2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தானின் சமாதான முயற்சிகள்

Editorial   / 2020 ஜனவரி 20 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனகன் முத்துக்குமார்

 

பிராந்திய, உலக சமாதானத்துக்கான பாகிஸ்தானின் நகர்வுகள் அண்மைக் காலமாக உலகளாவிய ரீதியில் அங்கிகாரம் பெறுகின்றது.  மத்திய கிழக்கு, ஆப்கானிஸ்தான், ஐரோப்பிய ஒன்றியத்தாலும் கூட பாகிஸ்தானின் சமாதான முயற்சிகள் பாராட்டப்படுகின்றன. உண்மையில், பாகிஸ்தான் நான்கு தசாப்தங்களாக ஆப்கானிஸ்ஹான் போருக்கு பலியாகி, பெரும் பொருளாதார, அரசியல், சமூக இழப்புகளை சந்தித்தது. அது தொடர்பில் பாகிஸ்தான் தனது கசப்பான அனுபவங்களைப் பகர்ந்து கொள்ளத் தயாராக உள்ளதுடன் உலகளவில் அமைதியை மேம்படுத்துவதற்கு தன்னால் முடிந்தவரை புதிய அரசாங்கத்தினூடாக முயற்சிக்கிறது என்பதே பாகிஸ்தானுக்கு கிடைக்கும் அங்கிகாரத்துக்கு காரணமாகும்.

 

பிரதமர் இம்ரான் கான், ஜேர்மனி ஒளிபரப்பாளரான டாய்ச் வெல்லே (டி.டபிள்யூ) க்கு அளித்த பேட்டியில், “ஆப்கானிஸ்தானில் அமைதியைக் கொண்டுவர பாகிஸ்தான் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. தலிபான்கள், அமெரிக்கர்கள், ஆப்கானிய அரசாங்கம் தொடர்ச்சியான அமைதியை அடைய ஒன்றிணைந்து பணியாற்றவேண்டும்" என்றும் கூறியிருந்தமை அவதானிக்கத்தக்கது.

 

 "(ஆப்கான்) அவர்கள் ஒரு போர்நிறுத்தத்தை நோக்கி செல்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதி அஷ்ரப் கானி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அமெரிக்க-தலிபான் பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறும் என்று நாங்கள் நம்புகிறோம் ”என்று ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து கேட்டபோது பிரதமர் இம்ரான் குறிப்பிட்டார்.

 

"ஆப்கானிஸ்தானில் அமைதி மத்திய ஆசியாவில் வர்த்தக வாய்ப்புகளைத் திறக்கும். இது [ஆப்கானிஸ்தான்] எங்களுக்கு ஒரு பொருளாதார தாழ்வாரமாக மாறும். ஆப்கானிஸ்தானில் அமைதி இருந்தால், ஆப்கானிஸ்தானின் எல்லையாக இருக்கும் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள எங்கள் மக்களும் பயனடைவார்கள்”என்றும் வெளிப்படையாக கூறியிருந்தமை ஆப்கானிஸ்தான் சமாதானத்துக்கு பாகிஸ்தான் நேரடியாகவே ஆதரவளிக்க காரணமாகும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

 

பாக்கிஸ்தான் அமைதி நேசிக்கும் தேசமாகவும், முதிர்ச்சியடைந்த, பொறுப்புள்ள நாடாகவும் இம்ரான் கானின் அரசாங்கத்தின் தலைமையில் உருவெடுத்துள்ளது. பாகிஸ்தான் உள்நாட்டு மற்றும் பிராந்திய ஒற்றுமைக்கு தொலைநோக்கு ரீதியில் பல முயற்சிகளை எடுத்துள்ளது. "ஆப்கானிஸ்தானில் எங்களது பங்கு, தலிபான்களை அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவருவதில் ஆரம்பிக்கிறது" என பிரதமர் கூறியுள்ளமை ஒரு புறமிருக்க,மத்தியகிழக்கில் சவுதி அரேபியாவுக்கும், ஈரானுக்குமிடையில் பதற்றத்தை குறைப்பதற்காக பிரதமர் இம்ரான் கான், ஈரான் மற்றும் சவுதி அரேபியாவுக்கு விஜயம் செய்துள்ளமையானது பிராந்தியத் தலைமை நாடாக பாகிஸ்தான் தன்னை வரித்துக்கொள்ளும் ஒரு செயல்பாட்டின் நிகழ்வாகவே பார்க்கப்படவேண்டியது.

 

மறுபுறம் ஐக்கிய அமெரிக்க-ஈரான் பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் ஆதரிக்கிறது. பதற்றத்தை தணிப்பதற்காக பாகிஸ்தான் வெளிநாட்டமைச்சர் ஈரான், சவுதி அரேபியா,ஓமான், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். சமாதானத்துக்கான பங்குதாரர்களிடையே மத்தியஸ்தம் செய்வதற்கும் வேறுபாடுகளைத் தாண்டுவதற்கும் பாகிஸ்தானுக்கு இத்தகைய விடயங்களில் அனுபவமும் செல்வாக்கும் உள்ளது.

 

இது ஒருபுறமிருக்க, இச்சமாதான முயற்சிகளின் வெற்றி, ஐக்கிய அமெரிக்கா பாகிஸ்தானுடன் எவ்வாறான தொடர்பை தற்காலத்தில் பேணுகின்றது என்பதன் அடிப்படையிலும் தீர்மானிக்கப்படும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

 

பாகிஸ்தானில் உள்ள யதார்த்தங்களை ஐக்கிய அமெரிக்கா முதலில் புரிந்து கொள்ளுதல் அவசியமானது. ஐக்கிய அமெரிக்கா, ஒருபுறம் பாகிஸ்தானின் கூட்டணி ஆதரவு நிதி திருப்பிச் செலுத்துதல்களை இரத்துச் செய்வதையும், மறுபுறம் இந்தியாவுடன் பல பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் திட்டங்களில் கையெழுத்திடுவதையும் சமாதானத்தின் வடிவமாக பாகிஸ்தானால் பார்க்க முடியாது. 

 

ஆப்கானிஸ்தானில் ஐக்கிய அமெரிக்க நலன்களுக்காக பாகிஸ்தான் முழு மனதுடன் ஈடுபடும் என்று ஐக்கிய அமெரிக்கா எதிர்பார்க்கிறது - ஆனால், பாகிஸ்தானின் பிராந்திய நலன்களை அமெரிக்க வெளிவிவகார கொள்கை பெரும்பாலும் கருத்தில் கொள்வதில்லை.

 

மத சுதந்திர பிரச்சினைகளில் பாகிஸ்தானை ஐக்கிய அமெரிக்கா விமர்சிக்கும், அதே நேரத்தில் இஸ்ரேல் மற்றும் இந்தியாவில் குறித்த மதசுதந்திரம் தொடர்பான விடயங்களில் ஐக்கிய அமெரிக்கா தலையிடுவதில்லை. பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின் உரிமைக்காக குரல்கொடுக்கும் ஐக்கிய அமெரிக்கா, இந்தியாவில் முஸ்லிம்கள் மீது தொடரப்படும் இனப்படுகொலை மற்றும் மோசமான வன்முறைகளை தட்டிக்கேட்பதில்லை என்றே பாகிஸ்தான் கருதுகின்றது.

 

ஒருபுறம் ஐக்கிய அமெரிக்க மற்றும் சீனாவுடனான பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரத்துக்கு ஐக்கிய அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்கும் அதேவேளை ஆனால் மறுபுறம், ரஷ்யா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளிலிருந்தும் பாதுகாப்பு உபகரணங்களை வாங்க ஐக்கிய அமெரிக்கா இந்தியாவை அனுமதிக்கும் போது அது தனது சொந்த விதிகளை மீறுகிறது என்று குற்றம் சுமத்துகிறது பாகிஸ்தான்.

 

ஆயுத இந்தியா முழு பிராந்தியத்தையும் சீர்குலைத்து அதன் சிறிய அண்டை நாடுகளுக்கு நேரடி அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்பதை ஐக்கிய அமெரிக்கா உணராமல் இல்லை என்பதுடன் ஈரானுடனான பொருளாதாரத்துக்கு ஐக்கிய அமெரிக்கா நட்பு நாடுகளுக்கு தடைவிதித்த போதிலும், இந்தியாவுக்கு மட்டும் அனுமதி அளித்தமை நியாயமானதல்ல என்பதும், ஐக்கிய அமெரிக்கர்கள் நடைமுறையில் பாகிஸ்தானுக்கு தமது செயல்பாட்டின் ஊடாக நம்பிக்கையை கட்டியெழுப்பாமல், பாகிஸ்தானுடன் நேரடியான உறவை பேண முடியாதிருக்கும்.

 

இந்நிலை ஒருபுறம் பாகிஸ்தானின் சமாதான நகர்வுகளுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்பதுடன், இது பாகிஸ்தான் - ரஷ்யா - சீனா இணைந்த கூட்டணியை ஆசிய மய்யத்தில் உருவாக்க முனைப்புக்கொடுக்குமாயின் அது ஐக்கிய அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் சவாலாக அமையும் ஒரு பெரிய கூட்டணியை உருவாக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்கமுடியாது. அவ்வாறான ஐக்கிய அமெரிக்க - எதிர் - ஐக்கிய அமெரிக்க எதிர் நாடுகளின் கூட்டு போட்டி நிலைமை பிராந்திய ஒருமையை வெகுவாகவே பாதிக்கும் என்பதையும் நிதானமாக சிந்தித்தே, ஐக்கிய அமெரிக்கா தனது அடுத்த காய் நகர்வுகளை மேற்கொள்ளவேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X