2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘நீரோ மன்னன் பிடில் வாசித்த கதை’

Editorial   / 2019 மே 30 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இலட்சுமணன்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் நியமனம் தொடர்பாக, தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதில், மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைமை விடயம் தொடர்பில், வியாழேந்திரன் மாவட்டச் செயலாளரிடம் கேட்பதை விடுத்து, ஜனாதிபதியிடம் தான் கேட்க வேண்டும் என்ற கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம், மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தவொரு தமிழரும் ஒருங்கிணைப்பாளர் குழுத் தலைவராக நியமனம் பெற வாய்ப்பு இல்லை. ஏனெனில், ஆளும் கட்சியில் தமிழர் எவரும் இல்லை. ஆளும் கட்சியின் அமைப்பாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களைக்கூட நியமிக்க முடியாது.

13.02.2019 அன்று வெளியிடப்பட்ட ஆறு பக்கங்களை உள்ளடக்கிய சுற்றறிக்கையின் அடிப்படையிலேயே, இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், எவ்வாறு இந்தச் சுற்று நிரூபத்தின் பிரமாணத்துக்குள், கடந்த ஏப்ரல் முதலாம் திகதி, முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் ஹாபிஸ் நசீர் அஹமட் நியமிக்கப்பட்டார் என்பதுதான், தமிழ் அரசியல்வாதிகள், பொது மக்களிடம் உள்ள கேள்வி ஆகும்.

மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு என்பது, குறித்த மாவட்டத்தில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படுகின்ற, ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து, அவற்றின் குறை நிறைகள் குறித்துப் பேசி, இடர்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு அமைக்கப்பட்ட குழுவாகும்.

அத்துடன், எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்களுக்கான அனுமதிகளைப் பெற்றுக் கொள்வதற்காக, அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஓர் ஏற்பாடாகும். முழுக்க முழுக்க அரசியல்வாதிகளின் ஆளுகைக்குள் மாவட்டங்கள் இருக்கின்றன என்பதை வெளிப்படுத்துவதற்கு இந்தப் பதவியைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை.

நாட்டில் மாவட்ட சபைகள் செயற்பாட்டில் இருந்த காலங்களில், இவ்வாறான மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர், இணைத் தலைவர்கள் இருந்திருக்கவில்லை. மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் அபிவிருத்தித் திட்டங்கள், செயற்பாடுகள் குறித்து ஆராயப்படுவதும் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுவதுமே வழக்கமாக இருந்து வந்துள்ளது.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னர், மாவட்டச் சபைகளுக்கு அந்தந்த  மாகாணங்களின் முதலமைச்சரே தலைவராக செயற்பட்டுள்ளார். இருப்பினும் வடக்கு, கிழக்கில் முதலமைச்சர் இல்லாமை காரணமாகப் பதவி வழியாக வந்த ஆளுநர் அந்தக் கடமைகளுக்குப் பொறுப்பாக இருந்துள்ளார். ஆனால், பாதுகாப்புச் சிக்கல்கள் காரணமாக, அவர் கூட 2010ஆம் ஆண்டு வரையில், இந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் பங்கு பற்றியிருக்கவில்லை.

1994ஆம் ஆண்டு ஜனாதிபதியால் இந்த மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு உருவாக்கப்பட்டு, மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவராக, அப்போது தபால் தொலைத் தொடர்புகள் பிரதி அமைச்சராக இருந்தவரும் இப்போதைய ஆளுநருமாகிய  எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டார். நாடாளுமன்றத்தின் தமிழ் உறுப்பினர்களின் எதிர்ப்பு காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், இணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தின் பின்னரே, இணைத்தலைவர் என்ற நியமனம் நடைமுறைக்கு வரத் தொடங்கியது. 

அதன் பின்னர், மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் அதிகாரம் மிக்கவர்களாக இருந்து வந்த முஸ்லிம் அரசியல்வாதிகள், அமைச்சர்களாக, பிரதி அமைச்சர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து, மாறி மாறி இணைப்புக்குழுக்களின் தலைவர்களாகப் பதவிவகித்தனர். அவற்றில், மீன்பிடித்துறை பிரதி அமைச்சர் எம்.பி.எம்.அப்துல் காதர், எம்.எஸ்.எஸ். அமீர்அலி, பஷீர் சேகுதாவூத், அலிசாஹிர் மௌலானா போன்றவர்களைக் குறிப்பிட முடியும்.  

அதேபோன்று, இப்போது சர்ச்சைக்குள் சிக்கியிருக்கின்ற முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், முன்னாள் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜித் ஆகியோரும் உள்ளடங்குவர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்துக்குப் பின்னர், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மட்டக்களப்பு மாவட்டத்தின் இணைத்தலைவர்களில் ஒருவராக இருந்து செயற்பட்டார். அதன் பின்னர், 2015ஆம் ஆண்டு, நல்லாட்சி என்று மிகவும் பேசப்படுகின்ற அரசாங்கம் உருவானதன் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு, முதல் தடவையிலேயே அதிகூடிய வாக்குகளைப் பெற்று, நாடாளுமன்றத்துக்குத் தெரிவான ஞானமுத்து சிறிநேசன் இணைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றிலேயே மட்டுமல்ல, இலங்கையின் வரலாற்றிலேயே அதிகூடிய இணைத்தலைவர்கள் இந்த நல்லாட்சியிலேயே நியமிக்கப்பட்டுள்ளார்கள். வரிசையில் ஞானமுத்து சிறிநேசன், இராஜாங்க அமைச்சர்களான அமீர்அலி, அலிசாகிர் மௌலானா, ஆளுநராவதற்கு முன்னர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோரும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்த இடத்தில் தான், உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் நடைபெற்று, முஸ்லிம்களுக்கு எதிரான வெளிப்படையான எதிர்ப்பு நிலைப்பாடுகள் சூழ்கொண்டிருக்கையில், ஏனைய மாவட்டங்களில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்கள் நடத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்துக்கான கூட்டம் கடந்த 28ஆம் திகதி நடைபெற்றிருக்கிறது.

இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தவிர, ஏனைய இராஜாங்க அமைச்சர்களான அமீர்அலி, அலிசாகிர் மௌலானா, முன்னாள் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் காபீர் நசீர் அகமட் ஆகிய மூவரும் முஸ்லிம் இனத்தவர்கள் என்பதுதான் குழப்பத்துக்கான காரணமாக அறியப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில், அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு மூன்று முஸ்லிம்களை நியமித்தது வன்மையான கண்டனத்துக்குரியது என்ற கோஷங்கள் அக்கூட்டத்தையடுத்து எழுந்து வருகின்றன. அதற்குள்தான், ஜனாதிபதியின் இந்த நியமனம் குறித்த, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனின் விமர்சனங்களும் வௌிநடப்பு, எதிர்ப்பு நடவடிக்கைகளும்  விமர்சிக்கப்படுகின்றன.

மூன்று முஸ்லிம்களை நியமித்தது ஒரு விடயம் இல்லையென்றாலும்,  மட்டக்களப்பு மாவட்டத்தில் 74 சதவீதம் தமிழர்கள் வாழ்கிறார்கள். இந்த இனவிகிதாசாரத்துக்கும் இந்த நியமனத்துக்கும் முரண்பாடு உள்ளது என்பதே இங்குள்ள உள்குத்தாகும். 

இதற்கும் அரசியல் அதிகாரத்துக்கும் சம்பந்தமில்லையென்றாலும், ஜனாதிபதி தனது அரசியலுக்காக, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தியை முஸ்லிம்களுக்கு வழங்கி, தமிழ் இனத்தை ஒதுக்கியிருக்கிறார் என்ற குற்றச்சாட்டை சாதகமாகவும் பரிசீலிக்க முடியும். 

இதில்தான், பெரும்பான்மையாக தமிழர்கள் வாழும் இம் மாவட்டத்துக்கு  பெரும்பான்மையானத் தமிழர்களை இணைத்தலைவர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளும் அளவுக்கான அதிகாரம் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனிடம் இல்லையா என்ற கேள்வியும் வருகிறது. 

இந்த இடத்தில்தான், கடந்த கால ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர், அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் தலைவர்கள், மத்திய அரசாங்கத்தின் கைக்கூலிகளாகச் செயற்படுவதை, தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்கின்ற கருத்தொன்றும் முன்வைக்கப்படுகிறது. 

 தமிழர்களின் போராட்டம் என்பது, ஓர் இனத்துக்கான போராட்டமாக இருந்த நிலையில், அதனை வேறு விதமாகப் பேசியவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். 

அதுபோலவே, 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் புளொட் அமைப்பின் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குத் தெரிவானவர்தான் வியாழேந்திரன். அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வருடம் ஒக்டோபர் இறுதியில் மேற்கொண்ட அரசாங்க மாற்றத்தில் சிக்குண்டார். இந்தச் சிக்குண்டலுக்குப் பின்னர், அவர் கிழக்கு அபிவிருத்தி என்ற விடயத்தைக் கவனமாகக் கையிலெடுத்தார். தான் மஹிந்தவின் தரப்பல்ல; மைத்திரியின் தரப்பென்று சொன்னார்.

ஆனால், இப்போது நடைபெற்றிருக்கின்ற ஜனாதிபதியின் நியமனமான, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய தேசிய கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட், ஜனாதிபதி தரப்பிலுள்ளவரல்ல. 

ஆனாலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் உருவான இந்த ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைமை என்ற பிரச்சினை, சுற்று நிரூபத்துக்குட்பட்டதா, உட்படவில்லையா என்பதற்கப்பால், நாட்டின் ஜனாதிபதி பொதுப்படையில் முடிவை எடுப்பதற்குப் பதிலாக, சிறு சிறு தரப்புகளைக் கவனத்திலெடுத்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் எதிரொலியாகவே இருப்பதாகக் கொள்ளமுடியும். 

எந்த ஒரு முடிவும் தூர நோக்கத்துடனும், சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டும் ஆழமாகச் சிந்தித்தும் மேற்கொள்ளப்படும் போது மாத்திரமே சிறப்பானதாக இருக்கும்.நாடு பற்றியெரியும் போது, நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாகவே, அண்மைக்காலத்தில், நம்நாட்டின் நிலை மாறிவருவதான நினைவையே ஏற்படுத்துகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .