ஒட்டுவதற்கான சாத்தியங்கள் மிகவும் அரிதாகவே தெரிகிறது.   

அப்படி நடந்தால், தனது அரசியலுக்கான முள்ளந்தண்டை அதாவுல்லா இழக்க நேரிடும். இதனால் தனது அரசியலைத் தொடர்வதற்கு, அதாவுல்லா மிகவும் கடினமான சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.  

இதேவேளை, உதுமாலெப்பை, தனது அரசியலை வெற்றிகரமாகத் தொடர வேண்டுமாயின், ஏதோவொரு முஸ்லிம் கட்சியுடன் இணைய வேண்டிய தேவை உள்ளது. 

அப்படி இணைவதாயின், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில்தான் இணைய வேண்டும் என்று, உதுமாலெப்பைக்கு நெருங்கியவர்களில் அதிகமானோர் கூறுவதாகவும் அறியமுடிகிறது.  

அட்டாளைச்சேனையில், முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகத் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இருக்கின்றார். அவர் அரசியலிலும் வயதிலும் உதுமாலெப்பைக்கு இளையவராவார்.   

இந்த நிலையில், முஸ்லிம் காங்கிரஸில் உதுமாலெப்பை இணைந்து கொண்டால், தனக்கு எல்லா வகையிலும் கனிஷ்ட நிலையிலுள்ள மேற்படி முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் தலைமையின் கீழிருந்தே செயற்பட வேண்டிய நிலைமை உருவாகும். அதனை உதுமாலெப்பை விரும்ப மாட்டார் என்றே தெரிகிறது. உதுமாலெப்பைக்கு நெருக்கமானவர்களும் இதற்குச் சம்மதிக்க மாட்டார்கள்.  

எவ்வாறிருந்தபோதிலும், உதுமாலெப்பை உடனடியாக மாற்றுக் கட்சியொன்றில் இப்போதைக்கு இணைய மாட்டார் போலவே தெரிகிறது. அப்படிச் செய்தால், தேசிய காங்கிரஸுக்குள்ளும் அக்கரைப்பற்று மக்களிடமும் உதுமாலெப்பை ‘துரோகி’யாகி விடுவார். 

எனவே, ஒரு ‘தியாகி’யாகவே தேசிய காங்கிரஸிலிருந்து பிரிந்து செல்வதற்கு உதுமாலெப்பை முயற்சிப்பார். அதற்குப் பொருத்தமானதொரு தருணம் வரும் வரை, ‘தேசிய காங்கிரஸில்தான் நான் இருக்கின்றேன்’ என்றுதான் உதுமாலெப்பை கூறிக் கொண்டிருப்பார்.   

தேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை விலகிச்செல்வதென்பது, அந்தக் கட்சியின் சின்னமான குதிரை, கால்களை இழப்பதற்கு ஒப்பானதாகும். எத்தனை கால்கள் என்பதை, காலம்தான் சொல்ல வேண்டும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .