2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பரபரப்புக்கு பஞ்சமில்லாத வடக்கு அரசியல்

கே. சஞ்சயன்   / 2017 ஓகஸ்ட் 13 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காகிப் போனது போல, வடக்கு மாகாணசபையின் அமைச்சரவை விவகாரமும் இப்போது, அதுபோன்றதொரு நிலைமைக்குத்தான் சென்று கொண்டிருக்கிறது.  

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான, தமிழரசுக் கட்சியினரின் நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரத்துக்குப் பின்னர், அமைச்சரவையை மாற்றியமைப்பதில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அக்கறை காட்டி வந்தார்.  

அரசியல் குழப்பங்கள் தீர்க்கப்பட்டதை அடுத்து, அமைச்சரவையில் தனக்குச் சாதகமானவர்களை உள்ளீர்த்துக் கொண்டு, தன்னைப் பலப்படுத்துவதில் அவர் தெளிவான நிலைப்பாட்டில் இருந்தார்.  

ஐங்கரநேசன் மற்றும் குருகுலராசா ஆகியோரின் பதவி விலகலை அடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்துக்கு அனந்தி சசிதரனையும், சர்வேஸ்வரனையும் நியமிப்பதற்கு எடுத்த நடவடிக்கையிலும் சரி, டெனீஸ்வரனை நீக்குவதற்கு எடுத்த முயற்சியிலும் சரி, அமைச்சரவையை மாற்றியமைப்பதில் முதலமைச்சர் உறுதியாக இருப்பது தெளிவாகவே தெரிந்தது.  

அதுவும், தன்னை எதிர்த்து நின்றவர்களை, தனக்கு எதிராகச் செயற்பட்டவர்களை, ஓரம் கட்டிவிட்டு, தனக்கு ஆதரவானவர்களைத் தெரிவு செய்வதில் அவர் கூடுதல் அக்கறை காட்டியிருந்தார்.  

கடந்த ஐந்தாம் திகதி, யாழ்ப்பாணத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்எவ் ஆகியவற்றின் தலைவர்களுடன் நடத்திய பேச்சுகளின் போதும், அமைச்சரவை தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் தனக்கே இருப்பதாக, முதலமைச்சர் விக்னேஸ்வரன் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.  

சட்டரீதியாகத் தமக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கு, கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் இணங்க வேண்டும் என்பதில் அவர் விடாப்பிடியாக இருந்திருக்கிறார்.  
இதன் மூலம், அமைச்சர்கள் நியமனத்தின்போது, பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் ஆலோசனை பெறப்பட வேண்டும் என்ற விடயத்தை, முக்கியத்துவமற்றதாகவே அவர் மாற்றியிருக்கிறார்.  

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் பிடிவாதப் போக்கும், அவரது நிலைப்பாட்டுக்கு, ஏனைய கட்சிகள் எதிர்க்காத நிலைமையும் காணப்பட்டதால், அந்தக் கூட்டத்தில் சம்பந்தனுக்கோ, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கோ முதலமைச்சரின் முடிவுக்கு இணங்குவதை விட வேறு வழியிருக்கவில்லை.   

அதனால்தான், கூட்டம் முடிந்து வெளியே வந்த இரா.சம்பந்தன், வெளியே காத்திருந்த ஊடகவியலாளர்களிடம் எதையும் கூறவில்லை. என்ன பேசப்பட்டது என்பதை முதலமைச்சர் அறிவிப்பார் என்று கூறி விட்டுச் சென்றிருந்தார்.  

அதற்குப் பின்னர், மூன்று முடிவுகள் எடுக்கப்பட்டதாக முதலமைச்சர் அறிவித்திருந்தார்.  
எனினும், உண்மையில் எடுக்கப்பட்டது ஒரே ஒரு முடிவுதான்.  

முதலமைச்சர் தனக்கிருக்கும் சட்ட ரீதியான தற்துணிவு அதிகாரத்தின்படி, அமைச்சரவையை மாற்றவோ, திருத்தியமைக்கவோ, பங்காளிக் கட்சிகள் இணங்கியுள்ளன என்பதே அது.  

இரண்டாவது தீர்மானமாக, முதலமைச்சர் கூறியது, அவ்வாறு அமைச்சர்கள் பதவி நீக்கப்பட்டால், அவர்கள் குற்றமிழைத்தவர்களாக அர்த்தப்படாது என்பதாகும்.  
மூன்றாவது, அமைச்சர்கள் நியமனத்தின்போது, பங்காளிக் கட்சிகளின் யோசனைகளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பது.  

உண்மையில், அமைச்சரவை மாற்றம் ஒன்றுக்கான அதிகாரத்தை, சட்டரீதியாகக் கொண்டிருக்கும் முதலமைச்சர், அதைக் கட்சி, அரசியல் ரீதியாகவும் தக்கவைத்துக் கொள்ளும் முடிவுதான் அது,  எனினும், சட்டரீதியாக அமைச்சரவையை மாற்றும் அதிகாரம் முதலமைச்சருக்கு உள்ளது என்று இணங்கி விட்டு, அமைச்சர்களின் நியமனத்தில் கட்சிகளின் யோசனைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று எடுக்கப்பட்ட முடிவு பொருத்தமான ஒன்றாகத் தெரியவில்லை.  

முதலமைச்சர், நிச்சயமாக அதை நடைமுறைப்படுத்தப் போவதும் இல்லை. அதை அவர், தற்காலிக அமைச்சர்கள் நியமனத்தின் போதே உறுதியாக வெளிப்படுத்தியிருந்தார்.  

அமைச்சர் ஒருவர், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டால், அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். வட மாகாணசபை உறுப்பினராக இருந்த, மறைந்த அன்டனி ஜெகநாதன், கடந்த ஆண்டு அமைச்சரவையை மாற்றியமைக்கும் யோசனையை முன்வைத்த போது, முதலமைச்சர் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்.  

“என்ன காரணத்துக்காக அமைச்சர்களை மாற்ற வேண்டும்? தற்போதைய அமைச்சரவையின் மீது குறைபாடுகள் இருந்தால் முன்வையுங்கள்” என்பதே அந்தக் கேள்வி. அதை அவர், பகிரங்கமாகவே ஒப்புக் கொண்டிருந்தார்.  

அப்படியிருக்கும்போது, திடீரென இப்போது அமைச்சர்களை மாற்றும் முடிவை அவர் எடுத்தால், அதற்குச் சரியான காரணங்களை முன்வைக்காமல் ஒதுங்கி விட முடியாது. அப்படிச் செய்தால் அது நியாயமல்ல என்பது ஒரு நீதியரசரான முதலமைச்சருக்குத் தெரியாத விடயமுல்ல.  

திறமையின்மை, ஊழல், அதிகார முறைகேடு உள்ளிட்ட ஏதோ ஒரு காரணத்துக்காக, அமைச்சர்கள் மாற்றப்படுவது இயல்பு. ஆனால், காரணம் இல்லாமல் அமைச்சர் ஒருவரை மாற்றிவிட்டு, அவர் குற்றமிழைத்தவர் என்று அர்த்தப்படாது என்று கூறுவது புதியதொரு விடயமாகத் தெரிகிறது.  

முதலமைச்சருக்கு எதிராக, நம்பிக்கையில்லாப் பிரேரணையை, தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக முன்வைத்தபோது, அதற்குப் பரவலான கண்டனங்கள் எழுந்தன. அதற்குக் காரணம், சரியான காரணமின்றி அவரை நீக்க முயன்றமைதான்.  

இந்தக் கேள்வியை, தமிழரசுக் கட்சியைப் பார்த்து எழுப்பியவர்கள், அமைச்சர்கள் நீக்கப்பட்டால் அவர்கள் குற்றமிழைத்தவர்கள் என்று அர்த்தப்படாது என்று இணங்கிக் கொள்வது நியாயமாக முடியாது.   

அவ்வாறாயின், தமிழரசுக் கட்சியின் நம்பிக்கையில்லாப் பிரேரணையும் சரியானது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டதாகி விடும்.  

அதாவது, குற்றச்சாட்டுகளில்லாமலேயே முதலமைச்சரையும் மாற்ற முடியும் என்பதற்கு ஒரு களம் அமைத்துக் கொடுக்கப்படும்.  

அமைச்சரவை மாற்றத்தில், முதலமைச்சர் பிடிவாதமாக உள்ள நிலையில், அத்தகைய நடவடிக்கையால் மீண்டும் குழப்பம் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான், குதர்க்கமான இரண்டு முடிவுகள் பற்றியும் அறிவிக்கப்பட்டன.  

இந்த முடிவு அறிவிக்கப்பட்ட 24 மணிநேரத்துக்குள்ளாகவே தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கூடிய கட்சியின் மாகாணசபை உறுப்பினர்கள், அமைச்சர் பதவியில் இருந்து சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் விலகிக் கொள்வது என்றும், இனிமேல் வட மாகாண அமைச்சரவையில் இடம்பெறுவதில்லை என்பதுமே அந்த முடிவுகள்.  

தமிழரசுக் கட்சியின் இந்த முடிவுகள், நிச்சயமாகக் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளுக்கும் முதலமைச்சருக்கும் சிக்கலான நிலை ஒன்றைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது.   

முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில், அவசரத்தனத்தையும் அரசியல் முதிர்ச்சியின்மையையும் வெளிப்படுத்திய தமிழரசுக் கட்சி இந்த விடயத்தில் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. சாதுரியமாக நடந்து கொள்ள முயன்றிருக்கிறது.  

அமைச்சரவை மாற்றத்தின் போது, சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து சத்தியலிங்கத்தை நீக்குவதற்கு முன்னரே, அவரை கௌரவமாகப் பதவி விலகச் செய்திருப்பது ஒன்று.  

புதிய அமைச்சர்கள் நியமனத்தின் போது, தமது பரிந்துரைகளை, முதலமைச்சர் கவனத்தில் கொள்ளப்போவதில்லை என்பதும், தனக்கு எதிராகச் செயற்பட்டவர்களுக்கும் அமைச்சர் பதவிகளைத் தரப் போவதில்லை என்பதும் உறுதியாகி விட்டது.  

இந்தநிலையில், அமைச்சர் பதவிக்காக முதலமைச்சருடன் முரண்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதனால், மக்கள் மத்தியில் பதவிக்காகச் சண்டை போடுகிறார்கள் என்ற கருத்தே உருவாகும். ஏற்கெனவே முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் தமிழரசுக் கட்சி, இந்தப் பழியை சுமக்க நேரிட்டது.  

அடுத்த ஆண்டில் மீண்டும் தேர்தலுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலையில், அந்த நிலை மீண்டும் ஏற்படுவது, கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.  

இன்னும் ஒரு வருடம் வரைதான், இந்த ஆட்சி இருக்கப் போகின்ற நிலையில், அமைச்சர் பதவிக்காக சண்டையிட்டு, தமிழரசுக் கட்சியே ஒற்றுமைக்கு எதிராகச் செயற்படுகிறது என்று கருத்து உருவாவதையும் இந்த முடிவின் மூலம் தடுக்க முனைந்திருக்கிறது.  

அது மாத்திரமன்றி, வடக்கு மாகாணசபையின் வினைத்திறன் குறித்த கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்ற நிலையில், முக்கியமான தருணத்தில், அமைச்சர் பதவிகளை விட்டு விலகுவது, தமிழரசுக் கட்சிக்கே சாதகமாகும். ஆட்சியின் தவறுகளுக்குத் தாம், பொறுப்பில்லை என்று தட்டிக் கழித்து விடலாம். 

அதைவிட, ஒருவேளை மாற்றியமைக்கப்படும் அமைச்சவையின் வினைத்திறன் பற்றிய குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், தாம் இல்லாத அமைச்சரவை கூட, வினைத்திறனுடன் செயற்படவில்லை என்று கூறித் தப்பிக்கலாம்.  

தம்முடன் முட்டிமோதிக் கொண்டிருக்கும் ஏனைய பங்காளிக் கட்சிகளை, பதவிக்காக அலைபவர்கள் என்றும் இந்த முடிவின் மூலம் தமிழரசுக் கட்சி அடையாளம் காட்ட முனைந்திருக்கிறது.  

அனந்தியை அமைச்சராக நியமித்து, தமிழரசுக் கட்சிக்கு முதலமைச்சர் எவ்வாறு பதிலடி கொடுத்தாரோ, இப்போது உங்களின் அமைச்சரவையில் எங்களுக்குப் பங்கு வேண்டாம் என்று பதிலடியைக் கொடுத்திருக்கிறது தமிழரசுக் கட்சி.  

2013 ஆம் ஆண்டு அமைச்சரவையில் தமக்குப் பெரும்பங்கைக் கோரிய தமிழரசுக் கட்சியால், சங்கடங்களை எதிர்கொண்ட பங்காளிக் கட்சிகள், இப்போது தமக்குப் பதவி வேண்டாம் என்று நிராகரித்த தமிழரசுக் கட்சியாலும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.  

முதலமைச்சருக்கும் கூட, இது சங்கடமான நிலைமைதான். அவர் தனது தற்துணிவின் பேரில், அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரத்தை உறுதிப்படுத்தியிருக்கலாம்.   

அதற்கும் அப்பால், அவர் தனது முடிவுக்கு பங்காளிக் கட்சிகளைத் தலையாட்டும் பொம்மையாக இருக்க வைக்க முயன்றதன் விளைவுதான் இது.  

அமைச்சரவையை மாற்றியமைக்க முதலமைச்சர் எடுத்த முடிவு, இப்போது புதியதொரு நிலைமைக்குள் கொண்டு போய் விட்டிருக்கிறது, இது, வடக்கு அரசியல் களத்தில் நிச்சயம் பரபரப்புக்குப் பஞ்சமில்லாத நிலையைத்தான் ஏற்படுத்தும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .