2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தோற்றுப்போன பேரவை: ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’

கே. சஞ்சயன்   / 2017 ஜூன் 25 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாண அரசியலில் அண்மையில் ஏற்பட்ட குழப்பத்தின் போது, அதைத் தீர்த்து வைப்பதற்கான ஒரு நடுநிலைத் தரப்பு முன்வராதா என்ற ஏக்கம் தமிழ் மக்களிடம் பரவலாகக் காணப்பட்டது.  

தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக இருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தோன்றிய முரண்பாடுகள், வடக்கு மாகாண முதலமைச்சரின் பதவிக்கு ஆபத்தாகவும் தமிழ் மக்களின் அரசியல் பலத்தை சிதைப்பதாகவும் அமையும் அளவுக்கு சிக்கலை ஏற்படுத்தியது.  

இத்தகைய சந்தர்ப்பத்தில், இரண்டு தரப்புகளையும் அழைத்துப் பேசி, இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு நடுநிலையான- இரண்டு தரப்பு மீதும் செல்வாக்குச் செலுத்தக் கூடிய சக்தி ஒன்றின் தேவை உணரப்பட்டது. 

இந்தநிலையில்தான், யாழ். ஆயரும் நல்லை ஆதீனமும் இணைந்து அந்த முயற்சியில் இறங்கினர். சற்றுத் தாமதமாகவே மேற்கொள்ளப்பட்ட முயற்சியாக இருந்தாலும், இரண்டு தரப்புகளையும் ஒரு வழியாக இணக்கப்பாட்டுக்குக் கொண்டு வர அவர்கள் உதவினர்.  

இதுபோன்ற தருணங்களில், ஆரம்பக் கட்டத்திலேயே தலையிட்டு, முடிவுக்குக் கொண்டு வருவதில், செல்வாக்குச் செலுத்தக் கூடிய தரப்பு ஒன்றின், போதாமையை இப்போதும் உணர முடிகிறது.  

இத்தகைய கட்டத்தில், ‘தமிழ் மக்கள் பேரவை’ தனது உச்சக்கட்ட செல்வாக்கைச் செலுத்தியிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பைப் பேரவை பயன்படுத்திக் கொள்ளவில்லை.  

தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்ட போது, அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வழிப்படுத்தும் வகையில் செயற்படும் என்றே அதில் அங்கம் வகிப்போரால் கூறப்பட்டது நினைவிருக்கலாம். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் போட்டியாக- மாற்று அரசியல் தலைமையை உருவாக்கவே தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டிருப்பதாக, பரவலான ஊகங்கள் எழுந்த போதுதான், இது அரசியல் அமைப்பாகச் செயற்படாது என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வலுப்படுத்தும் வகையிலும் வழிப்படுத்தும் வகையிலும் செயற்படும் என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.  

ஆனால், அண்மைய அரசியல் குழப்பங்களின் போது, தமிழ் மக்கள் பேரவை, அவ்வாறான ஒரு பங்களிப்பை வழங்கத் தவறியிருந்தது.   

முதலமைச்சரையும் அவரை எதிர்க்கும் தரப்பினரையும் ஓர் இணக்கப்பாட்டுக்குக் கொண்டுவந்து, இந்தப் பிரச்சினையை சுமூகமாகத் தீர்ப்பதற்கான ஆற்றலை, தமிழ் மக்கள் பேரவை பயன்படுத்தியிருந்தால், அது அரசியல் சார்பற்ற ஒரு சிவில் அமைப்பாக, ஒட்டுமொத்த மக்களாலும் அடையாளம் காணப்பட்டிருக்கும்.  

இந்த இடத்தில், தம்மை அரசியல் சார்பற்ற சிவில் அமைப்பு என்ற ‘தமிழ் மக்கள் பேரவை’யின் வாதம் அடிபட்டுப் போய் விட்டது. முதலமைச்சரைத் தமது இணைத் தலைமையாகக் கொண்டிருந்ததால், அவருக்காக நியாயம் கேட்கவே அவர்கள் முற்பட்டிருந்தனர்.  

முதலமைச்சர் விக்னேஸ்வனைப் பலப்படுத்தி, அவரைப் பாதுகாப்பதில் மாத்திரமே தமிழ் மக்கள் பேரவை தமது முழுப்பலத்தையும் பயன்படுத்திக் கொண்டது. அதற்காகப் பேரணிகள் நடாத்தப்பட்டன. கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடாத்தப்பட்டன. அது மாத்திரமன்றி, முழு அடைப்புப் போராட்டம் ஒன்றையும் நடத்தியிருந்தது.  

இந்தப் போராட்டங்கள் அனைத்தும் முதலமைச்சரைப் பலப்படுத்துவது என்ற பெயரில், மாற்றுத் தலைமையாக அவரை உருவாக்குவதிலேயே கவனம் செலுத்தப்பட்டது.  

நல்லூரில் இருந்து, முதலமைச்சரின் இல்லத்தை நோக்கி நடத்தப்பட்ட பேரணியில் தமிழ் மக்கள் பேரவையின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர். அவர்கள், “மாற்றுத் தலைமையை ஏற்க வாருங்கள்” என்றே அழைப்பு விடுத்திருந்தனர்.  

உள்ளக குழப்பம் ஒன்று ஏற்பட்டபோது, தமிழ் மக்களின் நலன்களின் மீது மாத்திரமே அக்கறை கொண்டதாகக் கூறும், ஒரு சிவில் அமைப்பு, ஒரு போதும் பக்கசார்பான நிலையை எடுத்திருக்கக் கூடாது. நடுநிலையாக இந்த விவகாரத்தை அணுகி, பிரச்சினையைத் தீர்க்க முனைந்திருக்க வேண்டும்.  

வெறுமனே, “முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்” என்ற கோரிக்கை மாத்திரம் இந்தப் பிரச்சினையை தீர்க்காது; தணிக்காது என்று தெரிந்திருந்தும், தமிழ் மக்கள் பேரவை அதையே தமது முதன்மையானதும் முடிவானதுமான கோசமாக முன்வைத்திருந்தது.  

அதுமாத்திரமன்றி, கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, எப்படியாவது முதலமைச்சர் விக்னேஸ்வரனை, மாற்றுத் தலைமையாகப் பிரகடனப்படுத்தி விடவேண்டும் என்பதிலும் தமிழ் மக்கள் பேரவை குறியாகச் செயற்பட்டது.  

தமிழ் மக்கள் பேரவை, ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்ற தோரணையில்தான் இதுவரையில் செயற்பட்டு வந்திருக்கிறது.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்தி, தமிழ் மக்களின் மாற்று அரசியல் தலைமையாக உருவெடுப்பதே அதன் ஆரம்ப இலக்காக இருந்தது. ஆனாலும், முதலமைச்சர் விக்னேஸ்வரனை மையப்படுத்தியே அந்த மாற்றுத் தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்பலாம் என்ற நிலை காணப்பட்டது அவர்களின் பலவீனம்.  

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கோ, தமிழ் மக்கள் பேரவையினர், தம்மைப் ‘பலிக்கடா’ ஆக்கி விடக்கூடாது என்ற பயம் இருந்தது. தம்மை வைத்து இவர்கள் அரசியல் ஆதாயம் பெற முனைகிறார்களோ என்ற சந்தேகம் அவரிடம் இருந்ததால்தான், இணைத்தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு முன்னரே, அவர்களிடம் இருந்து, அவர் உறுதிமொழிகளைப் பெற்றிருந்தார்.  

தமிழ் மக்கள் பேரவை, அரசியல் அமைப்பாக செயற்படாது; தேர்தலில் போட்டியிடாது; ஒரு சிவில் அமைப்பாகவே செயற்படும் என்பதே அந்த வாக்குறுதிகளாகும்.  

இருந்தாலும், இப்போது முதலமைச்சருக்கு ஆதரவாக நடத்தப்பட்ட போராட்டங்களில் ஒரு சிவில் அமைப்பாகத் தமிழ் மக்கள் பேரவை செயற்பட்டிருக்கவில்லை. ஓர் அரசியல் அமைப்பாகவே செயற்பட்டது. தனக்கு ஆதரவாக ஒரு போராட்டம் நடத்தப்படுகிறது என்றவுடன், முதலமைச்சரும் தான், பெற்றுக் கொண்ட வாக்குறுதியை மறந்து விட்டார்.  

‘தனக்குத் தனக்கு என்றால், சுளகு படக்குப் படக்கு என்று அடிக்குமாம்’; அதுபோலத்தான், தமிழ் மக்கள் பேரவை, இந்த விடயத்தில் முன்னகர்த்திய எல்லாச் செயற்பாடுகளுக்கும், முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கடைக்கண் பார்வை இருந்தது.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான, ஓர் அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கான அத்தனை முயற்சிகளையும் தமிழ் மக்கள் பேரவையில் இருந்த தரப்பினர் முன்னெடுத்திருந்தனர்.  

அதனால், முதலமைச்சருக்கு எதிராகச் செயற்பட்ட தரப்பினருடன் இவர்களால் சுமுகமான நிலையை ஏற்படுத்துமாறு கோரவும் முடியவில்லை; அதற்காகப் பேசவும் முடியவில்லை.   

அரசியலில் முரண்பாடுகள் வழமையானது. முரண்பாடுகள் ஏற்படுகின்றபோது, அதைக் கடந்து செல்வதற்கான வழிகாட்டியாக இருக்க வேண்டியதே ஒரு சிவில் சமூக அமைப்பினது கடப்பாடாக இருக்க வேண்டும்.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை வழிதவறிச் செல்கிறது என்றால், அதைத் தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு, சரியான திசையில் பயணிக்கச் செய்வதுதான் ஒரு சிவில் சமூக அமைப்பின் கடப்பாடு. தமிழ் மக்களின் அரசியல் பலத்தைச் சிதைப்பதால், தமிழ் மக்களின் பலம், மேலும்மேலும் வீழ்ச்சி காணும்.  

இதைத் தெரிந்திருந்தும், அண்மைய பிரச்சினைகளில், தமிழ் மக்கள் பேரவை அரசியல் ரீதியாகக் குளிர்காயவே முற்பட்டது. தமது அமைப்பை முன்னிறுத்தி, புதிய அரசியல் தலைமையை உருவாக்கவே முனைந்தது.   

ஒற்றுமைக்கான முயற்சிகளில் இறங்காமல், ஒருதலைப் பட்சமாகச் செயற்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் இலக்கு, எப்படியாவது முதலமைச்சரைக் கொண்டே, மாற்று அரசியல் தலைமையைக் கட்டியெழுப்பிவிட வேண்டும் என்பதுதான். இதுபோன்ற அமைப்புகளை, சிவில் சமூக அமைப்புகளாக அடையாளம் காண முடியாது. முற்றிலும், அரசியல் நிகழ்ச்சி நிரலைக் கொண்டதாகவே இதையும் கருத முடிகிறது.   

வெளிநாட்டு அரசுகள், மற்றும் தொண்டு நிறுவனங்களின் கைப்பாவைகளாக, எங்கிருந்தோ வரும் நிதியை வைத்துக் கொண்டு, புறச்சக்திகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஆடுகின்ற பல்வேறு சிவில் அமைப்புகளையும் போல, தமிழ் மக்கள் பேரவையும் செயற்படப் போகிறது என்றால், அது அவசியமா என்று சிந்திக்க வேண்டிய நிலைக்குத் தமிழ் மக்கள் தள்ளப்படுவார்கள். 

இதைவிட, தமிழ் மக்கள் பேரவை, வெளிப்படையாகவே ஓர் அரசியல் கட்சியாகவோ, கூட்டணியாகவே உருவெடுக்கலாம். முதலமைச்சர் விக்னேஸ்வரனை மாத்திரமே நம்பிக்கொண்டு, அரசியல் மறுபிறப்புக்காகக் காத்திருக்கும் கட்சிகளும் தலைமைகளும் இதற்குத் தாராளமாகவே உதவுவார்கள். ஆனால், தமிழ் மக்களின் தேவை இதுவல்ல. 

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கின்ற வலுவான அரசியல் கட்டமைப்பு மாத்திரமன்றி, அத்தகைய அரசியல் கட்டமைப்பைச் சரியாக வழிநடத்தக் கூடிய, சிவில் சமூகக் கட்டமைப்பு ஒன்றும்தான் தேவைப்படுகிறது. அத்தகைய தேவையைத் தமிழ் மக்கள் பேரவை நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்களிடம் ஆரம்பத்தில் காணப்பட்டது. ஆனால், அதை நிறைவேற்றக் கூடிய அமைப்பாக, தமிழ் மக்கள் பேரவையினால் பரிணாமம் பெற முடியாது என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.  

‘தவிச்ச முயல் அடிக்கும்’ தரப்பாக, மூன்றாம்தர அரசியல் கட்சி ஒன்றைப் போலவே, தமிழ் மக்கள் பேரவை, இந்த விவகாரத்தைக் கையாண்டிருக்கிறது. பலருக்கு இது பேரெழுச்சியாகத் தென்படலாம்.   ஆனால், ஒன்றுபட்ட இனமாக, ஒரே குரலாகத் தமிழ் மக்களின் பலம் இருக்க வேண்டும்; ஒலிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடைய மக்களுக்கு, இது ஏமாற்றத்தைத்தான் அளித்திருக்கிறது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .