2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நெருப்புக் கொள்ளியால் தலையைச் சொறிந்த கதை

முகம்மது தம்பி மரைக்கார்   / 2018 ஜனவரி 16 , மு.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதமும் அரசியலும் மனிதனை மிக இலகுவாகவும், கடுமையாகவும் உணர்ச்சி வசப்படுத்தி விடுபவை. இந்த இரண்டின் பெயரில்தான் உலகில் அதிக குழப்பங்களும் வன்முறைகளும் இடம்பெற்று வருகின்றன.  

அரசியல் என்பது நாகரிகமடைந்த ஒரு சமூகத்தின் அடையாளமாகும். மதங்கள் என்பவை, மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக உருவானவையாகும்.  

 ஆனால், இந்த இரண்டின் பெயராலும் உணச்சியின் உச்சத்துக்குச் சென்று, மனிதர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளும் போது, சிலவேளை காட்டு மிராண்டிகளின் நிலைக்கும் சென்று விடுகின்றார்கள் என்பது முரண்நகையாகும்.  

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பிரதேசத்தில் மத நிறுவனமான பள்ளிவாசலுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் ஏற்பட்டு வந்த முரண்பாடுகள், அண்மையில் உச்சம் பெற்றிருக்கின்றன.   
இந்த நிலைவரம் அச்சம் தருவதாக உள்ளது. உணர்ச்சிக் கொந்தளிப்பில் அங்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்கிற ஆபத்து அங்கிருப்பதைத் தட்டிக் கழித்து விட முடியாது.  

முன் கதைச் சுருக்கம்  

சாய்ந்தமருது விவகாரம் குறித்து, முதலில் கொஞ்சம் சுருக்கமாக அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. கல்முனை மாநகரசபையின் ஒரு பகுதியாக, சாய்ந்தமருது இருந்து வருகிறது.   

ஆனால், முன்னொரு காலத்தில் சாய்ந்தமருது பிரதேசத்துக்கென தனியானதோர் உள்ளூராட்சி சபை இருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இந்தநிலையில், சாய்ந்தமருது பிரதேசத்துக்கு மீண்டும் தனியானதோர் உள்ளூராட்சி சபையை வழங்குமாறு, அப்பிரதேச மக்கள் நீண்ட காலமாகக் கோரி வருகின்றனர். இதற்காக அவர்கள் பல முயற்சிகளையும் மேற்கொண்டனர்.   

கல்முனை மாநகரசபையுடன் சாய்ந்தமருது இணைந்திருப்பதால், பல்வேறு பிரச்சினைகளை, சாய்ந்தமருது பிரதேசம் எதிர்நோக்கி வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.  

இந்தநிலையில், சாய்ந்தமருது மக்களின் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக, அங்குள்ள அரசியல் கட்சிகள் கூறிவந்தன. தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சராக இருந்தபோது, சாய்ந்தமருதுக்குத் தனியான உள்ளூராட்சி சபையை வழங்குவதாகக் கூறி, அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாக அறிய முடிகிறது. ஆனாலும், அந்த முயற்சி கைகூடவில்லை.   

பின்னர், இந்த விவகாரத்தை முஸ்லிம் காங்கிரஸ் கையிலெடுத்தது. சாய்ந்தமருதுப் பிரதேச மக்களின் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுக் கொண்டு வரும் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ் என்பது குறிப்பிடத்தக்கது. சாய்ந்தமருது பிரதேசத்துக்குத் தனியான உள்ளூராட்சி சபையைப் பெற்றுத் தருவோம் என்று, அந்தப் பிரதேச மக்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் வாக்குறுதி வழங்கியது.  

இதன் உச்சக் கட்டமாக, கடந்த பொதுத் தேர்தல் காலத்தில், கல்முனையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்ட ரணில் விக்ரமசிங்க, “சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபையை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வழங்குவோம்” எனக் கூறினார்.   

முஸ்லிம் காங்கிரஸின் வேண்டுகோளுக்கிணங்க, தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்த வாக்குறுதியை அங்கு வழங்கினார்.  

ஆனாலும், சாய்ந்தமருதுக்கு இதுவரையில் தனியான உள்ளூராட்சி சபை வழங்கப்படவில்லை. சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் அங்குள்ள முக்கியஸ்தர்கள் இணைந்து, தமக்கான உள்ளூராட்சி சபையொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக, பலமுறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதும், காரியம் கை கூடவில்லை.  

சாய்ந்தமருது பிரதேசத்துக்குத் தனியான உள்ளூராட்சி சபையை வழங்குவதற்கு முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர்களில் ஒருவரும், பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் எதிர்ப்பாக உள்ளார். இந்த எதிர்ப்பு ஹரீஸின் அரசியலுடன் தொடர்புபட்டதாகும்.   

பிரதியமைச்சர் ஹரீஸ், கல்முனையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சாய்ந்தமருதில் திருமணம் செய்துள்ளார். இந்தநிலையில், கல்முனை மாநகரசபையிலிருந்து சாய்ந்தமருது பிரதேசத்தைப் பிரித்து, தனியான உள்ளூராட்சி சபையை வழங்குவதற்கு கல்முனை பிரதேசத்தவர்களுக்கு விருப்பமில்லை. 

அவ்வாறு நடந்து விட்டால், கல்முனை மாநகர சபை, தமிழர்களின் ஆதிக்கத்தின் கீழ் சென்று விடும் என்று, கல்முனை பிரதேச முஸ்லிம்கள் அச்சப்படுகின்றனர். அதனால், தனது சொந்த ஊரான கல்முனையைப் பகைத்துக் கொண்டு, சாய்ந்தமருதின் பக்கம் சாய்வதற்கு ஹரீஸ் விரும்பவில்லை.   

அதேவேளை, தான் திருமணம் செய்துள்ள சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி சபை வழங்கக் கூடாது என்று பகிரங்கமாக சொல்வதற்கும் ஹரீஸ் தயங்கி வந்தார். ஆனாலும், சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை கொடுக்க வேண்டாம் என்று, மு.கா தலைவரிடம், ஹரீஸ் வற்புறுத்திக் கொண்டிருந்தார்.  

எவ்வாறாயினும், ஒரு கட்டத்தில் இதைப் பகிரங்கமாகப் பேச வேண்டியதொரு நிலைக்கு ஹரீஸ் தள்ளப்பட்டார். சில மாதங்களுக்கு முன்னர், கல்முனையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், கல்முனை மக்கள் திரண்டிருந்ததொரு தருணத்தில், “சாய்ந்தமருதுக்கு மட்டும் தனியாக உள்ளூராட்சி சபை வழங்குவதை ஒருபோதும் நான் அனுமதிக்கப் போவதில்லை” என்று பிரதியமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.   

வேண்டுமானால், கல்முனை மாநகர சபைக்குரிய பிராந்தியத்தை நான்காகப் பிரித்து, நான்கு உள்ளூராட்சி சபைகளை வழங்குவதற்கு, தான் சம்மதம் தெரிவிப்பதாகவும் அங்கு ஹரீஸ் கூறினார். அதன்போது சாய்ந்தமருதுக்கும் உள்ளூராட்சி சபை கிடைக்கும் என்றும் ஹரீஸ் சுட்டிக்காட்டினார்.  

ரிஷாட் பதியுதீனின் பிரவேசம்  

சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபையைப் பெற்றுக் கொடுப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் பின்னடித்து வந்த நிலையில், அந்த விவகாரத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கையிலெடுத்தது.   

உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவை ஒரு தடவை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சாய்ந்தமருதுக்கு அழைத்து வந்தார்.   

இதன்போது, அங்கு இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய அமைச்சர் பைசர் முஸ்தபா, “சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி சபையை நிச்சமாக நான் வழங்குவேன். அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கோரிக்கைக்கு அமைவாக, நான் அதைச் செய்வேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.  

இதையடுத்து, மு.கா உசாரானது. சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபையை அமைச்சர் ரிஷாட் பெற்றுக் கொடுப்பது, தங்கள் அரசியலுக்கு ஆபத்தாக அமைந்து விடும் என்பதால், சாய்ந்தமருதுக்கு உடனடியாக வந்த மு.கா தலைவர், சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபையை முஸ்லிம் காங்கிரஸ்தான் பெற்றுத் தரும் என்று, மீண்டுமொரு தடவை வாக்குறுதி வழங்கி விட்டுச் சென்றார்.  

மாற்று வழி  

இப்படி நாட்கள் கழிந்து கொண்டிருந்தன. ஒரு கட்டத்தில், தங்களை வைத்து அரசியல் கட்சிகள் விளையாடிக் கொண்டிருப்பதை, சாய்ந்தமருது சமூகம் மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டது. இதையடுத்து, தமக்கான உள்ளூராட்சி சபையைப் பெற்றெடுப்பதற்கான மாற்று நடவடிக்கைகளை அந்த ஊர் மக்கள் மேற்கொள்ளத் தொடங்கினர்.  

இந்த நடவடிக்கைகளுக்கு சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் தலைமை தாங்கியது. சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, அப்பிரதேச மக்கள் சத்தியாக்கிரக நடவடிக்கையில் ஈடுபட்டனர்.  

 பின்னர், அந்தச் செயற்பாடு வீதி மறியல் போராட்டமாக மாறியது. இறுதியில், சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தின் தலைமையில், சாய்ந்தமருது மக்கள் திரண்டிருந்ததொரு நிகழ்வில், பிரகடனமொன்று அறிவிக்கப்பட்டது. அதில் கூறப்பட்ட முக்கியமான தீர்மானங்கள் பின்வருமாறு அமைந்திருந்தன.  

- சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபையைப் பெற்றுத் தருவதாகக் கூறி, அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் சாய்ந்தமருது மக்களை ஏமாற்றி விட்டனர்.  

- எனவே, சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபை கிடைக்கும் வரை, சாய்ந்தமருதில் எந்தவோர் அரசியல் கட்சிக்கும் மக்கள் ஆதரவு வழங்குவதில்லை.  

- சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபை கிடைக்கும் வரை, எந்த அரசியல் கட்சிக்கும் வாக்களிப்பதில்லை.  
- கல்முனை மாநகரசபைக்கான எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, சாய்ந்தமருது ஊர் சார்பாக சுயேட்சைக் குழு ஒன்றைக் களமிறக்கி, அதற்கே மக்கள் வாக்களிப்பது.  

இந்தக் தீர்மானங்களுக்கு அதிகப்படியான மக்கள் ஆதரவளித்தனர். குறித்த பிரகடன நிகழ்வின் போது, மு.காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அ.இ.ம.காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் ஆகியோரின் உருவ பொம்மைகள் எரியூட்டிக் கொழுத்தப்பட்டன.   

இந்த நிலையில்தான் கல்முனை மாநகரசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் போட்டியிடும் பொருட்டு யானைச் சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸ், மயில் சின்னத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், குதிரைச் சின்னத்தில் தேசிய காங்கிரஸ் என, முஸ்லிம் கட்சிகள் களத்தில் குதித்துள்ளன.   

இவ்வாறானதொரு சூழ்நிலையில், கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாகச் சாய்ந்தமருதில் வேட்பாளர்கள் எவரையும் நிறுத்தப் போவதில்லை என, அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் ஏ.எம். ஜெமீல் அறிவித்தார். இவர் சாய்ந்தமருதைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் இதில் விட்டுக் கொடுக்கவில்லை. கல்முனை மாநகரசபையில் கடந்த முறை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகச் சாய்ந்தமருதைச் சேர்ந்த மூன்று பேர் உறுப்பினர்களாக இருந்தனர். எனவே, அவர்களையும் உள்ளடக்கி இம்முறை நான்கு வேட்பாளர்களை, யானைச் சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸ் களமிறக்கியது. தேர்தலில் போட்டியிடும் அவர்களின் உரிமையை யாரும் மறுத்து விட முடியாது என்பதையும் இங்கு பதிவு செய்தல் அவசியமாகும்.  

இதேவேளை, சாய்ந்தமருது பிரகடனத்தில் கூறப்பட்டமைக்கு இணங்க, அந்த ஊர் மக்கள் சார்பில், தோடம்பழச் சின்னத்தில் சுயேட்சைக் குழுவொன்று களமிறக்கப்பட்டது. வழமைபோன்று சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகம்தான் இதற்கும் தலைமை தாங்கியது.  

இவ்வாறானதொரு சூழ்நிலையில்தான், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சாய்ந்தமருதில் மு.கா சார்பில் போட்டியிடும் யானைச்சின்ன வேட்பாளர்களின் தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைப்பதற்கான நிகழ்வொன்று ஏற்பாடாகியிருந்தது. 

இந்தத் தகவலால் ஆத்திரமுற்ற சாய்ந்தமருது பிரதேச பொதுமக்கள், முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர், வேட்பாளர்கள் இருவரின் வீடுகளைத் தாக்கிச் சேதப்படுத்தியுமிருந்தனர். இதனால், சாய்ந்தமருதுக்கு வருவதாக இருந்த மு.கா தலைவரின் பயணம் இரத்தானது.  
 
இந்தச் சம்பவம் முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில் கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தங்களுக்குச் சாய்ந்தமருதில் அரசியல் செய்ய முடியாமல் போன இந்த நிலைவரத்துக்கு தலைமை வழங்கிய பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் மீது, மு.காங்கிரஸின் அந்த ஆத்திரம் திரும்பியது.   

அதனால், பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு எதிராகத் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிஸாம் காரியப்பர் எழுத்து மூலம் முறைப்பாடு செய்ததாகத் தெரியவருகிறது.  

மத நிறுவனங்கள் அரசியல் செயற்பாடுகளிலும், தேர்தல் நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என்று, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்தநிலையில், அந்த உத்தரவை மீறும் வகையில், சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் செயற்பட்டு வருவதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் முறையிட்டதாகக் கூறப்படுகிறது.  

நிர்வாகம் கலைப்பு  

இதையடுத்து, இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு கடந்த ஆறாம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது.   

இது குறித்து, தீர்மானமொன்றை மேற்கொள்ளுமாறு வக்பு சபைக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பணித்தது. இதை ஏற்றுக் கொண்ட வக்பு சபை, இறுதியில், சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தைக் கலைத்து விட்டு, விசேட நிர்வாகம் (நம்பிக்கையாளர் சபை) ஒன்றை அமைப்பதாகக் கடந்த ஒன்பதாம் திகதி அறிவித்தது.  

அதன்படி, விசேட நிருவாகக் குழு உறுப்பினர்களாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா, சாய்ந்தமருது காதி நீதவான் ஐ.எம். செரீப், இலங்கை மின்சார சபையின் கல்முனை காரியாலய பிரதம பொறியியலாளர் எம்.ஆர்.எம். பர்ஹான் மற்றும் கட்டடத் திணைக்களத்தின் கல்முனைக் காரியாலய பிரதம பொறியியலாளர் ஏ.எம். சஹீர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்தது.  

இந்தநிலையில், சாய்ந்தமருது பள்ளிவாசலின் விசேட நிர்வாக சபை உறுப்பினர்களில் ஒருவராக நியமிக்கப்பட்ட கட்டடத் திணைக்களத்தின் கல்முனை அலுவலக பிரதம பொறியியலாளரும், சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்தவருமான ஏ.எம். சாஹிர், கடந்த 11ஆம் திகதி, அந்தப் பதவியிலிருந்து இராஜிநாமா செய்வதாக அறிவித்து, உரிய அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.   

தனது ஊரவர்களான சாய்ந்தமருது மக்களின் உணர்வுகளுக்கு எதிராக, தன்னால் செயற்பட முடியாது என்றும், அதனாலேயே, குறித்த உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்வதாகவும் சாஹிர் தெரிவித்திருந்தார்.  

இந்த விவகாரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் பொறுமை காத்திருக்கலாம் என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. அப்படிப் பொறுமை காப்பதுதான் முஸ்லிம் காங்கிரஸின் அரசியலுக்கு நல்லதாக அமைந்திருக்கும் என்பதும் அரசியல் அவதானிகளின் அபிப்பிராயமாக காணப்படுகின்றது.   

 சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம் தொடர்பாக, தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தமையானது, நெருப்புக் கொள்ளியை எடுத்து, தலையைச் சொறிந்தமைக்கு ஒப்பானதாகவே பார்க்கப்படுகிறது. இப்போதைக்கு அந்தச் சூடு தணியப் போவதில்லை.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .