2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நம்பிக்கையில்லாத் தீர்மானங்களும் இந்திய நாடாளுமன்றமும்

எம். காசிநாதன்   / 2018 ஜூலை 23 , மு.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மீது, ‘ஏர்செல் - மேக்ஸிஸ்’ வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பது பழிவாங்கல் நடவடிக்கை’, ‘அகஸ்ட் லேன்ட் விமான பேரத்தில், சோனியா காந்தியின் பெயரைச் சேர்க்க வேண்டும் என்று விசாரணை அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி நெருக்கடி’ என்றெல்லாம் காங்கிரஸ் சார்பில், கடுமையான குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம், ஜூலை 20 ஆம் திகதி மக்களவையில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டிருக்கிறது.  

 ஆந்திர மாநிலத்துக்கு, சிறப்பு அந்தஸ்து வழங்காமல் ஏமாற்றி விட்டார்கள் என்பதற்காக, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் முயற்சியால், இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இந்தத் தீர்மானத்தை, மோடி அரசாங்கத்தின் மீதான தாக்குதலுக்கு ஒரு களமாக அமைத்துக் கொண்டு, அணி சேர்ந்திருக்கின்றன.   

இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம், மூன்று செய்திகளை, இந்திய அரசியலுக்கு வழங்கியிருக்கிறது. ஒன்று, ராகுல் காந்தியின் தலைமை. இன்னொன்று எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை; மூன்றாவது, எதிர்க்கட்சிகள் இணைந்தாலும் மக்களவையில் பா.ஜ.கவின் பலத்தை முறியடிக்க முடியாது என்ற உண்மை. 

தேர்தல் வரவிருக்கின்ற நிலையில், மூன்று செய்திகளுமே முக்கிய செய்திகளாக மாறியிருக்கின்றன என்பதே, தலைப்புச் செய்தி.  

சோனியா காந்தி முழு நேர அரசியலில் ஈடுபடுவதற்கு, அவரது உடல்நிலை வாய்ப்புக் கொடுக்காத நிலையில், ராகுல் காந்தியை முன்னிறுத்தி வருகிறது காங்கிரஸ் கட்சி.   

இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானக் களத்தைப் பயன்படுத்தி, காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்தி தலைமைக்கு ஓர் உற்சாகம் கொடுக்கவும், அதேநேரத்தில் ராகுல் தலைமையின் கீழ் எதிர்க்கட்சிகள் ஒன்றினைந்து, பிரதமர் மோடிக்கு எதிராக வாக்களித்தன என்ற இமேஜை உருவாக்கவும் பெருமுயற்சி எடுத்துக் கொண்டது. எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டணி, ராகுல் தலைமையின் கீழ் என்ற தோற்றத்தை உருவாக்க, இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை, முடிந்த அளவு பயன்படுத்திக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி.  

எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பாக, இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஏற்படுத்திக் கொண்டாலும், அதிக எண்ணிக்கையில் தோற்கடிக்கப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தால், ஆளுங்கட்சியாக இருக்கும் பிரதமர் மோடிக்குச் சாதகமான அரசியல் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது என்றே கருத வேண்டும்.   

ஆனாலும், நான்காண்டு கால ஆட்சியில் பிரதமர் மோடி சந்தித்த முதல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் இது என்பதோடு, கூட்டணிக் கட்சியாக இருந்த தெலுங்கு தேசம் கட்சியே, இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது என்பதுதான், முக்கிய திருப்புமுனை.   

இது, கூட்டணிக் கட்சிகளின் ஓட்டம் தொடங்கிவிட்டது என்பதைக் காட்டினாலும், இந்தத் தீர்மானத்தைப் பொறுத்தவரை, ஆளுங்கட்சியைக் கடுமையாக விமர்சிக்கப் பேருதவியாக அமைந்திருக்கிறது. நாடாளுமன்ற சபாநாயகராக இருக்கும் சுமித்ரா மகஜன் மூலம், அவர்களுக்கு இந்த வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.   

 இந்திய அரசியலின் ஆடு களத்தில், மீண்டும் ‘காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க’ தான் முக்கிய கால்பந்தாட்ட வீரர்கள் என்பதை முன்னிறுத்த, இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் உதவியிருக்கிறது.  
இந்திய நாடாளுமன்றத்துக்கு, இது போன்ற நம்பிக்கையில்லாத் தீர்மானங்களும் நம்பிக்கைத் தீர்மானங்களும் புதிதல்ல.   

இதுவரை, 26 நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள், இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன. இப்போது பிரதமர் மோடிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம், சுதந்திர இந்தியாவின் 27 ஆவது ஆகும்.   

எதிர்க்கட்சிகள் கொண்டு வருவது நம்பிக்கையில்லாத் தீர்மானம். ஆளுங்கட்சி கொண்டு வருவது நம்பிக்கைத் தீர்மானம். இந்த இரண்டு வகைத் தீர்மான‍ங்களிலும்  எஜமானராக இருப்பவர்கள் மக்களவை உறுப்பினர்கள் என்றால், நடுவராக இருந்து தீர்ப்பளிப்பவர் மக்களவை சபாநாயகர். தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இவர்தான் நடாத்துகிறார்.  

இந்திய நாடாளுமன்றத்தில், அதிகமான நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை அனுமதித்து, விவாதித்த மக்களவை சபாநாயகர் என்ற தகுதியை, சர்தார் குக்கும் சிங் பெறுகிறார். இவர் இருந்த கால கட்டத்தில்தான், ஆறு நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் கொடுக்கப்பட்டு, பரபரப்பாக விவாதிக்கப்பட்டன.

அதிக நம்பிக்கைத் தீர்மானங்களை அனுமதித்த சபாநாயகர் என்ற பெயரை, இந்திய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக இருந்த பி.ஏ.சங்மா பெறுகிறார். இவர் காலத்தில்தான், நான்கு நம்பிக்கைத் தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டன.  

பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம்தான், இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல் நம்பிக்கையில்லாத் தீர்மானம். பிராஜ் ராஜ் சிங் என்பவர், 31.8.1961 அன்று இந்தத் தீர்மானத்துக்கான மனுவைக் கையளித்தார்.    

ஆனால், சபாநாயகராக இருந்த எம்.ஏ அய்யங்கார், “இந்த மனுவுக்கு 50 எம்.பிகளின் ஆதரவு இருக்கிறதா” என்று அவையில் கேள்வி எழுப்பிய போது, ஆறு உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவாக எழுந்து நின்றனர். 
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள, 50 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதால் நேருவுககு எதிரான அந்தத் தீர்மானம், விவாதிக்கப்படாமலேயே கைவிடப்பட்டது.   
16 ஆண்டு காலம், பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு எதிராகத்தான் 15 நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.  

அப்படி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானங்களில், பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு எதிராக, சோனியா காந்தி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம்தான் நாடாளுமன்ற வரலாற்றில்,  21 மணி 44 நிமிடங்கள் அவையில்  காரசாரமாக விவாதிக்கப்பட்டு இறுதியில் தோற்கடிக்கப்பட்டது.

 அது மட்டுமல்ல, ஒரே வாக்கில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் தோற்ற பிரதமர் என்ற பெயரை, 1999இல் வாஜ்பாய் பெற்றார். இப்படி நம்பிக்கையில்லாத் தீர்மானம், நம்பிக்கை கோரும் தீர்மானங்களுக்கு இந்திய நாடாளுமன்றத்தில் நீண்ட வரலாறு உண்டு.  

ஓர் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லை என்று நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் தீர்மானம், ஆளுங்கட்சியின் பலத்தால் தோற்கடிக்கப்படுவதுண்டு. அதற்கான முயற்சிகளில்தான், பிரதமராக இருப்பவர்கள் தீவிரமாக ஈடுபடுவார்கள்.   

ஆனால், இந்தத் தீர்மானம் மூலம், நாட்டில் நிலவும் பல்வேறு முக்கிய பிரச்சினைகள், ஆட்சி பொறுப்பில் உள்ளவர்களின் தோல்விகள் பற்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவையில் விரிவாக விவாதிக்கப்படும். உதாரணமாக, இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஆபத்து வந்து விட்டதாக, எதிர்க்கட்சிகள் ஒரே குரலில் நாடாளுமன்றத்தில் ஒலித்திருக்கின்றன.   

அத்துடன், அரசாங்கத்தின் தோல்விகள் போன்றவற்றை, மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய மன்றத்தில் விவாதிக்க பெரும்பாலான நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் உதவியிருக்கிறன. அந்த வகையில் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம், மோடி அரசாங்கத்தின் சாதனை, வேதனைகளை நாடாளுமன்றத்தில் மிக விரிவாக விவாதிக்க காரணமாக அமைந்திருக்கிறது.  

தீர்மானம் தோற்கடிக்கப்பட்டாலும், தீர்மானத்தின் கருத்துருகளும் எதிர்க்கட்சிகளின் ஓற்றுமையும் மேலும் கூர்தீட்டப்பட்டு, ஓர் ஆக்கபூர்வமான தேர்தல் களம் அமைவதற்கு, இந்தத் தீர்மானம் வித்திட்டுள்ளது.   

நாடாளுமன்ற ஜனநாயகம் அளித்துள்ள அருட்கொடையான இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் வாக்கெடுப்புக்குப் பிறகு, மக்கள் மன்றத்துக்குச் செல்லும் மற்ற தேசியக் கட்சிகளோ, மாநிலக் கட்சிகளோ, முக்கிய தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதாக் கட்சி ஆகிய கட்சிகளின் தலைமையில், கூட்டணியாகக் கைகோர்ப்பதற்கு, ஒரு காரணியாக இந்தத் தீர்மானம் அமைந்திருக்கிறது.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .