2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

பரபரப்பு அரசியலில் தமிழ்த் தலைமைகள்

Editorial   / 2018 ஒக்டோபர் 04 , மு.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன் 

இலங்கை அரசியல் நிலைமை அண்மைக் காலமாக கொதி நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.  

தென்பகுதி அரசியல், முக்கோண அரசியல் நகர்வில் உள்ள நிலையில், அதையொத்து வடபகுதி அரசியலும் உள்ளமை, மக்கள் மத்தியில் ‘அவதானிப்பு அரசியலை’ அதிகரித்துள்ளது.   

வெறுமனே அரசியல் தலைமைகளை விமர்சிக்கும் மக்கள் இன்று, அதை ஆராய்ந்து, அவதானித்துத் தீர்மானம் எடுக்கும் செயன்முறையொன்றுக்குள் நகர்ந்திருப்பதானது, ஆரோக்கியமான அரசியலாக உள்ளபோதிலும், அரசியல்வாதிகள் அரசியல் கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலை, முழுநாட்டு மக்களையும் பொறுத்தளவில், ஆரோக்கியமற்றதாகவே உள்ளது.   

அரசியல்வாதிகளுக்கு மத்தியில் அதிகாரப்போட்டி நிலவுவதால், குழப்பகரமானதும் ஸ்திரத்தன்மை அற்றதுமான அரசாட்சி அரங்கேறிக் கொண்டிருக்கிறது. 

தென்பகுதி அரசியல் களத்தில், ஜனாதிபதியின் முடிவுகளா, பிரதமரின் முடிவுகளா வலுவானது என்ற நிலையில் ஐ.தே.கவின் போக்கும், சுதந்திரக் கட்சியின் போக்கும் தொடர்ச்சியான தேசிய அரசாங்கத்தின் நிலைபேற்றில் பிளவுகளை ஏற்படுத்திச் செல்கின்றன.   

இருந்தபோதிலும், ஜனாதிபதியின் கைகளை வலுவாக்க முனையும் சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர்களும் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை நோக்கியதான காய்நகர்த்தல்களில் முனைப்புக்காட்டும் ஐ.தே.கயினரும் தேசிய அரசாங்கம் முடிவுக்கு வருவதை விரும்பாத நிலையும் காணப்படுகின்றது.  

இந்நிலையிலேயே, மஹிந்த ராஜபக்ஷ  மறைமுகமாகத் தலைமை தாங்கும் ஒன்றிணைந்த எதிரணி,  நல்லாட்சி அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை மாற்றியமைத்து, மக்கள் மத்தியில் சோபை இழக்க செய்து, தாம் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் முழு மூச்சாக இறங்கியுள்ளனர்.   

இந்நிலையில், வடக்கு அரசியல் பரப்பிலும் பரபரப்புக்கு குறைவில்லாத நிலை காணப்படுகிறது. வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் புதிய அரசியல் பாதையொன்றைத் திறப்பாரா என்ற எதிர்பார்ப்பு சகல மட்டங்களிலும் அதிகரித்துள்ளது. அதற்கான பச்சைக்கொடியை காட்டியுள்ள முதலமைச்சர், மாகாணசபைத் தேர்தலில் புதிய கட்சியினூடாகத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகத் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.  

“தமிழ்த் தேசியத்தின் தலைமையை ஏற்கத் தயார்” எனத் தெரிவித்துள்ள வடக்கு முதலமைச்சர், இதுவரை அத்தளத்தில் இருந்த தலைவர்கள், சரியான பாதையை மக்களுக்குக் காட்டவில்லை என்ற கருத்தையும் பதிவிட்டுள்ளார்.  

அரசமைப்புச் சீர்திருத்தம், நிரந்தரத் தீர்வு என்ற சொற்பதங்களுக்கே சொந்தக்காரராகியுள்ள தமிழர் தரப்பு, அதைப் பேச்சளவில் மாத்திரமே வைத்து, அதன் பலன்களை அனுபவிக்க முடியாத நிலையில், இன்றுவரை, தமது பல சந்ததிகளையும் கடந்து செல்கின்றமையே உண்மை.   

காலத்துக்குக் காலம், பெரும்பான்மைத் தலைமைகளால் ஏமாற்றப்பட்ட நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசியல் சாணக்கியத்தைத் தாம் பயன்படுத்துவதாகத் தெரிவித்து, இன்று மீண்டும் இணக்க அரசியல் நகர்வைக் கொண்டு செல்கின்றது.   

இந்நிலையிலேயே, தமிழ் அரசியல் கைதிகளின் உணவு தவிர்ப்புப் போராட்டம், வடக்கு, கிழக்கில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்தும் அநுராதபுரம் சிறையில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் உடல் வலுக் குன்றிப்போயுள்ள நிலையில், வடக்கு, கிழக்கில் பொது அமைப்புகளாலும் அரசியல் சார் அமைப்புகளாலும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும், அரசாங்கத்துக்கான அழுத்தம் காரணமாக, அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் முடிவொன்றை எடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.  

எனினும், இவ்வாறான போராட்டங்கள், வெறுமனே அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பில் ஈடுபடும் போது மாத்திரமே அரசியல்வாதிகள் கையிலெடுக்கும் விடயமாக மாறியுள்ளமையும் அதன் பின்னர், கைதிகள் தொடர்பில் கரிசனை கொள்ளாத நிலையும் மத்திய அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் அது எதிர்பார்க்கும் அதற்குச் சாதகமான நிலைமையாகவே கருத முடிகின்றது.  

எனவே, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் போராட்டங்கள், தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படாவிட்டால், அதன் உயிர்ப்புத் தன்மை மங்கிவிடும் என்பதையும் அரசியல்வாதிகள் உணரத்தலைப்பட வேண்டும்.  

இவ்வாறான நிலையில், காலத்துக்குக் காலம் தீர்வு தொடர்பாக, தமிழரசுக் கட்சி தெரிவித்துவரும் மாறுபட்ட கருத்துகள் தமிழ் மக்கள் மத்தியில் நிலைபேறான தீர்வு கிடைக்குமா என்ற சந்தேகத்தைத் தொடர்சியாக ஏற்படுத்தி வருகின்றது.   

ஏனெனில், “சமஷ்டியைக் கோரவில்லை; மாகாணசபை முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்தினால் போதுமானது” என்ற எம். ஏ. சுமந்திரனின் அண்மைய கருத்து, தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.   

அது மட்டுமல்ல, தமிழர்களின் பலமான அரசியல் அமைப்பாகக் கருதப்படும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்குள்ளும் விரிசல் நிலையை தோற்றுவித்துள்ளது.  

இதைச் சாதகமாக்கி கொண்ட விக்னேஸ்வரன், புதிய அரசியல் கட்சியின் ஆர்வத்தைக் கூட்டமைப்பு அதிருப்தியாளர்களுடன் உருவாக்க எத்தனிக்கின்றார். விக்னேஸ்வரனைப் பொறுத்தவரை, வடக்கு அரசியல் பரப்பில் மாத்திரமல்ல, இலங்கையையும் தாண்டித் தமிழர்களுக்காகக் குரல்கொடுக்கும் ஒருவராக பார்க்கப்பட்டு வரும் நிலையில், கூட்டமைப்பின் அங்கத்தவர்களின் மாறுபட்ட கருத்துகள், புதிய கட்சியின் உருவாக்கத்துக்குச் சாதகமான சூழ்நிலையையே உருவாக்கியுள்ளது எனலாம்.  

இவ்வாறான சாத்தியப்பாடுகளைச் சாதுரியமாக நகர்த்தி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி உட்பட, ஏனைய தமிழ்க் கட்சிகளையும் உள்ளீர்த்து, ஒரு பலமான அரசியல் கட்சியாக மலருமாக இருந்தால், அது விக்னேஸ்வரனின் சாதனையாகவே இருக்கும் என்பது மறுப்பதற்கில்லை.  

என்றாலும் கூட, கஜேந்திரகுமாருக்கும் சுரேஷ் பிரேமசந்திரனுக்கும் இடையில் உள்ள பனிப்போர், முடிவுக்குக் கொண்டு வரப்படுமா என்பதுடன், ஏனைய கட்சிகளை மனதார உள்ளீர்க்க, இக்கட்சிகள் சம்மதம் தெரிவிக்குமா என்ற ஐயப்பாடும் நிறைந்தே உள்ளது.  

ஏனெனில், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை, விக்னேஸ்வரன் இணைத்தால், தாம் வெளியேறுவோம் எனத் தெரிவித்திருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தற்போது கூட்டமைப்பில் இருந்து டெலோ வந்தாலும்  இணைக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளது.   

இவ்வாறான முரண்பாடுகள், விக்னேஸ்வரன் புதிய கட்சியை ஆரம்பித்து, அதற்குள் பல கட்சிகளை இணைத்துக் கொண்டால், அங்கு தீர்மானிக்கும் சக்தியாக யார் இருக்கப் போகின்றனர் என்ற கேள்வியை எழுப்பி நிற்கின்றன.   

குறிப்பாக, ஒற்றுமையானதும் பலமானதுமான ஓர் அரசியல் கட்சியின் தேவை, தமிழர் அரசியல் தளத்தில் உணரப்படுகின்றபோதிலும் அதை, முதலமைச்சர் விக்னேஸ்வரனால் உருவாக்க முடியுமா என்ற சந்தேகமும் நிறைந்துள்ளது.   

வெறுமனே, மேடைப்பேச்சுகளாலும் அறிக்கைகளாலும் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவு காணச் செய்யலாம் என்ற பாதையிலேயே, தமிழ்த் தலைமைகள் பலவும் இதுவரை காலமும் நகர்ந்து வந்துள்ளன என்பதே உண்மை.  

வடக்கு முதலமைச்சர்  புதிய அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளக மோதல்களும் உச்சத்தை தொட்டு நிற்கின்றன. எனினும், கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளான டெலோ, புளொட் ஆகியன தாம் கூட்டமைப்பை விட்டு வெளியேறினால் எந்த நிலைக்குச் செல்வோம் என்ற முன்னுதாரணங்களைக் கொண்டுள்ளன. எனவே, அவை கூட்டமைப்புடன் இணக்கப்பாட்டில் செல்வதற்கே விரும்புகின்றன.   

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் விடுத்துள்ள அறிக்கையில், தமிழரசுக் கட்சியின் தலைவர் உட்பட, அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமஷ்டி நிலைப்பாடு தொடர்பில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இது யதார்த்தமும் கூட. 

ஒரு கட்சியில் இருவேறு நிலைப்பாடுகள் இருக்க முடியாது என்பது உண்மை. அதிலும் நீண்ட அரசியல் வரலாற்றை கொண்டமைந்த தமிழரசுக்கட்சி பொறுப்பு வாய்ந்த கட்சி என்ற ரீதியில், வெளிப்படைத் தன்மையை நிலைநாட்ட வேண்டும்.   

தமிழ் மக்களால் எதிர்பார்க்கப்படும் தீர்வு சமஷ்டியா மாகாணசபையில் மாற்றமா என்பது தொடர்பான தேடல் இல்லாமல், தமிழர்களின் ஏகோபித்த அரசியல் தலைமைகளாகத் தம்மை நிலைநிறுத்த முடியாது என்பது உண்மை.  

எனவே, மாறுபட்ட கருத்தியல்களைக் அகற்றி, ஒருமித்த நிலைப்பாட்டைத் தமிழரசுக்கட்சி மட்டுமல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்க வேண்டும்.    

எனவே, தேர்தல்களும் ஆட்சியதிகாரமும் என்ற நிலைப்பாடுகளுக்கப்பால் தமிழர்களின் எதிர்காலம் என்ற எண்ணக்கருவை முன்னிறுத்தி, அரசியல் செய்யத் தவறும் கட்சிகள், எதிர்வரும் காலங்களில் மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பர் என்பதில் சந்தேகம் இல்லை.   

ஏனெனில், மக்கள் தற்போதைய நிலையில், அவதானிப்பு அரசியலிலும் அதனூடாக சுயதீர்மானம் எடுக்கும் சக்திகளாகவும் வலுப்பெற்று வருகின்றனர். எனவே வெறுமனே, ‘பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடித்த கதை’யாக, தமிழ் அரசியல் தலைமைகள் இருக்க முடியாது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .