2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நீரும் நெய்யும்போல் நவாலி - 2: ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே....

Editorial   / 2017 ஜூலை 06 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பஸ்தியாம்பிள்ளை ஜோண்சன்   

(நேற்றைய தொடர்ச்சி) 

“அன்றைய தினம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி, கதிர்காம முருகன் ஆலயத்திலும் மக்கள் தஞ்சமடைந்தனர். அவ்வேளையில் விமானம் மூலம் 13 குண்டுகள் தொடர்ச்சியாக மக்கள் குவிந்திருந்த இரு ஆலயங்கள் மீதும் வீசப்பட்டன.

சில கணங்களில் எங்கும் ‘ஐயோ’ என்ற அவலக் குரல்கள்............ உடல் சிதறி, கையிழந்து, கால் இழந்து, தலையிழந்து குற்றுயிராகக் கிடந்த கொடூரக்காட்சிகள் இன்றும் மறக்க முடியாதவையாகும். அந்த இடத்திலேயே 168 பேர் துடிதுடித்து மரணமானார்கள்.

காயமடைந்தவர்கள் 220 க்கும் மேற்பட்டோர்; இவர்களில் அனேகர், இன்றும் விழுப்புண்களுடன் நடைப்பிணங்களாக நடமாடி வருகின்றார்கள். இந்தச் சம்பவங்களை நினைவுகூரும் வழிபாடுகள், சடங்குகள், சம்பவம் நடந்த இடங்களில் இன்றும் வருடாவருடம் நடாத்தப்பட்டு வருகின்றது.   

இந்தச் சம்பவத்தை நேரில்பார்த்த, அன்ரன் அருள்வண்ணன் (மென்பொருள் மேன்பாட்டாளர்) விவரிக்கும்போது,“நவாலிக் கோவிலில் விழுந்த ஒன்பது குண்டுகளும் ஒரே நேர்கோட்டிலேயே விழுந்திருந்தன. பெரிய மெயின் ‘கேட்’ வானத்தில் பறந்துசென்று, 300 மீற்றர் தொலைவில் விழுந்தது. அந்தக் குண்டின் உலோகம், இரும்பைவிட அடர்த்தி கூடியதாக இருந்தது. காயமடைந்தவர்களில் அதிகமானோர் அடிவயிற்றில்தான் காயம்பட்டிருந்தார்கள்; படுத்திருந்தவர்களும் காயமடைந்திருந்தனர். பொதுவாக குண்டுவீச்சின்போது, குப்புறப்படுத்திருப்பவர்கள் காயமடைவதில்லை. அதுஒரு தற்காப்பு முறை; குண்டின் தாக்கத்தின் காரணமாக மக்கள் அணிந்திருந்த ஆடைகளும் சிதிலங்களாகி விட்டிருந்தன. அவ்வளவுக்கு இது ‘பவர்புள்’ குண்டு; எனது வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் ஆறுபேரும் இறந்துவிட்டார்கள்” என்றார்   

இவர், சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற, நவாலியூர் பண்டிதர் பா. சத்தியசீலனின் மகன் என்பது குறிப்பிடக்கூடியது. ஏழாம் ஆண்டு தமிழ்பாட நூலில் உள்ள ‘ஈழம் எங்கள் நாடடா’ இன்பமான தீவடா’ என்ற பாடலை யாத்தவர் பண்டிதர் சத்தியசீலன் ஆவார். அவர்தான், தரம் ஒன்பதாம் ஆண்டு பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ‘அருளப்பர் அம்மானை’யின் ஆசிரியருமாவார்.   

நவாலி கிராமத்தின் பொருளாதார நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டால் விவசாயம், மீன்பிடி, பனைசார் தொழில்கள், அரச தனியார் துறைகளில் உத்தியோகம், வெளிநாட்டுத் தொழில்வாய்ப்புகள் எனக்காணப்படுகின்றன. கிராமத்துக்கேயுரித்தான விவசாயம், மீன்பிடி, பனைசார் தொழில்களில் வருமானம் குறைந்து வருவதனால் அவற்றைக் கைவிட்டு, அநேகர் வேறு முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.   

விவசாயம்   

கிராமத்தின் தெற்கு மற்றும் மேற்குப் புறங்களில் மேடாக இருந்த காணிகளை, மழைநீர் தேங்கி நிற்கத்தக்க வகையில், பள்ளக் காணிகளாக்கி, அவ்வாறு மழைநீர் தேங்கி நிற்கும்போது, நெல் விதைத்து, வேளாண்மை செய்து தன்னிறைவு கண்டிருந்தது ஒருகாலம். இப்போது நெற்பயிற்செய்கை காலபோகம்தான். காலபோகம் என்றால், புரட்டாதியில் வேலைகளை ஆரம்பித்து, தை கடைசியில் மாசியில் வெட்ட ஆரம்பித்துவிடுவார்கள். “வெட்டிப்போட்டு, உழுது, பயறு, உழுந்து, எள் போன்ற உபஉணவுப் பயிர்ச்செய்கை செய்வோம். வானம் பார்த்த பூமி; விவசாயம் செய்வதற்கு ஆறு, கிணறு கிடையாது என்கின்றார்கள் இவ்வூர் விவசாயிகள்.   

மீன்பிடி  

காக்கைதீவு கடற்கரை, நவாலியின் ஓர் எல்லையாக இருப்பதனால் மீன்பிடித் தொழிலும் செழிப்புற்று இருந்தது. குடாக்கடல் முழுவதும் இவர்கள் சுதந்திரமாகத் தொழில்செய்து வந்தார்கள். அக்காலத்தில் ஆயிரத்துக்கும் குறையாத எண்ணிக்கையானோர் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.  இப்பொழுது ஐந்து மீனவக்குடும்பங்கள் மட்டுமே மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றார்கள். மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் மீன்கள் குறைந்துவிட்டன. அதனால் இந்தத் தொழிலை விட்டுவிட்டு, வேறு தொழில்களுக்குச் சென்றுவிட்டார்கள். அநேகர் வெளிநாடு சென்றுவிட்டார்கள்” என்று பொதுவில் மீனவர்கள் தெரிவித்தனர்.   

பனைவளம்சார் தொழில்கள்  

“கள்ளிறக்கும் தொழில் குறைந்துகொண்டே போகின்றது. சங்கங்கள் வந்தபிறகு வீடுகளில் விற்கஏலாது. வீடுகளில் விற்றால் ‘எக்சஸ்’ பாயும். சங்கங்களுக்குத்தான் நாங்கள் இறக்கிக் கொடுப்போம். எங்கட காசுகள் சங்கங்களில முடங்கிப்போய்க் கிடக்குது. சங்கம் போத்தலில் அடைத்துத்தான் விற்கும். போத்தல் கள்ளு விற்பனையாவது குறைவு; வருமானமும் குறைவு; அதால இப்பத்தேப் பெடியள் கள்ளிறக்குற தொழிலுக்குப் போறதில்லை.”

குடாநாட்டுக்குள் ஆனைக்கோட்டை, நவாலி பிரதேசங்களில் உள்ள பனைமரங்களில் இருந்து இறக்கப்படும் கள்ளுக்கு தனிக்கிராக்கி உண்டு. இனிப்பும் காரமும் புளிப்பும் சேர்ந்த தனித்துவமான சுவை இந்தஊர் கள்ளுக்கு உண்டு.   

நவாலியில் பாயிழைத்தல், பெட்டி, கடகம், பட்டை போன்ற பனைசார்ந்த உற்பத்திகள் இலாபகரமாக முன்னொருகாலத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இப்போது இவையெல்லாம் கைவிடப்பட்டாயிற்று.   

உத்தியோகத்தர்கள்  

நவாலி கிராமத்தில் 100 சதவீதமானோர் எழுதவாசிக்கத் தெரிந்தவர்கள். பெரும்பான்மையானோர் உயர்கல்விகற்று அரச, தனியார் நிறுவனங்களில் உத்தியோகம் பார்த்தார்கள். அதன் தொடர்ச்சியாக இன்றும் பெரும்பான்மையானோர் உத்தியோகஸ்தர்களாகவே காணப்படுகின்றார்கள்.

வட்டுக்கோட்டை, மானிப்பாய் கிராமங்களுடன் மிக நெருங்கிய தொடர்பு நவாலிக்குண்டு. இந்த இடங்களில் அமையப்பெற்றுள்ள மிசனரிமாரின் கல்விகூடங்களின் பின்னணி காரணமாகவே நாவாலிக் கிராமம் கல்விச் செல்வத்தில் தன்னிறைவு பெற்றிருந்தது.  
“ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே....” என்ற பிரபல்யமான சிறுவர் பாடலையாத்த, நவாலியூர் சோமசுந்தரப்புலவர் நவாலி வடக்கைச் சேர்ந்தவர். புலவர் 1878 ஆம் ஆண்டு ஜுலை பத்தாம் திகதி பிறந்தார். 1951 ஆம் ஆண்டு அதே மாதத்தில் 11 ஆம் திகதி அவருடைய மரணம் சம்பவித்தது. 73 வருடங்கள் இந்தப் பூமியல் பேரோடும்புகழோடும் வாழ்திருந்தார்.   

“அதுதான் வீடு; புலவற்றை வீடு அதுதான். நாங்கள் சின்னப்பிள்ளையாக இருந்தபோது, எங்கட அம்மா, ஆச்சி எங்கள றோட்டால கூட்டிக்கொண்டுபோகேக்க புலவற்றை வீட்டைக்காட்டித்தான் எங்கள வளர்த்தவை” என்கிறார் ஊர்வாசியான குடும்பப்பெண் ஒருவர். அந்த வீட்டின் முன்பக்கச் சுவரில், “சுந்தரவரதனார் அகம்” எனப் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. தென்மராட்சியிலிருந்து இடம்பெயர்ந்து வந்திருந்த, புலவருக்கு உறவுமுறையற்ற வயோதிபப் பெண் ஒருவர், இங்கு தன்னந்தனியாக வசித்து வருகின்றார்.

சோமசுந்தரப் புலவருக்கு மாமா முறையானவர் (அம்மாவின் தம்பி) இப்போது வயது 80. புலவரின் வீட்டுக்கு அயலில்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றார். பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் பார்ப்பதற்காக அடிக்கடி வெளிநாட்டுக்கு போய்வருவார். புகையிலையை சுறுட்டிச் சுற்றிய ‘ஒறிஜினல்’ யாழ்ப்பாணத்துச் சுறுட்டைப் புகைத்தபடி, அவர் கூறுகின்றார். “புலவருக்கு நான்கு சகோதரங்கள். அவர் தமிழ் மாஸ்டர்; வட்டுக்கோட்டை இந்துக் கொலிஜில்தான் படிப்பித்தவர். அதிகாலையிலேயே ஆள் எழும்பிவிடும். அவருக்கு ஐந்து பிள்ளைகள். மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள்’”என்றார்.   
நவாலி வடக்கு முதியோர் சங்கம், பலநல்ல ஆக்கபூர்வமான தொண்டுகளைச் செய்து வருகின்றது.இந்த முதியோர் சங்கம், நிரந்தரக் கட்டடத்தில் இயங்கி வருகின்றமையானது, முதியோர்களின் ஒற்றுமைக்கும் ஆக்கபூர்வமான பங்களிப்புகளுக்கும் கிடைத்திருக்கும் வெகுமானமாகவே கருதமுடிகிறது. 85 முதியோர்கள் இந்தச் சங்கத்தில் அங்கத்துவம் பெற்றிருக்கின்றார்கள். முதியோர்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்காமல் அவர்களும் சமூகத்தின் ஈடேற்றத்துக்கு அரும்பணி ஆற்ற முடியும் என்பதற்கு முன்னுதாரமாக நவாலி வடக்கு ஆதியோர் சங்கம் விளங்குகின்றது. மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை கர்ப்பிணிகளுக்கான இலவச கிளினிக், சங்கீதம், நடனம், மிருதங்கம் போன்ற கலைவகுப்புகள் இடம்பெறுகின்றன.  

ஒன்பது ஆலயங்களைக் கொண்டமைந்ததை ‘நவஆலயங்கள்’ என்போம்.‘நவாலயம்’ எனத்திரிபடைந்து ‘நவாலி’ என மருவியதிலிருந்தே, நவாலி என்ற ஊர்ப்பெயர் உருவானதாக கிராமத்திலுள்ள வயதில் மூத்தவர்கள் சொன்னார்கள்.  

சிவன்கோவில், காத்தவராயன் கோவில், கல்லுண்டா வைரவர் கோவில், குளத்து வைரவர் கோவில், கைளையோடை அம்மன்கோவில், குருக்கள் கோவில், ராஜராஜேஸ்வரி கோவில், சம்பந்தப் பிள்ளையார் கோவில், முருகனார் கோவில் ஆகியவையே அந்த ஒன்பது ஆலயங்களுமாகும். நவாலி என்ற ஊரில் இந்த ஒன்பது ஆலயங்களும் இன்றும் சிறப்புடன் மரபுகள் மாறாமல் பூஜைபுனஸ்காரங்களுடன் உயிர்ப்புடன் திகழ்கின்றன.  

இங்குள்ள ஆலயங்களை மையமாக வைத்தே கிராமத்தின் சமூக அசைவியக்கம் ஆரம்பிக்கின்றது. இந்துக்கோவிலாகட்டும், கிறிஸ்தவ, கத்தோலிக்க தேவாலயங்களாக இருக்கட்டும் கோவில்களையும் தேவாலயங்களையும் அச்சாணியாக வைத்தே அந்தந்தச் சமயத்தவர்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.  

கலாபூஷணம் சிற்றம்பலம் (வயது82), மாவட்டச் செயலகத்தில் கணக்காய்வு பிரதம இலிகிதராகக் கடமையாற்றி ஓய்வுபெற்றுள்ளார். நவாலி விவசாய சம்மேளனத் தலைவராக சமார் 10 வருடங்கள் பதவிவகித்துள்ளார். இவருடைய மகன் டொக்டர் சரவணன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மகப்பேற்று நிபுணராகச் சேவையாற்றுகின்றார்.   

நவாலி அந்திரான் முருகமூர்த்தி கோவில். தமது வம்சத்துக் கோவில் குறித்து இவர் சொல்லும்போது,“கோவிலுக்குப் பக்கத்தில் இரண்டு கிணறுகள் உள்ளன. இரண்டும் நல்லதண்ணிக் கிணறு. மக்கள் குடிநீருக்காக இங்கு வந்து, எடுத்துச் சொல்வார்கள். தங்களின் உழைப்பில் பத்தில் ஒரு பங்கைக் கோவிலுக்குக் கட்டாயமாகத் தரவேண்டும். 

அப்படிக் கொடுக்காவிட்டால் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்து விடுவார்கள். நன்மை, தீமை, செத்தவீடுகளிலும் கூடக் கலந்துகொள்ளமாட்டோம். ஐயர்கூட இறுதிச்சடங்கு கடமைகளுக்காகச் செல்ல மறுத்துவிடுவார்” என்றார். இத்தகைய இறுக்கமான சட்டதிட்டங்களும் வழமைகளும் முறைமைகளும் தான், குறுகிய காலத்துக்குள் இந்தக் கோவில் அடைந்த வளர்ச்சிக்குக் காரணமாகும்.

கடந்த மாதம் 30 ஆம் திகதி இந்த ஆலயத்தில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.  ஐந்து கோடி ரூபாய் பெறுமதியான கட்டடநிர்மாணத் திருபணி நிறைவடையும் தருணத்திலேயே மகாகும்பாபிஷேகமும் இடம்பெற்றுள்ளது. 

“வயலில் இருக்கும் காத்தவராயன் கோவியிலில் வேள்வி நடக்கும்போது நாங்கள் இங்க அமுது பொங்குவோம். சாமிக்கு வைக்கப்படும் அமுதில் எப்பொழுதும் எச்சில் அடையாளம் இருக்கும். ஐந்து ஏக்கர் சுற்றாடலில் இந்தக் கோவில் அமைந்துள்ளது.

350 குடும்பங்கள் அங்கத்தவர்களாக இருக்கின்றார்கள். வெளிநாட்டிலுள்ள 150 குடும்பங்களும் அங்கத்தவமாக இருக்கின்றார்கள். வயலுக்குள் இருக்கும் காத்தவராயன் கோவிலுக்கும் அந்திரான் காத்தவராயன் கோவில் என்றுதான் பெயர். முருகன் கோவிலைத்தான் மக்கள் காத்தவராயன் கோவில் என்று அழைக்கின்றார்கள்” என்று பெருமையுடன் கூறுகின்றார் கலாபூஷணம் சிற்றம்பலம்.  

நவாலி சிந்தாமணி பிள்ளையார் ஆலயமும் பேரும்புகழும் பெற்றுத் திகழ்வதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. விஸ்வநாதக்குருக்கள் இந்தக் கோவிலைச் சேர்ந்தவர். இந்த ஆலயத்துக்கு அருகில் பிரமாண்டமான புளியவிருட்சம் கிளைபரப்பி நிற்கிறது. ஏறத்தாள இந்த மரத்துக்கு 800 ஆண்டுகள் வயதிருக்கும் என ஆலயத்துக்கு அயலில் நிற்போரின் உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவித்தன.   

அதேபோல், நவாலி, அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபை 157 ஆண்டுகள் பழைமையான பாரம்பரியங்களைக் கொண்டதாகும். இந்தத் திருச்சபையினூடாக வாலிபர்களுக்கான பணிகள், முதியோர் வகுப்புகள், மகளிருக்கான பணிகள், சிறுவர் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. விசுவாசத்தையும் சொந்த உழைப்பின் பெறுமதிகளையும் வெளிப்படுத்தி நிற்பதே சிலுவை வடிவிலான இந்த தேவாலயம் என மக்கள் பெருமைப்படுகின்றனர். 

இந்தத் ேதவாலயம் 1904 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 2011 இல் மிஷனுக்கான இல்லமொன்றும் பிரமாண்டமாகக் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.   

இதேபோல் குட்டுவீச்சைச் சந்தித்தபோதிலும் நிலைகுலையாமல் நவாலி சென். பீற்றர்ஸ் கத்தோலிக்க தேவாலயம் திகழ்கின்றது. இந்த தேவாலயத்தின் பேரால், 1939 ஆம் ஆண்டில் நவாலியூர் சேமாசுந்தரப்புலவர் ஊஞ்சல்பாட்டு பாடியுள்ளார்.   

நாவாலிக்கிராமத்திலுள்ள குறிச்சிகளின் பெயர்கள் அதனுடைய வரலாற்றுப் பழைமையை பறைசாற்றுவதுபோல் அமைந்திருக்கின்றன. சின்னர்வளவு, சங்கையான் வளவு, திட்டி, சடுவில், மாப்பாணவளவு, தேவர்கட்டு, அந்திரான் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.  

நவாலி கிராமம், காலனித்துவ காலத்தின் கல்விமுறைமை, பழக்கவழக்கங்களை உள்வாங்கினாலும் அந்த மண்ணுக்கே உரித்தான பாரம்பரியங்களையும் வாழ்வியல் சடங்காசாரங்களையும் அச்சொட்டாகப் பின்பற்றி வருகின்றது. நீரில் நெய் கலப்பதில்லை.

அதேபோல்த்தான், என்னதான் மேலைத்தேய வாழ்வியல் சாயல்கள் நெய்போல் சார்ந்திருந்தாலும்  அந்த மக்களின் மத்தியில் ஆழ வேரோடியிருக்கும் பாரம்பரியங்களும் வாழ்வியல் சடங்காசாரங்களும் நீர்போல் நிலைபெற்றிருக்கிறது.

படப்பிடிப்பு: சமன்த பெரேரா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .