2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தேர்தலுக்குப் பின்னரான ஓய்வுகால அரசியல்

மொஹமட் பாதுஷா   / 2018 ஏப்ரல் 29 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல்கால முஸ்லிம் அரசியலுக்கும், தேர்தல் எதுவுமற்ற கால முஸ்லிம்களின் அரசியலுக்கும், நிறைய வித்தியாசம் இருப்பதைத் தொடர்ச்சியாக அவதானிக்க முடிகின்றது.   

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, அதிகாரத்தைத் தம்வசப்படுத்துவதற்காக எடுக்கும் பிரயத்தனங்களை, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக, சமூகத்தின் அபிலாஷைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக, ஏனைய காலங்களில் காணக் கிடைப்பதில்லை.   

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், எந்த முஸ்லிம் கட்சி வெற்றி பெறுவது என்ற யுத்தம் முடிவடைந்து, சபைகளில் ஆட்சி அமைப்பதற்கான இடியப்பச் சண்டையும் கிட்டத்தட்ட நிறைவு பெற்றிருக்கின்ற சூழ்நிலையில், தேர்தல்கால உற்சாகத்தையும் வேகத்தையும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இழந்து, மக்கள் சார்பு அரசியல் வழித்தடத்தில், ஒருவித தேக்கநிலையை அடைந்திருக்கின்றன.  

தேர்தல்காலச் செயற்பாடுகள் எத்தனை வீரியமாக இருந்தன என்பதையும், முஸ்லிம் கட்சிகளின் பீரங்கிப் பேச்சுகள், நடவடிக்கைகள் எவ்வாறு இருந்தன என்பதையும், காலம் இன்னும் நமக்கு மறக்கடிக்கவில்லை.   

ஆனால், பண்டிகைக் காலத்தில் அல்லது திருவிழாக் கொண்டாட்டங்களுக்காக எங்கிருந்தோ வந்து கடை விரித்து விட்டு, ‘காரியம்’ முடிந்த பின் உடனேயே பெட்டியைக் கட்டி, தமது பழைய முகாம்களுக்கு திரும்பிவிடுகின்ற பொட்டணி வியாபாரிகளுக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் பாரிய வேறுபாடுகள் இருக்கின்றனவா எனத் தெரியவில்லை.   

நீண்டகாலம் உழைத்த ஒரு விவசாயி, அறுவடைக்கும் அடுத்த விதைப்புக்கும் இடையில் சற்று ஓய்வெடுப்பது போல, முஸ்லிம் கட்சிகளும் பொதுவாக எல்லா முஸ்லிம் அரசியல்வாதிகளும் தேர்தல் இல்லாத காலங்களை ஓய்வுகாலம் போல கருதிச் செயற்படுகின்றார்கள்.   

இதில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸோ, அகில இலங்கை மக்கள் காங்கிரஸோ, தேசிய காங்கிரஸோ, ஐக்கிய மக்கள் கூட்டமைப்போ, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியோ அல்லது ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளோ விதிவிலக்கல்ல.   

நாம் வரையறை செய்கின்ற முஸ்லிம் மக்களின் அரசியல் என்பது, முஸ்லிம் பொதுமக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை, அபிலாஷைகளை மையமாகக் கொண்டதாக அல்லாமல், அதை வைத்துப் பிழைப்பு நடாத்துகின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளின் அதிகாரத்தை, பதவியை, வருமானத்தை, எதிர்காலத்தை, பிரச்சினைகளை முன்னிறுத்திச் செயற்படுகின்ற போக்கைக் காண முடிகின்றது.   

இவ்வாறு, முஸ்லிம்களின் நீண்டகால அபிலாஷைகளுக்காக அல்லாமல், அரசியல்வாதிகளின் ‘அன்றாடங்களுக்காக’ முஸ்லிம் அரசியல் கையில் எடுக்கப்படுகின்றமையாலேயே, முஸ்லிம் சமூகம், அரசியலில் குறிப்பிடத்தக்களவு முன்னகரவில்லை என்று கூறலாம்.   

தேர்தல் காலம் போன்று, மக்கள் மத்தியில் தமது கட்சியை அல்லது தம்மைப் பிரசித்தப்படுத்த வேண்டிய தேவையேற்படும் பருவகாலத்தில், முஸ்லிம் சமூகவெளியானது, கண்கொள்ளாக் காட்சிகளால் நிரம்பியிருக்கும்.  

 முஸ்லிம் ஊர்கள் எல்லாமே, வேறு ஒரு கற்பனை உலகத்துக்குள் சஞ்சரித்தது போன்ற மாயத் தோற்றம் ஏற்பட்டிருக்கும். விஞ்ஞாபனங்களும் வாக்குறுதிகளும் வசைபாடல்களும் ஒலிபெருக்கிகளில் வழிந்தோடும்.  

 சண்டித்தனமும் பொய்யும் ஏமாற்று வித்தையும், அங்கிகரிக்கப்பட்ட உத்திகள் போல மாறியிருக்கும்.   
பின்னர் தேர்தல் முடிந்த பிறகு, ஒரு திரைப்படம் பார்த்து முடித்த மாதிரி இருக்கும். இந்த மாயாஜாலங்கள் எதுவுமற்ற, நிஜ உலகுக்கு முஸ்லிம் திரும்பி வர வேண்டியிருக்கும். இதுதான் வழமை. இந்தமுறை நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலிலும், அதற்குப் பின்னரான இன்றைய நாட்களிலும் இப்பண்பு நிலை மாற்றத்தை, தெட்டத் தெளிவாகக் காண முடிகின்றது.   

புதிய முறையில்தான், உள்ளூராட்சி சபை தேர்தல் இம்முறை நடைபெறும் என்று தெரிந்ததால், களத்தில் மேலும் பல முஸ்லிம் அணிகள் இருந்தன. இதனால் முஸ்லிம் கட்சிகள், தங்களது தேர்தல் வியூகங்களை மீளமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.   

எந்தப் பெருந்தேசியக் கட்சியுடன் எங்கு சேர்ந்து போட்டியிடுவது, எங்கு தனித்தனியாகக் களமிறங்குவது என்ற முடிவுக்கு வர வேண்டியிருந்தது. வட்டாரத்தை வசப்படுத்துவதற்கும் சபையைக் கைப்பற்றுவதற்குமான ‘செய்வினை’களையும் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதை, எல்லா முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் அவரவரின் புத்திசாலித்தனத்துக்கு ஏற்றாற்போல, செய்தார்கள் என்றுதான் கூற வேண்டும்.   

ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்திலும் தனித்து மரச் சின்னத்திலும் போட்டியிட்டதற்கு மேலதிகமாக, சில இடங்களில் புதுப்புதுச் சின்னங்களிலும் களமிறங்கியிருந்தது.   

ஐ.தே.கவுடன் சேர்ந்து அரசியல் செய்கின்ற ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்புடன் இணைந்து, ஐக்கிய (முஸ்லிம்) மக்கள் கூட்டமைப்பைத் தோற்றுவித்தது. அதன்படி, சில இடங்களில் யானைச் சின்னத்திலும் வேறு சில சபைகளில் மயில் சின்னத்திலும் களமிறங்கியிருந்தது.   

முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்து கைச்சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்ததுடன், சில இடங்களில் கட்சியின் குதிரைச் சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டிருந்தது.   

இதேவேளை, அங்கிகரிக்கப்பட்ட அரசியல்கட்சியாக பதிவு செய்யப்பட்ட பின்னர், முதலாவதாக இம்முறை தேர்தலில் குதித்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, சில சபைகளில் தமது வேட்பாளர்களை இரட்டைக் கொடிச் சின்னத்தில் நிறுத்தியிருந்தது.   

பிரதான முஸ்லிம் கட்சிகள், பெரும்பான்மைக் கட்சிகளுடன் சேர்ந்தோ அல்லது அதே பெரும்பான்மைக் கட்சிக்கு எதிராகத் தனித்தோ போட்டியிட முடிவெடுத்தமை, முஸ்லிம் மக்களின் நலனுக்காக அல்ல.   

சொந்தச் சின்னத்தில் குதிப்பதா, கூட்டுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதா, சுயேட்சைக் குழுவில் களமிறங்குவதா அல்லது குறித்த சபையில் போட்டியிடாமலேயே விட்டுவிடுவதா என்ற இறுதித் தீர்மானம், முஸ்லிம் மக்களின் நலன்களை, அபிலாஷைகளை, அரசியலினூடு தீர்க்கப்பட வேண்டிய நீண்டகாலப் பிரச்சினையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதல்ல.   

மாறாக, எங்கு எப்படிப் போட்டியிட்டால் அதிக உறுப்பினர்களைப் பெறலாம், சபையைக் கைப்பற்றலாம், மற்றைய முஸ்லிம் கட்சியை அல்லது அணியைத் தோற்கடிக்கலாம் என்ற, தற்சார்பு நலன்களை அடிப்படையாக வைத்தே, இந்தத் தேர்தல் வியூகங்கள் வகுக்கப்பட்டன.   

புதிய தேர்தல் முறையில், வாக்கெடுப்பு நடைபெறுகின்றது. எனவே, அதிக முஸ்லிம் உறுப்பினர்களைப் பெறுவது எவ்வாறு என்றும், பெரும்பான்மைக் கட்சியின் ஆதரவு இன்றி ஆட்சியமைக்க முடியாதா என்பது பற்றியும் பிரதான முஸ்லிம் கட்சிகள் சிந்திக்கவில்லை.   

தமது கட்சி வெற்றி பெற வேண்டும்; தமது தவிசாளர், சபையை ஆள வேண்டும்; ஏனைய முஸ்லிம் கட்சிகளை விடத் தமது கட்சிக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்க வேண்டும். அதனூடாகத் தமது ‘கிரீடம்’ இன்னும் அலங்கரிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே, பிரதான முஸ்லிம் கட்சிகள், தமது உபாயங்களை நடைமுறைப்படுத்தி இருந்தன.   

‘பூனை கண்ணைமூடிக் கொண்டு பாலைக் குடிப்பது போல’ இது நடந்தாலும், இந்தச் சூட்சுமங்களை முஸ்லிம் மக்கள் அறியாதவர்களல்லர். ஆனால், முஸ்லிம் மக்கள் இந்தத் தேர்தலில், தமது கணிப்பின்படி சிறந்தது எனக் கருதப்படும் கட்சிக்கு, வேட்பாளருக்கு வாக்களித்தனர்.   

ஆனால், தேர்தல் முடிவடைந்த பிறகும், அரசியல்வாதிகள் ஆட்சியமைப்பதில் ‘பிஸி’யாகிவிட்டனர். கடந்த இரண்டு மாதங்களாக, அதற்குப் பின்னாலேயே முழு நேரத்தையும் கடத்திக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது. இது தவிர்க்க முடியாதது என்பதையும் மக்கள் அறிவர்.   

எது எப்படியிருப்பினும், கூட்டு ஆட்சியமைப்பது தொடர்பாக, முஸ்லிம் கட்சிகள் எடுத்த முடிவுகள், மேற்கொண்ட காய்நகர்த்தல்கள், 99 சதவீதம் கட்சிசார்பு அரசியல் நலனை முன்னிலைப்படுத்தியதே அல்லாமல், முஸ்லிம்களின் அரசியல் பலத்தை உறுதிப்படுத்துவதை நோக்காகக் கொண்டதாக அமையவில்லை என்பதையும் முஸ்லிம் பொதுமக்கள் அறியாதவர்கள் அல்லர்.   

ஆனால், தேர்தல் முடிவடைந்து, தமிழ் பேசும் பிரதேசங்களின் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கும் வேலைகள், பெருமளவுக்கு முடிவுக்கு வந்துவிட்ட பிற்பாடும், முஸ்லிம் கட்சித் தலைவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் இன்னும் ‘வழமைக்கு’ திரும்பவில்லை என்பதை சுட்டிக் காட்டுவதே இப்பத்தியின் மையக் கருப்பொருளாகும்.   

முஸ்லிம்களின் அபிலாஷை, நீண்டகாலப் பிரச்சினைகள், எதிர்பார்ப்புகளோடு ஒப்பிடும்போது, தேர்தல் என்பது ஒரு பெரிய விடயமே அல்ல என்றுதான், கணிப்பிட வேண்டியிருக்கின்றது.   

ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் சபைகள் அமைக்கப்பட்ட பிறகும் நீண்டகாலத்துக்குத் தேர்தல் மனநிலைக்குள்ளும் அதுபற்றிய வேலைகளுக்குள்ளும் மூழ்கி இருப்பது,  ஆரோக்கியமானதோர் அரசியலுக்குப் பொருத்தமானதல்ல.   

தேர்தல் வெற்றியின் மூலம் நெடுங்காலத் திட்டங்களுக்கான அடிப்படைகளை ஏற்படுத்த முடியுமாகவிருக்கும் என்பது உண்மையே.   

ஆனால் முஸ்லிம்களின் அரசியல் முன்னகர்வும் அதனூடாக அபிலாஷைகளைப் பெற்றுக் கொள்வதும் என்பது, ஒரு நீண்டகாலச் செயன்முறையாகும். தற்காலிகச் சந்தோசங்களுக்குள்ளும் சிக்கல்களுக்குள்ளும் மூழ்கி இருப்பதன் மூலம், முஸ்லிம்களின் நிரந்தரப் பிரச்சினைகள் குறித்துக் கவனம் செலுத்தாதிருப்பதை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.   

தேர்தல் காலத்தில் முஸ்லிம் கட்சித் தலைவர்களும், நாட்டில் ஒவ்வொரு மூலையிலும் இருக்கின்ற குக்கிராமங்களுக்கும் அடிக்கடி சென்று வந்தனர். போகவே முடியாத தூரப் பிரதேசங்களிலும், ஏழைகளின் வீட்டு வாசல்களிலும் அவர்களது காலடிகள் தடம்பதித்தன.   

ஆனால், இப்போது ஆசைக்குக்கூட முஸ்லிம் அரசியல்வாதிகளைக் காண முடியாதிருக்கின்றது. மக்களால் தொலைபேசியிலோ அல்லது நேரிலோ தொடர்புகொள்ள முடியாதளவுக்கு, மீண்டும் அந்த ‘இடைவெளி’ ஏற்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.   

இதற்குப் பெரும்பாலான அரசியல்வாதிகள் சொல்லும் காரணம், ‘சபை அமைப்பதில் கடும் வேலைப்பளு’ என்பதாகும். இங்குதான், ஆரோக்கியமான அரசியல் இல்லாது போய்விடுகின்றது.   

முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் தலைவர்கள், உள்ளூராட்சி சபைகளைக் கட்டமைப்பதில் கவனம் செலுத்தி இருக்கின்றார்கள். இதற்காக, அல்லது ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகள் வேலைப்பளுவுடன் இருக்கின்றார்கள் என்ற உப்புச்சப்பற்ற காரணங்களுக்காக, தேசிய அரசியலில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் எல்லாவற்றையும் அரசாங்கமும் ஏனைய தரப்புகளும் தாமதித்து வைத்திருக்கப் போவதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.   

அரசியல் என்பது ஓடிக்கொண்டே இருக்கும். எனவே முஸ்லிம் அரசியல்வாதிகள் கட்சிசார், தனிப்பட்ட நலன்களைக் கவனிக்கின்ற சமகாலத்தில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டியது கட்டாயமாகும்.   

குறிப்பாக, தற்போது மீண்டும் அரசமைப்பு மறுசீரமைப்பு விவகாரம், எந்த முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துதல் என்ற சர்ச்சை, வடக்கு - கிழக்கு இணைப்பு, சமஷ்டி, இனவாத, மதவாதச் செயற்பாடுகள் நாட்டில் முன்னெடுக்கப்படுகின்றன என்பதுடன், இது முஸ்லிம்களுக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நன்றாகவே அனுமானிக்க முடிகின்றது.   

ஏனைய இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் போல, முஸ்லிம் கட்சித் தலைவர்களும் அமைச்சர்களும், நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் எல்லோருமே புனிதர்கள் அல்லர்; அவர்கள் தேவ தூதர்களும் அல்லர்; சொன்ன வாக்கைக் காப்பாற்றுகின்ற கனவான் அரசியல்வாதிகளும் அல்லர். மறுபக்கத்தில், பேசுவதை எல்லாம் செய்வதற்கு நடைமுறை யதார்த்தம் இடமளிப்பதும் இல்லை.   

எவ்வாறிருப்பினும் முஸ்லிம் அரசியல்வாதிகள், சொந்த மற்றும் கட்சி அரசியலுக்கு அப்பால் எல்லாக் காலங்களிலும் ‘மக்கள் மய்ய’ அரசியலில் கவனம் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.  தேர்தல் மேடைகளில் ஆயிரம் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு, ஒன்றுமே செய்யாமல் காலத்தை இழுத்தடிப்பதும், போன பஸ்ஸுக்குக் கை காட்டுவதும், முதிர்ச்சியடைந்த அரசியலின் இலட்சணங்கள் அல்ல.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .