2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நேட்டோவின் 70 ஆண்டுகள்: குருதி தோய்ந்த வரலாறு

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   / 2019 டிசெம்பர் 05 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக வரலாற்றின் பாதையில், சில அமைப்புகள், குறித்த காலத்தின் தேவைகருதி உருவாக்கப்படுபவை. அவை, காலம் கடந்து நிலைக்கும் போது, அதன் தேவையும் காலப் பொருத்தமும் தொடர்ச்சியாகக் கேள்விக்குட்படும்.   

இவ்வாறான சந்தர்ப்பங்களில், தமது தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு, சில தவறுகளை அவ்வமைப்புகள் செய்யத் தூண்டப்படுகின்றன. அத்தவறுகள் சிறுதவறுகள் அல்ல; பெருந்தவறுகள் என்ற உண்மையை, அவை உணரத் தொடங்கும் போது, காலம் கடந்திருக்கும்.   

உலகில் இயங்குகின்ற இராணுவக் கூட்டமைப்புகளில் மிகவும் பலமானதும் பழைமையானதுமான இராணுவக் கூட்டு, ‘நேட்டோ’ ஆகும். ‘வட அத்திலாந்திக் ஒப்பந்த அமைப்பு’ எனப்படும் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டு, 70 ஆண்டுகள் நிறைவடைகின்றன.   

இந்நிலையில், இவ்வமைப்பை இயக்கிய பிரதான நாடுகள், இவ்வமைப்பின் தேவை குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளன. இது இவ்வமைப்பின் எதிர்காலம் குறித்த, பல்வேறு வினாக்களை எழுப்பியுள்ளது. இது பல செய்திகளைக் கூறுகிறது.   

கெடுபிடிப்போரின் முடிவின் பின்னரான, உலக ஒழுங்கு மாறியுள்ளது. புதிய சக்திகள் முனைப்புப் பெற்றுள்ளன. மேற்குலக நாடுகளைப் பொருளாதார நெருக்கடி சிந்திக்க வைத்துள்ளது. இராணுவக் கூட்டின் தேவைகள், கேள்விக்கு உள்ளாகின்றன. கூட்டில் உள்ள நாடுகளை விட, இல்லாத நாடுகளின் உறவு, சில நாடுகளுக்கு முதன்மையாகின்றது.   

நேட்டோவின் வரலாறு  

இரண்டாம் உலகப் போரின் முடிவையடுத்து, 1947ஆம் ஆண்டு மார்ச் மாதம் நான்காம் திகதி பிரித்தானியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையில், டென்கேர்க் உடன்படிக்கை (Treaty of Dunkirk) கைச்சாத்திடப்பட்டது. இது ஜேர்மனி, சோவியத் ஒன்றியம் ஆகிய நாடுகள் தாக்குதல் தொடுத்தால், ஒரு நாடு மற்ற நாட்டுக்கு இராணுவ ரீதியாக உதவுவதை அடிப்படையாகக் கொண்டது.  

1948ஆம் ஆண்டு, இவ்வுடன்படிக்கை ‘பெனலூக்ஸ்’ (Benelux) நாடுகளையும் (பெல்ஜியம், நெதர்லாந்து, லக்ஸ்சம்பேர்க்) உள்ளடக்கியது. இவ்வுடன்படிக்கை எட்டப்பட்ட இரண்டாவது ஆண்டு நிறைவில், மேலும் ஏழு நாடுகள் (அமெரிக்கா, கனடா, போர்த்துகல், இத்தாலி, நோர்வே, டென்மார்க், ஐஸ்லாந்து) இதில் இணைக்கப்பட்டன.   

கொரிய யுத்தத்தின் நிறைவில், இராணுவக் கூட்டின் தேவையும் முக்கியத்துவமும் மேற்குலக நாடுகளால் உணரப்பட்டன. இதன் அடிப்படையிலேயே மேற்சொன்ன 12 நாடுகளையும் உறுப்பு நாடுகளாகக் கொண்டு, சோவியத் எதிர்ப்பைப் பிரதானமாகக் கொண்டு, நேட்டோ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.  

 1952ஆம் ஆண்டு, கிறீஸும் 1954ஆம் ஆண்டு துருக்கியும் இதற்குள் இணைக்கப்பட்டன. 1955ஆம் ஆண்டு, மேற்கு ஜேர்மனியும் இணைந்தது. இந்த 15 நாடுகளுடனேயே நேட்டோ இயங்கி வந்தது.  

ஆனால், ஸ்பெயினின் சர்வாதிகார ஆட்சி, இந்நாடுகளின் ஆசியுடன் இயங்கி வந்த போதிலும், ஸ்பெயின் இதற்குள்  உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரான்கோவின் சர்வாதிகார ஆட்சியின் முடிவின் பின்னரே, 1982இல் ஸ்பெயின் இணைக்கப்பட்டது.   

சோவியத் எதிர்ப்பையும் சோவியத் சார்பு நாடுகளை அச்சுறுத்துவதையும் நோக்காகக் கொண்டிருந்த நேட்டோவுக்கு எதிராக, ஓர் அமைப்பின் தேவை உணரப்பட்டது.   

இதன் விளைவால், சோவியத் ஒன்றியத்தின் தலைமையில் ஏழு நாடுகள் இணைந்து, ‘நட்புறவு பாதுகாப்பு உடன்படிக்கை’ ஒன்றை எட்டினார்கள். இவ்வுடன்படிக்கை, போலந்தின் வார்சோ நகரில் கைச்சாத்திடப்பட்டது. இதனால் இது, ‘வார்சோ உடன்படிக்கை’ (Warsaw Pact) எனப்பட்டது. இதில், சோவியத் ஒன்றியம், அல்பேனியா, பல்கேரியா, செக்கோஸ்லவாக்கியா, கிழக்கு ஜேர்மனி, ஹங்கேரி, போலந்து, ரோமேனியா ஆகிய நாடுகள் அங்கத்துவம் வகித்தன.   

கெடுபிடிப்போர் காலப்பகுதியில், நேட்டோ எதிர் வார்சோ என்பதே, எந்தவோர் இராணுவ நடவடிக்கையினதும் அடிப்படையாக இருந்தது. இரு தரப்புகளும் ஏட்டிக்குப் போட்டியாக, இராணுவ பலத்தை அதிகரித்து வந்தன.   

இருந்தபோதிலும், இரண்டு தரப்புகளும் எந்தச் சந்தர்ப்பத்திலும் நேரடியாக மோதிக் கொள்ளவில்லை. இது கெடுபிடிப்போர் காலத்தை, பாரிய உயிர்ச்சேதங்கள் இல்லாமல் காத்தது.   

சோவியத் ஒன்றியத்தின் முடிவும் பெர்லின் சுவரின் தகர்ப்பும் கெடுபிடிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தன. இது வார்சோ அமைப்பின் முடிவாகியது. இதைத் தொடர்ந்த பத்தாண்டுகள், நேட்டோ அமைப்பின் வரலாற்றில் முக்கியமான காலப்பகுதியாகும்.   

நேட்டோ: அடாவடித்தனத்தின் சுயரூபம்   

கெடுபிடிப் போருக்குப் பிந்தைய உலக ஒழுங்கில், நேட்டோ தனிக்காட்டு ராஜாவானது. இதன் விளைவால், உலக நாடுகளின் உள்நாட்டு விடயங்களில் தலையிடத் தொடங்கியது. இதை இன்னொரு வகையில் சொல்வதானால், கேள்விகேட்க யாருமற்ற நிலையில், அடாவடியில் இறங்கியது நேட்டோ.   

அவ்வகையில், நெருக்கடியில் இருந்த யுகோஸ்லாவியாவில் முதலில் தலையிட்டது. அவ்வகையில், பொஸ்னியா, ஹெட்சிகவானாவில் தலையிட்டு, நேரடியாக இராணுவத் தாக்குதல்களையும் விமானக் குண்டு வீச்சுகளையும் மேற்கொண்டது. இதன் தொடர்ச்சியாக, கொசோவோவில் தலையிட்டது. இவ்விரு தலையீடுகளும் யுகோஸ்லாவியாவை ஐந்து நாடுகளாகப் பிரித்தன.  

இவ்வாறு பிரிக்கப்பட்ட நாடுகளும் முன்னாள் வார்சோ கூட்டில் இருந்த நாடுகளும் ஒவ்வொன்றாக நேட்டோவில் இணைக்கப்பட்டன. இப்போது எல்லாமாக 29 நாடுகள் நேட்டோவில் அங்கத்துவம் வகிக்கின்றன.   

21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து, அமெரிக்காவின் விருப்பத்துக்குரிய அடியாளாக நேட்டோ மாறியது. ஆப்கானிஸ்தானின் மீதான நேட்டோவின் படையெடுப்பு, ஈராக் மீதான முற்றுகை, லிபியா மீதான போர் ஆகியன நேட்டோவின் செயல்களைக் கேள்விக்கு உட்படுத்தின.   
உறுப்பு நாடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பானது, உலகின் பிற பகுதிகளில் போர்களில் ஈடுபடத் தொடங்கியது. இது அமைப்பின் நோக்கங்களைக் கேள்விக்கு உட்படுத்தியது.

அதேவேளை, அமெரிக்கா உட்பட்ட சில நாடுகளின் தனிப்பட்ட தேவைகளுக்காக, நேட்டோ  தன்னிச்சையாகக் கடமையாற்றுகிறதா என்ற வினாவையும் தொடுத்தது. கெடுபிடிப் போருக்குப் பிந்தைய 30 ஆண்டுகளில், நேட்டோ அமைப்பானது நோக்கங்களில் இருந்து விலகி, உலகில் மிகப்பெரிய ஆக்கிரமிப்புக் கூட்டணியாகத் தன்னை வளர்த்துக் கொண்டது.   

இது, பல உறுப்பு நாடுகளிடையே கேள்விகளை எழுப்பியது. ஒரு சில நாடுகளின் விருப்பத்துக்கு ஏற்ற வகையில், அமைப்பு செயற்படுவதைக் கண்டு, பல சிறிய உறுப்பு நாடுகள் விழிப்படைந்தன.  
இதனால் அவை, அமைப்பின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதை மெதுமெதுவாகக் குறைக்கத் தொடங்கின. அதேவேளை, நேட்டோவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கும் போர்களுக்கும் பல உறுப்பு நாடுகளிடையே, அதிருப்தி உண்டு.   

நேட்டோவின் எதிர்காலம்   

சோவியத் ஒன்றியத்தின் மீதான எதிர்ப்பின் காரணமாக உருவாக்கப்பட்ட இவ்வமைப்பானது, நவீன காலச் சவால்களுக்கு முகம்கொடுக்கப் பெரிதும் சிரமப்படுகின்றது. 

இன்றும் இவ்வமைப்பு, ரஷ்யாவையே பிரதான எதிரியாகக் கருதுகிறது. அதன் கருத்துகளும் செயல்களும் இதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளன.   

இது, நேட்டோவில் அங்கத்துவம் வகிக்கும் பல நாடுகளுக்கு நெருக்கடியாக உள்ளது. அவை, ரஷ்யாவுடன் நல்லுறவைப் பேண விரும்புகின்றன. இந்நிலையில், நேட்டோவின் இவ்வகையான கொள்கை வகுப்பாக்கமானது, இந்நாடுகளின் நலன்களுக்கு முரணாக உள்ளது.   

இந்நிலையில், ‘அமெரிக்காவை முன்னிலைப்படுத்துவது’ என்ற தொனிப்பொருளை மய்யப்படுத்தி, பதவிக்கு வந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், நேட்டோ அமைப்பின் செலவுகளை, ஏனைய உறுப்பு நாடுகளும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். “நேட்டோவின் பாரங்களை, அமெரிக்கா தனியாகச் சுமக்காது” என்று எச்சரித்தார்.   அதேவேளை, அமெரிக்கா, தனது கூட்டாளிகளின் நலன்களை விட, அமெரிக்க நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்பதையும் அறிவித்திருந்தார்.   

இந்தப் பின்புலத்தில், ‘அமெரிக்கா இல்லாத இராணுவக் கூட்டு’ ஒன்றை நோக்கி, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் நகரத் தொடங்கின. இது நேட்டோவின் அடிப்படைகளைக் கேள்விக்கு உட்படுத்தியது.   

அதேவேளை, உலகளாவிய ரீதியில் தொடரும் பொருளாதார மந்தநிலை, இவ்வாறான இராணுவக் கூட்டுகளின் செயற்பாடுகளுக்கு, பணத்தை வாரி வழங்குவதைத் தவிர்க்கும் சூழ்நிலையை உருவாக்கி வருகின்றது.    

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஜெர்மன் நாட்டின் சான்ஸ்லர் அங்கெலா மேக்கல், “அமெரிக்காவைப் புறந்தள்ளிய, இராணுவக் கூட்டமைப்பை நோக்கி நகர வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்தார்.   இந்தக் கோரிக்கைக்கு, பிரான்ஸ் உட்பட்ட பல மேற்குலக நாடுகளின் ஆதரவு உண்டு. கடந்த வாரம், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், நேட்டோவை ‘மூளை மரணமடைந்த மனிதன்’ என ஒப்பிட்டார்.   

நேட்டோவை உயிர்ப்புடன் வைத்திருக்க, யாருக்கு விருப்பம்? என்ற வினா தொக்கி நிற்கிறது. அமெரிக்காவுக்கே விருப்பம்; ஏனெனில், இது சட்டரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் அமெரிக்காவின் தேவைகளை நிறைவேற்றப் பயனுள்ளது.   

ஆனால், நேட்டோவுக்குப் பணம் செலவழிக்க, அமெரிக்கா தயாரில்லை. பெரிய ஐரோப்பிய சக்திகள், தனியான பாதுகாப்புக் கூட்டை நோக்கி நகர விரும்புகின்றன. இக்கேள்விகளுடனேயே, நேட்டோ, தனது 70ஆவது ஆண்டில் கால் பதிக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .