2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘நக்கீரன்’ கோபால் கைது விவகாரம்: ஆளுநரைத் திரும்பப் பெறும் கோரிக்கை

எம். காசிநாதன்   / 2018 ஒக்டோபர் 15 , மு.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘நக்கீரன்’ பத்திரிகை ஆசிரியர் கோபால் மீது போடப்பட்ட வழக்கு, தமிழகத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.   

இந்தியத் தண்டனைச் சட்டத்தில் உள்ள 124-A ஆவது பிரிவு, ஊடகவியலாளர்களை மிரட்டும் பிரிவாக மாறியிருக்கிறது. இதுவரை, நூற்றுக்கணக்கான அவதூறு வழக்குகள், ஒவ்வொருவரின் ஆட்சிக் காலகட்டத்தின்போதும், பத்திரிகைகள் மீது பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. சில நேரங்களில் ‘பொடா’ சட்டம் கூடப் பாய்ச்சப்பட்டுள்ளது.   

ஆனால், இந்தியத் தண்டனைச் சட்டத்தில் உள்ள, 124-A பிரிவைப் பயன்படுத்தி, முதல்முறையாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதுவும் அந்த முதல் ஆபத்து, ‘நக்கீரன்’ பத்திரிகை ஆசிரியர் கோபாலுக்கு எதிராகத்தான் உருவானது.   

இந்த வழக்கு, தமிழ்நாட்டில் ‘இந்து’ ராம் உள்ளிட்ட ஊடகவியலாளர்களையும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களையும் ஊடகவியலாளர்களுக்கு ஆதரவாக, ஊடக சுதந்திரத்துக்கு ஆதரவாக, ஓரணியில் சேர வைத்து விட்டது.   

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல், ஓட்டோ சங்கர் தொடர் வழக்கு, ஜெயலலிதா படத்தை, ஹிட்லர் போல் வரைந்தமை உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில், ‘நக்கீரன்’ கோபால் அறியப்பட்டாலும், இந்தக் கைது, அவருக்கு நீதிமன்றப் பாதுகாப்பை, ஆரம்பத்திலேயே பெற்றுக் கொடுத்து, பிரபல்யமாக்கி விட்டது.    

‘நக்கீரன்’ கோபாலின் வழக்கின் பின்னனி, பேராசிரியை நிர்மலாதேவி வழக்கின் பின்னணியாகும். அதாவது, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வரும், ஒரு கல்லூரியின் பேராசிரியையாக இருந்த அவர், மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாக, ஒலிப்பதிவொன்று  வெளியானது.  

அந்த ஒலிப்பதிவு உருவாக்கிய கொந்தளிப்பில், பேராசிரியை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கடந்த ஏப்ரல் 16ஆம் திகதி கைது செய்யப்பட்டு, ஏறக்குறைய 170க்கும் மேற்பட்ட நாள்களாகச் சிறையிலிருக்கிறார். 

அவர் பேசியதாக வெளியான, ஒலிப்பதிவில் ‘ஆளுநர்’ என்று பதவியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதால் அந்த ஒலிப்பதிவு பல சர்ச்சைகளைத் தமிழக அரசியலில் ஏற்படுத்தியது.   

பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு விட வேண்டும் என்று, கோரிக்கை வைத்த நிலையில், தமிழக ஆளுநரே, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில், தனிநபர்  ஆணைக்குழுவை நியமித்தார். அந்த ஆணைக்குழுவின் அறிக்கையைக் கடந்த மே மாதம் 14ஆம் திகதியே ஆளுநரிடம் வழங்கி விட்டாலும், அறிக்கையின் சாரம்சம், உயர்நீதிமன்றத் தடையுத்தரவால், இதுவரை வெளியிடப்படவில்லை.   

தமிழக அரசாங்கம், வழக்கின் முக்கியத்துவம் கருதி, சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. அது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  
இதற்கிடையில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி, கீழ் நீதிமன்றத்தில் நான்கு முறை பிணை மனுப் போட்டார். அவை நிராகரிக்கப்பட்டன. 

பிறகு, மாவட்ட நீதிமன்றத்தில் இரண்டு முறை தாக்கல் செய்த பிணைமனுவும் நிராகரிக்கப்பட்டது. இறுதியில் உயர்நீதிமன்றத்திலும் இரு முறை பிணை மனுப் போட்டார். அதுவும், நிராகரிக்கப்பட்டு விட்டது.   

எட்டு முறை, பிணை நிராகரிக்கப்பட்ட நிலையில், “பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை, ஆறு மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்” என்று, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு விட்டது. ஆகவே, சிறைக்குள் இருந்தவாறே, பேராசிரியை நிர்மலாதேவி, தன் வழக்கைச் சந்திக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறார்.   

இந்தப் பேராசிரியை விவகாரம் குறித்து, ஒரு தொடரை ‘நக்கீரன்’ பத்திரிகை வெளியிட்டு வருகிறது. அந்தத் தொடரில், தமிழக ஆளுநர் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகிறது. இதனால், ஆளுநரைப் பணி செய்ய விடாமல், அந்தப் பத்திரிகை ஆசிரியர் தடுத்தார் எனக் கூறி, 124-A பிரிவின் கீழ், வழக்குப் பதிவு செய்து, பூனேவுக்குச் செல் வதற்காக, சென்னை விமான நிலையத்துக்கு வந்த ‘நக்கீரன்’ கோபால், அதிகாலையில் கைது செய்யப்பட்டார்.  

இந்தக் கைது, தமிழக அரசியல், ஊடகவியலாளர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘ஆளுநரைப் பணி செய்ய விடாமல் தடுத்தார்’ என்பதற்கு என்ன ஆதாரம்?   

பத்திரிகையில் கட்டுரை வெளியிட்டமை, எப்படி ஆளுநரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக மாறும், என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டு, அரசியல் தலைவர்கள், சிந்தாதரிப்பேட்டை பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ‘நக்கீரன்’ கோபாலைச் சந்திக்க வந்தனர்.   

அங்கு, முதலில் வந்தவர் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ. அவரை, பொலிஸார் உள்ளே செல்ல விடாமல் தடுக்க, அவர் வீதிமறியலில் ஈடுபட்டுக் கைது செய்யப்பட்டார். மு.க.ஸ்டாலின், ‘நக்கீரன்’ கோபாலை மருத்துவமனைக்குச் சென்று பார்த்தார். சி.பி.ஐயின் மாநில செயலாளர் முத்தரசன், நீதிமன்றத்துக்குச் சென்று, ‘நக்கீரன்’ கோபாலுக்கு ஆதரவாக நின்றார்.   

சிறையில் அடைப்பதற்கான உத்தரவைப் பெற, நீதிமன்றத்துக்கு ‘நக்கீரன்’ கோபால் அழைத்து வரப்பட்டார். அங்கு, அரிதான நிகழ்வாக அரங்கேறியது என்னவென்றால், ஊடக சுதந்திரத்துக்கு எதிரான, இந்த நடவடிக்கையை எதிர்த்து, ‘இந்து’ பத்திரிகை ராம், வாதாட அனுமதிக்கப்பட்டதுதான்.   

நீதிமன்றத்தில் வாதம் தொடங்கியதும், சென்னை மாநகர பொலிஸ் தரப்பிலிருந்து, ‘நக்கீரன்’ கோபாலை, தேசத் துரோக பிரிவின் கீழ் கைது செய்ததற்கு, போதிய ஆதாரங்களை வழங்க இயலவில்லை.   

ஆனால், இது ஊடக சுதந்திரத்துக்கு எதிரானது என்றும், இந்தச் சட்டப் பிரிவை பயன்படுத்தக் கூடாது என்றும் ‘நக்கீரன்’ கோபால், ‘இந்து’ ராம் ஆகியோர் சார்பில் எடுத்து வைக்கப்பட்ட வாதங்களை, நீதிமன்றம் உன்னிப்புடன் கவனித்து, “நக்கீரன் கோபாலை, சிறைக்கு அனுப்ப, போதிய முகாந்திரம் இல்லை” என விடுதலை செய்தது. 

 உத்தரவிட்ட, சென்னை மெட்ரோ பொலிட்டன் நீதவான் கோபிநாத்தை, அனைவரும் பாராட்டினர். 
கீழமை நீதிமன்றங்கள், “எழுந்தமானமாக ஒருவரைச் சிறையில் தள்ளக் கூடாது” என்று, பல்வேறு காலகட்டங்களில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.  புகார் கொடுத்தவர், தமிழக ஆளுநர் அலுவலகத்தில் உள்ள துணைச் செயலாளராகவே இருந்தாலும், அதைத் தைரியமாகக் கடைப்பிடித்தார் கோபிநாத்.   

இந்தக் கைதுக்கு, மூன்று நாள்களுக்கு முன்பு, தமிழக முதலமைச்சர், ஆளுநரைச் சந்தித்தார். அவர் சந்தித்த மறுநாள், சென்னையில் விழாவொன்றில் பேசிய ஆளுநர், “துணை வேந்தர்கள் நியமனத்துக்கு இலஞ்சம் பெறப்படுகிறது” என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார்.   

அதனடிப்படையில், ஊழல் வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, எதிர்க்கட்சிகளும் கல்வியாளர்களும் வலியுறுத்திய நேரத்தில், தமிழக முதலமைச்சர், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். 

இந்தச் சந்திப்புகளுக்குப் பிறகுதான், ‘நக்கீரன்’ கோபால் கைது செய்யப்பட்டார். எனவே, ‘நக்கீரன்’ கோபால் கைதில், “அரசியல் சட்டப் பதவியில்” இருக்கும் ஆளுநரும் சர்ச்சைக்கு உள்ளானார்.  அதேநேரத்தில், ‘நக்கீரன்’ கோபால், கைது செய்யப்பட்ட பிறகு, ராஜ்பவனில் இருந்து வெளியிடப்பட்ட பத்திரிகைக் குறிப்பில், “துணைவேந்தர் பதவிக்கு, இலஞ்சம் பெறப்படுகிறது என்று, ஆளுநர் குற்றம் சாட்டவில்லை” என்று கூறப்பட்டது.   

இப்படி, ‘நக்கீரன்’ கோபாலின் கைதுக்கு முன்னும் பின்னும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், இந்தக் கைது, ஊடக சுதந்திரத்தை முடக்குவதையும் தாண்டி, உள்நோக்கம் மிகுந்ததாக அமைகின்றது என்ற விமர்சனத்துக்கு உள்ளானது. குறிப்பாக, ‘நக்கீரன்’ கோபாலுடன், அந்த அலுவலகத்தில் பணிபுரியும் 35 பேருக்கு மேற்பட்டவர்கள் மீது வழக்குப் போடப்பட்டதால், இந்த 124-A பிரிவின் கீழான வழக்கு, கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.  

கைது, விடுதலை ஆகியவையெல்லாம் முடிந்து, 24 மணி நேரத்துக்குள் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி சார்பில், ஊடக சுதந்திரத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துக் குறித்து, கண்டனம் செய்யும் கூட்டமொன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில், “தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும்” என்று, மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தும் தீர்மானம், ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 

ஒரு பத்திரிகை ஆசிரியர் மீது, வழக்குப் போட, புகார் அளித்ததற்காக, அரசியல் கட்சிகள் இணைந்து, ஆளுநர் ஒருவரைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றியிருப்பது இது முதல் முறை.   

இதற்கு முன்பு, ஆளுங்கட்சியின் சார்பில் ஆளுநர்களை மாற்றுங்கள், திரும்பப் பெறுங்கள் என்று தீர்மானம் போடப்படுவதுண்டு. நிர்வாகத்தில், தங்களுக்கு ஆளுநர் ஒத்துழைக்க மறுக்கிறார் என்பதை முன் வைத்து, இது போன்ற குரல்கள் எழுந்துள்ளன.   

குறிப்பாக, அ.தி.மு.க ஆட்சியில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, அப்போதிருந்த ஆளுநர் சென்னாரெட்டியைத் ‘திரும்பப் பெறுக’ என்று, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்.   தி.மு.க தலைவர் கருணாநிதி கைதின் போது, ஆளுநர் பாத்திமா பீவியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.  

இந்தியாவில் ஊடக சுதந்திரத்தைக் காப்பாற்றுவதற்காக, ஆளுநர் ஒருவரை மாற்ற வேண்டும் என்று, கோரிக்கை வைத்து, முதல்முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை தமிழகத்தில்தான். இதனால் இச்சம்பவம், பலருடைய புருவங்களையும் உயர்த்த வைத்திருக்கிறது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .