2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் தி.மு.க, அ.தி.மு.க

எம். காசிநாதன்   / 2018 செப்டெம்பர் 17 , மு.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.தி.மு.க அமைச்சர்கள் மீது, திடீரென்று புகார் மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். முதலமைச்சர், துணை முதலமைச்சர், சுகாதாரத்துறை, உள்ளூராட்சித்துறை அமைச்சர்கள் என நான்கு அமைச்சர்கள் மீது, இலஞ்ச ஊழல், கண்காணிப்புத்துறையிடம் ஊழல் புகார்களைக் கொடுத்திருக்கிறது தி.மு.க.    

இதற்கிடையில், தடை செய்யப்பட்ட ‘குட்கா ஊழல்’ என்று, சென்னை மாநகர முன்னாள் பொலிஸ் ஆணையாளர் ஜோர்ஜ், தமிழகத்தின் தற்போதைய பொலிஸ் தலைமை இயக்குநராக இருக்கும் டி.கே. ராஜேந்திரன் உள்ளிட்ட, தலைமை இயக்குநர் அந்தஸ்துள்ள அதிகாரிகள் இல்லத்திலேயே மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ சோதனை நடத்தியிருக்கிறது.   

வேறு ஒரு பக்கம், ஒரு பெண் பொலிஸ் சுப்பிரின்டன்ட், இலஞ்ச ஊழல் கண்காணிப்புத்துறையில் உள்ள இன்ஸ்பெக்டர் ஜெனரல் முருகன் மீது, பாலியல் தொல்லை புகாரைக் கொடுத்திருக்கிறார். 

இப்படி, அ.தி.மு.க ஆட்சிக்கு பல முனைகளிலிருந்தும் தாக்குதல் தொடங்கி இருப்பதிலிருந்தே, தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ‘களை’ கட்டி விட்டது என்பதைக் காண முடிகிறது.  

தி.மு.கவின் புதிய தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, அ.தி.மு.க மீதான ஊழல் புகார்கள் நீளுகின்றன.   

கலைஞர் கருணாநிதி இல்லாத, முப்பெரும் விழாவை தி.மு.க நடத்தியிருக்கிறது. மு.க. அழகிரி ஏற்படுத்த நினைத்த குழப்பங்கள், நிறைவேறாத நிலையில், தி.மு.க, ஸ்டாலின் பக்கம் ஓரணியாக நிற்கிறது.  

 அந்தப் பலத்தை, தக்கவைத்துக் கொண்டு, தி.மு.க, கலைஞர் கருணாநிதி மறைவுக்குப் பிறகும், கம்பீரமாக இருக்கிறது என்பதை நிரூபிக்க, அ.தி.மு.கவின் மீது பரபரப்பான ஊழல் புகார்கள் புறப்படுகின்றன. 

எதிர்வரும் செப்டெம்பர் 18 ஆம் திகதியன்று, அ.தி.மு.க அரசாங்கத்தின் ஊழல்களை எதிர்த்து, மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளது தி.மு.க.   

சமீபத்தில் நடைபெற்று முடிந்த தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், “கலைஞரின் சமாதிக்கு இடமளிக்க மறுத்த அ.தி.மு.கவுடன், எந்த மட்டத்திலும் ஒட்டுறவை, தி.மு.கவினர் வைத்துக் கொள்ளக் கூடாது” என்று கடும் நிபந்தனையை ஸ்டாலின் விதித்திருக்கிறார்.   

இந்த அறிவிப்பு, அ.தி.மு.கவுக்கும் தி.மு.கவுக்கும் இடையில் நிலவி வந்த பரஸ்பர உறவை, குறிப்பாக, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, இரு தரப்பிலும் போற்றி வந்த அரசியல் நாகரிகத்துக்கு முற்றுப்புள்ளியாக அமைந்துள்ளது.   

அ.தி.மு.க - தி.மு.க உறவில், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் ஒரு நெருக்கம் தெரிந்தாலும், கலைஞர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, அது விரிசலாக மாறி விட்டது.   

அநேகமாக அடுத்து, எப்போது சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றாலும், இரு கட்சியினரும் மீண்டும் ‘எலியும் பூனையும்’ போல், சட்டமன்றத்தில் நிற்பார்கள் என்றே தெரிகிறது. “இனி அ.தி.மு.கவுடன் நாகரிக உறவு கிடையாது” என்று தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், இறுதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனால்தான், அது இப்போது, ஊழல் புகார்களில் எதிரொலிக்கிறது. 

என்றாலும், இது “மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்குப் பாடம் புகட்டுவோம்; மாநிலத்தில் அ.தி.மு.க ஆட்சியை நீக்குவோம்” என்று தி.மு.க பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகளாகவே இருக்கின்றன.    “அ.தி.மு.க ஆட்சி ஊழல்” என்ற பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்வதிலும், ‘எங்களுக்கும் பா.ஜ.கவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என்பதை வெளிப்படுத்துவதிலும் தி.மு.க மிக மும்முரமாக இருக்கிறது.  

தி.மு.கவின் இந்தக் கடும் தாக்குதலை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலுள்ள அ.தி.மு.கவும் புரிந்து கொண்டு செய்படுவது போலவே, காட்சிகள் அரங்கேறி வருகின்றன.   

கலைஞர் கருணாநிதிக்கு சமாதி இல்லை என்ற மறுப்பிலேயே, அ.தி.மு.க வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொண்டார் முதலமைச்சர் பழனிசாமி. பிறகு, அ.தி.மு.க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஆட்சியின் சாதனை விளக்க ‘சைக்கிள் பேரணிகள்’ மதுரையில் தொடங்கி  நடைபெறுகின்றன. பா.ஜ.கவுக்கும் எங்களுக்கும் கூட்டணி இல்லை என்ற ரீதியில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.   

அ.தி.மு.க சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளிட்ட ‘குட்கா ஊழல்’ தொடர்புடையவர்கள் வீடுகளில் இடம்பெற்ற அதிரடிச் சோதனை, “தி.மு.கவுடனான  கூட்டணிக்காக, பா.ஜ.க செய்த சதி” என்று திசை மாற்றப்பட்டது. அ.தி.மு.க சார்பில், நாடாளுமன்றத்தின் துணைச் சபாநாயகராக இருக்கும் தம்பித்துரையே, அந்தக் குற்றச்சாட்டைப் பகிரங்கமாக முன் வைத்தார்.   

கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு, பா.ஜ.க தலைவர்கள் வந்தது, இரங்கல் கூட்டத்துக்கு பா.ஜ.கவின் அகில இந்திய தலைவர் அமித்ஷா வருவதாகப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு, பிறகு மத்திய தரை வழிப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டது எல்லாவற்றையும் முடிச்சுப் போட்டு தி.மு.கவும்  பா.ஜ.கவும் கூட்டணி சேரப் போகின்றன என்ற பிரசாரத்தை தம்பித்துரை முன்னின்று நடத்துகிறார்.    

இந்தப் பிரசாரத்தின் மூலம், சிறுபான்மையின சமுதாய வாக்குகளைத் தி.மு.கவிடமிருந்து சிதறடித்து விட வேண்டும் என்பது ஒரு வியூகம். ஆனால், அந்த வியூகத்தை, சசிகலாவின் ஆசி பெற்ற தினகரனின் கட்சிக்காகச் செய்கிறாரா அல்லது பா.ஜ.கவுடன் கூட்டணி என்ற பிரசாரத்தை வலுப்படுத்தி, தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியைப் பிரித்து விட முயற்சிக்கிறாரா என்பது மட்டுமே இன்னும் புரியாத புதிர்.   

ஆனாலும், அ.தி.மு.கவின் இந்த முயற்சிக்குக் கைமேல் பலன் கிடைத்து போல், ராஜீவ் வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை விவகாரம் அமைந்தது. 
அந்த வழக்கில் உச்சநீதிமன்றம், “அரசியல் சட்டம் 161இன் கீழ், இந்த ஏழு பேரின் விடுதலை குறித்து முடிவு எடுக்க, மாநில அரசாங்கத்துக்கு அதிகாரம் இருக்கிறது” என்று தீர்ப்பளித்தது.   

அதனடிப்படையில், அ.தி.மு.க அரசாங்கம், உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, தீர்மானத்தை நிறைவேற்றி, “ஏழுபேரையும் விடுதலை செய்ய வேண்டும்” என்று, தமிழக ஆளுநருக்குப் பரிந்துரை செய்தது. இந்தப் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொள்வாரா, நிராகரிப்பாரா என்ற கேள்வி ஒருபக்கம் விவாதிக்கப்படுகின்ற நேரத்தில், “ஏழு பேர் விடுதலையில், தமிழக அரசு எடுத்த முடிவை, ஏற்றுக் கொள்ள முடியாது” என்று, அகில இந்திய காங்கிரஸ் குழுவின் சார்பில், டெல்லியிலிருந்து கருத்துக் கூறப்பட்டது.   

இதுவரை அ.தி.மு.க அரசாங்கத்தின் ஊழல்கள் பற்றி, அகில இந்தியக் காங்கிரஸ் குழு வாய் திறந்தது இல்லை. ஆனால், ஏழு பேர் விடுதலை விவகாரத்தில், உடனே கருத்துச் சொன்னதால், இந்த விடுதலையை ஆதரித்த தி.மு.க மீது, கோபம் இருக்கிறது என்பது புரிகிறது.   

தி.மு.க பொருளாளர் துரைமுருகனோ, “காங்கிரஸின் இந்தக் கருத்து தேவையற்றது” என்றார். ஆகவே, ஏழு பேர் விடுதலையில் அ.தி.மு.க அரசாங்கத்தின் வியூகம், தி.மு.க - காங்கிரஸ் உறவுக்குள் ஓர் உரசலை ஏற்படுத்தியுள்ளது.   

அந்த உரசல், பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து, அகில இந்திய காங்கிரஸ் குழு அறிவித்த ‘பாரத் பந்தில்’ தமிழகத்தில் எதிரொலித்தது. தி.மு.கவினர் ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்புத் தரவில்லை என்று, தமிழ்நாடு காங்கிரஸ் தரப்பால் குற்றம் சாட்டப்பட்டது.  

 ஊழல் அமைச்சர்கள், அதிகாரிகள் இராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன் வைத்தாலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தமட்டில், ‘ஒருவரை இராஜினாமாச் செய்ய வைத்தால், பிறகு முதலமைச்சரையே இராஜினாமாச் செய்யச் சொல்வார்கள்’ என்பதன் அடிப்படையில் அமைதி காக்கிறார்.   

ஆட்சிக்கு கெட்ட பெயர், என்ற தோற்றப்பாட்டைக் குறைப்பதற்கு, ஏதாவது வழி இருக்கிறதா என்ற அடிப்படையில், அ.தி.மு.கவுக்கு உதவியது இந்த ஏழு பேர் விடுதலை விவகாரம். இதற்கு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியதால், ஒரே நாளில் தமிழ் அமைப்புகள், அ.தி.மு.க அரசாங்கத்தின் முடிவை வரவேற்றுள்ளார்கள்.   

ஆகவே, பா.ஜ.க- தி.மு.க கூட்டணி முயற்சி, ஊழல் புகார்கள் தொடர்பான நீதிமன்றப் போராட்டம், அ.தி.மு.கவில் ஓரங்கட்டப்பட்டவர்களுக்குப் பொறுப்புகள் என்ற நீரோட்டத்தில், அ.தி.மு.க நாடாளுமன்றத் தேர்தலுக்கான களத்தை அமைத்துக் கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகத்தான், இப்போது அ.தி.மு.க சார்பில் தொடங்கப்பட்டிருக்கும் தொலைக்காட்சி அலைவரிசையும் அமைந்திருக்கிறது.   

ஆகவே, நாடாளுமன்றத் தேர்தலுக்கான களத்துக்கு, ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கவும் முதலமைச்சர் பழனிசாமி,  துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.கவும் தயாராகி விட்டதை, தமிழகத்தில் இரு கட்சிகளிலும் அரங்கேறும் பரபரப்புக் காட்சிகள் காட்டுகின்றன.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .