2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

தேர்தலில் யார் தோற்றார்கள்?

Gopikrishna Kanagalingam   / 2018 பெப்ரவரி 15 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை, குப்பையள்ளுவதற்கான தேர்தல் என்று, கொச்சையாகவும் கேலியாகவும் குறிப்பிடும் வழக்கம் இருக்கிறது. இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகாரம், மிகக்குறைவானது என்ற நிலையில், அவர்களின் முக்கியமான பணிகளுள் ஒன்றாக, கழிவகற்றலே காணப்படுவதைச் சுட்டிக்காட்டித் தான், இவ்வாறு அழைப்பதுண்டு. அப்படிப்பட்ட தேர்தலொன்று, நாட்டின் தேசிய அரசியலையே மாற்றியமைக்கும் அளவுக்கு மாறியிருக்கிறது என்றால், யோசிக்கத் தான் வேண்டியிருக்கிறது.  

நடந்துமுடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் முடிவுகள் வந்திருக்கின்றன. கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள பதற்றங்களை, பத்திரிகைகளை வாசிப்போர், நிச்சயமாகப் புரிந்து கொண்டிருக்க முடியும்.

ஆனால், இத்தேர்தலால் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டாலும், இத்தேர்தலின் முடிவுகளை எவ்வாறு பார்ப்பதென்பது, இன்னமும் தெளிவில்லாத நிலைமையிலேயே உள்ளது.  

340 உள்ளூராட்சி மன்றங்களுக்காக இடம்பெற்ற தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான* ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, 239 சபைகளில் முன்னிலையைப் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு 41 சபைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 34 சபைகளிலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் 10 சபைகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. (* - பொதுஜன பெரமுனவின் உத்தியோகபூர்வமான தலைவர் ஜி.எல். பீரிஸ் என்றாலும், மஹிந்த ராஜபக்‌ஷ தான் தான் உண்மையான தலைவர் என்பதால், மஹிந்தவின் பெயரைப் பயன்படுத்துவதே பொருத்தமானது.)  
ஊடகங்கள் சொல்வது போல, 239 சபைகளில், பொதுஜன பெரமுன வெற்றிபெற்றிருக்கவில்லை.

சபைகளைில் வெற்றிபெறுவதென்பது, 50 சதவீதத்துக்கும் அதிகமான ஆசனங்களைப் பெறுவதாகும். சிலவேளை, முன்னிலை பெற்ற கட்சியால், ஆட்சியமைக்க முடியாது போகலாம். அது, தனியான விடயமாகும். இத்தேர்தலின் முடிவுகளை ஆராய்வதன் அடிப்படையான தன்மையை, ஊடகங்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதன் முதலாவது ஆதாரம் இதுவாகும்.  

ஊடகங்கள் ஒருபக்கமாக இருக்க, அரசியல்வாதிகளும் இத்தேர்தலின் முடிவுகளை, எந்தளவுக்குச் சரியாக ஆராய்கிறார்கள் என்பது, முக்கியமான கேள்வியாக இருக்கிறது.  

மஹிந்த குழுவினரைப் பொறுத்தவரை, அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் எதிராக, மக்கள் வழங்கிய ஆணையாகத் தான், இதைப் பார்க்கிறார்கள். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டு தேர்தல்களில் அப்பிரிவினருக்குக் கிடைத்த தோல்விக்கான, விமோசனமாக அவர்கள் இதைக் கருதுகிறார்கள். இதனால் தான், ஜனாதிபதித் தேர்தலையும் நாடாளுமன்றத் தேர்தலையும் உடனடியாக நடத்துமாறு, அவர்கள் கோருகிறார்கள்.  

அவர்களின் பக்கத்திலும் நியாயம் இருக்கிறது. நடைபெற்று முடிந்த இத்தேர்தல், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலாகக் கருதப்படவில்லை. அதையும் தாண்டி, தேசிய அரசாங்கத்துக்கான அங்கிகாரத்தைக் கோரும் தேர்தலாகவே பார்க்கப்பட்டது. இதனால் தான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், “எமது ஆட்சியைக் கொண்டுசெல்ல, எமக்கு வாக்களியுங்கள்” என்று, மாறி மாறிக் கேட்டுக் கொண்டிருந்தார். மறுபக்கமாக மஹிந்த பிரிவினரோ, “நாட்டைக் காட்டிக் கொடுக்கும் இந்த ஆட்சியை வீழ்த்த, எமக்கு வாக்களியுங்கள்” என்று கோரினார்கள். எனவே, அரசாங்கத்தின் மீதான கருத்துக்கணிப்பாகவே இத்தேர்தல் பார்க்கப்பட்டது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 

இத்தேர்தல்களில், ஐ.தே.கவுக்கும் ஸ்ரீ.ல.சு.கவுக்கும் கிடைத்துள்ள மாபெரும் பின்னடைவு, அரசாங்கத்தின் மீதான எதிர்ப்பு என்பது தான் முக்கியமானது. பல அரசியல் நிபுணர்கள் சொல்வது போல, மஹிந்தவுக்கான ஆதரவு என்பதை விட, அரசாங்கத்துக்கான எதிர்ப்பாகவே, மஹிந்தவுக்கான வாக்குகள் சென்றிருந்தன. ஆகவே, இவ்வரசாங்கத்தின் மீதான மக்கள் ஆதரவு, பலமாக வீழ்ச்சியடைந்துள்ளது என்பதற்கான உறுதியான ஆதாரமாக இது காணப்படுகிறது.  

இருந்தாலும் கூட, நடைபெற்று முடிந்த தேர்தல்கள், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் என்பதை, நாம் மீள ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் ஆதரவுக்கான கருத்துக்கணிப்பாக இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன, இத்தேர்தலின் மூலம் அரசாங்கத்தை மாற்ற வேண்டுமென்ற நோக்கத்தில் தான் மக்கள் வாக்களித்தார்களா என்பதற்கு, உறுதியான ஆதாரம் கிடையாது. அரசாங்கத்துக்கான எதிர்ப்பு என்பது வேறு, அரசாங்கத்தை மாற்ற வேண்டுமென்பதற்காக வாக்களிப்பது என்பது வேறு.  

அத்தோடு, இலங்கை அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தின்படி, விரும்பிய நேரங்களில் நாடாளுமன்றத்தைக் கலைத்து, தேர்தலை நடத்தும் அதிகாரம், ஜனாதிபதியிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. நான்கரை ஆண்டுகளுக்குப் பின்னர் தான், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம், ஜனாதிபதியிடம் இருக்கிறது. அதற்குள் கலைப்பதற்கு, நாடாளுமன்றத்தால் மாத்திரமே முடியும். தற்போதைய நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் 106 உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்களும், நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை விரும்பமாட்டார்கள் என்பது தெரிகிறது. ஐ.தே.கவுக்கும் ஸ்ரீ.ல.சு.கவுக்கும் ஆதரவு வீழ்ச்சியடைந்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரியும் போது, இப்போது தேர்தலுக்குச் செல்வது, தமது கட்சிகளுக்குப் பாதிப்பாக அமையுமென்பதை, சு.கவின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, ஐ.தே.கவின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நன்றாகவே அறிவர்.   

ஆகவே, பொதுஜன பெரமுனவுக்குத் தற்போது இருக்கும் ஒரே வாய்ப்பு, அரசாங்கத்துக்குள் குழப்பங்களை ஏற்படுத்தி, அது செயற்படாமல் செய்வதோடு, உட்கட்சிக் குழப்பங்களையும் ஏற்படுத்துவதாகும். அதை அவர்கள், தெளிவாகவே மேற்கொண்டு வருகிறார்கள்.  

மறுபக்கமாக, பின்னடைவைச் சந்தித்துள்ள ஐ.தே.கவும் ஸ்ரீ.ல.சு.கவும், தமது பின்னடைவுகளுக்கான காரணங்களை உணர்ந்துள்ளனவா என்ற கேள்வியும் எழுகிறது. இத்தேர்தல் சொன்ன செய்திகளை அவர்கள் புரிந்துகொண்டாலொழிய, அவர்களால் இப்பின்னடைவிலிருந்து வெளியே வர முடியாது.  

ஆனால், இரு கட்சிகளும், இதுவரை வெளிப்படுத்தியுள்ள சமிக்ஞைகள், ஆரோக்கியமானவையாக இல்லை. நிதியமைச்சர் மங்கள சமரவீரவோ, பொதுஜன பெரமுனவுக்கு 44.69 சதவீதமானோர் மாத்திரமே வாக்களித்திருப்பதால், 55 சதவீதத்துக்கும் மேற்பட்டோர், மஹிந்தவை எதிர்க்கிறார்கள், இது கடந்த ஜனாதிபதித் தேர்தலை விட அதிகம் என்கிறார்.

அரச ஊடகங்களில், மிகப்பெரும் ஆராய்ச்சி போல அதற்கு முக்கியத்துவம் வழங்கி வெளியிடுகிறார்கள். அவரின் அதே தர்க்கத்தின்படி பார்த்தால், ஐ.தே.கவுக்கு 32.61 சதவீதமான வாக்குகளே கிடைத்த நிலையில், 67 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள், பிரதமரையும் ஐ.தே.கவையும் எதிர்க்கிறார்கள் என்று பொருளாகுமே? அதைவிட மோசமாக, 86 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள், ஜனாதிபதியை எதிர்க்கிறார்கள் என்று பொருளாகுமே?  

ஒப்பிட வேண்டுமானால், ஓரளவுக்குப் பொருத்தமான வாக்கு வங்கியாக, 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலைக் கருதலாம். அதன்படி பார்த்தால், ஐ.தே.கவின் வாக்கு வங்கியில் 13 சதவீதத்துக்கும் அதிகமான சரிவு ஏற்பட்டிருக்கிறது. சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கியில் கிட்டத்தட்ட 30 சதவீதமான சரிவு ஏற்பட்டிருக்கிறது.  

ஆனால், இதில் இன்னோர் உண்மையும் இருக்கிறது. சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டிருந்தாலும் கூட, பொதுஜன பெரமுனவுக்குக் கிடைத்த வாக்குகள், சுதந்திரக் கட்சியின் வாங்கு வங்கிக்கு உரியனவே. அப்படிப் பார்க்கும் போது, 58.07 சதவீதமான வாக்குகளாக, சுதந்திரக் கட்சியின் வாக்குகள் உயர்ந்துள்ளன. எனவே, சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பில், ஜனாதிபதி மைத்திரிபால மீதான நம்பிக்கையீனம் வெளிப்பட்டிருந்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.  

ஆனால், சுதந்திரக் கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டால், இந்த வாக்குகளில் குறைவு ஏற்பட வாய்ப்புண்டு என்பதையும் மறுக்க முடியாது.  

தேசியக் கட்சிகளின் நிலை இப்படி என்றால், தமிழ் மக்களைப் பிரதானமாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், வாக்குகளை இழந்துள்ளது. இதுவரை தனிக்காட்டு ராஜாவாக இருந்த கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடமிருந்து, ஆரோக்கியமான போட்டியொன்றை எதிர்கொள்ளப் போகிறது.  

கூட்டமைப்பில் கழுதையை நிறுத்தினாலும் மக்கள் வாக்களிப்பர் என்ற எண்ணத்தில், கடைசிநேரத்தில் கூட, கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் பலர், மக்களிடத்தில் சென்று பிரசாரங்களை மேற்கொள்ளாமல் இருந்தனர் என, வாக்களித்த மக்களே குறிப்பிடுகின்றனர். ஆகவே, என்ன நடந்தாலும் மக்களின் வாக்குகள் கிடைக்கும் என்ற எண்ணத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.   

இவ்வாறு, பிரதான கட்சிகள் அனைத்துக்கும் பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ள இத்தேர்தல், இலங்கை வரலாற்றில் முக்கியமான தேர்தலாக மாறியுள்ளது என்பதை மறக்க முடியாது தான்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .