2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘பொருள், பணம் வழங்கி வாக்குக் கேட்பது தேர்தல் வன்முறை’

Editorial   / 2020 ஓகஸ்ட் 01 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம்.எம்.முர்ஷித்

“வாக்குறுதிகளை வழங்கியோ, பொருள்களையோ பணத்தையோ வழங்கி, தேர்தலில் வாக்குக் கேட்கமுடியாது. சட்டத்தின் பிரகாரம், இது ஒரு பிழையான விடயம். ஆனால், இந்தக் காலப்பகுதியில், வேலைவாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி, வாக்குக் கேட்க முற்படுவது உண்மையில் ஒரு தேர்தல் வன்முறை” என்று, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் ஹபீப் றிபான் தெரிவித்தார்.

‘தமிழ்மிரர்’ பத்திரிகைக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அவர் வழங்கிய செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கேள்வி - உங்கள் அரசியல் பிரவேசம் பற்றிக் கூறுங்கள்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றேன். எனது அரசியல் பிரவேசம் என்பது, நான் ஏற்கெனவே தீர்மானித்த ஒன்றாக இருக்கவில்லை. கல்குடா தொகுதியின் கட்சியின் அமைப்பாளர், பட்டயக் கணக்காளர் றியாழ் தான் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால், அவர் பெரிய நிறுவனம் ஒன்றின் நிறைவேற்றுப் பணிப்பாளராக இருக்கின்றார். அந்தப் பதவியில் இருந்து கொண்டு, தேர்தலில் போட்டியிட முடியாத சந்தர்ப்பத்தால் அந்தச் சந்தர்ப்பத்தைக் கட்சியின் தலைமையால் எனக்கு வழங்கப்பட்டது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற ஒரு தேசிய கட்சியாகும். அதில் வேட்பாளராக நிற்குமாறு கட்சித் தலைமை கேட்டுக் கொண்டதற்கிணங்க களம் இறங்கியுள்ளேன்.

கேள்வி - அரசியலுக்கு முதல்முதலாகப் பிரவேசித்துள்ள நீங்கள், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன?

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது, முஸ்லிம்களின் தேசிய கட்சியாக நினைக்கிறேன். முஸ்லிம் என்ற பெயர் தாங்கிக் கொண்டு, தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரம் தான். மர்ஹும் அஷ்ரப், இந்தக் கட்சியை ஆரம்பித்த போதும் அதன் பின்னர் அவரது மறைவின் பின்னரும் நான் பாடசாலை மாணவனாக இருந்த காலமாகும். அந்தக் காலத்தில், அரசியலைப் படிக்க வேண்டும்; இந்தக் கட்சியைப் படிக்க வேண்டும்; இது தொடர்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வங்கள் இருந்தன.

அதன் பிற்பாடு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரம் தான், முஸ்லிம்களின் உரிமை பற்றிப் பேசுவதால்,  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரம் தான் இதற்கு உகந்தது என்று நினைத்து, இந்தத் தேர்தலில் அந்தக் கட்சியினூடாகப் போட்டியிடுகின்றேன்.

கேள்வி - ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைத்தால், அது, கல்குடாத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும். அந்த வாய்ப்பு, உங்களுக்குத் தான் கிடைக்கும் என்று எவ்வாறு கூறகின்றீர்கள்?

கிடைத்தால் அல்ல; நிச்சயம் கிடைக்கும். மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற வாக்காளர்களும் அரசியல் ஆய்வாளர்களும் கூறிக்கொண்டு இருக்கின்றார்கள்; இந்தத் தேர்தலில், கல்குடாத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி அங்கிருந்த ஒருவரை நாடாளுமன்றம் அனுப்புவதற்குரிய வீயூகத்தை அமைத்துத்தான் நாங்கள் இந்தத் தேர்தலில் போட்டியிட்டுக் கொண்டு இருக்கின்றோம்.

நிச்சயமாக, முஸ்லிம் காங்கிரஸ் ஊடாகக் கிடைக்கும் ஆசனம், கல்குடாத் தொகுதிக்குத் தான் இந்தமுறை கிடைக்கும். ஏனென்றால், கல்குடாத் தொகுதியில் தான் முஸ்லிம்களின் வாக்கு அதிகம் இருக்கின்றது. அதேபோன்று, கல்குடாத் தொகுதியில் இருக்கின்ற முன்னாள் அமைச்சர் அமீர் அலிக்கு, வாக்குச் சரிவு ஏற்பட்டுள்ளதாலும் அவருடன் இருந்தவர்களில் அதிகமானவர்கள், என்னுடன் இணைந்து, எனது வெற்றிக்காகச் செயற்படுகின்றார்கள் கல்குடாவில் புதிய மாற்றம் ஒன்றை எதிர்பார்த்து, இளைஞர்கள் தற்போது செயற்படுவதையும் காணக் கூடியதாகவுள்ளது.

கேள்வி - மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று, ஓட்டமாவடி பிரதேச செயலகங்களின் எல்லைகள் தொடர்பான காணிப் பிரச்சினை நிலவுகிறது. இது தொடர்பாக நீங்கள் பிரதிநிதித்து வப்படுத்தும் முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?

இது தொடர்பாகப் பல கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  இந்தத் தொகுதிக்குரியவன் என்ற ரீதியில், நாடாளுமன்றத்துக்கு நான் தெரிவு செய்யப்பட்டால், இந்த விடயத்தைச் செவ்வனே செய்வேன்.

கேள்வி - நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், மஹிந்த தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சி ஆட்சி அமைத்தால், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, சேர்ந்து பணியாற்றுமா?

அந்த காலகட்டத்தில், முஸ்லிம் சமுகத்துக்குப் பொருத்தமாக இருக்கின்றதா, பொருத்தம் இல்லையா என்று எடுக்கின்ற நிலைமைக்குத் தலைமைத்துவம் வந்தால், அதை ஏற்று, கட்சிக்கும் கட்சித் தலைமைக்கும் கட்டுப்பட்டு நடப்பேன் என்று, கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

கேள்வி - வாழைச்சேனை கடதாசி ஆலையை மீள இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறதே?

கடந்த ஆட்சிக் காலத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரின் கீழ் உள்ள அமைச்சின் கீழ், இந்தக் கடதாசி ஆலை இருந்தது. அவரது காலத்தில், கடதாசி ஆலையை மீள இயக்குவதற்குரிய வேலைகளைச் செய்திருந்தால், இந்தப் பிரதேசத்தில் இருக்கின்ற ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியிருக்க முடியும். துரதிர்ஷ்டவசமாக அவர் அந்த வேலையைச் செய்யவில்லை.

அரசாங்கம் கடதாசி ஆலையைப் புனர்நிர்மாணம் செய்ய வேண்டும்; அதில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்ற போது, முஸ்லிம்களுக்கும் அதிகமாக வழங்கப்பட வேண்டும் என்பதுதான் எனது அவா.

கேள்வி - பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களாக இருக்கின்றவர்கள், வாழைச்சேனை கடதாசி ஆலையில் தேர்தலின் பின்னர் வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்று, தமிழ் பிரதேசங்களில் விண்ணப்பப்படிவம் வழங்கப்படுவதாக அறிய முடிகின்றது. கடதாசி ஆலையில் தமிழ் இளைஞர்களுக்கு மாத்திரம் வேலைவாய்ப்பு வழங்குவது எவ்வாறு சாத்தியப்படும்?

கடதாசி ஆலை அமைந்துள்ள பிரதேசம் முஸ்லிம் பிரதேசம் என்றபடியால், எங்களது பிரதேச இளைஞர்களையும் இணைத்துக் கொள்வது கட்டாயமாகவுள்ளது

கேள்வி - மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்?

முஸ்லிம் பெயர் தாங்கிய கட்சிக்கு, முஸ்லிம்கள் தான் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையுள்ளது. இந்த மாவட்டத்தில், உள்ள இளைஞர்கள் கற்றவர்கள். இந்தக் கட்சியின் ஆதரவாளர்கள், எனக்கு வாக்களிப்பதன் ஊடாக, ஓர் இளைய தலைமைத்துவத்தை, நாடாளுமன்றம் கொண்டு போக முடியும். மாவட்டம் முழுக்க, நாங்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுடன், இளைஞர்களின் வேலைவாய்ப்பு உள்ளிட்ட எல்லாப் பிரச்சினைகளுக்கும், என்னால் முடிந்தவரை தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க முயற்சிப்பேன். கல்குடா என்று இல்லாமல், மாவட்டத்தின் அனைத்துப் பிரதேசங்களுக்கும் எனது சேவை ஒரே பார்வையில் நடக்கும் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .