2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பதவிக் காலத்தை நீடித்துக் கொள்ள துடிக்கும் ஜனாதிபதி

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2019 ஜூலை 10 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வரலாற்றில் எந்தவோர் அரசியல்வாதியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் போல், தமது அரசியல் இருப்புக்காக, இவ்வளவு மாற்றுத் திட்டங்களைப் பற்றிச் சிந்தித்திருக்க மாட்டார்கள். அவரது சில திட்டங்கள், ஒன்றுக்கொன்று முரண்பட்டாலும், அவை அனைத்தும் அவரது இருப்புக்காகவே என்பது தெளிவான விடயமாகும்.   

2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் அவர், தமது முன்னாள் தலைவரான, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் குடும்பத்தினரைச் சிறையில் அடைத்து, தமது எதிர்காலத்தைப் பலப்படுத்திக் கொள்ள முயன்றார். ஐக்கிய தேசியக் கட்சி, அத்திட்டத்தை முறியடிக்கவே, அவர் மறுபுறம் திரும்பி, தாமும் மஹிந்தவுடன் இணைந்து, ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கி, மஹிந்தவைப் பிரதமராக நியமித்தார்.  

மஹிந்தவின் குடும்பத்தினரைச் சிறையில் தள்ளிவிட முயன்ற மைத்திரி, பின்னர் மஹிந்த தலைமை தாங்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று, அடுத்த ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல்களில் வெற்றி பெறும் நிலை ஏற்படவே, பெரமுனவின் சார்பில், மீண்டும் ஜனாதிபதியாக முயன்றார்.   

அது தோல்வியடையவே, தமது பதவிக் காலத்தை நீடித்துக் கொள்ள முயன்றார். அதுவும் தோல்வியடைந்த போது, தமது பதவிக் காலம் ஆரம்பித்த நாளை, நீதிமன்றத்தின் மூலம் பிற்போட்டு, அதன் மூலம், தமது பதவிக் காலத்தை நீடித்துக் கொள்ள நினைத்தார்.   

அந்த முயற்சி, உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத் தாக்குதல்களை அடுத்து, சில மாதங்களாக, அவரது நிகழ்ச்சி நிரலிலிருந்து ஒதுக்கப்பட்டு இருந்தது. அதையடுத்து, சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்த நினைத்தார்.   

அதற்கிடையே அவர், மக்களைக் கவரலாம் என நினைத்து, போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதாக அறிவித்தார். இப்போது, மீண்டும் பதவிக் காலத்தை நீடித்துக் கொள்வதற்கான முயற்சி, மீண்டும் நிகழ்ச்சி நிரலுக்கு வந்துள்ளது.  

மைத்திரிபால சிறிசேன, 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று, ஜனவரி ஒன்பதாம் திகதி, ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அப்போது அமுலில் இருந்த அரசமைப்பின் படி, அவர் ஆறு வருடங்கள் பதவியில் இருக்கலாம்.   

ஆனால், 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 19 ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலம், ஜனாதிபதியின் பதவிக் காலம் ஆறு வருடங்களில் இருந்து, ஐந்து வருடங்களாகக் குறைக்கப்பட்டது. எனவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலமும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்பதாம் திகதியோடு முடிவடைகிறது என்பதே பொதுவான அபிப்பிராயமாக இருந்தது.   

ஆனால், இந்தப் பதவிக் காலக் குறைப்பு, தமது ஆறு வருட பதவிக் காலத்தைப் பாதிக்கவில்லை என்று, ஜனாதிபதி கடந்த வருடம் ஜனவரி மாதம் கூற முயன்றார். அதனை, நீதிமன்றத்தின் மூலம் உறுதி செய்து கொள்ளவும் முயன்றார்.   

அதன்படி அவர், அதே மாதம் தமது பதவிக் காலம் ஆறு வருடங்களா அல்லது ஐந்து வருடங்களா என, உயர் நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தைக் கேட்டார். அது, ஆறு வருடங்களே என, அப்போதைய சட்டமா அதிபரும் தற்போதைய பிரதம நீதியரசருமான ஜயந்த ஜயசூரிய நீதிமன்றத்தில் வாதாடினார். ஆனால், தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலமும் ஐந்து வருடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம், அப்போது தீர்ப்பு வழங்கியது.   

கடந்த தமிழ், சிங்களப் புத்தாண்டுக்கு, சில தினங்களுக்கு முன்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதியின் நெருங்கிய சகாவுமாகிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, “ஜனாதிபதி, தமது பதவிக் காலம் எப்போது ஆரம்பித்தது என, உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தைக் கோர உத்தேசித்துள்ளார்” என்று கூறினார்.   

ஆனால், சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிவடையும் முன், அதாவது ஏப்ரல் 21 ஆம் திகதி, தவ்ஹீத் ஜமாஆத் பயங்கரவாதிகள் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் மீதும் நடத்திய தாக்குதல்களை அடுத்து, ஜனாதிபதியின் இந்தத் திட்டம் அடிபட்டுப் போயிற்று. அதைப் பற்றிப் பேசுவதற்கு, அவருக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. இப்போது, அந்த விடயம் மீண்டும் ஊடகங்களில் உலாவி வருகிறது.   

முதலாவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வருடம் ஜனவரி மாதம், தமது பதவிக்காலம் ஆறு வருடங்களா, அல்லது ஐந்து வருடங்களா என உயர்நீதிமன்றத்திடம் அபிப்பிராயம் கேட்ட போது, தமது பதவிக் காலத்தை 2020ஆம் ஆண்டு ஜனவரி ஒன்பதாம் திகதிக்கு அப்பால், அதாவது, 2021ஆம் ஆண்டு ஜனவரி ஒன்பதாம் திகதி வரை நீடித்துக் கொள்வதே, அவரது நோக்கமாக இருந்தது.  

அதையடுத்து, இந்த வருடம் ஏப்ரல் மாதம் ஆரம்பத்தில், அவர், தமது பதவிக் காலம் எப்போது ஆரம்பித்தது என, உயர் நீதிமன்றத்திடம் அபிப்பிராயம் கோரப் போவதாக தயாசிறி ஜயசேகர கூறினார். அதனையே, இப்போது ஜனாதிபதி செய்யப் போகிறார். அதன் நோக்கமும் தமது பதவிக் காலத்தை 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதிக்கு அப்பால் நீடித்துக் கொள்வதேயாகும்.   

தமது பதவிக் காலம், தாம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற 2015ஆம் ஆண்டு ஜனவரி ஒன்பதாம் திகதி ஆரம்பிக்கப்பட்டாலும், 19ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலம், தமது பதவிக் காலத்தில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதால், அத்திருத்தம் நிறைவேற்றப்பட்டு நாடாளுமன்றத்தின் சபாநாயகரின் ஒப்புதலைப் பெற்ற திகதியிலிருந்தே தமது பதவிக் காலம் ஆரம்பித்துள்ளது எனக் கருதப்பட வேண்டும் என்பதே, இப்போது அவரது நிலைப்பாடாக இருக்கிறது. அதன் நோக்கமும் தமது பதவிக் காலத்தை, 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதிக்கு அப்பால், நீடித்துக் கொள்வதேயாகும்.  

கடந்த ஏப்ரல் மாதம், இந்தக் கருத்தை தயாசிறி ஜயசேகர முன்வைத்த போது, 2015ஆம் திகதி ஜூன் 21ஆம் திகதியே சபாநாயகர் 19ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்குத் தமது ஒப்புதலை வழங்கினார் என அவர் கூறியிருந்தார். ஆனால், உண்மையிலேயே 2015ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதியே சபாநாயகர் அந்த ஒப்புதலை வழங்கியிருந்தார். அதனைத் திருத்தி, 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதியே, தமது பதவிக் காலம் ஆரம்பித்துள்ளது என, ஜனாதிபதி இப்போது வாதிடுவதாக ஊடகங்கள் தெரிவித்தன.   

உயர்நீதிமன்றம் அதனை ஏற்றுக் கொண்டால், ஜனாதிபதியின் பதவிக் காலம் 2020ஆம் ஆண்டு மே மாதம் 15 திகதியே முடிவடையும். அதாவது, சட்டப்படி 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதிக்கும் ஏப்ரல் மாதம் 15ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும். அவர் ஏன், தமது பதவிக் காலத்தை நீடித்துக் கொள்ள முயல்கின்றார் என்பதைத் தனியாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.  

பதவிக் காலத்தை நீடித்து ஜனாதிபதி என்ன சாதிக்கப் போகிறார்?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது பதவிக் காலம் ஐந்து வருடங்களா அல்லது ஆறு வருடங்களா என, கடந்த வருடம் உயர்நீதிமன்றத்திடம் அபிப்பிராயம் கேட்டதில் சிறிதளவு நியாயமும் இருந்தது.   

ஏனெனில், ஆறாண்டு காலமாக இருந்த ஜனாதிபதியின் பதவிக் காலத்தை, ஐந்தாண்டுகளாகக் குறைத்த 19ஆவது அரசமைப்புத் திருத்தம், அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னரே நிறைவேற்றப்பட்டது.  

எனவே, ஏற்கெனவே ஆறு ஆண்டுகளுக்காக மக்கள் ஆணையை பெற்றவரது பதவிக் காலமும் குறைக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் சிலரிடம் ஏற்படக்கூடும்.  

ஆனால், ஜனாதிபதியின் ஏனைய நடவடிக்கைகளையும் ஆராய்ந்து பார்க்கும் போது, அவரது நோக்கம் அது மட்டுமா என்ற சந்தேகமும் எழுகிறது. குறிப்பாக, தமது பதவிக் காலம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்று உயர்நீதிமன்றத்திடம் அபிப்பிராயம் கேட்கும் அவரது திட்டத்தையும், சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம் உடனடியாகப் பொதுத் தேர்தலொன்றை நடத்தும் அவரது திட்டத்தையும் கருத்தில் கொள்ளும் போது, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், பொதுத் தேர்தலை நடத்துவதே அவரது நோக்கமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.   

தமது பதவிக் காலத்தை ஆறு வருடங்களாக, அதாவது 2021ஆம் ஆண்டு ஜனவரி ஒன்பதாம் திகதி வரையிலோ, அதனை 2020ஆம் ஆண்டு மே மாதம் வரையிலோ நீடித்துக் கொள்வதில் அவர் எதனை சாதிக்கப் போகிறார்? ஐந்து வருட பதவிக் காலத்துக்குள், சாதிக்காத எதையும் அந்தப் பதவிக் கால நீடிப்புகளால் சாதிக்கப் போவதில்லை. ஆனால், இந்தப் பதவிக் கால நீடிப்புகளால் அவருக்கு நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடிவடையும்முன் அதனைக் கலைக்க அதிகாரம் கிடைக்கிறது.  

19ஆவது அரசமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்படும்முன், தேர்தலில் தெரிவான நாடாளுமன்றமொன்றை ஒரு வருட காலத்துக்குப் பின்னர் கலைக்க, ஜனாதிபதிக்கு அதிகாரம் இருந்தது. 19ஆவது அசமைப்புத் திருத்தம், ஜனாதிபதியின் அந்த அதிகாரத்தைப் பறித்து, நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தில், நாலரை ஆண்டுகள் கழிந்த பின்னர், அதனைக் கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கியது.  

அதாவது, அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்துக்குப் பின்னரே, ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும். ஜனாதிபதியின் பதவிக் காலம் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை நீடிக்கும் என்றோ அல்லது 2020ஆம் ஆண்டு மே மாதம் வரை நீடிக்கும் என்றோ, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் அவரால் நாடாளுமன்றத்தைக் கலைத்து, புதிதாகப் பொதுத் தேர்தலை நடத்த அதிகாரம் கிடைத்துவிடுகிறது.   

சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம், இந்த வருடத்துக்குள்ளேயே பொதுத் தேர்தலை நடத்த, அவர் திட்டமிட்டதைக் கருத்திற் கொள்ளும் போது, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், பொதுத் தேர்தலை நடத்துவதே ஜனாதிபதியின் நோக்கமாக இருக்கிறது போல் தெரிகிறது.  

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடித்து, ஜனாதிபதித் தேர்தலை ஒத்திப் போடுவதன் மூலம், அவர் எதைச் சாதிக்க முயற்சிக்கிறார்? அது முடியாது போனால், சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்தி, எதைச் சாதிக்க முயல்கின்றார்?   

இப்போதைக்கு, மஹிந்தவின் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவே, ஜனாதிபதி வேட்பாளராக வருவார் போல்த் தெரிகிறது. ஆனால், அதற்கு முன்னர், பொதுத் தேர்தல் நடைபெற்று பொதுஜன பெரமுன வெற்றி பெற்றால் நிலைமை மாறலாம்.  

அந்தத் தேர்தலில் மஹிந்த பிரதமராகலாம். அதற்காக ஜனாதிபதியாக இருந்து கொண்டே அவருக்கு உதவியளித்து, அதன் பின்னர் அவர் மூலம் பொதுஜன முன்னணி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாம் என மைத்திரி நினைக்கிறாரோ தெரியாது. ஆனால் அது சாத்தியப்படாது.   

ஏனெனில், பொதுத் தேர்தல் மூலம் பொதுஜன பெரமுன வெற்றி பெற்று, மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராகப் பதவியேற்றால், அவர் முன்னரைப் போல் உடனடியாக ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கி, மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெற்று, 18ஆவது அரசமைப்புத் திருத்தத்தை மீண்டும் கொண்டு வரலாம். அதன் பின்னர், ஜனாதிபதித் தேர்தலில் தாமே போட்டியிடலாம்.  

ஆனால், முன்னர் மைத்திரி திட்டமிட்டபடி, சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் பொதுத் தேர்தலை முன் கூட்டியே, இவ்வருடமே நடத்த முற்பட்டால், மஹிந்தவுக்கு அவ்வாறு 18ஐ மீண்டும் கொண்டு வரக் காலம் போதுமானதாக இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில், சட்டப் படி டிசம்பர் ஒன்பதாம் திகதிக்கு முன்னர், ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.   

அதாவது, நவம்பர் இரண்டாம் வாரத்துக்கு முன்னராவது, ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதற்கு முன்னர், சர்வஜன வாக்கெடுப்பையும் நடத்தி, பொதுத் தேர்தலையும் நடத்த முடியுமா என்பது சந்தேகமே. அவ்வாறாயின், ஜனாதிபதி எதற்காக இவ்வாறு பல திட்டங்களை போடுகிறார்.   

பதவிக் காலத்தை நீடிப்பதன் மூலமும், சர்வஜன வாக்கெடுப்பின் மூலமும் அவரால் ஒரு விடயத்தை மட்டும் நிச்சயமாகச் சாதிக்க முடியும். அதாவது, தமது பரம எதிரியாக மாறியிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, அவரது பதவிக் காலம் முடிவடையும்முன் பதவி துறக்கச் செய்ய முடியும். அதுதான் பல்வேறு உத்திகள் மூலம், அவர் நிறைவேற்றிக் கொள்ளப் போகும் நோக்கமா என்று இறுதியாக நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .