2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நாடாளுமன்றத் தேர்தல்: அமைந்தது அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி

எம். காசிநாதன்   / 2019 பெப்ரவரி 25 , மு.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் களம், களைகட்டி விட்டது. இரு பிளவுகளான அ.தி.மு.கவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.கவுக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் முதலில் கூட்டணி ஏற்படுத்தப்பட்டது.  

நேற்று வரை கடுமையாக, அ.தி.மு.க ஆட்சியை விமர்சித்துக் கொண்டிருந்த டொக்டர் ராமதாஸ், எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துக் கூட்டணி அமைத்தார். அக்கூட்டணி, அ.தி.மு.க அலுவலகத்திலோ, பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்திலோ நடைபெறவில்லை.   

வழக்கமாக, அ.தி.மு.கவை ஜெயலலிதா வழி நடத்திய வரை, போயஸ் கார்டனில்தான் கூட்டணி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அதுபோல், இந்த முறை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் கூட, கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. அதற்குப் பதிலாக, நட்சத்திர கொட்டலில், கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்று, பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஏழு நாடாளுமன்றத் தொகுதிகள், ஒரு ராஜ்ய சபை பதவி என்று, கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.   

பாரதிய ஜனதா கட்சியுடன், நேரடியாக ஒப்பந்தம் போட்டுக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக, டொக்டர் ராமதாஸ், எடப்பாடி பழனிசாமியுடன் முதலில் கூட்டணி ஒப்பந்தத்தைப் போட்டுக் கொண்டார். கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானதுதான் தாமதம், சமூக வலைத் தளங்களில், அ.தி.மு.க ஆட்சி பற்றி, டொக்டர் ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் பேசிய பேச்சுகள், முன் வைத்த விமர்சனங்கள் எல்லாம், வீடியோ கிளிப்புகளாக வெளிவரத்தொடங்கின.  

மிகவும் துடிப்புடன் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின், சமூக வலைத் தள பங்கேற்பாளர்கள், திடீரென்று மௌனம் சாதிக்க வேண்டிய சூழல் உருவானது. அக்கட்சியிலிருந்து, மாநில மகளிர் அணித் தலைவி விலகினார். அ.தி.மு.கவுடன் பா.ம.க வைத்த கூட்டணி, இதற்கு முன்பு இப்படியொரு விமர்சனத்துக்கு உள்ளானது இல்லை. ஆனால், இந்த முறை கடுமையான விமர்சனத்துக்கு, இந்தக் கூட்டணி உள்ளாகி இருக்கிறது.  

இதேபோன்று, ஜெயலலிதா இருந்த போதும் ‘7 ப்ளஸ் 1’ என்று கூட்டணி போட்டிருக்கிறது பா.ம.கட்சி. ஆனால், அந்த ஒப்பந்தத்தின் படி, பெற்ற சீட்டுகளில் ஒன்றைக்கூட, 2009 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.கவால் பெற முடியவில்லை.  

 2016இல் தனித்தே போட்டியிட்டு, டொக்டர் அன்புமணி ராமதாஸை, முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தியது பா.ம.கட்சி. ஆனால், தமிழகத்தில் 232 சட்டமன்றத் தொகுதிகளில், தனியாகப் போட்டியிட்டு, 212 தொகுதிகளில் கட்டுத் தொகையைப் பறி கொடுத்தது. 

ஆகவே, பாட்டாளி மக்கள் கட்சி வலுவான கட்சி என்பது, 2006 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே முடிவுக்கு வந்து விட்டது. அதற்கு, மிக முக்கியக் காரணம், விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க உருவானதாகும்.   

இன்னொன்று பா.ம.கவுக்கு போட்டியாக, திருமாவளவனின் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போதிய பலத்தை, வட மாவட்டங்களில் பெறாததாகும்.   

ஆகவே இப்படியொரு சூழ்நிலையில், தி.மு.க தரப்பில் ஏழு தொகுதிகளை, பாட்டாளி மக்கள் கட்சிக்குக் கொடுப்பதற்கு முன் வரவில்லை என்பதால், தி.மு.க மற்றும் அ.தி.மு.கவுடன் பேசிக் கொண்டிருந்த பா.ம.க, இறுதியில் அ.தி.மு.கவுடனே கூட்டணி வைத்தது. 

தி.மு.கவுடன் கூட்டணி அமைக்க முடியாமல் போனதற்கு, கடந்த காலங்களில் டொக்டர் ராமதாஸ் எடுத்த நிலைப்பாடும் மிக முக்கியக் காரணமாக அமைகின்றது.   

அவர் எந்தக் காலகட்டத்திலும், தி.மு.க தலைவர் ஸ்டாலினை ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக தனது மகன் அன்புமணி ராமதாஸை விட, ஸ்டாலின் சிறந்த தலைவர் இல்லை என்று, தனக்கு வேண்டியவர்களிடம் மட்டுமின்றி, தி.மு.கவில் உள்ள வன்னியர் தலைவர்களிடமும் பேசியே வந்தார். 

குறிப்பாக, தி.மு.க அழைப்பு விடுத்த அனைத்துக் கட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்ளாத ராமதாஸ், ஒரு சில நேரங்களில், “நான்தான் நீங்கள் (தி.மு.க) வேண்டவே வேண்டாம் என்கிறேனே! பிறகு எதற்கு திரும்பத் திரும்ப எனக்கு அழைப்பு அனுப்பிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று தி.மு.கவினரைக் கடிந்து கொண்டுள்ளார்.   
ஆகவே, தி.மு.க, பா.ம.க உறவு என்பது டொக்டர் ராமதாஸுக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் ஸ்டாலினுக்கும் இடையிலான, கௌரவ யுத்தமாக மாறிப் போனது. இதன் விளைவாகவே, ‘ஊழல் அ.தி.மு.க’, ‘முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்’, ‘அரசு ஒன்றே இல்லை’ ‘அடிமைகள் எல்லாம், அ.தி.மு.கவில் அமைச்சர்கள்’ என்றெல்லாம் ‘வீரவசனம்’ பேசிவிட்டு, இப்போது அதே அ.தி.மு.கவுடன் கூட்டணி வைக்க வேண்டிய நிர்பந்தம் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஏற்பட்டு விட்டது.   

நிர்ப்பந்தக் கூட்டணி, எதிர்பார்த்த தேர்தல் முடிவுகளை, வட மாவட்டங்களில் கொடுக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. ஏனென்றால், ஒன்றுபட்ட அ.தி.மு.க- பா.ம.க கூட்டணியே, 2009 நாடாளுமன்ற தேர்தலில் தோற்றுள்ள நிலையில், இப்போது பிளவுபட்டுள்ள அ.தி.மு.கவுடனான பாட்டாளி மக்கள் கட்சி எந்த அளவுக்கு வெற்றி பெறப் போகிறது?   

சென்ற சட்டமன்ற தேர்தலில், அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் வேட்பாளர் என்பதற்காக வாக்களித்த 5.5 சதவீத வாக்காளர்கள் மீதும், இந்த அ.தி.மு.கவுடன் அணி சேர்ந்த, பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்களிப்பார்களா?, ‘மாற்றம், முன்னேற்றம்’ என்று அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக, வாக்களித்த இந்த வாக்காளர்கள்கள், மீண்டும் அ.தி.மு.க ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி விட்டு, அந்தக் கட்சியுடனேயே கூட்டணி வைத்திருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்களிப்பார்களா? சொந்தக் கட்சிக்குள்ளேயே இருக்கும் குமுறல், வாக்குச்சாவடியிலும் பாட்டாளி மக்கள் கட்சிக்குப் பிரதிபலிக்குமா?   

கூட்டணி அமைத்த மேடையில், நடுநாயகமாக அக்கட்சியின் தலைவர் போல் அமர்ந்திருந்த, டொக்டர் ராமதாஸைப் பார்த்து, அ.தி.மு.கவினர் கோபமாகினர். அந்தக் கோபத்தின் விளைவுகள், பிரிந்துள்ள அ.தி.மு.க அணியிடம் இருக்கும் வாக்குகள் விழுமா? அ.தி.மு.க அமைச்சர்கள் கே.பி  அன்பழகன், சி.வி. சண்முகம் ஆகிய இருவருக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் உள்ள பகை, பாசமாக இக்கூட்டணியின் மூலம் மாறுமா? என்று அடுக்கடுக்கான கேள்விகள் மட்டுமல்ல, ஆபத்துகளும் இக்கூட்டணியை எதிர்கொண்டிருக்கின்றன.   

இதைத் தொடர்ந்து, பா.ஜ.கவுடனும் அ.தி.மு.க கூட்டணி வைத்திருக்கிறது. “மத்திய, மாநில அரசாங்கங்களின் உறவுகளுக்காகவே இணக்கமாக இருக்கிறோம். எங்களுடையது அரசியல், கூட்டணி அல்ல” என்று பா.ஜ.க தலைவர்களும் பேசினார்கள்.அ.தி.மு.க தலைவர்களும் அமைச்சர்களும் பேசினார்கள். ஏன், நாடாளுமன்றத் துணை சபாநாயகர்  மு. தம்பித்துரையும் பேசினார். 

ஆனால், நேற்றுவரை அப்படிப் பேசிக்கொண்டிருந்து விட்டு, இப்போது திடீரென்று பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணி என்று உருவாக்கப்பட்டு, பா.ஜ.கவுக்கு ஐந்து தொகுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.   

இதுவும் நட்சத்திர கொட்டலில் பேசி முடிக்கப்பட்ட கூட்டணியாகவே அமைந்து விட்டது. 2014இல் எப்படி, ‘காங்கிரஸ் எதிர்ப்பு’ தமிழகத்தில் எரிமலை போல் இருந்ததோ, அதேபோன்று இன்றைக்கு பா.ஜ.க எதிர்ப்பு, குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி மீதான எதிர்ப்பு, தமிழகத்தில் உச்சத்தில் இருக்கிறது.   

குக்கிராமங்களில் கூட, ‘மோடி எதிர்ப்பு’ தமிழகத்தில் நீரோட்டம் போல் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த பா.ஜ.கவுடன், அ.தி.மு.க ஆட்சி ரீதியாக வைத்திருந்த இந்த இரு ஆண்டு கால உறவும் தமிழகத்தில் அ.தி.மு.கவின் அரசியலுக்கு, மத்திய பா.ஜ.க அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியதும் மிகப்பெரிய சோதனையாக அ.தி.மு.கவுக்கு இருக்கிறது. பா.ஜ.கவுக்கும் இருக்கிறது. 

ஆகவே, இன்றைய நிலையில், ஆட்சியில் உள்ள அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்தாலும், மத்திய அரசாங்கத்தில் உள்ள பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தாலும் தமிழகத்தில் ‘வெற்றி வாய்ப்பு’ தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிலையில்தான் இருக்கிறது என்பதுதான் கள நிலைமை.   

ஆகவே, எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க அமைத்துள்ள பாட்டாளி மக்கள் கட்சி- பா.ஜ.க கூட்டணி, தமிழகத்தில் நாடாளுமன்றத் தொகுதிகளை பெற்றுத் தருமா? ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள இடைத் தேர்தல் நடைபெற விருக்கும் 21 சட்டமன்ற தேர்தலில் கை கொடுக்குமா என்பதெல்லாம் புதிர் போல்தான் இருக்கிறது.   

கூட்டணி களத்துக்குச் செல்லும் போது, அ.தி.மு.கவில் இன்னோர் அணியாக இருக்கும் தினகரன் அணி, ஏற்படுத்தப் போகும் தாக்கங்கள், கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான வாக்கு வங்கிப் பரிமாற்றம் எல்லாம், இந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தமட்டில், மிகப்பெரிய சவாலாகத்தான் இருக்கப் போகிறது.  

இந்தக் கூட்டணியை எதிர்கொள்ளும் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியில், ‘காங்கிரஸுக்கு 10 சீட்டுகளா’ என்ற கேள்வி தி.மு.கவுக்குள் எழுந்துள்ளது. கூட்டணியில் உள்ள, ம.தி.மு.க, இந்திய கொம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கொம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதிகள் என்பது, தி.மு.க. தலைமையிலான கூட்டணி என்ற தேன் கூட்டில் கல் வீசியதாக, ஆகிவிடுமோ என்ற கருத்தும் நிலவுகிறது.   

ஆனாலும், தி.மு.க தலைமையிலான கூட்டணி, இறுதி வடிவம் பெற்ற பிறகே, தமிழகத்தின் நாடாளுமன்றத் தேர்தல் அணிகளுக்கு, மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பு, சிவப்புக் கம்பளமா, நெருப்புக் கம்பளமா என்பது தெரியவரும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .