2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தேர்தல் அரசியலுக்கு வந்த பிரியங்கா

எம். காசிநாதன்   / 2019 ஜனவரி 28 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திரா காந்தியின் பேர்த்தியும் சோனியா காந்தியின் மகளுமான பிரியங்கா காந்தி, காங்கிரஸ் சார்பில், திடீரென்று களமிறக்கப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிழக்கு மண்டலத்துக்கான, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.   

நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 நாடாளுமன்றத் தொகுதிகள், மத்திய அரசாங்கம் அமைப்பதற்குத் தேவையான 272 எம்.பிக்கள் கொண்ட பெரும்பான்மையை நிர்ணயிக்கும் வல்லமை படைத்தவை. இதை நன்குணர்ந்துள்ள அரசியல் கட்சிகள், தேர்தல் தந்திரங்களையும் கூட்டணி முடிவுகளையும் அவசர அவசரமாக எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாகத்தான், காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  

தேசிய கட்சியான காங்கிரஸின் கையிலிருந்த உத்தரப்பிரதேச மாநிலத்தை, முதன் முதலில் தட்டிப் பறித்த கட்சி ஜனதா கட்சி ஆகும். 1977ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், அங்கு பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று, மொரார்ஜி தேசாய், பிரதமராகப் பதவியேற்றார்.   

 ஆனால், நாளடைவில், மாநிலக் கட்சிகளின் ஆதிக்கத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் மாட்டிக் கொண்டது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் உத்தரப்பிரதேச மாநிலத்தில், மாறிமாறி ஆட்சிக்கு வரும் சூழல் உருவாகியது.   

ஆனால், இந்த நிலையை மாற்றியது பாரதிய ஜனதா கட்சிதான். 2017ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், 384 இடங்களில் போட்டியிட்ட அக்கட்சி, 312 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்தது. யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சரானார்.   இந்த வெற்றியின் போது, பா.ஜ.க பெற்ற வாக்குகள் 39.67 சதவீதமாகும். 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், இந்த மாநிலத்தில், இக்கட்சி பெற்ற வாக்குகளை விட மூன்று சதவீதம் குறைவு. 

பிரதமர் மோடிக்கு வாக்களித்த மூன்று சதவீதம் வாக்காளர்கள், அக்கட்சியை விட்டு விலகிச் சென்றார்கள். ஆனால் அதன் பிறகு, ‘என்கவுன்டர் ஆட்சி’ என்று, யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சியை, எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வதால், இன்றைக்கு அடுத்தடுத்த இடைத் தேர்தல்களில் அங்கு, பா.ஜ.க தோல்விடைந்து வருகிறது.   

இடைத் தேர்தலொன்றில், மாயாவதி - அகிலேஷ் யாதவ் கூட்டணி சேர்ந்ததால், முதலமைச்சரின் சொந்த நாடாளுமன்றத் தொகுதியிலேயே, பா.ஜ.க தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. இந்தத் தோல்வியைப் பார்த்த மாயாவதியும் அகிலேஷ் யாதவும், “நமது இரு கட்சிகளும் தனித்தனியாக நிற்பதால்தான் பா.ஜ.க வெற்றி பெறுகிறது.

ஆகவே, கூட்டணி வைத்துக் கொள்வோம்” என்று முடிவு செய்து, இப்போது ஆளுக்கு 38 நாடாளுமன்றத் தொகுதிகள் என்று, 76 தொகுதிகளைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டு, காங்கிரஸ் கட்சியைக் கூட்டணியிலிருந்து கழற்றி விட்டார்கள்.   

“சோனியாவும் ராகுல் காந்தியும் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் வேட்பாளரை நிறுத்த மாட்டோம்” என்றும் அறிவித்திருக்கிறார்கள். இந்த அறிவிப்பை, காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கவில்லை. என்றாலும், காங்கிரஸ் கட்சிக்குள்ள வாக்கு வங்கிப் பலத்தில் ஏற்பட்டிருக்கும் பலவீனமே, இப்படி அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோரைத் தனியாகத் தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்ளக் காரணமாக அமைந்தது.  

2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 12 சதவீதம், 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 7.53 சதவீதம், 2017ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 6.25 சதவீதம் என்று, காங்கிரஸ் கட்சியின் பலம், படு பாதாளத்துக்குச் சென்றது.    

மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி, இந்த அளவுக்கு ஆறு சதவீதமாகக் குறைந்து விட்டதால், அக்கட்சிக்கு அளிக்கும் தொகுதிகள், பா.ஜ.க வெற்றி பெறத்தான் உதவும் என்ற எண்ணவோட்டத்தில், சமாஜ்வாடி, பகுஜன் கட்சிகள் காங்கிரஸைப் புறக்கணித்துள்ளன.   

ஏனென்றால், கடைசியாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுப்படி, இந்த இரு கட்சிகளும் சேர்ந்தால் 44 சதவீத வாக்குகளைப் பெற்று விடுகின்றன. பா.ஜ.கவுக்கோ 39.67 சதவீத வாக்குகள்தான் கடந்த தேர்தலில் கிடைத்தன. ஆகவே 80 தொகுதிகளில் வெற்றி பெற, காங்கிரஸ் தேவையில்லை என்று முடிவு செய்து விட்டார்கள்.   

இது தனது மூக்கையறுத்ததற்குச் சமம் என்று நினைக்கும் ராகுல் காந்தி, திடீரென்று பிரியங்கா காந்தியை உத்தரப்பிரதேச மாநிலத் தேர்தலை மனதில் வைத்துக் களமிறக்கி இருக்கிறார். முற்பட்ட சமுதாய வாக்குகள் அதிகம் உள்ள மாநிலம் உத்தரப்பிரதேசம். ஆகவேதான், முற்பட்ட சமுதாயத்துக்குப் பொருளாதார அடிப்படையில், 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப் பிரதமர் மோடி, அரசமைப்பையே திருத்தியிருக்கிறார்.   

இந்த இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள முற்படுத்தப்பட்டோர் சமுதாய வாக்குகளை, ஒட்டுமொத்தமாகக் குத்தகைக்கு எடுத்து விட முடியும் என்பது அவரது நம்பிக்கை.

சென்ற நாடாளுமன்றத் தேர்தலில், உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.கவுக்குக் கிடைத்த 71 எம்.பிக்கள்தான், பிரதமர் மோடிக்கு வேறு கட்சிகளின் ஆதரவின்றித் தனித்து ஆட்சியமைக்கும் பலத்தைக் கொடுத்தனர். ஆகவே, முற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை வைத்து, உத்தரப் பிரதேசத்தை வென்று விட வேண்டும் என்று மோடி நினைக்கிறார்.   

இதே முற்படுத்தப்பட்ட சமுதாய வாக்காளர்களைக் குறி வைத்துதான், காங்கிரஸ் கட்சியும் பிரியங்கா காந்தியைத் தேர்தல் களத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. அவர் தலைமையில் காங்கிரஸ் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டு, காங்கிரஸின் வாக்கு வங்கியை ஆறு சதவீதத்திலிருந்து உயர்த்துவது ஒருபக்கமிருந்தாலும், காங்கிரஸைப் புறக்கணித்த சமாஜ்வாதி, பகுஜன் கட்சிகளுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைக்கிறது.

பிரியங்காவின் பிரசார வேகத்துக்குப் பயந்து, அந்த இரு கட்சிகளும் கூட்டணியை மறுபரிசீலனை செய்து, காங்கிரஸுடன் பேச வந்தால், பிறகு பார்க்கலாம் என்பதும் காங்கிரஸின் கணிப்புதான். இன்றைய நிலையில், ஆறு சதவீதம் உள்ள காங்கிரஸ், பிரியங்காவை நம்பி நிற்கிறது. 39 சதவீதம் உள்ள பா.ஜ.க யோகி ஆதித்யநாத்தையும் 10 சதவீத இட ஒதுக்கீட்டையும் நம்பி நிற்கிறது. மாயாவதியும் அகிலேஷ் யாதவும் தங்களுக்குள்ள 44 சதவீத வாக்குகளை நம்பி, கூட்டணி அமைத்துள்ளார்கள்.   

இந்த மாநிலத்தில், ‘மாயாவதி - அகிலேஷ் கூட்டணி’ அதிக எம்.பிக்களைப் பெற்றால், அவர்களால் சுட்டிக்காட்டப்படுபவர்தான் பிரதமராக வரமுடியும் என்ற எண்ணத்தில், இந்த நகர்வைச் செய்துள்ளார்கள்.   

பா.ஜ.கவின் பிரதமராக, மோடி இருக்கிறார். அவர்தான் 2019இல் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராகவும் இருக்கப் போகிறார். ஆகவே, உத்தரப்பிரதேசத்தில் பிரதமர் மோடிக்கு ஆதரவாகவே வாக்குகளை பா.ஜ.க கேட்க வேண்டும். ராகுல் காந்தியை முன்னிறுத்தியே, காங்கிரஸ் கட்சி உத்தரப்பிரதேசத்தில் வாக்குகளைக் கோர வேண்டும்.

ஆனால், மாயாவதி - அகிலேஷ் யாதவ் கூட்டணிக்கு மட்டும், மாயாவதியைப் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தி, வாக்குகளைக் கோரும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. அதேநேரத்தில், இதில் இன்னமும் பிடி கொடுக்காமல், சமாஜ்வாதிக் கட்சியைச் சேர்ந்த அகிலேஷ் யாதவ் பேசி வருகிறார்.   

குறிப்பாக, மம்தா பனர்ஜி சமீபத்தில் கொல்கத்தாவில் கூட்டிய கூட்டத்துக்கு, அகிலேஷ் யாதவ் சென்றிருந்தார். ஆனால், மாயாவதி செல்லவில்லை. அவருக்குப் பதில், அவர் கட்சியிலிருந்து பிரதிநிதியொருவர் மட்டும் அனுப்பப்பட்டு இருந்தார்.   

இதேபோல் டெல்லி, சென்னையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கும் மாயாவதி செல்லவில்லை. இவை அனைத்துமே, மாயாவதிக்கு இருக்கும் பிரதமர் விருப்பத்தைக் காட்டுகிறது. இப்போதைக்கு உத்தரப்பிரதேச மக்கள் நேரடியாக ஒரு பிரதமரைத் தங்கள் மாநிலத்திலிருந்து தெரிவு செய்வதற்கு, வாய்ப்புக் கிடைக்க வேண்டுமென்றால், இங்குள்ள 80 தொகுதிகளில் மாயாவதி - அகிலேஷ் யாதவ் கூட்டணிக்கு அதிக இடங்களில் வெற்றியைப் பெற வேண்டும்.    

ஆகவே, பிரதமர் வேட்பாளர் மாயாவதி என்பதை முன்னிறுத்தி, உ.பி மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றால், அதற்கு எதிர்வினைகளும் நிகழ வாய்ப்புண்டு. அந்த எதிர்வினையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள வேண்டும் என்றுதான், காங்கிரஸ் கட்சி, பிரியங்கா காந்தியிடம் உ.பி தேர்தல் பொறுப்பை ஒப்படைத்துள்ளது.    

பிரியங்கா காந்தி, ஏற்கெனவே ஒரு முறை சமாஜ்வாதிக் கட்சியுடன் கூட்டணி வைத்து, உத்தரப்பிரதேச தேர்தலைச் சந்தித்து, அதில் அவரால், வெற்றி பெற முடியவில்லை. ஆனால், இன்றைக்கு இவர்களின் கூட்டணி இல்லாமல், தனித்தே காங்கிரஸ் வெற்றிக்காகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வந்திருக்கிறார் பிரியங்கா.   

அதன்மூலம், உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸுக்கு அதிக சீட்டுகள் கிடைக்கும் வாய்ப்பு இருக்குமென்றால், பா.ஜ.கவுக்கு எதிராகத் தனிப்பெரும் கட்சியாக, காங்கிரஸ் வருவதற்கு வாய்ப்பு இருக்குமா என்று, முயற்சி செய்து பார்க்கிறார் ராகுல் காந்தி.   

அப்போதுதான் எதிர்க்கட்சிகள் வரிசையில் உள்ள மாயாவதி, மம்தா பனர்ஜி, சந்திரபாபு நாயுடு போன்ற பிரதமர் பதவி மீது மோகம் கொண்டவர்களைக் கட்டுப்படுத்தி, காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி மத்தியில் ஏற்படும் வாய்ப்பை உருவாக்க முடியும் என்பதுதான், ராகுல் காந்தியின் தற்போதைய தேர்தல் கணக்கு.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .