2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பந்துலவின் ’NO BALL’

Editorial   / 2020 மே 24 , பி.ப. 03:08 - 1     - {{hitsCtrl.values.hits}}

கால்பந்தாட்டத்துக்கே உலகில் அதிக இரசிகர்கள் இருந்தாலும் வெறிபிடித்த இரசிகர்கள் இருப்பது என்னவோ கிரிக்கெட்டுக்கு மாத்திரம் தான். வயதெல்லையின்றி அனைவராலும் இரசிக்கப்பட்டும், பாரிய மைதான வசதியின்றி, சாதாரண நடை பாதைகளில் கூட விளையாடும் இந்த கிரிக்கெட்டுக்கு சில நாடுகளில் தீவிர இரசிகர்கள் இருப்பதுடன், இந்த தீவிர இரசிப்புத் தன்மை உயிராபத்துகளையும் விளைவிப்பதாய் அமைந்து விடுகின்றது. குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் உள்ள கிரிக்கெட் இரசிகர்கள் கிரிக்கெட்டை விளையாட்டாக எண்ணாமல், அவர்கள் வாழ்வுடன் பின்னிப் பிணைந்ததாகக் கருதி, அந்த அணி வெற்றி பெறும் போது, அந்த வீரர்களை உச்சந்தலையில் வைத்துக் கொண்டாடுவதும், அவர்கள் தோல்வியைத் தழுவினால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலைக்குச் செல்வது மட்டுமல்ல, வீரர்களைத் தாக்குதல், அவர்களின் உடமைகளுக்குச் சேதம் விளைவித்தல் என எதிர்ப்பின் உச்சத்துக்கே சென்று விடும் நிலையில், எமது நாட்டு இரசிகர்கள் விளையாட்டை விளையாட்டாகவே பார்க்கும் மனப்பாங்கைக் கொண்டுள்ளதுடன், போட்டிகளில் எமது நாடு தோற்றாலும், வெற்றிபெற்றாலும் இலங்கை அணியின் வீரர்கள் 'எமது நாட்டு சிங்கங்கள்' என போற்றுபவர்களே இலங்கை இரசிகர்கள்.

இந்த நிலையில், கொரோனாவே இன்றைய உலகின் பேசும் பொருளாகக் காணப்பட்டாலும் அதையும் மீறி, இலங்கையின் கடந்த வாரம் தொடக்கம் நேற்று முன்தினம் வரை பேசும் பொருளாய் ஹோமாகமவில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள கிரிக்கெட் மைதானமே காணப்பட்டது.

இதற்கான காரணம் கொரோனாவால் முழு உலகத்தைப் போல இலங்கையும் முடக்கப்பட்டு இலங்கையர்களும் முடங்கிக் கிடக்கும் நேரத்தில், அடுத்த வேளை சோற்றுக்கு என்ன பண்ணுவது என, அன்றாடப் பிழைப்பை நடத்துபவர்கள் அல்லாடும் நேரத்தில், அரசாங்கத்தின் நிவாரணத்தை எதிர்பார்த்து அடுப்பை மூட்டும் இன்றைய கொரோனா காலத்தில், 26 ஏக்கர் நிலப்பரப்பில் 60,000 பார்வையாளர் ஆசனங்களைக் கொண்ட, 40 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஹோமாகம பிரதேசத்தில் கிரிக்கெட் மைதானம் ஒன்று அமைப்பது தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தனவால் அண்மையில் போடப்பட்ட பந்து, 'நோ போல்' என மூன்றாரம் தரப்பு நடுவரான பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, நேற்று முன்தினம் தீர்ப்பளித்துள்ளார்.

உண்மையில் இந்த ஆட்டத்தைத் தனது சொந்தத் தொகுதியான ஹோமகமவில் பந்துல ஆரம்பித்ததுடன், களத்துக்கே சென்று கண்காணிப்புப் பணிகளையும் பார்வையிட்டு, உடனேயே மைதானம் அமைக்கும் பணிகளை ஆரம்பிப்பதற்கான பிள்ளையார் சுழியையும் போட்டுவிட்டு, ஊடகங்களுக்கும் அறிக்கையிட்டு விட்டார்.

அன்றும் அடுத்தநாளும் ஹோமாகமவில் பாரிய நிதி செலவில் மற்றுமொரு சர்வதேச கிரிக்கெட் மைதானம் என்ற கருப்பொருளே ஊடகங்களில் காணக் கூடியதாக இருந்தது.

கொரோனா யார் வாழ்வில் எவ்வாறு என்ன தாக்கத்தை ஏற்படுத்தியதோ யாம் அறியோம். ஆனால் பந்துலவின் பந்து வீச்சை கொரோனா பதம் பார்த்துவிட்டதை முழு இலங்கையும் பார்க்கத் தவறவில்லை. ஆம், இந்த கொரோனா மட்டும் இல்லையென்றிருந்தால் அரசாங்கத்தின் அனுசரணையுடன் தேர்தலைக் குறி வைத்து, தனது சொந்தத் தொகுதியில் பந்துல வீசிய ஹோமாகம மைதானம் எனும் பந்து, ஆறு ஓட்டங்களைக் கடந்திருக்கும். ஆனால் பாவம், குறித்த இடத்துக்குக் கண்காணிப்புக்குச் சென்று வந்து ஊடக சந்திப்பை நடத்திய மறு நிமிடமே, இந்திய அணி போட்டியொன்றில் தோற்றால், அந்த மைதானத்தின் நான்கு திசைகளிலிருந்தும் போத்தல் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதைப் போன்று, பந்துலவின் அறிவிப்புக்குப் பாரிய எதிர்ப்பலைகள் நான்கு திசையிலும் எழும்பியது. இதில் என்ன ஆச்சரியம் என்றால், தற்போதைய அரசாங்கத்தின் பிரபல அமைச்சர் ஒருவர் மைதானம் அமைப்பது பற்றியும் அது தொடர்பில் கண்காணிப்பு விஜயத்துக்குச் சென்றமையும் அரசாங்கத்துக்கே தெரியாது என்பதைப் போல, அரசாங்கத்தரப்பில் இருந்தும் இந்த மைதான செயற்பாட்டுக்கு எதிர்ப்பலைகள் கிளம்பியது தான் விந்தை. அதிலிலும் ராஜபக்‌ஷ குடும்பத்திலிருந்து பிரதமர் மஹிந்தவின் 3 புதல்வர்களில் இருவர் டுவிட்டர் என்ற சமூக வலைத்தளத்தில் இந்த விடயத்துக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியது தான் விந்தையிலும் விந்தை எனலாம்.

இதேவேளை கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படவுள்ள இடத்துக்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டு, அதன் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதென, ஊடகங்கள் மத்தியில் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்த நிலையில், நேற்று முன்தினம் (21) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகசந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் பந்துல, இந்த மைதானத்தை அமைப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என அறிவித்தார். அப்படியாயின் பாரிய நிதி செலவில் இந்த மைதானத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பமாகவுள்ளதென அமைச்சர் தெரிவித்தமை அரசாங்கத்துடன் எவ்வித கலந்துரையாடல்களும் அனுமதியும் பெறாமலா? என்று எண்ணத் தோன்றுகின்றது. அதேவேளை சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறைந்தது விளையாட்டுத்துறை அமைச்சருக்குக் கூட இந்த விடயம் தெரியாதா எனச் சாதாரண மக்களுக்கும் சந்தேகம் எழுந்தது.

எனவே, அமைச்சர் நேற்று முன்தினம் இவ்வாறு அறிவிப்பு விடுத்தமையே, இந்த மைதானம் அமைப்பதற்கு எதிராக எழும்பியுள்ள எதிர்ப்பலைகளே காரணமாகும்.

முதலில் அமைச்சர் பந்துலவின் மைதானம் குறித்த எதிர்ப்பலை இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான மஹேல ஜயவர்தனவால் டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டது. ' அதாவது சர்வதேச மற்றும் சர்வதேசப் போட்டிகள் குறைந்தளவு நடைபெறும் இலங்கையில், பாரிய நிதி செலவில் இவ்வாறானதொரு மைதானம் இலங்கைக்குத் தேவையில்லை' என மஹேலவின் பதிவை ஆமோதிக்கும் வகையிலும் அமைச்சர் பந்துலவின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் நாட்டின் தற்போதைய நிலையில், இவ்வாறானதொரு மைதானம் தேவையில்லை என்றொரு கருத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் புத்திரர்களான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவும் யோஷித ராஜபக்‌ஷவும் பதிவிட்டிருந்தமை அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

இதனையடுத்து ஆளும் மற்றும் எதிர்தரப்பினரின் வசைப்பாடல்களுக்கும் அரசாங்கத்தின் அமைச்சராக பந்துல மாத்திரமே இலக்காகியிருந்தார். குறிப்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, கடந்த வாரம் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில், அமைச்சர் பந்துல குணவர்தன தனது தேர்தல் தொகுதிக்கு இவ்வாறானதொரு மைதானத்தை அமைப்பதை விட சர்வதேச போட்டிகள் பல இடம்பெற்று, தற்போது கேட்பார், பார்ப்பாரின்றிக் காணப்படும் மலையகத்தின் ரதல்ல பிரதேசத்திலுள்ள கிரிக்கெட் மைதானத்தைப் புனரமைப்புச் செய்யலாம் என்று தெரிவித்திருந்ததுடன், மைதானத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள அந்த நிதியை கொரோனா ஒழிப்பு செயற்பாட்டுகளுக்காகப் பயன்படுத்தலாம் என தெரிவித்தார்.

மஹேல ஜயவர்தனவைப் போல், இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரொசான் மஹாநாம, சனத் ஜயசூரிய ஆகியோரும் மஹேலவின் கருத்தை வலியுறுத்தும் வகையில் கருத்து தெரிவித்திருந்தனர். அதாவது மற்றுமொரு சர்வதேச மைதானத்துக்காக நாட்டின் தற்போதைய நிலையில், பாரிய நிதி செலவிடுகின்றமை நகைப்புக்குரிய விடயமாகும். எமது நாட்டிலுள்ள சர்வதேச போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் போதுமானளவு போட்டிகள் நடைபெறாத பின்னணயில் இவ்வாறானதொரு மைதானம் தேவைதானா? எனத் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான உதய கம்மன்பிலவும் இந்த விடயத்தில் வாயைக் கொடுத்து புண்ணாக்கிக்கொண்டார் என்றே சொல்ல வேண்டும். அதாவது ஹோமாகமையில் அமைக்கப்படவுள்ள இந்த மைதானத்துக்கு சர்வதேச கிரிக்கெட் சபை 30 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி செய்துள்ளதென அறிக்கை விட்ட நிலையில், இலங்கையில் இவ்வாறானதொரு மைதானம் அமைக்க, நிதியுதவி வழங்கவில்லை என சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊடக ஒருங்கிணைப்பு அதிகாரி ராஜசேகர் ராவ் அறிவித்ததையடுத்து, உதய கம்மன்பில தனது கூற்றை இவ்வாறு வாபஸ் வாங்கியிருந்தார்.

அமைச்சர் பந்துலவின் தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தான் தவறான தகவலைத் தெரிவித்து விட்டதாகக் கூறி தனது டுவிட்டர் வலைத்தளத்தில் மன்னிப்பும் கோரியிருந்தார்.

ஆனால், இதற்கெல்லாம் அப்பால் ஒரு படி மேலே சென்று, முன்னாள் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, SLTOP TUBE என்ற சமூக ஊடகமொன்றில் அமைச்சர் பந்துலவுக்கு மூளை சரியில்லாமல் கூறிய கருத்து, என்றே கூறிவிட்டார்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும் இலங்கை உலகக் கிண்ணத்தை வெற்றிகொள்ளக் காரணமாக அமைந்தவருமான கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க, மைதானம் அமைப்பதற்காகச் செலவிடப்படவுள்ள நிதியைக் கிரிக்கெட்டின் நிலையான அபிவிருத்திக்காகச் செலவிடுமாறும் எமது நாட்டிலுள்ள சர்வதேச மைதானங்களுள் மொரட்டுவ, அஸ்கிரிய போன்ற மைதானங்கள் இன்று கைவிடப்பட்ட நிலையிலுள்ளன. எனவே, இந்த நிதியை அந்த மைதானங்களின் அபிவிருத்திக்காகச் செலவிடுமாறும் அறிக்கை விடுத்திருந்தார்.

அத்துடன் பாடசாலை மட்டத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்த வேண்டும். அரசியல்வாதிகளை மகிழ்ச்சிப்படுத்த புதிய மைதானங்களை அமைப்பதை விட, விளையாட்டு வீரர்களை இனம் கண்டு அவர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுப்பது சிறந்தது எனத் தெரிவித்திருந்ததுடன், ஹோமாகம சர்வதேச மைதான நிர்மாணிப்பு தொடர்பில் பல்வேறு தரப்பில் இருந்தும் பல்வேறு விமர்சனங்கள், எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, இந்த விடயம் குறித்து, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடன்இலங்கையின் முன்னாள் நட்சத்திர வீரர்களும் அணியின் முன்னாள் தலைவர்கள், விளையாட்டுத்துறை அமைச்சர், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் முன்னாள் தலைவர்கள் உள்ளிட்டவர்களுடன் பிரதமர் நேற்று முன்தினம் (21) அலரி மாளிகைளில் கலந்துரையாடலை முன்னெடுத்தார்.

இதன்போது கருத்துகளை முன்வைத்த பலரும் இலங்கைக்கு மற்றுமொரு சர்வதேச மைதானம் தற்போது அவசியமற்றது என்றும், இந்த மைதானம் அமைப்பதை கைவிட்டு பாடசாலை மட்டங்களிலும், பிரதேச மட்டங்களிலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப்போட்டிகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றித்துக் குரல் எழுப்பினர்.

இதில், குறிப்பாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனவின் கருத்து வடக்கு, கிழக்கில் விளையாட்டுத் திறமைகளை வெளிக்காட்டும் வீரர்களின் திறமைக்கான மற்றுமோர் அங்கிகாரமாக அமைந்திருந்தது.

அதாவது யுத்தத்துக்குப் பின்னர் வடக்கு, கிழக்கில் அதிகமான இளைஞர், யுவதிகள் விளையாட்டுத்துறைகளில் திறமைகளை வெளிக்காட்டி வந்தாலும் அரசாங்கமும் ஏனையோரும் அவர்களைக் கண்டுகொள்வதில்லை. அவர்கள் குறித்துச் சிந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டைப் பிரதமரிடம் முன்வைத்தார்.

அத்துடன் மத்திய மாகாணத்தில் 50 பாடசாலைகளில் கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வந்தாலும் 4 பாடசாலைகளிலயே புற்றரை மைதானங்கள் உள்ளன. அதேபோல் மேல்மாகாணத்தில் 169 பாடசாலைகளில் 18 பாடசாலைகளிலேயே புற்றரை மைதானங்கள் காணப்படுகின்றன. வடக்கில் 26 பாடசாலைகளில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்ற போதிலும் அங்கு ஒரேயொரு புற்றரை மைதானமே காணப்படுகின்றது என்பதை பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

அத்துடன் மேல் மாகாணத்திலுள்ள 2 முதற்றர விளையாட்டுக் குழுக்கள் மாத்திரமே சர்வதேச மைதானங்களில் விளையாடி வரும் நிலையில், பாடசாலை மாணவர்களுக்கு இலங்கையிலுள்ள சர்வதேச மைதானங்களில் விளையாடும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அத்துடன் கடந்த 20 வருடங்களாகப் பாடசாலை மட்ட கிரிக்கெட் போட்டிகள் குறித்து எவரும் கவலைப்படாத அதேவேளை, கடந்த 15 வருடங்களில் வெளிமாகாணங்களைச் சேர்ந்தவர்களைத் தவிர, மேல் மாகாணத்திலிருந்து எந்தவொரு வீரரும் தேசிய அணிக்குத் தெரிவு செய்யப்படவில்லை என பிரதமரிடம் சுட்டிக்காடடிய மஹேல, முதலில் கிடைக்கும் அல்லது எம்மிடம் இருக்கும் நிதியை எங்கு செலவிட வேண்டும் என சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

உண்மையில் அவுஸ்திரேலியாவை விட அதிகமான சர்வதேச மைதானங்கள் எமது நாட்டில் உள்ள நிலையில், பாரிய நிதி செலவில் அமைக்கப்பட்டு தற்போது யானைகளின் விளையாட்டு மைதானமாக மாறியுள்ளதென, எதிர்க்கட்சிகளால் குத்திக்காட்டப்படும் சூரியவெல மைதானத்தில் கடந்த 3 வருடங்களில் ஒரு போட்டியும் தம்புளை மைதானத்தில் ஒரு போட்டியேனும் நடைபெறாத நிலையில், அதிக நிதி செலவில் ஹோமாகமயில் புதிய சர்வதேச மைதானம் ஒன்று தேவைதானா? என்ற பலரின் கேள்விகளுக்கும் கிரிக்கெட் வீரர்களுடனான கலந்துரையாடலின் பின்னர், பிரதமர் மஹிந்தவால் குறித்த மைதானப் பணியைக் கைவிடுமாறு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளமை வரவேற்கத் தக்கதே.


You May Also Like

  Comments - 1

  • புகழினி Wednesday, 27 May 2020 08:16 AM

    வணக்கம் மகேஸ் அக்கா. உங்கள் ஆக்கங்களை நான் தினமும் படிப்பேன். மிகவும் சிறப்பாகவும், நன்றாகவும் பயனுள்ளதாகவும் இருக்கின்றன. படிக்க படிக்க ஆர்வத்தை தூண்டுவதாகவும் இருக்கின்றது. உங்களுடைய ஆக்கங்களில் நிறைய தேடல்களும் இருக்கின்றன. உங்கள் வளர்ச்சிக்கு எனது பாராட்டுக்கள். நன்றியுடன் புகழ்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X