2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பண்ணைக் கொலை: Call me

Editorial   / 2020 ஜனவரி 27 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மயூரப்பிரியன்

கணவன், மனைவிக்கு இடையிலான புரிந்துணர்வுகள், அன்யோன்யங்கள் குறைந்து, சந்தேகங்கள் எழுவதால் விரிசல்கள் ஏற்பட்டு, பல குடும்பங்களில், குடும்ப வன்முறைகள் தலை தூக்குகின்றன. அவற்றின் அடுத்த கட்டங்களாக, அவர்களிடத்தில் பிளவுகள், வன்மம் தோன்றி, விவாகரத்து மட்டும் நீளுகின்றன.   

இவ்வாறான நிலையில், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஒரு கொலைச் சம்பவம், இன்றைய சமூகத்தின் உள்ஊடாட்டங்களை வௌிப்படுத்தி நிற்கின்றது. இந்தக் கொலைச் சம்பவம், யாழ்ப்பாண சமூகத்தின் மத்தியில் மாத்திரமன்றி, முழு இலங்கையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.   

புதன்கிழமை, 22ஆம் திகதி, காலை வேளை, யாழ்ப்பாணம் வழமையான சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது.   

 யாழ்.நகர் மத்தியில் இருந்து, சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரத்தில், வடக்குப் பக்கமாக, பண்ணைக் கடற்கரை உள்ளது.   

கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பின்றி, அமைதியாகக் காணப்படும் அக்கடற்கரையில் காலை, மதிய வேளைகளில் காதலர்கள் உட்கார்ந்திருப்பதை என்றும் காணக்கூடியதாக இருக்கும். புதன்கிழமையும், சுமார் 20 க்கும் மேற்பட்ட ஜோடிகள், பண்ணைக் கடற்கரையில் அமர்ந்து, கடலைப் பார்த்தவாறு உரையாடிக்கொண்டு இருந்தார்கள்.   

இவர்கள் மத்தியில், ஒரு ஜோடி மாத்திரம், தமது காதல் வாழ்க்கையின் கசப்புகளையும் பிரிவையும் பற்றி, நீண்ட நேரமாகத் தமக்குள் விவாதித்துக் கொண்டு இருந்தார்கள்.   

திடீரென, அந்த ஆண், தான் மறைத்து வைத்திருந்த புதிய கத்தியால், தனது ஜோடியின் கழுத்தை அறுத்து, உடலைக் கடலுக்குள் தள்ளி விட்டு, அவ்விடத்தை விட்டு மெதுவாக நகர்ந்தான்.    

கொலையானவர், பேருவளையை சேர்ந்த ரோஷனி ஹன்சனா (வயது 29)ஆவார். மருத்துவர் ஆகும் கனவுடன், பேருவளையில் இருந்து, யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு வந்து, கல்வி கற்று, இன்னும் இரண்டு மாதங்களில், இறுதியாண்டுப் பரீட்சை எழுதி, மருத்துவராகச் சமூகத்துக்குள் காலடி எடுத்து வைக்க இருந்தவர், அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டார்.   

கொலைச் சந்தேகநபர், ரோஷினி ஹன்சனாவின் கணவராவார். இவர், பரந்தன் இராணுவ முகாமில் 662ஆவது படையணியில் கடமையாற்றும் லான்ஸ் கோப்ரல் தரங்க உதித் குமார (29) என்பவராவர்.   

கணவன், மனைவியான இவர்கள் இருவரும், பேருவளையை சேர்ந்தவர்கள். அங்கு, உயர்தரத்தில் கல்வி கற்கும் காலப் பகுதியில், இவர்களுக்கு இடையில் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மலர்ந்துள்ளது.   

காலங்கள் ஓட, ஹன்சன உயர் தரத்தில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று, ஊருக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்ந்தாள். அத்துடன், யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கும் தெரிவானாள். உதித் குமார இராணுவத்தில் இணைந்து கொண்டான்.   

இருவருக்கும் இடையிலான காதல் நீடித்ததை அடுத்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன், 2017ஆம் ஆண்டு இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.   

பதிவுத் திருமணத்தின் பின்னரும், இருவரின் வாழ்க்கையும் மகிழ்வாகவே சென்றுள்ளது. ஹன்சனா, யாழில் தங்கி மருத்துவ பீடத்தில் கல்வி கற்றுக்கொண்டும், உதித் குமார இராணுவத்தில் கடமையாற்றிக்கொண்டும் இருந்தார்.   

இருவருக்கும் விடுமுறை கிடைக்கும் சந்தர்ப்பத்தில், வீட்டுக்குச் சென்று, இல்லறமாகக் குடும்பம் நடத்தியதுடன், ஏனைய நாள்களில் தொலைபேசியிலும் தமது அன்பைப் பரிமாறி உள்ளார்கள்.   

இந்த நிலையில், 2019ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து, அவர்களுக்கு இடையில் விரிசல்கள் ஏற்படத் தொடங்கின. அதற்கு காரணம், ‘ஹன்சனா கருவுற்று இருந்ததாகவும் அது, தனது மருத்துவக் கல்வியைத் தொடர இடையூறாக இருக்கும் எனக் கூறி, கருவைக் கலைத்ததாகவும் தன்னிடம் கேட்காமல் அவ்வாறு செய்ததற்குத் தான் அவருடன் முரண்பட்டுக் கொண்டதாகவும், அதுவே ஆரம்ப விரிசலுக்குக் காரணம்’ எனவும் உதித் குமார பொலிஸாரிடம் தெரிவித்த ஒப்புதல் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.   

அத்துடன், இதுதான் ஆரம்ப விரிசலுக்குப் காரணமாக இருந்தாலும், ஹன்சனாவின் தாய், “அவள் மருத்துவராகப் போகின்றவள்; நீ ஓர் இராணுவச் சிப்பாய்; அறியாத வயதில், உன்னைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டாள். இனி, அவள் உன்னோடு வாழ முடியாது. நீ ஒதுங்கிக்கொள்; அவளுக்கு வேறு திருமணம் செய்து வைக்கப் போகின்றோம் என, ஒரு நாள் என்னிடம் கூறினார். அது எனக்கு மிகுந்த கவலையையும் கோவத்தையும் உண்டு பண்ணியது. உடனே, நான் அங்கிருந்து வெளியேறினேன்” எனவும் உதித் குமார மேலும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.   

இவ்வாறான சிறுசிறு விரிசல்கள், சண்டைகள், கோபங்கள், நாளடைவில் பெரிதாகி, விவாகரத்துக்குச் செல்லும் அளவுக்குச் சென்றது. அக்கால பகுதியில் தான், உதித் குமாரவுக்குத் தன் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டது. ‘வேறொருவன் கிடைத்ததால்த் தான், ஹன்சனா தன்னைப் புறக்கணிப்பதாகவும் தனக்கு விவாகரத்துத் தர முயல்வதாகவும் சந்தேகம் ஏற்பட்டது. அந்தச் சந்தேகம் சிறிது சிறிதாக வலுப்பெற்றது.   

அந்நிலையில் தான், கடந்த 22ஆம் திகதி, தமது வாழ்க்கையில் முக்கிய சில விடயங்களைப் பேசி தீர்ப்போம் என முடிவெடுத்து, இருவரும் பண்ணையில் சந்திப்பதாகத் தீர்மானித்துக் கொண்டனர்.   
அன்றைய தினம், பரந்தன் இராணுவ முகாம் பொறுப்பதிகாரியிடம் மிகுந்த கஷ்டப்பட்டு, அரைநாள் விடுமுறை எடுத்து, காலை 9 மணியளவில், யாழ்ப்பாணத்துக்குச் செல்வதற்கான பஸ்ஸில் உதித் குமார ஏறினார்.   

இன்னும் இரண்டு மாதங்களில் இறுதியாண்டுப் பரீட்சையில் தோற்றவுள்ளதுடன், வைத்தியசாலையில் உள்ளகப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் ஹன்சனாவும் விடுமுறை எடுத்து, அதுதான் தனது இறுதிப் பயணம் என அறியாது, பண்ணை நோக்கி பயணித்தார்.   

இருவரும் காலை 10 மணியளவில் பண்ணையில் சந்தித்துப் பேசிக்கொண்டார்கள். நேரமும் கரைந்து சென்றுகொண்டிருந்தது. 

ஹன்சனாவும், தனது இவ்வுலக வாழ்க்கை முடிவுறப் போவதை அறியாது, பேசிக்கொண்டு இருந்தார். தனது கணவரின் பேச்சுகளில் மாற்றங்கள் தெரிவதையும் பிரச்சினை எல்லை மீறப் போவதையும் உணர்ந்த ஹன்சனா, தமது நண்பி ஒருவருக்கு ‘Call me’ எனக் குறுந்தகவல் அனுப்பினார்.   

அதைப் பார்த்த நண்பி, அழைப்பை எடுப்பதற்கு முன்னரே, ஹன்சனாவின் உயிர் பிரிந்து விட்டது.  
பண்ணைக் கடற்கரையில், காலை 10 மணிக்குச் சந்தித்தவர்கள், மதியம் இரண்டு மணி வரையில் அங்கேயே பேசிக்கொண்டிருந்தார்கள். இருவருக்கும் இடையிலான ‘பேச்சுமுற்றி’, தர்க்கம் ஏற்பட்ட வேளை, மதியம் இரண்டு மணியளவில், உதித் குமார, கடையில் புதிதாக வாங்கி வைத்திருந்த கத்தியை, ஹன்சனா சற்றும் எதிர்பாராத நேரம், தனது பேக்குக்குள் இருந்து எடுத்து, அவரின் கழுத்தை அறுத்தார்.   

ஹன்சனாவின் அவலக் குரல் கேட்டு, அங்கிருத்தவர்கள் அப்பக்கம் நோக்கிய போது, இரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்த ஹன்சனாவின் உடலைச் சர்வசாதாரணமாகக் கடலுக்குள் தள்ளி விட்டு, எதுவுமே நடக்காதது போன்று, நடைபாதையில் நடந்து சென்று கொண்டு இருந்தார் உதித் குமார.   

அவ்வேளை, அவ்வீதி வழியாக வந்த இரண்டு இளைஞர்கள், சனக் கூட்டத்தை பார்த்து விட்டு, அவ்விடத்துக்குச் சென்றபோது, பெண் ஒருவரின் உடல் கடல்தண்ணீருக்குள் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது.   

விசாரித்த போது, ஆணொருவர் கத்தியால் வெட்டிவிட்டுச் செல்வதாக அங்கிருந்தவர்கள் கூறினார்கள். அந்த இரு இளைஞர்களும், “கொலையாளியை பிடிப்போம்.. வாருங்கள்..வாருங்கள்” எனக் கத்தியபோது, எவரும் அசையவில்லை. அவர்கள் இருவரும், அங்கிருந்து சற்று தொலைவில் வீதி வேலையில் ஈடுபட்டிருந்தவர்களையும் துணைக்கு அழைத்த போது, அவர்களும் செல்ல மறுத்து விட்டனர். பின்னர் அங்கிருந்த வாய் பேச முடியாத நபர் ஒருவரே, சைகை மொழியில் கொலைச் சந்தேக நபரை அடையாளம் காட்டியுள்ளார்.    

குறித்த இரு இளைஞர்களும் கொலைச் ​சந்தேக நபரைப் பின் தொடர்ந்ததுடன், தமது திறன்பேசியில் சந்தேக நபர் நடந்து செல்வதையும் காணொளி எடுத்துள்ளனர்.  

கொலைச் சந்தேக நபரின் அருகில் இருவரும் செல்வதற்குப் பயந்ததால், அவனைப் பின்தொடர்ந்தார்கள். அவன் அங்கிருந்த தண்ணீர் குழாயில் முகம் கழுவி விட்டு, குறிகட்டுவானில் இருந்து யாழ். நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸில் தாவி ஏறியுள்ளார்.   

இதை அவதானித்த இரு இளைஞர்களும், பண்ணையில் உள்ள சிறுவர் பெண்கள் பொலிஸ் பிரிவுக்கு முன்னால், பஸ்ஸின் முன்னால், தமது மோட்டார் சைக்கிளை நிறுத்தி, சாரதியிடம் விவரத்தைச் சொல்லி, பஸ்ஸுக்குள் ஏறிய கொலைச் சந்தேக நபரை, அங்கிருந்தவர்களின் உதவியுடன் மடக்கிப் பிடித்து, பின்னர் பொலிஸாருக்கு அறிவித்து, பொலிஸாரிடம் கொலைச் சந்தேக நபர் ஒப்படைக்கப்பட்டார்.   

அன்றைய தினம், அந்த இரு இளைஞர்களும் தைரியமாகச் செயற்பட்டு, கொலையாளியை மடக்கிப் பிடித்தமையால், இனவாத அரசியலுக்குத் தீனி போட வாய்ப்பளிக்கப்படவில்லை.   

இல்லையெனில், தமிழ் மக்கள் அதிகமாக வாழும் யாழ்ப்பாணத்தில், பட்டப் பகலில் ஒரு பெரும்பான்மை இன மருத்துவ பீட மாணவி, கொடூராமான முறையில் கழுத்தறுத்துக் கடலில் வீசப்பட்டுள்ளார் எனும் செய்தி, இனவாதிகளுக்குத் பெரும் தீனி போட்டிருக்கும். பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து, கொலையாளியைக் கைது செய்வதற்குள், இனவாதிகள் இனத்துவேச கருத்துகளைக் கக்கி, இனங்களுக்கு இடையில் முரண்களை ஏற்படுத்தி இருப்பார்கள்.  

 அது மட்டுமின்றி, கொலைச் சந்தேகநபர், இராணுவச் சிப்பாய் என்பதையும் அவர்கள் ஏற்றுக்கொண்டு இருக்க மாட்டார்கள். கொலைச் சந்தேக நபர் தப்பிச் செல்லும் போது, அந்த இரண்டு இளைஞர்களும் எடுத்த தைரியமான நடவடிக்கையே, இனவாதிகளுக்கு தீனி போடாமல் தடுத்து.   

அதேவேளை, ஹன்சனாவின் கணவர், பொலிஸ் விசாரணைகளில் தெரிவித்த சில விடயங்களை, ஹன்சனாவின் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. “ஹன்சனா, அமைதியான சுபாவம் உடையவள்; படிப்பில் கெட்டிக்காரி. அவளின் கணவன் ஒரு ‘சைக்கோ’ குணமுடையவன். இவள் மருத்துவர் ஆகி விடுவாள்; தான் ஒரு சாதாரண இராணுவச் சிப்பாய் எனும் தாழ்வு மனப்பாங்கு அவனுக்கு இருந்தது. அவள் கருவுற்று இருந்தாள்; கருக்கலைப்புச் செய்தாள் எனச் சொல்வது பொய். அவளுக்கு வேறு ஆணுடன் தொடர்பு எனக் கூறுவதும் பொய். அவளொரு தைரியமான பெண்” என, ஹன்சனாவின் நண்பர்கள் கருத்துத் தெரிவித்தனர்.   

உண்மைகள், எதுவுமே வெளியே வர முதல், அன்றைய தினமே சமூக வலைத்தளங்களில் ஹன்சனாவின் கொலை தொடர்பில் விவாதங்கள் எழுந்தன.  

 ‘ஏமாற்றியவளைக் கொலை செய்ய வேண்டும்; அது தப்பில்லை. ஏமாற்ற நினைக்கும் பெண்களுக்குப் பாடமாக அமைய வேண்டும்’ எனக் கொலையை நியாயப்படுத்தியும்,  
 ‘ஏமாற்றினால் கொலை தான் தீர்வா?, பிடிக்கவில்லை என விலகிச் செல்பவர்களை, அவர்களுக்கு பிடித்தமான வாழ்வை நோக்கிச் செல்ல அனுமதிக்க வேண்டும்’ எனவும் சமூக வலைத்தளங்களில் வாதப் பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டன.  

மறுநாள், வியாழக்கிழமை 23ஆம் திகதி, யாழ். நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ. பீற்றர் போல் முன்னிலையில், கொலைச் சந்தேகநபர் முற்படுத்தப்பட்ட போது, “மனிதனாக இருந்தால் மட்டுமே வாழ முடியும். மனிதப் பிறப்பு எடுத்துவிட்டு மிருகமாக வாழ முடியாது” என, எதிரியைக் கடுமையாகக் கண்டித்த நீதிவான், எதிரியை பெப்ரவரி 06ஆம் திகதி வரையில், விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.   

குடும்ப வன்முறைகளில் உச்சமாகவே, குடும்பத்துக்குள் கொலைகள் இடம்பெறுகின்றன. முன்னைய காலங்களில் கூட்டுக் குடும்ப முறைகள் இருந்த போது, குடும்ப வன்முறைகள் இல்லாதிருந்தன. கணவன், மனைவிக்கு இடையிலான பிரச்சினைகளைப் பெரியோர் தீர்த்து வைத்தனர்.   

ஆனால், தற்காலத்தில் கணவன், மனைவிக்கு இடையிலான பிரச்சினைகள் தீர்க்கப்படாமல், சந்தேகங்களும் எழுந்து, குடும்ப உறவில் விரிசல்களையும் உண்டு பண்ணிவிடுகின்றன.   

கணவன், மனைவிக்கு உளவள ஆலோசனைகள், வழிகாட்டல்கள் வழங்குவதன் ஊடாகவே, குடும்ப வன்முறைகளை இல்லாதொழிக்க முடியும். அதற்கான காத்திரமான நடவடிக்கைகளை சமூகம் முன்னெடுக்க வேண்டும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X