2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

புதிய அரசமைப்பு: செத்த கிளிக்கு சிங்காரம் எதுக்கு?

Editorial   / 2019 டிசெம்பர் 12 , பி.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

  புதிய அரசமைப்புக்கான சாத்தியங்கள் இன்னமும் உள்ளதாகத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அண்மையில் தெரிவித்திருந்தார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அதைச் செய்வார் என்றும் தெரிவித்திருந்தார். இந்த முத்துகளை, அந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஏன் உதிர்த்தார் என்ற வினா, இங்கு பிரதானமானது.   

நல்லாட்சி அரசாங்கத்தின் வருகையைத் தொடர்ந்து, சூடுபிடித்த புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகள், இரண்டு ஆண்டுகளிலேயே முடங்கிவிட்டன. இதற்கான விருப்பமோ, அவசியமோ அரசாங்கத்திடம் இருக்கவில்லை. 

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை மய்யப்படுத்தியே, புதிய அரசமைப்புப் பற்றிப் பேசப்பட்டபோதும், தேர்தல் முறை மாற்றமும் தேசிய இனப்பிரச்சினை தீர்வு பற்றிய எதிர்பார்ப்புகளும் முக்கியமானவையாக இருந்தன. 

2015ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பே, ஐ.தே.கட்சிக்கு இவ்விடயங்களில் தெளிவு இருந்தது; எனினும், நோக்கங்கள் ஐயமானவை. ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பது பற்றியும், ஐ.தே.க தலைமை தெளிவாயிருந்தது. ஆயினும், ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து, அவற்றை அமைச்சரவை மூலம் பிரதமருக்குக் கையளிப்பதிலேயே, அதன் கவனம் இருந்தது.

எனவே, அதிகாரப் பரவலாக்கம் என்ற அக்கறையோ, மக்களுக்கு அதிகாரம் என்ற அக்கறையோ, அதனிடம் இருக்கவில்லை.

புதிய அரசமைப்பை வரைவதற்கான யாப்புச் செயற்குழு, பல அரசியல் கட்சிகளிடமிருந்து, பொதுசன அமைப்புகள் ஆகியவற்றிடமிருந்தும் கருத்துகளைத் திரட்டியபோதும், அவை பற்றிய பகிரங்கமான அலசலோ, ஆய்வோ நடக்கவில்லை. 

ஆலோசனைகளை முன்வைத்த பல கட்சிகளும் அமைப்புகளும் யாப்புப் பற்றிய, முழுமையான நோக்கு எதையும் புலப்படுத்தவில்லை. அதிகாரத்தை வசமாக்குவதை மனதிலிருத்தியே, யாப்பு வரைவுப் பணியில் வாதப் பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டன. 

புதிய அரசமைப்பு என்பது, ஒரு ‘மாயமான்’ என்பதைத் தமிழ்த் தலைமைகள் அறிந்தாலும், அதைச் சொல்லத் தயங்கின. ஏனெனில், அதைப் பற்றிய கனவுகளைக் கட்டியெழுப்பியே, த.தே.கூட்டமைப்பு, தனது அரசியல் இருப்பை இதுவரை தக்க வைத்துள்ளது. 

இப்போதைக்கு அதன் தேவை, கண்டிப்பான ஓர் அரசமைப்பு அல்ல; அடுத்த தேர்தலில், புதிய அரசமைப்பை நிறைவேற்றப் போதிய ஆசனங்கள் பெற வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து, தமது ஆசனங்களைக் காப்பதே அதன் உடனடித் தேவை. 

எந்த அரசமைப்பும் நாட்டின் சட்டங்களும் தம்மளவில் முழுமையானவை அல்ல; அவை மக்களின் நலன்களையும் பரவலான ஏற்பையும் குறிக்காதவரை, அவற்றால் ஒரு நற்பயனும் விளையாது. இது இப்போதைக்கு எல்லோருக்கும் விளங்கியிருக்க வேண்டும். 

நாட்டின் அரசியலைச் சுருங்க விளக்குவதென்றால், நாடு அதிகாரம் மிக்க ஒரு ஜனாதிபதியைத் தெரிந்துள்ளது. அந்த ஜனாதிபதி, தன்னுடைய அதிகாரத்தைத் தக்கவைக்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, தனக்கு உடன்பாடான ஒரு நாடாளுமன்ற ஆட்சியை உருவாக்கவும், வசதியாயின் தனது பூரண சர்வதிகாரத்தை நிறுவவும் இயலும். இந்த நிலையில், புதிய அரசமைப்புக்கான வாய்ப்பு என்பதும், சிறுபான்மையினரின் எதிர்காலம் என்பதும் கேள்விக் குறியே. 

‘புதிய அரசமைப்பு வரும்; அது தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்றும்’ என்று, பலர் எதிர்பார்க்கலாம்; ஆனால், நாட்டின் யதார்த்தம் வேறு; சிங்கள பௌத்த பேரினவாதம், இனவெறியாக வடிவம் பெற்று, முனைப்படைந்துள்ளது. போர் முடிந்து, 10 ஆண்டுகளின் பின்னரும், இராணுவம் வலுப்பெற்றுள்ளது. நாட்டுக்குள் அந்நியப் பொருளாதார ஊடுருவல் மட்டுமன்றி, அந்நிய அரசியல், இராணுவ ஊடுருவல்களும் அப்பட்டமாக நிகழ்கின்றன. நிறைவேற்றதிகாரம் அதற்கு வாய்ப்பானது. எனவே, புதிய அரசமைப்புக்கான தேவை இல்லை; அதற்கான எந்தவொரு சூழலும் இல்லை. 

‘செத்த கிளிக்குச் செய்யும் சிங்காரம்’ எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், ஆசனங்களை வெல்வதற்கான உபாயமன்றி எதுவுமில்லை. 

காதில் பூக்கள் ஒவ்வொன்றாகச் சுற்றப்படப் போகின்றன. தமிழ் மக்கள், காதுகளைக் கொஞ்சம் பெரிதாக வைத்திருப்பது, தமிழ் நாடாளுமன்ற அரசியலுக்குத் தேவையானது. அதையே, தமிழ் அரசியல்வாதிகளும் விரும்புகிறார்கள். எமது காதுகளைக் கொஞ்சம் பெரிதாக்குவோம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .