2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

நம்பிக்கை பிறந்தால் வழி பிறக்கும்

காரை துர்க்கா   / 2019 நவம்பர் 05 , மு.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வாரம், யாழ். நகரில் உள்ள தனியார் கல்வி நிலையத்துக்கு முன்பாக, நடுத்தர வயதுடைய ஒருவருடன் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தக் கல்வி நிலையத்துக்கு மகளைக்  சைக்கிளில் கூட்டி வந்து, வகுப்பு முடியும் வரை கா(த்து)வல் இருந்து, மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் குறிப்பிட்டார்.  

மகளின் கல்வி முக்கியம்; ஆனாலும், தனது நேரம் காத்திருத்தலில் வீணடிக்கப்படுவதாகச் சற்று நொந்து கொண்டார். “எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், யாருக்கு வாக்கு அளிப்பதாக உத்தேசம்” எனக் கேட்டேன்.  

“நான் அதைப் பற்றி யோசிக்கவே இல்லை; வேலைக்குப் போறதோட ஐந்து நாள்களும் போய் விடுகின்றன. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இதோடயே நேரம் போய் விடும்; வேற வேலை செய்யக் கூட நேரம் இல்லை. பத்திரிகை பார்க்க, பொது வேலைகளில் ஈடுபட ஆர்வம் இருந்தும் முடியாமல் உள்ளது. இப்படியே குடும்ப வட்டத்துக்கு வெளியே வர முடியாமல் உள்ளது” என நீண்ட பெரு மூச்சு விட்டார். “ஆனாலும், எங்களது தலைமைகள் என்ன சொல்லுதோ, அதன்படி செய்ய உள்ளேன்” எனத் தெளிவாகக் குறிப்பிட்டார்.  

இது, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, கணிசமான மக்கள் தமது சொந்த வாழ்க்கையில், மிகவும் இறுக்கமான நேர அட்டவணையுடன் திணறியபடி உள்ளனர். அடுத்தவரைப் பற்றி யோசிக்கவே நேரம் இல்லை. ஆனாலும், தங்களது தலைமை சொல்வதை, ஏற்கத் தயாராக இருக்கின்றனர்.  

நிலைமைகள் இவ்வாறு இருக்கையில், தமிழ் மக்கள் தலைவர்களை முழுமையாக நம்பி இருக்கையில், தலைவர்கள் முழுமை பெறாது, முதிர்ச்சி பெறாது, முதன்மை பெறவே பெரும்பாடுபடுகின்றார்கள்.   

முஸ்லிம் கட்சிகள், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், தங்களது முடிவைத் தெளிவாகக் கூறியதோடு, கணிசமான கட்சிகள், முதன்மை ஜனாதிபதி வேட்பாளர்களுக்காகப் பரப்புரைப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார்கள். ஆனால், அவர்கள் போன்று கூட்டமைப்பால் முடிவு எடுக்க முடியாது.   

கூட்டமைப்பு, மொட்டுக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கோர முடியாது; கோரவும் மாட்டாது. அதேவேளை, சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களிக்குமாறு கூறுவதன் மூலமாக, அதுவே மொட்டுக் கட்சிக்கு, தீவிர சிங்கள பௌத்த வாக்குளைத் தானாகவே அறுவடை செய்தும் கொடுத்து விடும் ஆபத்தும் உள்ளது.  அத்துடன், கூட்டமைப்பு சஜித் பிரேமதாஸாவுக்காகத் தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்கவும் முடியாது. ஏனெனில், தமிழ் மக்கள் பார்வையில், ஜனாதிபதித் தேர்தல் வேண்டப்படாத விருந்தாளி; ‘ஏதோ தேர்தல் வருகுது, பார்ப்போம்’ என்ற தோரணையிலேயே தமிழ் மக்கள் உள்ளனர். யாருக்கு வாக்களித்தாலும், தமக்கு நல்லவை நடக்காது என்பதில், தமிழ் மக்கள் மிகத் தெளிவாக உள்ளனர்.  

இந்நிலையில், வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்; அல்லது, வாக்களிக்க வேண்டாம் என, எந்த முடிவு பற்றியும் இக்கட்டுரை எழுதி முடியும் வரை, கூட்டமைப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. தேர்தல் நெருங்கவே, கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ முடிவு வெளிவரலாம். இதுவே களநிலைவரம்; இதுவே யதார்த்தம்; இதுவே அரசியல்.  

இது இவ்வாறு நிற்க, பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் கூட்டமைப்பு, நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, சுரேஷ் பிரேமசந்திரன் தலைமையிலானா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய ஐந்து கட்சிகள் இணைந்து, புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு இருந்தன.  

இந்நிலையில், “வரலாற்றைக் கருத்தில் கொண்டு, வாக்களியுங்கள்; நாம் எந்த வேட்பாளரையும் சுட்டிக் காட்ட முடியாது” என, தமிழ் மக்கள் கூட்டணியின் நிலைப்பாட்டை, நீதியரசர் விக்னேஸ்வரன் ஊடகங்களில் தெரிவித்து உள்ளார்.  

ஜனாதிபதித் தேர்தல் தொடங்கி, தமிழ் மக்களது அனைத்து விடயங்களிலும் ஒன்று சேர்ந்து முடிவுகள் எடுக்க வேண்டும்; ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டும் என்பதற்காகவே கட்சிகள் ஒன்றிணைந்திருந்தன.   

எனவே, “ஏன் வரலாற்றைக் கருத்தில் கொண்டு வாக்களியுங்கள்’ என, நீதியரசர் தனியாகக் கேட்டுக் கொண்டார் என விளங்கவில்லை.அந்தக் கட்சி, ஒரு பதியப்படாத கட்சி. அவர்களின் கருத்தைப் பார்த்தால், 35 வேட்பாளர்களுக்கும் தமிழ் மக்களின் வாக்குகள் சிந்தப்படட்டும் என்பதே நோக்கமாக இருப்பதாகவேதெரிகின்றது” என, சாவகச்சேரியில் நடைபெற்ற கூட்டமொன்றில், கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.  

தமிழ் மக்கள் கூட்டணியை மய்யப்படுத்தியே, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் கருத்துத் தெரிவித்து உள்ளார். எனவே, இன்னமும் தமிழினத்தின் தலைமைகள், இணைந்தும் இணையாது இருக்கின்றார்கள். உருப்படிகளாகச் சேர்ந்து, ஆவணத்தில் கையெழுத்து இட்டிருந்தாலும் உள்ளத்தால் பிரிந்தே உள்ளார்கள்.  

இவ்வாறாக, அரசியல்வாதிகள் குழப்பகரமாகக் கருத்துகளைத் தெரிவித்து ஏற்கெனவே, அரசியலை வெறுத்தும், அரசியலில் இருந்து ஒதுங்கியும் இருக்கின்ற தமிழ் மக்களை, மேலும் குழப்பத்துக்குள் கொண்டு செல்லப் போகின்றார்கள்.  

இதற்கிடையே, வவுனியாவில், தமிழர் விடுதலைக் கூட்டணி 11 கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைக்க முடிவு செய்து உள்ளது. 13 அம்சக் கோரிக்கைகள், 11 அம்சக் கோரிக்கைககள் என, அரசாங்கத்திடம் பல கோரிக்கைகளை முன் வைக்கும் தலைவர்கள், “தமிழ் மக்களின் தலைவர்களே! ஒற்றுமைப்படுங்கள்” என்ற தமிழ் மக்களின் ஒற்றைக் கோரிக்கையை மட்டும், ஏன் புறந்தள்ளுகின்றார்கள்?  

பல்கலைக்கழக மாணவர்கள், சமயப் பெரியார்கள், புத்திஜீவீகள் எனத் தமிழ் மக்கள் ஒன்று திரண்டு, தங்கள் அரசியல்த் தலைவர்களை ஒன்றுபடுத்த பெரும்பாடுபடுகின்றார்கள். ஆனால், அரசியல்த் தலைவர்களோ, ஒற்றுமை என்ற வட்டத்துக்குள், மெய்யாக வர அடம் பிடிக்கின்றார்கள்; பொய்யாக வந்து, மெய்யாக இருப்பதாகக் கூறுகின்றார்கள்.  

ஊர் இழந்து, உறவிழந்து, சொந்தம் இழந்து, பந்தம் இழந்து, சுகம் இழந்து, சுற்றம் இழந்து, தோட்டம் இழந்து, தேட்டம் இழந்து ஆண்டியாகி, அண்டிப் பிழைக்கும் இனமாக, போர் என்ற அரக்கன் உரு மாற்றி விட்டான்.  

அன்று, பிரகடனப்படுத்தப்பட்ட ஆயுத தாங்கி யுத்தம் புரிந்தவர்கள், இன்று பிரகடனப்படுத்தப்படாத யுத்தம் புரிகின்றார்கள். இந்த நிலை ஏற்பட்டுக்கூட, எமக்கிடையே ஒற்றுமை வரவில்லை. இந்நிலையில், பிறிதொரு முள்ளிவாய்க்கால் வந்தாலும், எமக்கிடையே ஒற்றுமை வருமா என்பது கேள்விக் குறியே!  

‘ஒன்றிணைவது ஒரு தொடக்கம்; ஒற்றுமையாக இருப்பது முன்னேற்றம்; ஒன்றாகச் சேர்ந்து செயற்படுவது வெற்றி’ என்பதை இவர்கள் இன்னமும் கற்றுக் கொள்ளவில்லை; இனியும் கற்றுக் கொள்வார்களோ எனவும் தெரியவில்லை.  

ஏலவே குறிப்பிட்டது போல, அதிகரித்த பொருளாதாரச் சுமை, வேகமான வாழ்க்கை முறை, பக்கத்து வீட்டில் யார் இருக்கின்றார்கள் என்பதே தெரியாத நிலையில், ஒவ்வொரு தனி நபரது வாழ்வும் பம்பரமாகச் சுழல்கின்றது.  

இந்தப் பம்பரத்துக்குள் பரிதவிக்கும் மக்களை, எம் அரசியல்வாதிகள் மேலும் பரிதவிக்க வைக்கக் கூடாது. ஆனால், அரசியல் என்று வந்து விட்டால், சாக்கடையும் கூடவே வந்து, நாற்றமெடுக்கு ஆரம்பித்துவிடும் போல் உள்ளது.  

ஆனாலும், அரசியல்வாதிகளின் ஆட்டங்களுக்கு எல்லாம், தொடர்ந்தும் தமிழ் மக்கள் ஆமாம் போட்டுக் கொண்டு இருக்க முடியாது. தற்போது, ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பாக, பல ஆக்கபூர்வமான கருத்துப் பகிர்வுகள், பல பொது அமைப்புகளால் ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றன.  

இவை, தேர்தலுடன் முற்றுப் பெறாது தொடர்ந்தும் நடைபெற வேண்டும். ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து, அடுத்தடுத்துப் பல தேர்தல்கள் வர உள்ளன. 2020 தேர்தல் ஆண்டாகவே அமைய உள்ளது.  

அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாகத் தமிழ்ப் பிரதிநிதித்துவம் எதிர்வரும் காலங்களில்,  நாடாளுமன்றிலும் மாகாண சபையிலும் வீழ்ச்சி அடையக் கூடிய வாய்ப்புகள் நிறையவே உள்ளன.  

அவற்றைக் குறையாது காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு, எம் அனைவருக்குமானது. அர்ப்பணிப்புடன் கூடிய கூட்டு முயற்சி ஆரம்பிக்கப்பட வேண்டும். சமயப் பெரியார்கள் தொடக்கம், சாமானிய மக்கள் வரை அதற்குத் தயாராக வேண்டும்.  ஆகவே, பலமான மக்கள் அமைப்புகள் வளர்ச்சி அடைய வேண்டும். அவை அரசியல்வாதிகளால் ஒதுக்க முடியாத சக்திகளாகப் பலம் கொண்டவைகளாக மிளிர வேண்டும். அரசியல்வாதிகள் அவற்றைத் தேடி வர வேண்டும்.  

பலமானதும் விலை போகாததுமான துறை சார்ந்த நிபுணத்துவம் கொண்ட கொள்கை வகுப்பாளர்கள், வளர்ச்சி அடைய வேண்டும். அவர்களே வருங்காலங்களில், கட்சிகள் சாராது முடிவுகளை எடுக்க வேண்டும். ஏனெனில், “ஒரு விடயத்தை நம்மால் செய்ய முடியும் என்றும், அது செய்து முடிக்கப்படும் என்றும் உறுதியாக நம்புங்கள். அப்போது, அதற்கான வழியை நாம் கண்டு பிடிப்போம்”  -ஆபிரஹாம் லிங்கன்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X